தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், மே 08, 2017

என் நினைவுக்கூண்டு (2)


இதன் பின்னணிகளை அறிவதற்கு கீழே சொடுக்கலாம்...


வேண்டாம் ஜி.ஹெச். என்ற மரணமடம் ஆனால் சிலிண்டரும், ஒயரின் இணைப்பும் உன்னுடனே என்ன செய்வது  ?

வேறு வழியின்றி நுழைந்தோம் உன்னுடன். புறப்படும் அவசரத்தில் உனது ஃபைல்கள் கைமாறி விட்டது உடன் பைக்கில் கொண்டு வந்தனர் விவேக்கும், தமிழ்வாணனும் அவசரப்பகுதி நுழைவாயிலில் ஃபைல்கள் வந்து கொண்டு இருக்கும் விடயத்தை சொன்னபோது சிறிதும் சஞ்சலமின்றி செவிலியர்கள் சொன்னார்கள் அப்படி ஓரமாக நில்லுங்கள் வழி நெடுகிலும் ரத்தக்கறைகள் சுத்தம் செய்ய யாருமில்லை அப்பொழுதுதான் விபத்து நடந்து துடிக்க, துடிக்க சிலர் ஒருவர் கண்ணெதிரே அடங்கி கொண்டு இருந்தார் நான் கேட்க நினைத்தேன் இருப்பினும் முடியவில்லை காரணம் உன்னைக் காப்பாற்றுவதுதானே எனக்கு முக்கியம் ஒரு இளைஞன் முகம் முழுவதும் காயமுடன் தனக்கு அடிபட்ட விடயத்தை யாருக்கோ மரணத்தின் விளிம்புக்கே சென்று விட்ட பயத்தில் சொல்லிக் கொண்டு அங்கும் மிங்குமாய் நடப்பதைக்கண்ட செவிலியர் ஒருத்தி சொன்னாள் //யோவ் அலப்பறை பண்ணாம ஒரு இடத்தில நில்லு// என்ன இது கொஞ்சம்கூட மனசாட்சி இல்லையா ? சிறிது நேரத்தில் ஃபைல்கள் வந்து விட உன்னை ஐ.சி.யூ கொண்டு போகச் சொன்னார்கள் என்னை உள்ளே விட அனுமதிக்கவில்லை நான் செவிலியர்களிடம் வாதாடி இல்லையெனில் நான் வீட்டுக்கு போகிறேன் என்றதும் அனுமதி கிடைத்தது காரணம் நானில்லை என்றால் உனது ஒத்துழைப்பு அவர்களுக்கு கிடைக்காது என்பதை அறிந்ததால் இருப்பினும் எனது வார்த்தைக்கு அங்கு கிடைத்த மரியாதை இங்கு கிடைக்கவில்லை காரணம் அங்கு நிமிடத்துக்கு நிமிடம் பணம் கட்டிக்கொண்டே......... இருந்தேன்.

உள்ளே நுழைந்த பொழுதே அது மரணமடம் போன்றே இருந்தது உனக்கு சுவாசம் போகும் மாஸ்க் மாட்டி இருந்தார்களே.... அது பிறந்த குழந்தைக்கு மாற்றும் அளவிலான சிறியதாக இருந்தது அதனுள் உனது மூக்கும், வாயும் சிறைபட்டு சுவாசம் இழுத்துவிட இடமில்லாமல் உனக்கு அந்த கண்ணாடி போன்ற மாஸ்க் வியர்க்கும் பொழுது நான் அதை வெளியே எடுத்து விடும் பொழுது நீ சந்தோஷப்பட்டு விழிகளால் நன்றி சொல்வதை அறிந்தேன் மேலும் நீ அதனால்தான் சுவாசிக்க கஷ்டப்படுவதையும் உணர்ந்து செவிலியரிடம் சொன்னால் அவள் எனது பேச்சை கேட்காதது மட்டுமல்ல என்னை வெளியே போகச்சொன்னாள் எனக்கு புரிந்து விட்டது இவள் உன்னை கொன்று விடுவாள் என்று இருப்பினும் நான் உன்னை விட்டு போகாமல் உன்னுடனேயே இருந்தேன் மற்றவர்கள் அனைவரும் வெளியே....

