இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், மே 30, 2018

சத்தியமங்கலம், சந்தேகப்புயல் சத்தியமூர்த்தி


     பல திரைப்படங்களில், பார்த்து கேட்டு இருப்பீர்கள் கசாநாயகன் சொல்வார் கசாநாயகியிடம், ''உன் கழுத்துல நான்தான் தாலி கட்டுவேன் இதை அந்த ஆண்டவனே வந்தாலும் சரி தடுக்க முடியாது'' இந்த வசனத்தை, எனக்குத் தெரிய 1936 லிருந்து... 2018 வரை எல்லா நடிகர்களுமே பேசி விட்டார்கள் பெரும்பாலும் டப்பிங்காரர்கள் மூலம் என்றாலும் நம்ம பாமரப்பயல்க அவுங்க பேசியதா நினைத்துதானே கை தட்டுவதும், வாழ்க்கைக்கும் எடுத்து கொள்கிறார்கள். சரி இந்த வசனத்தின் பொருள் என்ன ? அதாவது நான் இறைவனைவிட பெரியவன் பலசாலி என்றுதானே அர்த்தம் ? இது இந்த வசனத்தை எழுதிய வசனகர்த்தாவுக்கு தவறாக தெரியவில்லை, இதை பேசிய நடிகருக்கு தவறாக தெரியவில்லை, படத்தின் இயக்குனருக்கு தவறாக தெரியவில்லை, பணத்தை கொட்டி படமெடுக்கும் தயாரிப்பாளருக்கு தவறாக தெரியவில்லை, டப்பிங் பேசியவருக்கும் தவறாக தெரியவில்லை (பாவம் அவரென்ன செய்வார் ? கூலிக்காக இருட்றையில் உட்கார்ந்து பேசி விட்டு வெளியுலகத்துக்கு தெரியாமல் வாழ்பவர்) சரி இவர்களுக்குத்தான் தெரியவில்லை காலம் காலமாய் பார்க்கும் மக்களுக்கு கூடவா தெரியவில்லை ?

இது எனக்கு சந்தேகமாக இருக்கிறது,

இப்படியெல்லாம் தைரியமாக பேசியவர்கள் ஒருநாள் இறைவனுடைய அடியாள் எமன் வரும்போது... சினிமாவில் ரௌடிகளை தூக்கிப் போட்டு மிதிப்பதுபோல் மிதிக்காமல், துப்பாக்கியை எடுத்தும் சுடாமல், அவரை நம்பியே வாழ்ந்து கொண்டு இருக்கும் ரசிகர்களிடமும் ஒன்றும் சொல்லிக் கொள்ளாமல், எமனுடன் எருமை மாட்டில் ஏறிப்போய் விடுகிறார்களே அது எப்படி ? அப்படியானால் இவர்களுக்கு எமனை கண்டால் பயமா ? இறைவனையே போங்க.... டுபுக்கு என்றவர்கள் இறைவனிடம் சம்பளத்திற்கு வேலை செய்யும் சாதாரண எமனிடம் பயப்படுகிறார்களே அதெப்படி ?

இதுவும் எனக்கு சந்தேகமாகவே இருக்கிறது.

 நட்பூக்களே இப்பதிவு எழுதியது 2013-ல் காணொளி தேடியதில் தாமதம் போதுமென்று நிறுத்தி விட்டேன் எமது படத்தொகுப்புக்காக காணுக ! கில்லர்ஜி

காணொளி

ஞாயிறு, மே 27, 2018

கமல்ஹாசன் அவர்களுக்கு...

மகளும், தந்தையும்.

 எமது உயிரினும் கீழான திரைப்பட நடிகர் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு உங்களுக்கு நினைவு இருக்காது 1983 இல் தாங்கள் டெல்லியிலிருந்து மூன்றாம் பிறைக்கு அவார்டு வாங்கி விட்டு சென்னை விமான நிலையத்தில் விமானத்திலிருந்து உள்ளே வரும்போது கண்ணாடி தடுப்புச்சுவர் அறைக்குள் நானும், இராமநாதபுரத்தை சேர்ந்த ஒரு சகோதரி இருவர் மட்டும் தவறுதலாக சிக்கி விட்டோம். உங்களைக் கண்டவுடன் அந்தச் சகோதரி ஓடிவந்து கையைப் பிடித்து குலுக்கி விட்டு மகிழ்ச்சியாக குதிக்க, நான் நின்று கொண்டு இருந்தேன். என்னிடம் சிரித்துக் கொண்டே கை கொடுக்கும்போது நான் தயக்கத்துடன் ஸார் நான் உங்கள் ரசிகர் கிடையாது என்று உண்மையை சொன்னேன். உடன் ரஜினி ரசிகரா ? என்று கேட்டீர்கள். நான் யாருக்குமே ரசிகர் கிடையாது என்றதும் இன்னும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது என்னிடம் ஆங்கிலத்தில் சொன்ன வார்த்தை. கீப் இட் அப் என்று எனது கன்னத்தை தட்டி விட்டு கடந்தீர்கள்.

வியாழன், மே 24, 2018

ரஜினிகாந்த் அவர்களுக்கு...


எமது உயிரினும் கீழான திரைப்பட நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு தாங்கள் உண்மையான கன்னடர்தானா ? எமக்கு ஐயம் வரக்காரணம் திடீரென்று தாங்கள் உம்மை க்ரீன் தமிழன் என்று சொல்லிக் கொள்வதால்தான். இது இனத்துரோகம் இல்லையா ? உம்மை கன்னடர் என்று சொல்லிக் கொண்டே அரசியலுக்கு வருவதில் என்ன தயக்கம் ? பதவி சுகத்துக்காக தனது இனப்பற்றை களைந்த நீர் பிற இனமான தமிழரின் பற்றை காப்பீரா ? உம்மை நம்பி தமிழக மக்கள் எப்படி வாக்கரிசி மன்னிக்கவும் விரலின் தவறு எப்படி வாக்கு அளிப்பார்கள் ?

