தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜூன் 24, 2019

எட்டையபுரம், எழுத்தாளர் எட்டப்பன்


ணக்கம் திரு. எட்டப்பன் ஐயா அவர்களே எங்களது ‘’அனாவின் கனா’’ பத்திரிக்கையிலிருந்து ‘’அந்தோ பரிதாபம்’’ நிகழ்ச்சிக்காக தங்களை பேட்டி காண வந்திருக்கின்றோம் ஆரம்பிக்கலாமா ?
தமிழ் வாழ அந்த தமிழோடு நாமும் வாழ நல்லது ஆரம்பிக்கலாம்.

சட்டங்கள் அதிரடியாக மாற்றம் கொண்டு வரும் குழுவிற்காக பல அறிஞர்களை மோடிஜி அரசு தேர்வு செய்து வருகிறது தங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால்... தங்களின் பங்களிப்புகள் எப்படியிருக்கும் ?
திரைப்படங்களில் விரல்களை அசைத்து நடிக்கும் நடிகர்களுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அந்த விரல்கள் மட்டும் நீக்கப்படும், மேலும் இந்த இடத்தில் இசையைக் கொடுத்து அதற்கு உயிரூட்ட நினைக்கும் அந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர்களுக்கு முதல் முறை மட்டும் எச்சரிக்கை ஒலி கொடுக்கப்படும் இசை மூலம் நாடக்கலையை வளர்த்த சங்கரதாஸ் சுவாமிகளுக்காக இந்த சலுகை வழங்கப்படுகிறது மீண்டும் இதை செய்தால் ?

செய்தால் ?
அதை பிறகு சொல்வேன்.

அரசியல்வாதிகளுக்கு, சிறப்பாக..... ஏதும் உள்ளதா ?

அரசியல்வாதிகள் மேடைகளில் அவர்களின் திருவாயால் கொடுக்கப்படும் வாக்குறுதிகள் ஆறு மாதகால இடைவெளிக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் அப்படித் தவறினால் அவகாசம் கழிந்த மறுநாள் அரசு செலவில் அவர்களின் திருவாய் மருத்துவர்களால் தைக்கப்படும் உணவுகள் க்ளுகோஸ் முறையில் செலுத்தப்படும் ஆறு மாதம் கழிந்து மீண்டும் தையல்கள் பிரிக்கப்படும் இதையும் மீறி அவர்கள் தனியார் மருத்துவமனை மூலமாக பிரித்தால் ?


பிரித்தால் ?
அதை பிறகு சொல்வேன்.

கிரிக்கெட் வீரர்களுக்கு..... ஏதும் உண்டா ?
இவர்கள் கிரிக்கெட் மட்டுமே விளையாட வேண்டும் விளம்பர படங்களில் நடிக்ககூடாது விளம்பரத்தில் மட்டுமே நடித்து வாழ்க்கையை ஓட்டும் சிறிய நடிகர்களின் பிழைப்பை கெடுக்க கூடாது காரணம் இந்த சோடாவை குடியுங்கள் என்று சொல்லி மது வகைகளை காண்பிக்கின்றார்கள் இதையும் மீறி அவர்கள் மீண்டும் நடித்தால் ?

நடித்தால் ?
அதை பிறகு சொல்வேன்.

வேறு ஏதும் ஊடகங்களுக்கு....
ஆம் தொலைக்காட்சிகளில் சுதந்திரதினம், குடியரசுதினம் போன்ற நாட்களில் நடிகர் - நடிகைகளிடம் பேட்டி காணுதல் கூடாது இரண்டரை மணிநேர திரைப் படங்களுக்கு மூன்றரை மணிநேரம் விளம்பரங்கள் போடக்கூடாது, நானாட நாயாட, பிரபல நடிகைகளின் வீட்டு கல்யாணங்கள், கருமாந்திரங்கள் போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பக் கூடாது நிகழ்ச்சிகளை நடத்துவது தமிழர்களாகவும், தமிழச்சிகளாகவும் இருப்பது அவசியம் இதை மீறினால் ?
மீறினால் ?
அதை பிறகு சொல்வேன்.

