தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஜூலை 14, 2019

வெங்கடாசலம் ஐயா (1)



சென்னை மீனாம்பதி முதியோர் காப்பகம் மாலை வேளை....

பெரியவர் வெங்கடாசலம் ஐயா அந்த வேப்ப மரத்தடியில் போட்டிருந்த... மரக்கட்டையிலான சேரில் உட்கார்ந்து பழமையில் மூழ்கினார் அவரது மனைவி செங்கமலம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மரத்தில் சிக்கி கிடைத்த உடலை நல்லடக்கம் செய்ததை நினைத்து... காரணம் இன்று அவரது மனைவி இவரை அனாதையாக்கி விட்டு விண்ணுலகம் சென்ற நான்காவது வருடத்தின் நினைவு நாள்.

சுருங்கிய கன்னங்களில் நீர் வழிந்தோடியது.... மனைவி இறக்கவும் இவருக்கு பக்குவம் பார்க்க என்னால் முடியாது என்று மருமகள் உறுதியாக சொல்ல மகன் வேறு வழியின்றி இந்த முதியோர் இல்லத்தில் கொண்டு வந்து சேர்த்து மூன்று வருடங்கள் ஒடி விட்டது அப்பொழுது பேரன் அருணுக்கு ஒரு வயது எந்த நேரமும் பேரனை கொஞ்சிக்கொண்டே இருப்பார் தோளில் கை படவும் திடுக்கிட்டவர் பக்கத்தில் அவரது கடந்த மூன்று வருட நண்பர் முத்தையா.

வெங்கடாசலம் எந்திரிங்க... ஏன்... இப்படி பிடிவாதம் பிடிக்கிறீங்க.. ? உங்க உடம்புக்கு ஆகாது வந்து சாப்பிடுங்க... வாங்க...
போய்யா, நான் சாப்பிடாட்டா செத்தா போயிடப்போறேன் அப்படிப் போனாலும் பரவாயில்லை நிம்மதியா, அவளோடப் போயிருவேன்.. மகராசி அவ நிம்மதியாப் போயிச் சேர்ந்துட்டா என்னை தனியா தவிக்க விட்டுப்புட்டு.

துண்டால் வாயைப் பொத்திக் கொண்டு சத்தம் வெளியேறி விடாமல் குமுறிக் குமுறி அழுதவரை முத்தையா முதுகோடு அணைத்துக் கொண்டு நின்றார்...

எனக்கு சாககூட தைரியம் வரமாட்டுதே... கடவுள் என்னை யேந்தான் இப்படி கொடுமைப்படுத்துறானோ.... தெரியலையே.... நான் என்ன செய்வேன் ?
விடுங்க, விடுங்க, எல்லோரும் எல்லாவற்றையும் சந்திக்கணும்னு விதி அது முடியும்வரை நாம சாக முடியாது வாங்க கொஞ்சம் தண்ணியாவது குடிங்க

வார்டன் போன் செய்ததுக்கு என்மகன் என்ன சொல்லி இருக்கான் பார்த்தீங்களா ? மேட்னி ஷோ பார்த்துக்கிட்டு தியேட்டருல இருக்கானாம் சரியா பேச முடியலையாம் அப்புறமா பேசுறேன்னு சொன்னவன் போன் செய்தானா ? மணி ஏழாகப்போகுது, இன்றைக்கு அவன் அம்மா இறந்தநாள் நினைவுகூட இல்லாமல் போச்சே... எப்படிய்யா... தாயை மறக்கலாமா ? நான் இப்படி வளர்க்கலையே... அதான் எனக்கும் புரியலை...

சரி விடுங்க இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தோட சினிமாவுக்கு போயிருப்பாங்க... எல்லா வீட்டுலயும் உள்ளதுதானே பொண்டாட்டிக்கு பணிஞ்சு போகலைனா... அவனோட சந்தோஷம் போயிடும் எந்திரிங்க..