நள்ளிரவு ஒரு மணி இருக்கும் பிறகு நீ //அண்ணே கக்கூஸ் போகணும்// என்றவுடன் உன்னை அழைத்துக்கொண்டு போனேன் உள்ளே சென்றதும் என்னை //நீ வெளியே போ// என்றாயே... நான் பக்கத்திலேயே கண்ணீருடன் நின்றேன் மீண்டும் கேட்டாயடா... //ய்யேன் அழுவுறே ?// உனக்கு நான் என்ன சொல்வது ? மீண்டும் பெட்டுக்கு வந்ததும் என்னைப் பார்த்து கோணல் வழித்தாயே.... நீ மரணத்துக்கு கால்மணி நேரம் முன்புவரை நன்றாய்த்தானே இருக்கிறாய் பிழைத்து விடுவாய் என்றுதானே நினைத்தேன் உனக்கு உடை மாற்ற வேண்டுமென்று என்னை வெளியே போகச்சொல்ல நான் பரவாயில்லை இருக்கிறேன் என்று சொன்னதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை பிறகு வேகமாக வெளியே வந்து பெரிய தங்கையை அழைத்து வந்து உள்ளே விட்டேன் நீயாவது கொஞ்சம் தைரியசாலி எனலாம்... என்ன செய்வது உனக்கு துணைக்கு விட்டு வெளியே சென்றேன் அதுவரை எனது கையை நீ விடவே இல்லை //போகாதண்ணே// என்றாயடா அதுதான் நீ என்னுடன் பேசும் கடைசி வார்த்தை என்று நான் நினைக்கவே இல்லையடா...

மீண்டும் நான் உள்ளே வந்தவுடன் உன்னைப் பார்த்தேன் உன்னிடம் அசைவில்லை உனது கால்களை பிடித்துப்பார்த்தேன் ஜில்லென்று இருந்தது கண்டு அதிர்ந்தேன் சற்று முன்தான் உனது உயிர் பிரிந்து இருக்க வேண்டும் செவிலியரை அழைத்து சொன்னேன் உடன் பயிற்சி பெறும் வடநாட்டு பெண்ணொருத்தி மருத்துவராம் அவள் உன்னைவிட பாதி வயது குறைந்தவள் போலவே இருந்தால் விளையாட வேண்டிய வயதில் உயிரின் மதிப்பு இவளுக்கு எப்படித் தெரியும் ? டெதஸ்கோப்பை எடுத்து உன்னை பரிசோதித்தாள் நான் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தேன் என்ன ஆக்டிங் பண்ணுறியா ? எனது விழிகளில் கொலைவெறியை கண்டவள் சற்றே பின் வாங்கி செவிலியரை அழைத்து விபரம் சொல்லி விட்டு அடுத்த அறைக்குள் நுழைந்து பூட்டிக்கொண்டாள் நிச்சயமாக அவள் பெண் மருத்துவராக இல்லாமல் ஆணாக இருந்திருந்தால் எதையாவது பிடுங்கி குத்தியிருப்பேன் எனது கோபத்தை கட்டுப்படுத்த முடியாத நான் உன்னுடன் இணைக்கப்பட்ட வயர்களை எல்லாம் பிடுங்கி எறிந்தேன் உடன் எனது செல்லில் நீ பெட்டில் அவசியமில்லாமல் கொல்லப்பட்ட நிலையில் இருந்ததை புகைப்படம் எடுத்தேன் செவிலியர் என்னை சத்தமிட கோபம் தாங்காமல் உன் தங்கச்சியா இருந்தால் இப்படி செய்வியா ? என்று கேட்டேன் எனது அலறல் சத்தம் கேட்டு அடுத்த வார்டிலிருந்து இரண்டு ஆண் மருத்துவர்கள் வந்து புகைப்படம் எடுத்ததற்காக போலீஸுக்கு போன் செய்வதாக சொல்லவும் நிலைமையை உணர்ந்தேன் நான் உனக்காக ஜெயிலுக்கு போவதால் பிரச்சனை இல்லை ஆனால் உன்னை நான் காணவே முடியாத அளவுக்கு செய்து விடுவார்கள் என்பதைவிட உன்னை நல்ல முறையில் அடக்கம் செய்ய முடியாமல் உன்னை அலைக்கழித்து விடுவார்களே.... என்ற கவலையில் அமைதியானேன் எத்தனையோ உயிர்கள் பிரிந்த, கொல்லப்பட்ட இடத்தில் உனது உயிர் பிரிந்ததை இன்னும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையடா... வீட்டில் வைத்திருந்து உனது உயிர் பிரிவதை பார்த்து இருந்திருக்கலாமே.... தவறு செய்து விட்டேன் உன்னை இங்கு கொண்டு வந்தது என் தவறு. வனிதா உனது உயிர் பிரிந்த நேரம் நள்ளிரவு 2:30 am

கூண்டுகள் சுழலும்...