பத்திரிக்கை துறைகளுக்கு....
பத்திரிக்கையாளர்கள் நடிகையின் நாய் காணாமல் போய் விட்டது, பிரபல நடிகரின் கொழுந்தியாளுக்கு திருமணம் போன்ற செய்திகளை வெளியிடக் கூடாது நடந்த கொடூரங்களை வர்ணித்து எழுதுதல் கூடாது பத்திரிக்கை நாற்பது பக்கம் என்றால் அதில் விளம்பரங்கள் முப்பது பக்கம் போடக்கூடாது எட்டு பக்கம் மட்டுமே அனுமதிக்கப்படும் மீறி போட்டால் ?

போட்டால் ?
அதை பிறகு சொல்வேன்.

ஐயா கல்வித்துறைகளுக்கு....
கல்லூரிகள் ஆணுக்கும், பெண்ணுக்கும் தனித்தனியாக நடத்தப்படும் ஆசிரியர்களும் அப்படியே மாற்றம் செய்யப்படும், குழந்தைகள் பள்ளி செல்லும் காலம்வரை மட்டுமே சந்தோஷமாக வாழமுடியும் பிறகு பள்ளியில் புத்தகச் சுமையை தொடங்கியது முதல் அவர்களது வாழ்நாள் முழுவதும் குடும்பச்சுமைகளை சுமந்து கொண்டே செல்ல வேண்டிய கட்டாய சூழல் ஆகவே பள்ளிகளில் பனிரெண்டு வயது நிரம்பிய பிறகே சேர்க்க வேண்டும் இதையும் மீறி சேர்த்தால் ?

சேர்த்தால் ?
அதை பிறகு சொல்வேன்.

மாணவ-மாணவிகளுக்கு...
உண்டு கல்லூரிகளில் ஈவ்டீஸிங் என்ற பெயரில் யாரும், யாரையும் கேள்வி கேட்டு அதன் மூலமாக கொடுமைகள் நிகழக்கூடாது மேலும் இந்த ஆங்கில வார்த்தையை யாருமே உச்சரிக்க கூடாது உச்சரித்தால் ?

உச்சரித்தால் ?
அதை பிறகு சொல்வேன்.

ஐயா நீதித்துறைகளுக்கு...
கண்டிப்பாக இருக்கின்றது உடனடியாக தேவைப்படும் அளவுக்கு நீதிபதிகள் அமர்த்தப்படுவார்கள் விவாகரத்து தவிர மற்ற எந்த வழக்குகளையும் ஒரு வருட காலத்துக்குள் வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் முடித்து தீர்ப்பு வழங்கி விடவேண்டும் வழக்கு நடைபெறும் இடைவேளை நேரத்தில் நீதிபதிகள் தயிர்வடை சாப்பிடக்கூடாது அப்படி சாப்பிட்டால் ?

சாப்பிட்டால் ?
அதை பிறகு சொல்வேன்.

காவல்துறைகளுக்கு...
காவல்துறை உடனடியாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதை நீக்கி ராணுவத்துடன் இணைத்து அதன் ஒரு பிரிவாக தன்னிச்சையாக செயல்படும் காவலர்கள் எந்தக் காரணம் கொண்டும் யாரையும் அடித்து துன்புறுத்தக் கூடாது தீவிரவாதிகளை மட்டும் மருத்துவ ரீதியில் மனதிலிருப்பவைகளை வெளிக்கொண்டு வரவேண்டும் கண்டிப்பாக அடிக்ககூடாது மீறி அடித்தால் ?

அடித்தால் ?
அதை பிறகு சொல்வேன்.