வெங்கடாசலம் ஐயாவை ஆதரவாய் அணைத்துக் கொண்டே உணவருந்தும் அறைக்கு கொண்டு வந்து மதியம் சாப்பிடாமல் மூடி வைத்திருந்த உணவை சாப்பிட வைத்து வலுக்கட்டாயமாக டி.வி பார்க்கும் ஹாலுக்கு கூட்டி வந்து உட்கார வைத்தார் முத்தையா ஐயா.

மறுநாள் காலை 09.00 மணி.
வார்டன் வந்து ஐயா உங்களுக்கு போன் வந்துருக்கு... என்று சொல்ல... காலை உணவு முடிந்து உட்கார்ந்திருந்தவர் முகம் மலர்ந்து ஓடினார்... வரவேற்பு ஹாலில் மல்லாந்து கிடந்த போணை எடுத்தவர்..

ஐயா சுந்தரம் நல்லாயிருக்கியாய்யா ?
இருக்கேன் நேத்து போன் செஞ்சீங்க, என்ன விசயம் ?

என்ன விசயம் ? இவனிடம் என்ன சொல்வது ? அம்மா ஞாபகமே இல்லையே பிறகு அதை ஞாபகப்படுத்தி என்ன ஆகப்போகிறது..

தம்பி, அது வந்துப்பா... பேரனைப் பார்க்கணும்போல இருந்துச்சு.... அதான்..
அடுத்த ஞாயிற்றுக்கிழமை தான் வருவேன்ல இப்படி நினைச்சு, நினைச்சு கூப்பிட்டா அவன் ஸ்கூல் போக வேண்டாமா ?
கொஞ்சம் கொடுப்பா ரெண்டு வார்த்தை பேசிக்கிறேன்...

ச்சே உங்களோட தொந்தரவா போச்சு, அருண் ப்ளீஸ் கம் ட்டூ ஹியர் டாக் வித் ஹிம் க்விக்லி பிகாஸ் நௌ கம்மிங் ஸ்கூல் வேன்.
தாத்தா...
அய்யா... சாமி.... நல்லா இருக்கியாய்யா ?
ம் நல்லா இருக்கேன்... நீ எப்படி... இருக்கே ? தாத்தா...
நல்லா இருக்கேன்யா நீ எப்பய்யா வருவே தாத்தாவை பார்க்க ?

மறுமுனையில் மருமகள் அர்ச்சனாவின் அர்ச்சனை சிறிதாக கேட்டது கெழத்துக்கு வேற வேலை இல்லையா ?
சட்டென ரிசீவர் கைமாறி சுந்தரம் வந்தான்
அடுத்த வாரம்தானே முதல் ஞாயிற்றுக்கிழமை அருணை கூட்டிக்கிட்டி வருவேன் அப்ப பேசுங்க.

டக்கென ரிஸீவர் வைக்கப்பட்டது மனம் நொருங்கி அறைக்கு வந்தவர் அப்படியே நினைவுகளில் மூழ்கினார் அடுத்த வாரம் மாதத்தின் முதல் ஞாயிறு பேரன் வருவான் அவனுக்காகவே தனக்கு செலவுக்கு கொடுத்த பணத்தை அப்படியே வைத்திருந்து முதல்நாள் வார்டனிடம் கொடுத்து பேரனுக்காக விலையுயர்ந்த, பிக்கெட், சோக்லெட் வாங்கி வரச்சொல்லி வைத்திருப்பார் அவர் கையால் பேரனுக்கு ஊட்டி விட்டால்தான் அவருக்கு திருப்தி காலை ஐந்து மணிக்கே எழுந்து குளித்து பேரனுக்காக கேட்டின் வாசலிலேயே நிற்பார் சாலையில் போகும் அம்பாஸிட்டர் கார்கள் அனைத்துமே தனது மகனின் கார் போலவே தோன்றும்...

தொடரும்...

