இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, நவம்பர் 16, 2025

கருத்தூர்


தாய்மையின் புனிதம்
பங்கமடைய வைத்தது
அச்சடித்த பேப்பரிலான
இருபது லட்ச ரூபாய்.

பக்கத்து வீட்டுக்காரிக்கு
இருபது லட்ச ரூபாய் 
தனலட்சுமி நினைத்தாள்
தன் மகனுக்கு அன்று 
காய்ச்சல் வந்து கெடுத்து 
விட்டதே என்று...

இருபது லட்சம் கிடைத்த
இளமதி நினைத்தாள்
அடுத்த மாநாட்டுக்குள்
அடுத்த ஒரு பிள்ளையை
பெற்றுவிட இயலுமா என்று...

என் மகன் இறந்தால் என்ன
கொன்றவர் என் மகனைப் 
போலவே இருக்கிறார்
ஆகவே இவரே என் மகன்
இல்லையில்லை என் மகர்

கணக்கு கேட்டாள் கண்ணகி
ஒரு பிள்ளைக்கு இருபது லட்சம்
என்றால் இரண்டு பிள்ளைக்கு
நாற்பது லட்சம் தானே என்று...

வீட்டில் இறந்தால் 
இருபதாயிரம் செலவு
ரோட்டில் இறந்தால் 
இருபது லட்சம் வரவு.

எம்புள்ள ஆத்மா சாந்தியடையணும்
அவரு அமெரிக்க அதிபர் ஆகணும்
எதிரிகளோட மனசு வேகணும்
மக்கள் வெந்து சாகணும்.

பக்கத்தில் நின்று காணும்
பாக்கியத்தை பெற்ற மகன்
எனக்கு பெற்றுத் தந்தான்.
அதனால் எமன் அவனை
பெற்றுக் கொண்டான்
அதன் கூலியாய் இருபது
லட்சம் பணமும் பற்று 
வைத்துக் கொண்டேன்
இதன் சூத்திரதாரி கூத்தாடன்
வாழ்க நீர் பல்லாண்டு....

எனது அறியாமை 
சமூகத்தின் அளவுகோல்
நான் அறிந்து கொள்ள
நாற்பத்தியொன்று
உயிர்களை பலி கொடுத்த
பிறகே அறிய முடிகிறது.

தேவகோட்டை கில்லர்ஜி துபாய்


5 கருத்துகள்:

  1. உங்கள் கவிதை மனதை பிசைகிறது. இப்படி அறியாமையின் உச்சத்தில் இருக்கும் மக்கள்.
    இப்படி ஒரு நடிகனின் மேல் பற்று வைத்து இருப்பது நல்லதா? இதை பயன்படுத்திக் கொள்ளும் தலைவன் செய்வது சரியா?

    நீங்கள் சமூக அவலத்தை கவிதையாக எழுதி இருப்பது நன்று.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் ஆதங்கம் சிறப்பாக வந்திருக்கிறது.

    கள்ளச் சாராயச் சாவுக்கு பத்து லட்சம், நடிகர் கூட்டத்தில் மடிந்தால் இருபது லட்சம் என விலைப்பட்டியல் போட்டு அரசு நடக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. வேதனையின் வெளிப்பாடாக உங்கள் வரிகள்.

    அதில் ஒரு மனைவி அலலது தாய் சொன்னது இன்னும் கேவலமாக இருந்தது.  மகனை இழந்த இன்னொரு தாயோ பஸ்ஸில் ஆடிப்பாடுகிறாள்...  என்ன பொழப்போ...

    பதிலளிநீக்கு
  4. ரொம்ப அழகா வேதனை , ஆதங்கம் எல்லாம் சொல்லிருக்கீங்க கில்லர்ஜி.

    மக்களின் முட்டாள்தனம் ....இந்த அளவு தலைவன்னு ஒரு வெறித்தனம்.....இப்படி மக்கள் இருந்தால் நாடு எப்படி உருப்படும்.....

    கீதா

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    உங்களின் ஆதங்கத்தை புரிந்து கொண்டேன். இன்றைய மக்களின் மனநிலையை அழகாக கவிதையில் கூறியுள்ளீர்கள். இந்தச் செய்தி படிக்காததினால் முதலில் கவிதையின் அர்த்தம் விளங்கவில்லை.

    /கணக்கு கேட்டாள் கண்ணகி
    ஒரு பிள்ளைக்கு இருபது லட்சம்
    என்றால் இரண்டு பிள்ளைக்கு
    நாற்பது லட்சம் தானே என்று...

    வீட்டில் இறந்தால்
    இருபதாயிரம் செலவு
    ரோட்டில் இறந்தால்
    இருபது லட்சம் வரவு./

    வரிகளின் தாக்கம் நிலைமையை புரிய வைத்தது..உங்களின் வேதனைப்பாடல் கண்டு அனைவர் மனதிற்கும் கஸ்டமாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு