இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஆகஸ்ட் 12, 2017

என் நினைவுக்கூண்டு (5)


இதன் பின்னணிகளை அறிவதற்கு கீழே சொடுக்கலாம்...


நீ உறங்கும் இடத்துக்கு வந்தேன் உள்ளே நுழைந்தவுடன் உன்னை அடக்கம் செய்திருந்த இடத்தில் கண்ட காட்சியால் அதிர்ச்சி. ஆனாலும் ஆச்சர்யமான சந்தோஷமே...

ண்ட காட்சியால் பிரமித்து நின்றேன் காரணம் உன்னைச்சுற்றி மூன்று மயில்கள் நின்று கொண்டு இருந்தன அமரர் பூங்காவில் மயில்கள் வருவதை இன்றுதான் முதன் முறையாக காண்கிறேன் ஒருவேளை மாலையில் வீட்டின் திறந்தவெளி மையப்பகுதியில் நீ மயில்களோடு பேசிக்கொண்டு இருப்பாயே உன்னை காணவில்லை என்பதால் தேடி இங்கு வந்து விட்டனவா பக்கத்தில் போவதற்கு சற்று நின்று யோசித்தேன் காரணம் நான் வந்தால் மயில்கள் பறந்து விடலாம் இருப்பினும் என்னைக் கண்ட மயில்கள் ஒன்றன்பின் ஒன்றாக நகர்ந்தன... நான் உன்னருகே வந்தேன் நேற்று வழி நெடுகிலும் வீசி எறிந்த பூமாலைகள் போக இன்னும் மலைபோல் இவ்வளவு மாலைகளா ? வனிதா உன்மீது எனக்கே சற்று பொறாமையாக இருந்தது நாளை எனக்கும் இவ்வளவு கிடைக்குமா ? ஏனோ தெரியவில்லை சமீபகாலமாக எனக்கு இப்படிப்பட்ட பொறாமையே வருகின்றது வேறு ஆசைகள் ஏதுமில்லை அமைதியாக உனது தலைமாட்டில் உட்கார்ந்து இருந்தேன் மயில்களைப்பற்றி யோசித்தேன் அதை புகைப்படம் எடுத்திருக்கலாமோ என்று தோன்றியது.

வனிதா விடிந்தும், விடியாமலும் நான் இங்கு ஏன் வந்தேன் தெரியுமா ? உறவுகள் சொன்னார்கள் உன்னுடன் உனது துணிகளை கிழித்து போட்டு மூடினால் நாளை நீ கிழிந்த துணியுடன் வீட்டில் வந்து நிற்பாய் என்று ஆனால் எனது கவலை என்னவெனில் நான் பலமுறை கேட்டு இருக்கிறேன் விலை உயர்ந்த துணிகளை போட்டு மூடினால் உறவினர்கள் சென்றவுடன் வெட்டியான்கள் மீண்டும் குழிகளை தோண்டி அந்த துணிகளை எடுத்து விடுவார்கள் என்று இது உண்மையோ, பொய்யோ ஆனால் இது உண்மையானால் உன்னை இப்படி செய்வது அறிந்தால் ? யாரால்தான் இதை தாங்கி கொள்ளமுடியும் ஆகவேதான் கட்டாயமாக கிழித்து போடச் சொன்னேன் சமீபத்தில் நமது பாலு மாமா இறந்தாரே அவரையும் இங்குதான் கொண்டு வந்து எரியூட்டினோம் உறவுகள் போனபிறகு கேவலம் விறகுக்காக என்ன நடக்கும் என்பதை மறுநாள் இரண்டாம்நாள் காரியத்துக்கு வந்த பிறகு ஆதாரப்பூர்வமாக இதே தொழிலில் அனுபவப்பட்டவர் எனக்காக சொன்னார் அதிர்ந்து விட்டேன் நேற்று மாலையில் கொள்ளி வைத்தோம் இது தெரிந்து இருந்தால் இரவு பத்து மணிவரை இடுகாட்டில் நின்று முழுவதும் எரிந்த பிறகு வீட்டுக்கு சென்று இருக்கலாம் என்று மைத்துனர் வாசுவிடம் சொல்லி வருந்தினேன்.

மேலும் நான் கேள்விப்பட்டு இருக்கிறேன் இடுகாட்டில் நள்ளிரவில் நரிகள் வந்து குழிகளை தோண்டலாம் என்று நேற்றே கவனித்தேன் குழியின் ஆழம் குறைவு ஆனால் எதுவும் வந்ததற்கான அடையாளம் இல்லை மயில்கள் உனது தலைமாட்டில் மண்களை கீறியதுதான் இருந்தன மனம் நிம்மதியானது ஆகவேதான் வந்தேன். உனது தலையணையை யாரும் எடுக்க மாட்டார்கள் இருப்பினும் விளையாட்டுக்கு எடுத்தாலும் சண்டை போட்டு வாங்கி விடுவாய் உனது சிறிய தலையணையை மட்டுமே நீ உபயோகிப்பாய் இதோ கேட்பாரற்று உனது தலையணை கண்டதும் எனது விழிகள் கசிந்தன. அமைதியாக உனது தலைமாட்டில் உட்கார்ந்து இருந்தேன் சற்று தூரத்தில் விருசுழி ஆற்றில் வாகனங்கள் செல்வதற்கான சப்தம் மற்றபடி மயான அமைதி உன்மீது கிடத்திய மாலைகளை கண்டேன் இப்பொழுதுதான் பூத்தது போன்ற செழிப்பு இரவின் பனியோ... ஏனோ தெரியவில்லை தலைமாட்டில் இருந்ததால் காணொளி எடுக்க தோன்றியது எடுத்தேன். புகைப்படமும்...

சுமார் அரை மணிநேரம் அமர்ந்து இருப்பேன் சட்டென ஒரு குரல் தம்பி யாருப்பா ? நிமிர்ந்து பார்த்தேன் வெள்ளை வேட்டி-சட்டையுடன் நீண்ட வெண்தாடியுடன் ஒரு பெரியவரின் குரல்.... உன்னை காண்பித்து தங்கச்சி.... என்றேன் தலையை மெதுவாக அசைத்தவர் சரி வீட்டுக்கு போ இங்கே இருக்க வேண்டாம் என்று சொல்லி விட்டு போய் விட்டார். போனவுடன் எனக்கு நினைவு வந்தது யாரிவர் ? சூழலுக்கு கொஞ்சமும் பொருந்தாமல் கல்யாணத்திற்கு போவதுபோல் வந்து இருக்கின்றாரே.... என்ற குழப்பத்தால் உடன் கிளம்பி வேகமாக கேட்டைக்கடந்து மெயின் ரோட்டைப் பார்த்தேன் இருபுறமும் யாரும் வந்ததற்கான அடையாளமில்லை வந்தவர் ஏதோவொரு வாகனத்தில் வந்திருந்தால்தான் இந்த நீண்ட சாலையை கடக்க முடியும் ? சடுதியில் காணாமல் போய் விட்டாரே... மனக்குழப்பத்தில் மீண்டும் உன்னருகே வந்து வெகுநேரம் அமர்ந்திருந்தேன். வெயில் சுள்ளென்று அடித்தது மனதார உன்னை நினைத்து இறைவனிடம் பிரார்த்தித்தேன் இறைவன் காலடியில் நீ அமைதியாக இளைப்பார வேண்டும் என்று அந்த நம்பிக்கையோடு உன்னை திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே வீட்டுக்கு புறப்பட்டேன் பொதுவாக இடுகாட்டுக்கு வந்தால் திரும்பி பார்க்ககூடாது என்பது மரபு அதற்காக உன்னையும் இப்படி செய்ய முடியுமா ? நான் உனது விருப்பத்துக்குறிய அண்ணனாகி விட்டேனே... பிறகு மூன்று தினங்கள் கழித்து உன்னை பார்க்க வந்தேன், மீண்டும் ஒருவாரம் கழித்து உன்னை காண வந்தேன் சமீபத்தில் பாலு மாமாவுக்காக வந்த பொழுது உன்னருகே சிறிது நேரம் அமர்ந்திருந்தேன் தற்பொழுது உனது அடையாளங்கள் மறைந்து வருகிறது என் நெஞ்சில் மட்டும் பசுமையாய்... நீ

காணொளி
உனது தலைமாட்டில் அமர்ந்தபடி...