60 கருத்துகள்:

  1. எண்ணற்ற முதியோர்களின் நிலை எல்லாம் ஏறத்தாழ இப்படித்தான் இருக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது முதல் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  2. கில்லர்ஜி கதை மனதை மிகவும் கனக்க வைத்துவிட்டது.

    மனதில் என்னென்னவோ நினைவுகள் தோன்றியது.

    இப்படியான நிகழ்வுகள் நடக்கத்தான் செய்கிறது.

    மகன் அம்மாவின் நினைவு நாளைக் கூட மறந்துவிடுகிறானா? ம்ம்ம்ம் என்ன சொல்ல...

    முடிவும் சோகமாகத்தான் இருக்கப் போகிறது என்று தெரிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை பலரது வாழ்ங்கை இப்படித்தான்...

      எல்லாம் காலத்தின் சூழல்.

      நீக்கு
  3. தொடர்ச்சிக்காகக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. இனிய காலை வணக்கம் தேவ கோட்டை ஜி.எப்படி தாயை மறப்பான்
    அந்த மகன்.
    பெரியவர் நிலமை மிக மிக வருத்தம்.
    பல முதியோர் இல்லங்களின் கதைகள் இப்படியோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா முதியோர் இல்லங்கள் பெறுகி வருவது நாட்டுக்கு அவமானச் சின்னமே...

      நீக்கு
  5. துறவு மனப்பான்மையை வளர்த்துக்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை!

    தொடருங்கள். தொடர்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகச்சரியாக சொன்னீர்கள் இது அடுத்த தலைமுறையினருக்கு அவசியம் தேவைப்படும்.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    கதை மிகவும் மனதை வருத்துகிறது. எல்லா முதியவர்களின் நிலையும் ஒரு பக்கம் இப்படி கஸ்டமாகத்தான் இருக்குமோ என்ற எண்ணம் வருகிறது. அப்பாவின் அன்பை பார்த்து திருந்தாத மகன் பேரனின் மூலம் திருந்துவானா என மனம் எதிர்பார்க்கிறது. எப்படியோ முடிவு சுபமாக இருக்கட்டும். அடுத்த பகுதியை காண பேரனை பார்க்க காத்திருக்கும் தாத்தாவை போல நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ
      வயதான காலத்தில் எல்லா மனிதர்களுக்குமே சற்றேனும் மரணபயம் இருக்கும் உறவுகள் கை விடும்போது அது அவர்களுக்கு மேலும் மன உலைச்சலைத் தரும்.

      இதை பலரும் உணர்ந்து பார்ப்பதில்லை எல்லோரும் பணத்தை நோக்கியே ஓடுகின்றனர்.

      நீக்கு
  7. மனதை கனக்க வைக்கிறது.

    பேரனின் அணைப்பிற்காக ஏங்கும் தாத்தா....

    பதிலளிநீக்கு
  8. சுந்தரத்திற்கு அருண் ஆப்பு வைப்பான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி முற்பகல் விதைப்பின், பிற்பகல் விளையும்.

      நீக்கு
  9. கதை நன்றாக சொல்லி இருக்கிறீர்கள். இது போன்ற கதைகளை படிக்கும் போது மனம் கனத்து போகிறது.
    ஒரு பையன் போலும் அதனால் இல்லத்துக்கு வந்து விட்டார், இரண்டு மூன்று பையன் என்றால் பந்தாட பட்டு இருப்பார் போலும், மருமகள் அர்ச்சனா நாம் மட்டும் பார்க்க வேண்டுமா? உங்கள் அப்பாவை என்று சொல்லி இருப்பார் போலும்.

    அவர்கள் போக சொல்வதற்கு முன் நாமே ஒதுங்கி கொள்ள வேண்டும் காலம் அப்படி இருக்கிறது.
    பரமசிவம் சார் சொன்னது போல் துறவு மனபான்மையை வளர்த்துகொள்ள வேண்டும்.