மக்களுக்கு தொண்டு (?) செய்யும் ரசிகர் மன்றங்களுக்கு...
எந்த நடிகருக்கும் ரசிகர் மன்றம் வைத்தல் கூடாது இதற்கு நடிகர்கள் அனுமதி கொடுக்க கூடாது கொடுத்தால் நடிகர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் குறிப்பாக கல்லூரி மாணவர்கள் நடிகரின் பதாகைகளுக்கு பால் ஊற்றக்கூடாது ஊற்றினால் ?

ஊற்றினால் ?
அதை பிறகு சொல்வேன்.

நல்லது ஐயா கேட்ட பத்து கேள்விகளுக்கும் அற்புதமாக முத்தாய்ப்பான பதில் தந்தீர்கள் நன்றி ஆனால் முடிவில் அதை பிறகு சொல்வேன் என்று சொன்னீர்கள் அதை சொல்லுங்கள்.
அதையும் பிறகே சொல்வேன் நன்றி வணக்கம் தமிழ் வாழ அந்த தமிழோடு நாமும் வாழ !.
? ? ?

வணங்கி விட்டு எழுந்து நடையைக் கட்டினார் எ. எ. எ.

Chivas Regal சிவசம்போ-
கடைசிவரை சொல்லவேயில்லையே... ?  

காணொளி

48 கருத்துகள்:

  1. மீறினால் சரண்டராவதா, சண்டை போடுவதா என்று ஆதாயம் பார்த்து பின்னர்தானே முடிவு செய்யவேண்டும்?!!!!!! அதுதான் போல..

    பதிலளிநீக்கு
  2. நீங்களே தீர்ப்பும் வழங்கி விடுங்கள்.
    தண்டனை இல்லாமலே பழகிவிட்டார்கள் தேவகோட்டைஜி.
    இத்தனை கேள்விகளுக்கும் அடங்கி நடப்பவர்களுக்கு
    தேர்தலில் வோட் உண்டு.

    பதிலளிநீக்கு
  3. முழுசும் படிக்கலை. பிறகு வருகிறேன்.

    ஒருவேளை, இடுகையை முழுவதும் படிக்கலைனா, கண்களை ஒரு வாரம் கட்டிவிடுவேன் என்றும் சொல்லியிருப்பாரோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே எட்டப்பன் அவர்களைத்தான் கேட்கணும்.

      நீக்கு
  4. நீதிபதிகள் தயிர்வடை சாப்பிட்டால் என்ன ஆகும்? இஃகி,இஃகி! அது சரி, எ.எ.எ.க்கும் பயமோ! அப்பு
    றமாச் சொல்றேன் அப்படினுட்டு நடையைக் கட்டிட்டாரே! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசியல்வாதிகள் பயமுறுத்தி இருப்பார்களோ...

      நீக்கு
  5. இன்னொன்றும் இருக்கின்றதே...

    என்ன அது?...

    அதை அப்புறம் சொல்கிறேன்!...

    பதிலளிநீக்கு
  6. கல்லூரிகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித் தனியாக நடத்தப்படும்//- இது சரிப்பட்டு வராதே... என்னைக் கேட்டால் தனித்தனி பள்ளிகளே கூடாது. இரண்டும் சக மனிதர்களே என்ற எண்ணத்தைத்தான் வரவைக்கணும்.

    தொலைக்காட்சியில் தூய தமிழ்ல பேசணும்னா ஈழத்திலிருந்துதான் ஆட்களை இறக்குமதி செய்யணும்.

    அதுசரி...கில்லர்ஜி சமீப பஸ் டே கூத்தைப் பார்க்கலை போலிருக்கு. பார்த்தால் அந்த டாபிக்குக்கே இடுகை போட்டிருப்பார், அவர் பிரஷரும் எகிறியிருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஈழத்திலிருந்தா?...

      இணையப் பக்கங்களில் வடமொழிச் சொற்களை சின்னாபின்னம் ஆக்கியது யாரென்று தெரியவில்லை...