செவ்வாய், மே 22, 2018

அழைப்பு விடுப்பாயாடா ?


திருத்தலங்கள் எல்லாம் தவமிருந்து
மகனே தவசி உன்னை பெற்றோமடா
தெருவோரம் தவிக்க விட்டாயடா
பாசம் கொட்டி வளர்த்தோமடா
பாதையோரம் படுக்க விட்டாயடா
கால் கடுக்க பாதயாத்திரை சென்று
வந்தோமடா உன்னைப்பெற – இன்று
என் கால் வலி தீர வழி இல்லையடா
உன்னை ஈன்றபோது வலிக்கவில்லையடா
உன்னவள் ஈட்டி வார்த்தை இன்னும் வலிக்குதடா
மனைவியவள் வந்தவுடன் மதி மயக்கமாடா
மனிதநேயம், பாசம், நேசம் மறந்து விட்டாயடா
உனை மறக்க எமக்கு முடியாதடா உடன் நாங்கள்
மரணித்தால் மீண்டும் உனக்கே வந்து பிறப்போமடா
அப்பொழுதாவது உனது நேசம் கிடைக்குமடா
இறைவா எங்கள் குரல் கேட்பாயடா
இன்றே மரணம் கொடுப்பாயடா...
உடனே ஜனனமும் கொடுப்பாயடா...
எங்களுக்கு அழைப்பு விடுப்பாயாடா ?

திரு. வெங்கட்ஜி அவர்கள் தளத்தில் அவரது படத்திற்கேற்ற கவிதை தொகுப்பில் முன்பு நான் எழுதிய, ஒருகோடி ரூபாய் பரிசை தவற விட்ட கவிதை. மீண்டும் உங்கள் பார்வைக்கு.

சனி, மே 19, 2018

பாரதிராஜா ரஜினியை திட்டாதீர்


நட்பூக்களே திரு. ரஜினிகாந்த் அவர்களை விமர்சிக்க திரு பாரதிராஜாவுக்கு தகுதி உண்டா ? இன்றைக்கு மார்கெட்டு போனதும் வேறு பொழுது போகாமல் தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும் என்று கூவுவதற்கு வெட்கமாக இல்லை ? எந்த தமிழனை இவன் அறிமுகப்படுத்தினான் ? எந்த தமிழச்சியை இவன் அறிமுகப்படுத்தினான் ? வெளிநாட்டு, வெளிமாநிலப் பெண்களை இளமைக் காலத்தில் வாழ்ந்து அனுபவித்து அறிமுகப்படுத்தி விட்டு இப்போது கூவுகின்றான்.

வியாழன், மே 17, 2018

ஒஸாமாவும், நானும்

எமிரேட்ஸ் இண்டர்நேஷனல் ஹோட்டல் துபாய்

ஒஸாமாவும், நானும் பதிவுக்கு வருபவர்கள் இதன் முந்தைய பதிவான ஸினப்பும், சித்தப்பும் படிக்க என்னை சொடுக்குக முன்பு படித்தவர்கள் உடன் தொடர்க...


ரோட்டானா ஹோட்டல் அபுதாபி

உனக்கு நாடு இருக்கின்றது வீடும் இருக்கின்றது எனது நிலையைப் பார்த்தாயா ?
உண்மைதான் இந்த விடயத்தைக் குறித்து நானும், இவனும் பலமுறை அதிகம் விவாதித்து இருக்கின்றோம் அந்த தருணங்களில் எல்லாம் நான் எனது இந்தியாவை பெருமையுடன் நினைப்பேன் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது இரண்டாயிரம் திர்ஹாம்ஸ் எடுத்துக் கொடுத்தேன் முழித்தான்.
என்ன விசயம் யாருக்கு பணம் ?
உனது பணம்தான் வாங்கிகொள்
அவனுக்கு நம்பிக்கையில்லை
நீ நேற்று கொடுத்தாலும் ஏதோ முட்டாள்கள் தினத்துக்காக விளையாடுறே என்று நினைப்பேன் இன்றைக்கு கொடுக்கிறே.... உண்மைதானா ?
ஆம் உனது பணம்தான் நான் தற்போது பணப்பிரச்சனைகளில் இருக்கிறேன் நாட்டுக்கு போகப் போகிறேன் ஆகவேதான் காரைக்கூட விற்று விட்டேன் இதில் எனக்கு சாதகமானது நீ மறந்து விட்டதுதான் இப்பொழுதும் எனக்கு பணப்பிரச்சனை இருக்கின்றது ஆனால் நீ நாளை ரஷ்யா போவதால் இனி நான் உன்னை காணாமல் போகலாம் ஆகவே இப்பொழுதும் கடன் வாங்கித்தான் உனக்கு கொடுக்கின்றேன் ஒருக்கால் நீ ரஷ்யா போகவில்லை என்றால் இன்றும்கூட தந்து இருக்க மாட்டேன் ஆனால் கண்டிப்பாக தந்து விடுவேன்.
அல்லா மீது ஆணையாக எனது பணம்தானா ?
ஆம்
பிறகே பெற்றுக் கொண்டான் அவன் சொன்ன ஒரு விடயம் எனக்கு பெருமையாக இருந்தாலும் பொதுநலனாக நினைக்கின்ற பொழுது வேதனையாக இருந்தது அவனது வாழ்க்கையில் இவனை மோசடி செய்த இந்தியர்களும் உண்டு.