கூண்டுகள் சுழலும்...

22 கருத்துகள்:

  1. ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை... மிகவும் வருத்தமாய் இருக்கிறது ஜி...

    பதிலளிநீக்கு
  2. வாழ்க்கையில் கஷ்டப்பட்டவர்களுக்கு மறுமை ஆறுதலளிக்கும்.

    பதிலளிநீக்கு
  3. வருத்தமாய்த் தான் இருக்கிறது . ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை

    பதிலளிநீக்கு
  4. வாழ்ந்த சுவடும், மறைந்த சுவடும் மண்ணில் மறைந்தாலும் மனதிலிருந்து என்றும் மாறாதுண்ணே. ஆறுதல் கொள்க

    பதிலளிநீக்கு
  5. மறதி என்பது மனிதனுக்கு உள்ள வரம் காலம் வருத்தம் குறைக்கும் குறைக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  6. ஆறுதல் சொல்ல சொற்கள் இல்லை.காலம் தங்களது துயரத்தை போக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  7. அமைதி காண்க!த ம 5

    பதிலளிநீக்கு
  8. பிரிவு என்பது தாங்க இயலா வேதனைதான் நண்பரே
    ஆறுதல் கூறுவதற்கு வார்த்தைகள் இல்லை
    தம+1

    பதிலளிநீக்கு
  9. ஆறுதல் கொள்ளுங்கள் சகோ .
    மறக்க முடியாத உடன்பிறப்பு .

    இறைவனிடம் அமைதியாக இளைப்பாருவார் உங்கள் அன்பு தங்கை, அவர் தெய்வகுழந்தை அல்லவா!
    அமைதி கொள்ளுங்கள் நீங்கள்.

    பதிலளிநீக்கு
  10. உங்கள் பாசத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது ஜி :(

    பதிலளிநீக்கு
  11. என்ன சொல்வதென்று புரியவில்லை.. நெகிழ்ந்துகிடக்கிறது மனம். இப்படியான அண்ணனையும் தங்கையையும் பிரித்துவைத்து வேதனைப்படுத்தும் காலத்தை வைதுகொண்டு இருக்கிறேன். மனம் தேற்றிக்கொள்ளுங்கள் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
  12. ஆறாத ரணங்கள். வெண்தாடிப் பெரியவர் ஆச்சர்யமளிக்கிறார்.

    பதிலளிநீக்கு
  13. பாசம் ஏனைய உணர்வுகளைக் காட்டிலும் வலிமையானது.
    ஆறு மனமே ஆறு.

    பதிலளிநீக்கு
  14. ஆறாத காயம். என்றாலும் மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள். வெண்தாடிப் பெரியவர் நல்லதே சொல்லி இருக்கார்.

    பதிலளிநீக்கு
  15. என்ன சொல்வதுன்னே தெரியலை அண்ணா...
    தேறுதல் கூற வார்த்தைகள் இல்லை.
    இந்த முறை வந்து தங்களைச் சந்திக்காதது துரதிஷ்டமே..
    தாங்கள் பரமக்குடியில் இருந்தபோது பயணம் சொன்னேன்.
    அன்று மாலை மனைவிக்கு ரொம்ப முடியலை... பின்னர் மதுரை, தேவகோட்டை என அலைந்து பத்து நாட்களுக்குப் பின்னர்தான் இங்கு வந்தேன்.

    பதிலளிநீக்கு
  16. இயற்கை வகுத்த நியதி..............

    பதிலளிநீக்கு
  17. Time is a healer என்று சொல்வார்கள் ஜி ! என்ன சொல்ல?

    பதிலளிநீக்கு
  18. கண்ணீர் பதிவு
    வருத்தமாக இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  19. வருத்தம் தான். காலம் உங்கள் ரணங்களை ஆற்றட்டும்.

    பதிலளிநீக்கு
  20. கண்ணீர் பதிவு கலங்க வைத்து விட்டது

    பதிலளிநீக்கு
  21. காலன் ஏற்படுத்திய காயத்திற்கு காலம் களிம்பு பூசும்.

    கோ.

    பதிலளிநீக்கு