22 கருத்துகள்:

  1. ஒவ்வொரு வார்த்தையிலும் உங்களின் பாசம் தெரிகிறது :(

    பதிலளிநீக்கு
  2. வாசிக்க வாசிக்க மனம் முழுவதும் கனத்தே விட்டது... நான் நினைப்பது இந்த உலகில் ஒன்று மட்டும் உண்மை.. அதுதான் “விதி”.. நமக்கு எந்த நேரம் நம் பயணம் முடியப்படும் என எழுதப்பட்டிருக்கோ, அந்நேரம் அது முடிந்தே போகும்... அதனால யாரோ கொன்று விட்டார்கள், கவலையீனத்தால்தான் இப்படி நடந்தது என்றெல்லாம் நினைத்து மனம் வருந்தாதீங்கோ.... உங்கள் தங்கை கொடுத்து வைத்தவ...

    கதைத்துக் கொண்டு, எந்த வேதனையும் படாமல்... இப்படி நடக்கவும் கொடுப்பனை வேண்டும்.

    நீங்கள் அருகில் இருந்தால், அந்த ஆன்மாவைப் பறிக்க முடியாதெனக் கடவுளுக்குத் தெரிஞ்சிருக்கிறது, அதேநேரம் அவவின் ஆன்மாவின் நேரம் முடிவுக்கு வரவும் வேண்டும் என்பதால், இறைவன் நடத்திய நாடகம் தான் அந்நேரம் பார்த்து உங்களை வெளியே அனுப்பினார்களோ...

    கண்ணதாசனின் ஒரு வரி நினைவுக்கு வருகிறது...
    “விதி தவறாக இருக்குமேயானால், தெய்வம் கண்களை மூடிக் கொள்ளும், அதுக்காக அழுது பயனில்லை”.

    சொல்வது சுலபம், அனுபவிப்பவர்களுக்கே தெரியும் அதன் வேதனையும் வலியும்... மனதில் அடக்காமல் இப்படி வெளியே சொல்லும்போது உங்கள் மனப்பாரம் நிட்சயம் குறையுமென நான் நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. உடனடி மரணத்துக்கு காரணம் என்ன சொன்னார்கள்?

    அழகாச் சொல்லியிருக்காங்க அதிரா. மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள் ஜி. நடக்க இருப்பதை யாரால் மாற்ற முடியும்? இதே போல நம்ப முடியாத மரணம் ஒன்று எங்கள் உறவுகளிலும் இருந்தது.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    ஜி

    மனதை ஆறுதல் படுத்துங்கள் ஆண்டவன் துணை.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. அவங்களுக்கு அந்த நேரம் உயிர் போகவேண்டும் என்ற விதி இருந்திருக்கிறதோ! என்னவோ போங்க. மருத்துவமனை போனாலும் இப்போதெல்லாம் மனம் சஞ்சலமே அடைகிறது! :(( இம்மாதிரி நிறையக் கேள்விப் படுகிறோம். எல்லாம் தகுதியற்ற மருத்துவர்களால் தானோ என்ற எண்ணமும் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  6. மனம் கனக்கின்றது.. ஜி..

    தங்களைத் தாங்களே தேற்றிக் கொள்ள வேண்டும்..

    பதிலளிநீக்கு
  7. வருத்தம் புரிகிறது. விதி என்ற ஒன்றை நம்பினால்தான் மனது ஆறுதல் கொள்ளும்.

    செவிலியர்களுக்கும் மருத்துவர்களுக்கும் எத்தனையோ உயிர்களில் இதுவும் ஒன்று. நமக்குத்தான் அது ஒன்றே ஒன்று.

    மருத்துவமனை பெயரைப் பார்க்க முடியலை. மற்றவர்களுக்காவது உபயோகமான எச்சரிக்கையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  8. என்ன சொல்வது என்று தெரியவில்லை. இதே மாதிரியான நமது அன்புக்கு பாத்திரமான ஒருவரின் உயிர் பிரிகின்ற வேளையில், அவருக்கு அருகில் இருந்த அனுபவம் எனது அம்மாவை ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்து இருந்தபோது எனக்கும் நேர்ந்திருக்கிறது. மருத்துவமனை ஊழியர்கள் அவர்கள் பணியை செய்து இருப்பார்கள்.மனம் அமைதி பெறுக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலே நான் குறிப்பிட்டது எனது அம்மாவின் மரணத்தைதான். எதிர்பாராதது.