    வீட்டில் வைத்துக் கொண்டு அவர் காதுபட அவரை திட்டுவதும், அவமரியாதை செய்வதும், பேரன் பேத்திகளை பக்கத்தில் வர விடாமல், பேசவிடாமல் தடுப்பதும் செய்பவர்கள் இருக்கிறார்கள். அதற்கு முதியோர் இல்லம் எவ்வளவோ மேல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நீங்கள் சொல்வது போல் முதியோர் இல்லங்கள் ஒரு வகையில் நிறைவே...

      நீக்கு
  10. வயதானல் மட்டும்போதுமா நிகழ்கால நடப்புகள் தெரிய வேண்டாமாஇருப்பதோ முதியோர் இல்லம் ஆனால் நினைப்பு மட்டும் குடும்பத்தோடு உற்வாட எண்ணும்மனம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா எல்லா மனிதர்களும் கடைசி நேரத்தில் ரத்த உறவுகளைத்தானே நினைக்கின்றனர்.

      நீக்கு
  11. நல்ல ஆரம்பம். பல பெரியவர்களின் நிலை இப்படித்தான்.

    மேலும் என்ன சொல்லப் போகிறீர்கள் எனத் தெரிந்து கொள்ளக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. இன்னும் படிக்கலை. படித்துறை பெரியவர் கதையா? இன்றைக்கு இரவுக்குள் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு



  13. பத்து நாளைக்கு முன் திருப்பூரில் நடந்த கதையிது.
    அதிகாலை நான்கு மணிக்கு திருநெல்வேலி அருகே உள்ள செங்கோட்டை என்ற ஊரில் இருந்து 82 வயது பெண்மணி தாராபுரம் சாலையில் வந்து இறங்கினார். அருகே பழைய பேருந்து நிலையம். ஆனால் அவர் என்ன சொன்னார் என்று தெரியவில்லை. முந்தைய நிறுத்தத்தில் இறக்கிவிட்டு பேரூந்து சென்று விட்டது. புலராத பொழுதில் அவர் எங்கு செல்வது யாரைப் பார்ப்பது எவரை அழைப்பது என்று தெரியாமல் அங்கேயே சுற்றிக் கொண்டு இருந்து இருக்கிறார். அதிகாலை நடைபயிற்சிக்கு வந்தவர்கள் அவரைப் பார்த்து யார் என்று விசாரித்த போது அவருக்குச் சொல்லத் தெரியவில்லை. தடுமாற்றம். அப்புறம் அவர் பையில் இருந்த டைரியை வாங்கிப் பார்த்த போது மூன்று அலைபேசி எண்கள் இருந்தன. முதல் எண் அழைத்த போது செங்கோட்டையில் உள்ள அவர் மருமகள் எடுத்துள்ளார். ஆமாம் நாங்க தான் அனுப்பினோம். அங்கே மற்றொரு மகன் இருக்கின்றார். அவரைப் பார்க்கச் சொல்லுங்க என்று சொல்லிவிட்டு அப்படியே துண்டித்து விட்டார். அடுத்த எண் அழைத்த போது (16 முறை அழைத்துள்ளார்கள்) எடுக்கவே வில்லை. ட்ரூ காலர் வைத்து அவர் திருப்பூர் மின்சார வாரியத்தில் பணியாற்றும் செயற் பொறியாளார் என்று கண்டு கொண்டு முக்கியமான அதிகாரியைத் தொடர்பு கொண்டு சம்மந்தப்பட்ட நபரைப் பிடித்துள்ளார்கள். அவர் லயனுக்கு வந்தார். எடுத்தவுடன் எங்க அம்மாவை உங்களை யார் பார்க்கச் சொன்னது என்ற கண்டபடி பேசியுள்ளார். அதிகாரி மட்டத்தில் பேசி அதன் பிறகே அம்மாவை வந்து கூட்டிக் கொண்டு சென்றுள்ளார். மகன் வைத்துக் கொள்ள விரும்பாமல் நேரிடையான பேரூந்தில் ஏற்றிவிட்டு ஒதுக்கிவிட்டார். இங்கிருப்பவர் எப்படியாவது தொலைந்து போனால் பராவயில்லை என்று வருவது தெரிந்தும் கண்டும் காணாமல் இருந்தார்.
    இதைக் கேட்டு இரண்டு பேரின் குதிகால் நரம்பைக் கட் செய்து ரத்தம் வடியும் வரை நான் அருகே இருந்து அவர்கள் சாவதைப் பார்க்க வேண்டும் என்ற பேராசை என்னுள் உருவானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இரண்டு பேரின் குதிகால் நரம்பைக் கட் செய்து ரத்தம் வடியும் வரை நான் அருகே இருந்து அவர்கள் சாவதைப் பார்க்க வேண்டும்//