      கில்லர் ஜி யை கில்லர் சி என்று எழுதிவைத்தால் சரியாகுமா?...

      மாமன்னனே தன் பெயரை ராஜ ராஜன் என்று செதுக்கி வைத்திருக்க ராசராசன் என்று மாற்றி வைத்தது யார்?...

      டல்கவுசி, வெல்லெசுலீ என்பார்கள்..

      ஜார்ஜ், ஷாஜஹான் என்பதை விட்டு விடுவார்கள்!..

      இன்னும் பல...

      நீக்கு
    2. ஆமாம் துரை செல்வராஜு சார்...தமிழகத்தில் ஆங்கிலக் கலப்பில்லாமல் பேசுபவர்களைப் பார்ப்பது அரிது. ஈழத்தமிழர்கள் ஆங்கிலக் கலப்போடு தமிழைப் பேசுவதைப் பார்ப்பது அரிது.

      நீங்கள் சொன்ன, ஜார்ஜ், ஷாஜஹான் - மிகச் சரியான உதாரணங்கள். நம் so called தமிழறிஞர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களெல்லாம் உண்மையில் தமிழ் படித்தவர்களா என்பதே ஐயம்..

      நீக்கு
    3. துரை செல்வராஜு சார் - அப்புறம் தமிழகத்தில் ஷ்ரேயஸ், பாஸ்கர், சூர்யன், விஷால், கணபதி, ஜீவானந்தம், ஜோதிலக்‌ஷ்மி, ராஷ்மி, தரணி, தர்மராஜ், தினகர், யுவன், எத்திராஜ் யோகநாதன், ரித்திகா, ரிஷிகேஷ், ஹேமா, ஹரிஹரன், கிருஷ்ணா, தேவன்........இப்படீ எக்கச்சக்க பெயர் வைப்பவர்களை விட்டுவிட்டீர்களே... இவங்களோட அப்பாக்கள்தான் 'இந்தி ஒழிக, சமஸ்கிருதம் ஒழிக' என்று முன்னணியில் இருப்பவர்கள்.

      நீக்கு
    4. வருக தமிழரே இருபாலரையும் ஒன்றாய் படிக்க வைத்ததுதான் இன்று கலாச்சாரம் வேறு பாதையில் வந்து நிற்கிறது.

      நீக்கு
    5. அன்பின் ஜி
      எனது நாமத்தை இப்படி கொலை செய்யலாமா ?

      நீக்கு
  7. எல்லாக் கேள்விகளுக்கும் ''பிறகு சொல்கிறேன்'' என்கிறார் எட்டப்பன். எப்போதோ சொல்லட்டும். அதுவரை எட்டப்பனை விட்டுவைப்பார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே இப்படி கோணமும் இருக்கிறதே...

      நீக்கு
  8. எதற்கு நண்பரே சஞ்சிகைகளில் விளம்பர பக்கங்களுக்கு தடை ..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே...சஞ்சிகைகள், தொலைக்காட்சிகள், விளம்பரங்கள் எல்லோரிடமும் வாங்கி அதில் காசு பார்ப்பவர்கள். அப்புறம் எப்படி அவர்கள் நேர்மையாக நியாயமாக எழுதுவார்கள், பேசுவார்கள்? தமிழகத்தில் மது ஒழிப்பு, தினமும் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் மதுபான ஆலைகளுக்கு மட்டுமே சப்ளை செய்வது, பாரிவேந்தர் கல்லூரியில் நடந்த தற்கொலைகள்(?), பாரிவேந்தர் அவர்கள் 100 கோடி ரூபாய் ஏமாற்றியது, சென்னை சில்க்ஸ்/சரவணா/போத்தீஸ்.....என்று பல்வேறு நிறுவனங்கள் சட்டத்திற்கு உட்படாமல் 7 மாடி, 8 மாடி கட்டடங்கள் கட்டுவது, உணவுப்பொருட்களில் கலப்படம், தனியார் மருத்துவமனைகளின் ஊழல்கள், ஸ்கேனிங்/டெஸ்ட் அது இது என்று ஏமாற்றுவது, கேன்சர் உண்டாக்கும் சிகரெட்/குட்கா பற்றி எங்கேயும் பேசப்படாதது.....என்று ஓராயிரம் விஷயங்கள் பத்திரிகைகளில் விரிவாக வந்திருக்கிறதா? ஏனென்றால் இதெல்லாம் நியூஸாக வந்தால், விளம்பரங்கள் அவர்களிடமிருந்து கிடைக்காது, காசு கல்லா கட்டமுடியாது என்ற காரணம்தாம். அதனால்தான் போலிச்செய்திகளும், தேவையில்லாத செய்திகளும் விரிவாக அலசப்படுகின்றன. பத்து நாட்கள் செய்தித்தாள்களைப் படித்தாலோ இல்லை தொலைக்காட்சி செய்திகள், விவாதங்கள் பார்த்தாலோ இதனைக் கண்டுபிடித்துவிட முடியும்.