நான் சந்தித்த, பழகிய இந்தியர்களில் உன்னை பெருமைக் குறியவனாக நினைக்கின்றேன் நான் மறந்து விட்டேன் நீ நினைத்திருந்தால் ? ரஷ்யா போகும் என்னை சந்திக்காமல் இத்துடன் போயிருக்கலாம் ஆனால் ஞாபகமாக கொண்டு வந்து தந்துட்டியே...
கடந்த சில வருடங்களாக நான் உழைத்த பணமே என்னிடம் தங்க மறுக்கின்றது அதனுடைய காரணத்தை நான் தேடி அலைகின்றேன் இந்நிலையில் உனது பணம் எனக்கு எதற்கு ? நான் அன்றாடங் காய்ச்சியாக வாழும்போதே நேர்மையாக வாழ்ந்தவன் இப்பொழுது நல்லாத்தானே இருக்கேன் நேர்மை தவறினால் ? மேல் வீட்டுக்காரன் எனக்கு இன்னும்தானே கஷ்டத்தை கொடுப்பான்.
நானாக இருந்தால் தந்திருக்க மாட்டேன்
இது எனக்கு தெரிந்த விசயம்தானே... உன்னைப்பற்றி எனக்கு எல்லாம் தெரியுமே அறுபதாயிரம் திர்ஹாம்ஸ் தவறுதலாக உனது வங்கி கணக்கில் மாறி விழுந்ததை இரண்டே நாளில் எடுத்து விட்டு அவர்கள் கேட்டவுடன் ஒரு மாதமாக அவர்களை சுற்றுல விட்டு மனசாட்சி உறுத்தியதும் பணத்தைக் கொடுத்தவன்தானே நீ இதனால் உனக்கு ஊதாரிச் செலவு இருபதாயிரம் திர்ஹாம்ஸ் செய்ததுதான் மிச்சம் அது உனக்கு கடனாகியது.
அவன் சிரித்தான்
எத்தனை வருடமாகி விட்டது இன்னும் நினைவில் வைத்து இருக்கின்றாயே ? நான் மறந்து விட்டேன் சரி உனக்கு நான் ஏதாவது செய்யணும்னு நினைக்கின்றேன் உன்னிடம் தற்போது கார் இல்லை இன்றைக்கே காரை உனது பெயருக்கு ரெஜிஸ்டர் செய்வோம் உன்னிடம் பணம் இல்லை எனக்கு தெரியும் காருக்கு பதினெட்டாயிரம் திர்ஹாம்ஸ் போடுவோம் எனக்கு மாதம் எனது வங்கி கணக்குல ஆயிரம் திர்ஹாம்ஸ் போடு.
நான் யோசித்தேன் இவன் திடீர்னு இப்படியொரு ஆஃபர் போடுறானே...

நான் குடும்ப சூழ்நிலை சரியில்லாமல் இருக்கேன் சட்டென இந்தியா போய் விடுவேன் அதனால்தானே காரை விற்றேன் ஆகவே வேண்டாம்
எதற்கும் காரை ஓட்டிப்பார்
மனதில் நப்பாசை எட்டிப்பார்த்தது உடன் காரை எடுத்தேன் பேசிக்கொண்டே போனோம் அவனிடம் கேட்டேன்
எனது பெயருக்கு மாற்றுவோம்னு சொல்றியே... நீ போனவுடன் மறுநாள் நான் காரை விற்று விட்டு இந்தியாவுக்கு போனால் என்ன செய்வே ?
உன்மீது எனக்கு நம்பிக்கை இருக்கு
எது இப்பொழுது நீ மறந்த பணத்தை நான் கொடுத்ததாலா ?
இல்லை முன்பே எனக்கு நம்பிக்கை உண்டு ஆனால் இன்றைய செயலால் 100/100% உன்னை நம்புகிறேன் காரணம் பனிரெண்டு வருடத்துக்கு முன்பு நீ சொற்ப சம்பளம் வாங்கும் பொழுது உன்னால் நினைத்துப் பார்க்க முடியாத பணம் பத்தாயிரம் திர்ஹாம்ஸ் ஒரு பேப்பரை உன்னிடம் கேட்ட அரபிக்காரனிடம் மறுத்து விட்டவன் அதனாலும் கூடத்தான்
அன்று நான் கொடுத்திருந்தால் ? ஒருவேளை நான் இன்று ஜெயிலுக்குள்ளே இருந்திருக்கலாம்தானே....
இருக்கலாம் இல்லாமலும் இருந்திருக்கலாம்
நல்லது எனக்கு கார் வேண்டாம் எதற்கும் அப்பாவிடம் (சித்தப்பு) சொல்லி விட்டுப்போ தேவைப்பட்டால் வாங்கி கொள்கிறேன்
நான் உனக்கு ஏதாவது செய்யணும்னு நினைக்கிறேன்.
அப்படின்னா.. நீ ரஷ்யா போய் பிஸினஸில் செட்டில் ஆகி இயல்பு வாழ்க்கைக்கு வந்த பிறகு எனக்கு ஒரு விசிட் விசா எடுத்து அனுப்பு உன்னால் நான் ரஷ்யாவை பார்த்ததாக இருக்கட்டும்
கண்டிப்பாக அல்லா மேல் ஆணையாக உனக்கு செய்வேன் என்று சொன்னவனை கட்டிப்பிடித்து வாழ்த்துச் சொல்லி விடை பெற்றேன்.


நானும், எக்ஸ் மகன் ஒஸாமாவும் இண்டர்நேஷனல் ஏர்போர்ட் அபுதாபி.