      நீக்கு
  9. ஜி...உங்கள் மனம் படும் வேதனையை வார்த்தைகளுக்குள் அடக்கிட முடியாது...அதுவும் இப்படி எல்லாம் நடக்கும் போது...என்ன சொல்ல...இப்போ தைய மருத்துவ உலகம் மனித நேயத்தை இழந்து வருகிறது...ஆனால், இப்படித்தான் நடக்க வேண்டும் என்று இருந்தால் அதை யாராலும் தடுத்து நிறுத்திட முடியாது தான்....ஒவ்வொரு நிகழ்விற்கும் காரண. காரியம் இருக்கும்.... சிலது நமக்குப் புரியும்...சிலது நமக்குப் புரியாத...அல்லது புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒன்று என்று ஆகி..விதி என்று மனத்திற்குப் பூட்டு இட்டு விடுகிறோம்....இல்லை என்றால் மனம் தறி கெட்டு அலையும்....

    பதிலளிநீக்கு
  10. உடனிருந்தவர் நீங்கள் - உங்கள்
    உணர்வுளை உணர முடிகிறது - ஆனால்
    என்னால்
    உங்களை ஆற்றுப்படுத்த இயலவில்லையே!

    பதிலளிநீக்கு
  11. படித்தவுடன் மனம் கனத்து போனது . அதிராவின் ஆறுதல் வார்த்தைகள் மிகவும் உண்மை.
    நாங்கள் எல்லோரும் என் அக்காவின் அருகில் இருந்தோம், இரவு நேரம் சோதனையாக எல்லோரும் கண் அசந்த நேரம் அக்காவை அழைத்துக் கொண்டார் இறைவன்.( 25 வயது)

    உங்களை போகவேண்டாம் என்று சொன்ன அந்த அன்பு உங்கள் மனதை விட்டு அகலாது. தங்கையின் நினைவுகள் என்றும் மனதில்.


    பதிலளிநீக்கு
  12. ஒவ்வொரு வரியிலும் நீங்கள் அந்த குழந்தை மீது வைத்த பாசம் தெரிகிறது ..மனம் கனக்கிறது

    பதிலளிநீக்கு
  13. அவ்வப்போது உங்களின் பாரத்தை எங்கள்மீது சிறிது இறக்கிவைக்கின்றீர்கள் என்பதை உங்கள் பதிவுகள் உணர்த்துகின்றன.

    பதிலளிநீக்கு
  14. கண்கலங்க வைத்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  15. தங்களுக்கு ஏற்பட்ட இந்த இழப்பு பற்றி படிக்கும் போது மனதில் ஒரு இனம் புரியாத சோகம் கப்பிக் கொள்கிறது. காலம் தங்களின் சோகத்தை சமாதானப் படுத்தும். மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  16. மருத்துவமனைகளில் பெரும்பாலானவை வணிக நிறுவனங்கள். மருந்துகள் கிடைக்கும். மனிதாபிமானம் தேடினாலும் கிடைப்பது அரிது.

    பதிலளிநீக்கு
  17. பதிவை படிக்கும் போது மனம் கனத்து விட்டது சகோ.

    பதிலளிநீக்கு
  18. மனம் கனக்க வைத்த பதிவு. காலம் மட்டுமே உங்கள் வலியைப் போக்கக்கூடும்.

    பதிலளிநீக்கு
  19. மனம் கனக்கச் செய்கிறது
    ஆறுதல் சொல்வது கடினமே
    கால்ம்தான் ஆறுதல் அளிக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  20. இதயம் நொறுங்கியே விட்டது! மருத்துவம் எனும் பெயரில் உயிரைப் பிடுங்கித் தின்னும் இப்படிப்பட்ட கொடூரர்களை என்ன செய்யப் போகிறோம்?

    எனக்கும் இப்படிச் சில அனுபவங்கள் உண்டு. ஆனால், இந்த அளவுக்கு இல்லை. இது உச்சம்! ஏதாவது செய்ய வேண்டும் ஐயா! வெறும் கண்ணீர் சிந்துவதோடு நம் கடமை முடிந்து விடுவதில்லை! இந்த மருத்துவத்துறைக் காட்டேரிகளுக்குப் பாடம் புகட்ட ஏதேனும் செய்தே தீர வேண்டும். அதுதான் பாதிக்கப்பட்ட நம் உறவுகளுக்கு நாம் செய்யும் சிறந்த அஞ்சலியாக இருக்க முடியும்!

    பதிலளிநீக்கு
  21. மனது கனக்குகின்றது . ஆறுதல்கிடைக்க ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்!

    பதிலளிநீக்கு