      நீக்கு
    2. நெல்லையாரின் விரிவான விளக்கத்திற்கு நன்றி.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    நல்ல பதிவு. நல்ல கேள்விகளுக்கு நல்ல தீர்ப்பு பதில்கள். ஒவ்வொன்றையும் யோசித்து நல்லவிதமான கேள்விகளுமாக, தீர்ப்புமாக எழுதியிருக்கிறீர்கள். ஒவ்வொன்றிலும் தங்களுடைய சமுதாய சிந்தனை, மக்களின் மேல் கொண்டிருக்கும் அக்கறை பிரதிபலிக்கிறது. மிக்க நன்றி.

    எனக்கொரு சந்தேகம்.! எ.எ.எ மனம் மாறி இல்லை அ(துர)திர்ஷ்டவசமாக, தீடிரென்று ஒரு நடிகராகி விட்டால், தீர்ப்பு இவரையும் ஒரு நாள் பாதிக்குமே...பிறகு அவரால் முன்பு போல எதையுமே எழுதக் கூட முடியாதே.! எல்லோருமே அந்த எட்டயபுரத்தானாக இருக்க முடியுமா? ஹா ஹா. ஹா.

    அனைத்தையும் படித்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ விரிவாக ரசித்து எழுதியமைக்கு நன்றி.

      நீக்கு
  10. நல்லா எழுதிட்டீங்...
    இல்லையின்னா...
    இல்லையின்னா?
    அதை பிறகு சொல்வேன்!

    பதிலளிநீக்கு
  11. அரசியல்வியாதிகளுக்கு சிறப்பாக உள்ளது...!

    பதிலளிநீக்கு
  12. பிறகு எப்போது சொல்வீர்கள் அண்ணா...
    அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எட்டப்பனிடம் கேட்டேன்.
      "அதையும் பிறகுதான் சொல்வாராம்"

      நீக்கு
  13. கேள்விகளுக்கான பதில்கள் அருமை. ஆனாலும் எ.எ.எ அவர்களின் விதிகளை மீறுவோருக்கு என்ன தண்டனை என்பதை சொல்லாமல் ‘அப்புறம் சொல்வேன்’ என்று சொல்லி சொல்வாரோ, மாட்டாரோ என சஸ்பென்சில் வைத்துவிட்டீர்களே! வடிவேலு அவர்களின் நகைச்சுவையை எத்தனை முறை பார்த்தாலும் சிரிக்காமல் இருக்கமுடியவில்லை,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே வடிவேலுவுக்கும் கடைசிவரை சொல்லவேயில்லையே...

      நீக்கு
  14. உங்கள் பாணியில் ஒரு நேர்காணல்! இரசித்தேன் கில்லர்ஜி!

    பதிலளிநீக்கு
  15. நானும் பிறகு சொல்கிறேன்....நண்பரே...