அரபு நாட்டின் அபுதாபியில் பிறந்த, நான் பழகிய பாலஸ்தீனியனாகிய, ரஷ்யாவில் வாழப் போயிருக்கும் ஆப்ரிக்க நாட்டு எனது நண்பன் தொழிலில் வெற்றியடைந்து விரைவில் மனைவியையும், குழந்தைகளையும் ரஷ்யாவுக்கு அழைத்து மீண்டும் சந்தோசமாக குடும்பத்துடன் வாழ இறைவனை வேண்டிக் கொள்கின்றேன் மீண்டும் அவனை ஒருநாள் நிச்சயம் சந்திப்பேன் என்ற நம்பிக்கையில் இருக்கின்றேன் முடிந்தால் எனது நண்பனை தாங்களும் வாழ்த்துங்கள் நட்பூக்களே.

அன்புடன் தேவகோட்டை கில்லர்ஜி

காணொளியில் ஒஸாமாவும், நானும்

செவ்வாய், மே 15, 2018

ஸினப்பும், சித்தப்பும்

கழுதியா பேலஸ் ஹோட்டல் அபுதாபி

கடந்த சுமார் 16 வருடங்களாக அபுதாபியில் எனக்குப் பழக்கம் எனது அலுவலகத்தில் வேலை செய்தவன் பாலஸ்தீனிய நண்பன் திரு. எக்ஸ் (அடையாளம் போதும்) ஜோக்காளியைப் போல் ஏதாவது செய்து கொண்டே இருப்பான் இவனிடம் எல்லா விசயங்களும் சகஜமாக பேசித்தான் அரபி கற்றுக் கொண்டேன் என்றும்கூட சொல்லலாம் என்னைப் பொருத்தவரையில் நல்லவன்தான் பொதுவாக பார்த்தால் ? நல்லவன் என்று சொல்ல முடியாதுதான் எனக்கு பல வகையிலும் உதவியாக இருந்தான் பண உதவியைத் தவிர இவன்தான் கணினியில் வேலை சொல்லிக் கொடுத்தான் (Program Arabic) 

இவன் பிறந்தது யூ.ஏ.ஈ. நாட்டில்தான் இருமுறை மட்டுமே பாலஸ்தீன் சென்று இருக்கின்றான் இவனுடைய அப்பாவும் எனக்கு நல்ல பழக்கம் உள்ளவர் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே அந்நாட்டுக்கு வந்தவர் அந்த நாட்டின் முக்கியமான அரசு அலுவலகத்தில் (அதன் பெயர் வேண்டாம்) முதன்மை கணக்காளராக வேலை பார்த்து தற்போது ஓய்வு பெற்றவர் அலுவல் நிமித்தமாக எனது அலுவலகத்துக்கு மாதம் இருமுறை வருவார் போவார் எனக்கும், இவருக்கும் அலுவலில் தொடர்பு இருக்கிறது அதற்காக எனது டேபிளில் உட்கார்ந்து எனது கணினியில் சில வேலைகள் செய்வார். நான் அதற்கான உதவிகளை செய்து கொடுப்பேன். இது எனது கடமை நல்லவர், வேலை விசயத்தில் வல்லவரும்கூட நாட்டுப்பற்று உள்ளவர் இதைக்குறித்து நான் இவரை அடிக்கடி பாராட்டுவேன் என்னை ஸினப்பு என்று அன்புடன் அழைப்பார் நான் பதிலுக்கு சித்தப்பு என்று அழைப்பேன்.

(இருவரும் அரபு மொழியில்தான் பேசுவோம் சித்தப்பு என்பது மட்டுமே தமிழ் சித்தப்பு என்றால் என்னவென்று அவருக்கும் சொல்லி கொடுத்தேன் ஸினப் என்றால் மீசை என்று அர்த்தம்)


 அல்ராஹா பீச் ஹோட்டல் அபுதாபி

இவர் நினைத்திருந்தால் எப்பொழுதோ அந்நாட்டின் பிரஜையாகி இருக்கலாம் ஆனால் எனக்கு என் நாடு முக்கியம் என்ற கொள்கையாளர் மறைந்த பாலஸ்தீன் அதிபர் திரு. யாசர் அரபாத் அவர்களின் உறவினரும்கூட அவர்களது வீட்டில் புகைப்படங்களும் எனக்கு உறுதி செய்தன. எக்ஸ் நன்றாக சாப்பிடுவான் அலுவலக விருந்துக்கு போனால் தட்டில் நிறைய அள்ளி வைத்து சாப்பிடுவான் அதோடு மட்டுமல்ல எனக்கும் அவனே எடுத்து வைப்பான் எனக்கு பிடித்ததை அல்ல அனைத்தும் அவனுக்கு பிடித்ததை அந்த நாட்டில் விருந்துகளில் என்னயிருக்கும், எப்படியிருக்கும் என்பதை நான் உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா ? முழுமையான ஒட்டகம் தோலின்றி அப்படியே டேபிளின் மீது உட்கார்ந்து இருக்கும் அதைப் பார்த்தாலே எனக்கு நடுங்கும் அதனுடன் சண்டை போட்டு கொண்டு பிய்த்து எடுப்பார்கள்.