      எனக்கும்கூட ஆசையாக இருக்கிறது ஜி

      இதன் அடிப்படை வீட்டில் பெண்கள் இல்லாமல் வேலைக்கு போவதில் தொடங்கி கல்விமுறையில் ஒழுக்கம், பண்பு, நேசம் போதிக்கப்படாமை என்று நிறைய சொல்லிக் கொண்டு போகலாம்.

      அன்று பல குழந்தைகளுக்காக தந்தை மட்டுமே உழைத்தார். நல்ல உணவு, அன்பு, பாசம் நிறைந்து இருந்தது.

      இன்று ஒரேயொரு பிள்ளைக்காக இருவரும் உழைக்கின்றார்கள். அன்பு இல்லை முடிவில் பிள்ளை தறுதலை.

      நீக்கு
    2. என்ன அநியாயம் ஜோதிஜி.... இதைப்போல் தாயை மெரீனாவில் விட்டுவிட்டு, மத்திய தமிழகத்தைச் சேர்ந்தவர் சென்றுவிட்டது போல பல படித்திருக்கிறேன்.

      இப்போதுள்ள உலகத்தில் தங்களுக்குப் போகத்தான் பிள்ளைகளுக்கும் என்று இருக்கவேண்டும்.

      என் நண்பரின் அப்பா, சொத்து எதையும் இப்போதும் பசங்களுக்குக் கொடுக்கவில்லை. ஒரு பையன், இப்போ கொடுத்தால் நல்ல வீடு கட்டி நல்லா வாழ்க்கையை அனுபவிக்கலாம், நாங்க வயசானப்பறம் சொத்து கிடைத்து என்ன செய்ய என்று கேட்டதற்கு, எல்லாம் என் காலத்துக்கு அப்புறம்தான் என்று சொல்லிவிட்டார். கணவனும், தன் மனைவிக்கு சொத்து வைத்துவிட்டு போகணுமே தவிர, பசங்க காப்பாத்துவாங்கன்னு கம்பி நீட்டிவிட்டால், பசங்க தாயை அம்போன்னு விட்டுடுவாங்க. ரொம்ப ஜாக்கிரதையா இருக்கவேண்டிய காலம் இது.

      நீக்கு
    3. ஜோதிஜி நீங்கள் சொல்லியிருப்பதை வாசித்ததுமே மனதுள் கோபம் கொப்பளித்தது.

      கில்லர்ஜி எல்லார் வீட்டிலும் பெண்கள் வேலைக்குப் போவதால் எல்லாம் பிரச்சனைகள் எழுவதில்லை. வேலைக்குப் போகாத பெண்கள் வீட்டிலும் பிரச்சனைகள் பூதாகாரமாக இருக்கிறது. பெண்கள் வேலைக்குப் போனாலும் சரி போகவில்லை என்றாலும் சரி நம் எண்ணங்கள், மனம், மனசாட்சி இவை தான் இதில் முக்கியம்.