    பதிலளிநீக்கு
  16. இப்பதிவிற்கான என் மறுமொழி...அதைப் பிறகு சொல்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது மறுமொழிக்காக காத்திருக்கிறேன்.

      நீக்கு
  17. கேள்வியும் பதிலும் அருமை.
    விளம்பரத்தை மட்டும் நம்பி வாழும் நடிகர்கள் கொஞ்சம் தான். விளம்பரங்களும்
    பிரபல நடிகர்களை வைத்து தான் செய்கிறார்கள்.
    ஏழை ஏழையாக நடுத்தர மக்கள் நடுத்தரமாய் இருக்கிறான். பண்ம மட்டும் பணத்தோடு சேர்ந்து கொண்டே இருக்கிறது.
    இன்னும் இன்னும் பணம் வேண்டும் என்று ஏமாற்றும் மனிதர்களிடம் ஏமாறும் பணக்காரர்கள் (இருடியம்) இருக்கிறார்கள்.

    வடிவேல் காணொளி ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  18. வருக சகோ தங்களது விரிவான கருத்துரைக்கும், காணொளியை ரசித்தமைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வடிவேலுக்கு கடைசிவரை தெரியாததுபோல் எங்களுக்குமா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா நீங்கள் ஒருவர் மட்டுமே... இரண்டையும் பொருத்தி கருத்துரை சொன்னீர்கள். ஹா... ஹா... ஹா...

      நீக்கு
  20. நேர்காணல் சூப்பர்...கில்லர்ஜி. அது சரி எட்டப்பன் மீண்டும் வருவாரா பதில் சொல்ல?

    துளசிதரன்

    கில்லர்ஜி இந்த் எட்டப்பன் ரொம்பக் குழப்புறாரே!! அவருமே குழம்பிட்டாருனு நினைக்கிறேன்...!!!!! பாவம் வடிவேலுவுக்கும் அதே நிலைமையா...!!! ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மீண்டும் வருவாரா ?//
      அதை பிறகே சொல்வார்.

      அவரு குழம்பவில்லையே... பதிலை முடிக்காமல் நீட்டித்து இருக்கிறார்...

      நீக்கு
  21. அப்புறம் சொல்கிறேன், அப்புறம் சொல்கிறேன் என்று சொல்லியே, சொல்லாமல் விட்டு விட்டு எங்கள் மண்டை குடைய விட்டு விட்டாரே? பாவம் அந்த நடிகர், விரலை பறிகொடுத்துவிட்டு என்ன செய்வார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இப்படி பாவப்பட்டதால்தான் தமிழ்நாடு கூத்தாடிகளின் விரல் அசைவுக்கு கட்டுப்பட்டு இருக்கிறது.

      நீக்கு
  22. வணக்கம்,
    உங்களுடைய blogger template-யை மாற்றுங்கள். தற்போது நிங்கள் பயன்படுத்தும்
    blogger template mobile பயன்படுத்தும் பார்வையாளர்களுக்கு ஏற்றதல்ல.
    opensource blogger template, free blogger template, paid blogger template, google default- ஆக தந்த Contempo blogger template இதில் எதேனும் ஒரு வகையை தேர்ந்தேடுங்கள்
    opensource blogger template, Contempo blogger template சிறந்தது மற்றும் தமிழிலும் மாற்றலாம்.
    உங்களுடைய blog-கிற்கு ஒரு Android application உருவாக்கி playstore upload செய்யவும்.

    எடுத்துகாட்டு:
    Contempo blogger template பயன்படுத்தியிருக்கிறேன்(சற்று மற்றியிருக்கிறேன்).
    https://teamsearchblog.blogspot.com/

    opensource blogger template பயன்படுத்தியிருக்கிறேன்.
    https://onlinebesttodayteam.blogspot.com/
    https://teambloggertemplate.blogspot.com/

    Https enable செய்யவும்

    பதிலளிநீக்கு