எனக்கு மீன் வகைகள் மட்டுமே பிடிக்கும் இவன் தட்டில் கோபுரம் கட்டுவான் எனக்கும் ராஜகோபுரம் கட்டித்தருவான் வேண்டாம் என்றாலும் கேட்க மாட்டான் கொண்டு வா நான் சாப்பிடுவேன் எனக்கு சங்கடமாக இருக்கும் பெண்கள் பார்த்து சிரிப்பார்கள் இருப்பினும் பலருக்கும் தெரியும் இது யாருக்காக ? நான் என்ன சாப்பிடுவேன், எவ்வளவு சாப்பிடுவேன் என்பது சரியென அவனுக்காக கோபுரத்தை தூக்கிக்கொண்டு வந்து டேபிளில் உட்காருவேன் பெரும்பாலும் நான் பெரிய லெவலில் இருக்கும் அரபிகளுடனே உட்காருவேன் காரணம் இவர்களிடம் சமத்துவம் இருக்கின்றது மேலும் யாரிடமும் பேசுவதில் எனக்கு பயமோ, கூச்சமோ கிடையாது பெரும்பாலும் இந்தியர்கள் தனியாக ஒதுங்குவார்கள் இந்தியர்கள் என்பது யார் ? மலையாளிகளே... தமிழன் நான் மட்டுமே. எக்ஸின் மனைவியும் எனது அலுவகத்திலேயே வேலை செய்தது ஜோர்டானிக்காரி மிகவும் நல்ல குணம் எனக்கும் பழக்கமே இவர்களுடைய காதல் திருமணத்துக்கும் போயிருக்கின்றேன்.

எக்ஸ் ஒருமுறை வேலையில் அவசியமற்ற தவறைச் செய்து விட்டான் பத்துப் பைசாவுக்கு பிரயோசனம் இல்லாதது அந்த தவறு எனக்கு சாதகமானதும்கூட நான் அடிக்கடி செய்யாதே என்றாவது உனக்கு பிரச்சனை வரும் என்று சொல்வேன் கேட்க மாட்டான் சாதாரணமாகவே ஆட்களை களையெடுக்கும் அலுவலகத்தில் இந்த தவறு விஸ்வரூபம் எடுத்து விட்டது அவனைத் தூக்கினார்கள், சட்டென ஒரு வருமானம் நின்று விட்டது இந்த காரணத்தை வைத்து மனைவியையும் தூக்கி விட்டார்கள் இருவரது வருமானமும் நின்று வாழ்க்கை கேள்விக்குறியாகியது ஒரு ஆண், இரண்டு பெண் குழந்தைகளின் படிப்புக்கு வருமானம் ? வேலை போனதால் விசா பிரச்சனையும் எழுந்தது நண்பரின் கம்பெனி விசா மூலம் எவ்வளவு காலம் தள்ளமுடியும் இவனும் பாலஸ்தீன் போகமுடியாது மனைவியையும் அழைத்துச் செல்ல முடியாது மனைவியின் நாடான ஜோர்டானுக்கு மனைவியையும் விசிட் விசாவில் குழந்தைகளையும் அனுப்பி வைத்தான்.

அபுதாபியில் பல இடங்களிலும் வேலை செய்தாலும் நல்ல வருமானம் இல்லை மேலும் அந்நாடு சமீபத்தில் சிலநாட்டு மனிதர்களுக்கு விசா கொடுப்பதை தவிர்த்து வருகின்றது ஐரோப்பிய நாடுகளுக்கு போகலாம் என்று முடிவு செய்தான் அங்கும் நாடு பிரச்சனை வந்தது ஆப்ரிக்கா சென்றான் ஒருமாதம் தங்கி அந்நாட்டு பிரஜையாகி வந்தான் இப்பொழுது என் நண்பன் சட்டப்படி ஆப்ரிக்கன். ரஷ்யாவுக்கு சென்று ஏதாவது பிஸினஸ் தொடங்கலாம் என்று தீர்மானித்தான் இவன் எனது அலுவகத்தில் வேலையை நிறுத்தி இரண்டு வருடங்களாகப் போகின்றது இவன் பலமுறை என்னிடம் கடன் வாங்கி இருக்கின்றான் திருப்பித் தந்து இருக்கின்றான் எனக்கு கடன் தரமாட்டான் ஆகவே நானும் கேட்க மாட்டேன்.

ஒருமுறை அவசர சூழலாக எனக்கு இரண்டாயிரம் திர்ஹாம்ஸ் வேண்டும் அடுத்த மாதம் தருகிறேன் என்றேன் உடன் தந்தான் மறுமாதம் இவனைத் தூக்கி விட்டார்கள் மனைவி இங்குதானே வேலை செய்கின்றது சில மாதங்களில் மனைவியையும் தூக்கி விட்டார்கள் சரி உள்ளூர்தானே கொடுப்போம் நான் பணப்பிரச்சனையில் பிறகு கொடுப்போம் என்று இருந்து விட்டேன் இதில் அதிசயம் என்னவென்றால் ? அவன் எனக்கு பணம் கொடுத்ததை மறந்து விட்டான் நானும் கொடுப்போம் கொடுப்போம் என்று இரண்டு வருடத்தை தள்ளி விட்டேன் காரணம் எனக்கு கடந்த நான்கு வருடங்களாகவே பணப்பிரச்சனை தீருவதில்லை.

கையில வாங்குனேன் பையில போடலே
திர்ஹாம்ஸ் போன இடம் தெரியலே
என்ற நிலையே தொடர்திருந்தது.

 சிரியன், சூடானியன், பாலஸ்தீனியன், ஜோர்டானியன், எஜிப்தியன், தி கிரேட் இந்தியன் கில்லர்ஜி மற்றும் எமராத்தியன்.
எக்ஸின் மகன் ஒஸாமா

(இதனுள் எனது தனிப்பட்ட வேதனை சிலர் சொல்வது உனக்கென்ன மனைவியில்லை என்ன செலவு ? மனைவி என்பவள் இல்லாமல் குழந்தைகளை வளர்க்கும் காரணத்தால் நான் அதிகமான பணத்தேவையில் வாழ்ந்தேன் என்பது என்னைப் போன்ற விதவன்களுக்கு மட்டுமே தெரியும் இரண்டாவது மனைவியைக் கொண்டு வந்திருந்தால் வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது இருந்திருக்கும் என்பது வேறு விடயம்)

அவனைச் நான் கடைசியாக சந்தித்த ஏப்ரல் 02-ம் தேதி அவன் சொன்னான்.