      எங்கள் வீடுகளில் வேலைக்குப் போகும் பெண்கள் தான் அதிகம். ஆனால் வயதானவர்களையும் தங்களுடன் வைத்துக் கொண்டுதான் வேலைக்குப் போகிறார்கள். இதுவரை எங்கள் குடும்ப வட்டத்திலும் சரி நட்பு வட்டத்திலும் சரி முதியோர் இல்லம் என்ற பேச்சே இல்லை. உறவுகளின் பெற்றோரைக் கூடப் பார்த்துக் கொள்ளத் தயாராக இருக்கிறார்கள்.

      கீதா

      நீக்கு
    4. நான் சொல்ல வருவது வேலைக்கு போகும் பெண்கள் இயந்திரத்தனமாக உழைப்பதால் குழந்தை வளர்ப்பில் கவனம் சிதறுகிறது.

      இன்றைய காலப்போக்கை மாற்றி விட்டது நாம்தான் அதை மறுத்து விட்டு காலம் மாறிவிட்டது என்று பொய் சொல்லுகிறோம்.

      நீக்கு
  14. இல்லை. இப்போவே படித்துவிட்டேன்.

    ஏன் இப்படி சோகக்கதை எழுதறீங்க. ஏற்கனவே வாழ்க்கை சோகமா ஓடிக்கிட்டிருக்கு. இதுல இன்னும் சோக ரசமா?

    எனக்கென்னவோ, மருமகள் (வந்தாள்னா), பையன் கையில் இருக்கும் சாக்லேட், பிஸ்கட்டைத் தட்டி விட்டு, இதெல்லாம் சாப்பிடக்கூடாது, உடம்புக்குக் கெடுதல் என்று சொல்லி மாமனார் மனதை பஞ்சர் பண்ணுவாள் என்று தோன்றுகிறது. ஒரு போன் பேசும்போது, சலிச்சுக்கும் அவளிடம் என்ன எதிர்பார்ப்பது? சொந்த பையனே அலட்சியமா இருக்கும்போது.. வேறு யாரை நொந்துகொள்வது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாளை இதன் ஆசிரியருக்குகூட இந்நிலை வரலாம். அப்பொழுது வெங்கடாசலம் ஐயா அவர்களை நினைத்து ஆறுதல் கொள்ளலாமே...

      //சொந்த பையனே அலட்சியமா இருக்கும்போது.. வேறு யாரை நொந்து கொள்வது ?//

      அதானே...?

      நீக்கு
    2. கில்லர்ஜி...இந்த மாதிரியெல்லாம் உங்களுக்கு வரவேண்டாம். அதற்காகப் ப்ரார்த்திக்கிறேன்.

      இருந்த போதும்,

      "யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க"

      என்பதுதான் என் தியரி. நான் எனக்கு முடிந்த வரையில் சரியாக நடந்திருக்கிறேன். சில பல குறைகள் இருக்கலாம். ஆனா அதுக்காக உங்க கடமைகளை நீங்க செய்யவேண்டாம் என்று நினைத்தால், எனக்கு அது ஓகேதான். நான் யாரையும் நம்பிப் பிறக்கவில்லை, என்னை வழிநடத்தும் இறைவனைத் தவிர. அவ்ளோதான் கில்லர்ஜி.

      நீக்கு
    3. இன்றைய தேதிவரை நான் எனக்காக வாழ்ந்ததில்லை நண்பரே

      இனி எனக்காக வாழ்வோம் என்று தீர்மானித்து விட்டேன்.

      நீக்கு
  15. எல்லோரும் மகன் 'அம்மா நினைவு நாளைக்கூட மறந்துவிடுவானா' என்று ஆச்சர்யப்படுகிறார்கள். உண்மையைச் சொன்னா 90%பேருக்கு அப்பா, அம்மா நினைவுநாளோ, பிறந்த நாளோ தெரியாது என்பதுதான் யதார்த்தம். பெற்றோருக்கு மட்டும் தங்கள் குழந்தைகளின் பிறந்த நாள் நினைவு இருக்கும், குழந்தைகளுக்கு அவங்களோட பிறந்த நாள் நினைவில் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொன்னது 100% உண்மை நிலை நண்பரே...