தொடரும்...

சனி, மே 12, 2018

ஆண்கள் விரைவில் பிரசவிக்கலாம்


முன்னுரை இது தொடர் பதிவல்ல...

நட்பூக்களே... விஞ்ஞானம் நாளுக்கு நாள் புதிய, புதிய விடயங்களை தந்து கொண்டே இருக்கிறது கலைவாணர் என்.எஸ்.கே அவர்கள் பழைய திரைப்படம் ஒன்றில் பாடியிருப்பார்
ஆணை பெண்ணாக பெண்ணை
ஆணாக ஆளையே மாத்துறாங்க...
இங்கே ஆளையே மாத்துறாங்க...
மேலும்...
பட்டனைத் தட்டி விட்டா தட்டுல இட்டிலியும்
கெட்டி சட்டினியும் வந்துடுங்க...
இப்படி.... அன்றைய காலகட்டத்தில் இது நம்பிக்கை தரக்கூடியதாக தோன்றவில்லை இன்று சாத்தியமாகி விட்டது உண்மை தொலைபேசி வந்த காலங்களில் கைப்பேசியை நாம் நினைத்துப் பார்த்திருப்போமா ? இல்லை தொலைக்காட்சி வந்த காலங்களில் கணினியை நினைத்துப் பார்த்திருப்போமா ? இல்லை இன்று எல்லாமே சாத்தியமாகி விட்டது அதாவது இனி நான் சொல்லப் போவது அடுத்த காலகட்டங்களில் நான் மறைந்த பிறகாவது நிச்சயமாக விஞ்ஞானிகளால் கண்டு பிடித்து நடைமுறைக்கு வரும் என்பது எமது திண்ணமான எண்ணம் அதற்காகவே தேவகோட்டையான் சொல்வது சரித்திரத்தில் நிற்கும் என்ற நம்பிக்கையில் இந்தப்பதிவை பகிர்கின்றேன் இதற்கு எடுத்துக் காட்டுகளுடன் நான் தரும் விடயங்கள் அனைத்தும் பொருந்துகின்றதா ? என்பதை கணித்துச் சொல்லுங்கள்.

01. பண்டைகால இயற்கை வழி பிரசவங்கள் மற(று)க்கப்படும் அல்லது அரசே சட்டம் போட்டு தடை செய்யும் அனைத்து பிரசவங்களும் சிசேரியன் முறை.
01. எடுத்துக்காட்டு இப்பொழுது குழந்தைகளின் பிரசவம் எண்பத்து ஐந்து % அறுவை சிகிச்சை வழியே நடைபெறுகிறது காரணம் மனிதநேயம் செத்து பணந்திண்ணிக் கூட்டங்கள் பெறுகி விட்டது மேலும் பிரசவ வேதனையை இன்றைய பெண்கள் விரும்புவதில்லை காரணம் உடல் வலுவில்லை மேலும் வேலை உடன் முடிந்து விடும், மற்றொரு காரணம் அற்ப ஆசைக்காக ஆண் வர்க்கமும் இதையே விரும்புகிறது உண்மைதானே...

02. எதிர்கால புரட்சிப் பெண்கள் நாங்கள் சுமந்தது போதுமென்று போராட... இதற்கு விஞ்ஞானிகள் தன் திறமையை வெளிப்படுத்த முன் வந்து வெற்றி பெறுவார்கள் ஆண்களும் குழந்தையை வயிற்றில் சுமந்து பிரசவிப்பார்கள் குழந்தை பிறப்பின் வழி சிசேரியன் முறையே.
02. எடுத்துக்காட்டு இப்பொழுதே இயற்கையான சேர்தலின்றி ஆணின் வித்தை பெண்ணுக்குள் புகுத்தி பிரசவிக்க வைக்கின்றார்கள் ஆகவே இதுவும் சாத்தியமே மேலும் இப்போது இதை செய்து கொடுக்கும் பல நிறுவனங்கள் இதனால் வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது.

03. இனி விட்டாலாச்சார்யா திரைப்படங்களில் பார்த்தது போல மனிதர்கள் செயற்கை இறகுகளுடன் நினைத்த இடங்களுக்கு பறந்து சென்று வருவார்கள் இதன் தூர அளவுகள் காலமாற்றத்துக்கு தகுந்தாற் போல் தொடரும்...
03. எடுத்துக்காட்டு பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் என்று கவியரசர் எழுதியது உண்மைதானே... அவ்வழியே இன்றைய போக்குவரத்து பெறுகி விட்டது எவ்வளவுதான் சரி செய்தாலும் இன்றைய அவசர மனிதன் விரைவாக காரியத்தை முடிக்கவே விரும்புகிறான்.

04திருமணங்கள் என்ற சடங்கு ஒழிந்து போகும் ஆணும், பெண்ணும் வேண்டியவர்களுடன் விருப்பப்பட்டால் வாழலாம் அல்லது பிரிந்து செல்லலாம் தாய்-தந்தை என்ற பாசத்துக்கு இடமில்லை குழந்தைகள் நிறுவனங்களின் காப்பகத்தில் சேர்க்கப்படும் விருப்பப் பட்டால் வளர்த்துக் கொள்ளலாம்.
04. எடுத்துக்காட்டு இப்பொழுதே ஒரு நாட்டில் மன்னிக்கவும் பெயர் மறந்து விட்டது திருமணம் நடப்பதற்கு முன் ஆணும், பெண்ணும் ஒரு வருடம் சேர்ந்து வாழவேண்டும் கணவன் – மனைவி போலவேதான் ஆனால், குழந்தை பெற்றுக் கொள்ளக்கூடாது அதில் அவர்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டால் திருமணம் செய்த பிறகே குழந்தை பெற்றுக் கொள்ளலாம் பிரிந்தாலும் இவனுக்கும், இவளுக்கும் மீண்டும் ஒருவனும், ஒருத்தியும் சேர்ந்து வாழ தயாராக இருக்கின்றார்கள் ஒருவர் அல்ல சமூகமே ஆகவே யாரும் யாரையும் இழிவாக பேசி விடமுடியாது.

05பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு பாடத்திலேயே காமசாஸ்த்திரம் சொல்லிக் கொடுக்கப்படும் காரணம் அவனது கல்லூரி முடிக்கும் காலத்தில் அனைத்தும் தெரிந்து விடும்.
05. எடுத்துக்காட்டு இப்பொழுதே எல்.கே.ஜி, யூ.கே.ஜி சேர்க்கும் பொழுதே குழந்தைகளின் பாதுகாப்புக்கும், உடனடி தகவல் தொடர்புக்கும் அவசியமென்று கைப்பேசியோடுதான் பள்ளியில் சேர்க்கிறோம் மேலும் பேசுவதற்கு இடும் பணத்தில் விபரமான குழந்தைகள் மூன்று ரூபாய் செலுத்தி தற்கால இணையம் பெற்று விடுகின்றன காரணம் கழிவறைக்குள் சென்று யூட்டியூப் பார்க்கின்றனர் மேலும் விரைவில் அரசே இலவச இணையம் தருவதாக சொல்லி வாக்கு கேட்பார்கள் வாக்கு கிடைக்கவும் வாக்கு கொடுத்தவர்கள் வாய்க்கு வாய்க்கரிசியும் கிடைக்கும்.

06எந்த அளவுக்கு நாட்டில் கல்வி நிலையங்கள் இருக்கின்றதோ.. அந்த அளவுக்கு முதியோர் இல்ல ஒப்பந்த நிறுவனங்கள் பெறுகும் இதில் பணக்கார வர்க்கங்களின் பெற்றோர்கள் சகல வசதிகளுடன் சந்தோஷம் தொலைத்து வாழ்வார்கள் செய்த வினையை எண்ணியபடியே.... அதே அளவுக்கு வயது முதிர்ந்த பிச்சைக்காரர்கள் வெளியில் வாடித்திரிவார்கள் துணைகளின்றி இருபாலருமே...
06. எடுத்துக்காட்டு இப்பொழுதே முதியோர் நிலையங்கள் பெறுகி விட்டது காரணம் பாசம் என்றால் என்னவென்று நாம் நம் சந்ததிகளுக்கு கற்றுக் கொடுக்காததே அதே போல எங்கும் பிச்சைக்காரர்கள் பெறுகி விட்டது காரணம் ஆனால் அரசியல்வாதிகள் மட்டுமே சொல்கின்றார்கள் இந்தியா வல்லரசு என்று இதுதான் எனக்கு புரியவில்லை.

07மனிதர்களுக்கு ஏழறிவு என்று ஐநா சபையில் நிறைவேற்றப்பட்டு உலகம் முழுவதும் மக்கள் ஆரவாரமாய் ஏற்றுக்கொண்டு உலக ஏழாம் அறிவு நாள் என்று மார்ச் மாதம் முடிந்த மறுநாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது அன்று உலக பிரதமர்கள், விஞ்ஞானிகள், அரசியல் வல்லுனர்கள் அனைவரும் கைப்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பி மகிழ்கின்றார்கள், அங்கயற்கன்னி பட்டம் பெற்ற நடிகை நமீதாவின் கொள்ளுப்பேத்தி இடுப்பில் மட்டும் உடையணிந்து தொலைக்காட்சிகளில் தமிழ் நாட்டு மக்களுக்கு இனி வாழும் முறை என்னவென்பதை அலகு டமிளில் உறையாற்றுகிறார் ரசிகர்கள் ஆரவாரத்துடன் பட்டாசு கொளுத்தி மகிழ்கிறார்கள்.
07. எடுத்துக்காட்டு இப்பொழுது குடியரசு தினம், சுதந்திர தினம் வந்தால் நான் காலையில் தொலைக்காட்சியை திறந்தவுடன் தமிழ் நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷங்கள் தேசத்தியாகிகள் திருமதி. குஷ்பு சுந்தர், திருமதி. நமீதா கந்தர், திருமதி. மும்தாஜ் பந்தர் இவர்கள் வந்துதான் எனக்கு தேசபக்தியை ஊட்டுகின்றார்கள் வருடத்தில் மற்ற 362 நாட்களும் எனது மரமண்டைக்கு மறந்து போய் விடுகிறது.

08ஆண்களும், பெண்களும் ஒரு இன்ஞ் அளவிலான அதாவது ரிப்பன் போன்ற துணிகளை இடுப்பில் இணைத்திருக்கும் ரப்பர் பட்டையோடு ஊக்கு மாட்டி தொங்க விட்டுக்கொண்டு போவார்கள் அவைகள் காற்றில் அசைந்தாடி உடலுக்கு குளுமையை உண்டு பண்ணும் என்று தொலைக்காட்சிகளில் ஐஸ்வர்யாராவின் கொள்ளுப்பேத்தி விளம்பரங்களில் சொன்ன காரணத்தால் இனிவரும் காலங்களில் இதுதான் தேசிய உடை என்று மக்கள் பரவலாக பேசத் தொடங்குகின்றார்கள் சுடர்மணி மற்றும் நாயுடு ஹால் போன்ற நிறுவனங்கள் இழுத்து மூடப்படும்.
08. எடுத்துக்காட்டு இப்பொழுதே நாகரீகம் என்ற பெயரில் பணம் கொடுத்து வாங்கிய ஜீன்ஸ் பேண்ட் என்று சொல்லப்படும் உடையை முழங்காலிலிருந்து... தொடைவரை கிழித்துக் கொடுக்கின்றார்கள் அதைத்தான் அனைத்து மனிதனும் அணிகின்றான் கேட்டால் ஃபேஷன் என்று சொல்கிறான் ஏண்டா... தெரியாமல்தான் கேட்கிறேன் இருப்பவன் கிழிச்சுப்போட்டால் ஃபேஷன் இல்லாதவன் போட்டால் கிறுக்கனா ?