      நீக்கு
  16. மனதைக் கனக்கச் செய்த கதை/நிகழ்வு! இப்படியும் நடக்கும்/நடக்கிறது. இதன் முடிவைப் பார்க்க ஆவல்! காத்திருக்கேன். பேரனாவது தாத்தாவுக்கு ஆறுதலாக நடந்துப்பானா? பெற்றோர்கள் அனுமதிப்பார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      தங்களது யூகம் நிறைவேறட்டும்.

      நீக்கு
  17. இறந்த பின்னர் காரியங்கள் முடியும்போது ஓர் வெள்ளைப்பேப்பரில் இறந்தவர் பெயருடன் இறந்த நாள், மாதம், (தமிழ், ஆங்கிலம்) தேதி, கிழமை, திதி, இறந்த நேரம் எல்லாம் குறிப்பிட்டுக் குடும்பப் புரோகிதர் எழுதித் தருவார்! அதை பத்திரமாக வைத்திருந்தால் நினைவில் வரும். அது இருந்தாலும் அதைக் காற்றில் பறக்கவிட்டால் என்ன செய்ய முடியும்? எங்க உறவினர் ஒருத்தர் அவர் கணவருடைய இறப்பின் போது இம்மாதிரி எழுதிக் கொடுத்த பேப்பரை (கிட்டத்தட்ட ஆவணம்) அவங்க வளர்க்கும் பூனையிடம் கொடுத்துவிட்டார்கள்! அது சுக்குச் சுக்காகக் கிழித்துப் போட்டு விட்டது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சமீபத்தில் வாட்ஸ்-அப்பில் படித்தேன் மனதில் தெளிவும் கிடைத்தது.

      நாம்தான் நம்மை உயர்வாக நாம் இறந்து விட்டால் உலகமே இயங்காமல் போய் விடுவதுபோல் நினைத்துக் கொண்டு இருக்கிறோம் அப்படி எல்லாம் கிடையாது இரண்டு தினங்கள் கண்ணீர் பின்னர் அவரவர்க்கு சொந்த வேலைகளில் மூழ்கி இயல்புக்கு போய் விடுவார்கள்.

      இதுதான் உண்மை.

      இதில் சிலர் விதிவிலக்காகவும் இருக்கலாம்.

      இன்றுவரை எனது தங்கையை மறக்க முடியவில்லை. நினைவு வந்தவுடன் மனம் படபடப்பு வருகிறது.

      இன்றைய சூழலில் அது இருந்தால்கூட ஏதோ அதை சமைப்பது உண்டு, எனக்கு தங்கையும், தங்கைக்கு நானும் உதவியாக இருந்திருக்கலாமே என்றே தோன்றுகிறது.

      நீக்கு
    2. கில்லர்ஜி... //இரண்டு தினங்கள் கண்ணீர் பின்னர் அவரவர் நிலை// - உண்மையில், 80க்குள் போய்விட்டால் கொஞ்சம் பிரச்சனை இல்லை. இல்லைனா, அன்றைக்கே கண்ணீர் விடுவாங்களான்னு எனக்கு சந்தேகம்.

      இருந்தாலும், கொஞ்ச காலத்துல நாம் செய்தவைகள் அவர்கள் நினைவுக்கு வந்து அவர்களை நம் பிரிவைத் தாங்காமல் ஒரு நாளாவது ஒரு முறையாவது கண்ணீர் விட்டு அழச் செய்யும்.

      நீக்கு
    3. கில்லர்ஜி நீங்கள் உங்கள் தங்கை வனிதாவைப் பற்றி நினைத்ததைப் போல நான் நினைத்ததுண்டு அன்றே. நீங்கள் சொன்ன போது.

      நீங்கள் சொல்லியிருப்பது போல் எல்லாரும் அப்படி இல்லைதான். சிலர் தங்கள் நெருங்கிய பந்தங்கள் இல்லாததைக் குறித்து நினைத்துக் கொள்வதுண்டு. எனக்கு என் அம்மா பாட்டிகள் அத்தைகள் மாமாக்கள் என்று நினைவுக்கு வருவார்கள். நான் என் தங்கைகள் தம்பிகள் எல்லோரும் அடிக்கடிப் பேசிக் கொள்வதுண்டு. அவர்கள் சொன்ன அறிவுரைகள், சிறப்புகள் என்று

      கீதா

      நீக்கு
    4. என்னைச் சார்ந்தவர்கள் எனது மரணத்துக்கு அழுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

      ஆனால் ?

      எனது மரணம் கடந்த பிறகு பல வகையில் இவனுக்கு துரோகம் செய்து விட்டோமே என்று... என்னை நினைத்து வருந்தி அழுவார்கள் என்பது சர்வ நிச்சயம்.

      இது எனது ஆத்மார்த்தமான நம்பிக்கை.

      நீக்கு
  18. அந்த அருண் தங்களுக்கும் இப்படிச் செய்வான் என்று அவர்கள் இருவருக்குமே தோன்றவில்லையோ...

    தன்வினை தன்னைச் சுடும் என்பதும் உரைக்காமல்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நாளை இறைவன் இவர்களுக்கும் தீர்வு கொடுப்பான்.

      நீக்கு
  19. மனம் கதையைப்படிக்கும்போதே கனமாகி விட்டது. இன்று நிறைய பேருக்கு இந்த நிலை தான். நல்ல பாசமான குழந்தைகளைப்பெறுவதற்கும் கொடுப்பினை வேண்டும்.
    கணக்கில்லாமல் அன்பை வழங்கிய காலமெல்லாம் போய் எதெற்கெடுத்தாலும் கணக்கு பார்க்கும் காலம் இன்று வந்திருக்கிறது. அதற்கேற்ப வயதானவர்களும் வாழ்க்கையில் பலவற்றை அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேன்டியிருக்கிறது. இதில் தனக்கென்று இறுதிக்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்பவர்களும் மன தைரியத்துடன் அனைத்தையும் சமாளிக்கத் தெரிந்தவர்களும் புத்திசாலிகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      இதற்கு அடிப்படை காரணம் பாசம் அற்றுப்போய் விட்டது.

      கல்வி முறையிலும் மாற்றம் வேண்டும்.

      நீக்கு
  20. என்றைக்கு கூட்டுக் குடும்ப முறை மாறத்தொடங்கியதோ அப்போதே இது போன்ற அவலங்கள் தொடங்கிவிட்டன. நிச்சயம் கதையின் முடிவு சோகமாயிருக்கும் என்றாலும், காத்திருக்கிறேன் அதைப் படிக்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      சரியாக சொன்னீர்கள். இது அடுத்த தலைமுறைகளை நிச்சயம் அதிகம் பாதிக்கும். காத்திருப்புக்கு நன்றி.

      நீக்கு
  21. முதியோரின் வலியை மிக அழகான நடையில் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள் .

    பதிலளிநீக்கு
  22. வெங்கடாசலம் அய்யாவோட மகன் மாதிரி முக்கால்வாசி பேரு அப்படித்தான் இருக்காங்கே.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே தமிழகம் முழுவதுமே இருக்காங்கே...

      நீக்கு
  23. மிகவும் வருத்தமான விஷயம்.ஆனால் நடந்து கொண்டுதான் இருக்கிறது. வெங்கடாசலம் அவர்களின் மகனின் மனம் மாறட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  24. யதார்த்ததை மிகவும் அழகாக கூறியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  25. தாத்தாவின் எதிர்பார்ப்பு நிறைவேறியதா என்று அடுத்த பதிவில் பார்க்கிறேன் நண்பரே....

    பதிலளிநீக்கு