09நாட்டில் உள்ள குடியரசுத் தலைவர், பிரதமர், கவர்னர்கள், முதல்வர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், நாடளுமன்ற உறுப்பினர்கள் மாதம் ஒருமுறை அரசு செலவில் ஸ்ரீ ஹரி கோட்டாவிலிருந்து விண்கலத்தில் சந்திர மண்டலம் சென்று ஒருவாரம் ஓய்வு எடுத்து வரலாம் என்றும், அவர்களுக்கு உதவியாக ஆண்பாலோ, பெண்பாலோ ஒருவரையும் அழைத்துச் செல்லலாம் என்றும் சட்டம் நிறைவேறுகிறது விண்கலத்தில் இந்தியாவின் அக்கீகரிக்கப்பட்ட 18 மொழிகளில் அதில் முதல் மொழியாக தமிழில் எழுதி இருக்கின்றது இப்படி அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு ஐயன் எழுத்தாணியோடு இருக்கிறார் உடன் முன்னணி நடிகைகள் நாங்கள் நாட்டுக்காவும் சேவை செய்வோம் என்று அறிக்கை விட அரசியல் தலைவர்களிடத்தில் சேவை செய்வதற்கு யார், யாரை வைத்துக் கொள்வது ? என்று போட்டி நிலவுகிறது இதன் எதிரொலியாய் என் தலைவன்தான் உயந்தவன் என்று கஞ்சிக்கு வழியில்லாத தொண்டர்கள் விமானம், கப்பல் போன்ற அரசு சொத்துகளுக்கு தீ வைக்கின்றார்கள்.
09. எடுத்துக்காட்டு இப்பொழுதே நாடாளுமன்ற, பாரளுமன்ற உறுப்பினர்களின் மாத சம்பளம் ஒரு இலட்சத்தை தாண்டி விட்டது மற்ற அனைத்து செலவுகளும் இலவசம் ஆனால் நாம் எதிர்த்துக் கேட்க மாட்டோம் அதேநேரம் கைவண்டித் தொழிலாளி மட்டும் கூலி கூட்டிக் கேட்கக்கூடாது தான் வாழ்ந்தோமோ இல்லையோ தன் தலைவன் வாழ்ந்தால் போதும் என்ற உயர்ந்த சிந்தாந்தவாதிகள் தமிழர்கள் ஆகவேதான் தலைவன் இயற்கை மரணம் அடைந்தாலும் ஏற்றுக் கொள்வதில்லை பதாகைகளுக்கு பாலாபிஷேகம் செய்கின்றோம்.

10வலைப்பதிவர்கள் உழைத்துக் களைத்துப் போவதால் இல்லம் வந்து கணினியைத் திறந்து பதிவுக்கு தட்டச்சு செய்ய ஒருவேளை விரலில் நகச்சுத்தி இருந்தால் மேலும் கஷ்டம்தானே... ஆகவே பெத்தோமேட்டிக் ஆர்காய்டு இணைக்கப்பட்ட கண்ணாடி அணிந்து கொண்டு கணினியைப் பார்த்தால் மனதில் நினைப்பது எல்லாம் அழகிய தமிழில் கணினியில் வந்து கொண்டே இருக்கும் பிறகு சகோ ராஜியிடமிருந்து தினம் மூன்று பதிவுகள் வரலாம். விருப்பப் படுபவர்கள் வர்ண எழுத்துக்களையும் நினைக்கலாம் என்னைப்போல... ஹி... ஹி... ஹி...
10. எடுத்துக்காட்டு இப்பொழுதே கைப்பேசிகளில் நாம் குறித்து வைத்திருக்கும் நண்பர்களின் பெயர்களை சொன்னால் உடன் அந்த நபரின் பெயரும், எண்ணும் தொடு திரையில் வந்து நிற்கிறது உடன் நாம் மேற்கு திசைநோக்கி தள்ளி விட்டு சம்பிரதாயத்துக்காக கிரஹாம் பெல்லின் சகோதரியின் பெயரைச் சொல்லி விட்டு... வலிப்போக்கன் நல்லா இருக்கீங்களா ? என்று கேட்கிறோம் உண்மைதானே...

போனஸ் செய்தி இத்தனை அதிவேக விஞ்ஞான வளர்ச்சியால் விரைவில் மனிதன் முதுமையாகி இறந்து போகின்றான்.

நட்பூக்களே... இந்தப்பதிவுக்கு தங்களது விரிவான கருத்துரையை எதிர் பார்க்கிறேன் மேலும் கருத்துடன் தங்களது மதிப்பெண்களையும் அவசியம் போடவும் அதாவது மதிப்பெண் இரண்டு போட்டால் இரண்டு % நடக்கும் என்றுமே, பத்து போட்டால் முழு % நடக்கும் என்றும் பூஜ்யம் போட்டால் தாங்கள் இது எதுவுமே நடக்காது என்று சொல்வதாக கணக்கு எடுக்கப்படும் தங்களது மனது கணிக்கும் மதிப்பெண் இடவும் பின்னூட்டத்தை மொத்தமாக நாளை மறுதினம்14.05.2018 திங்கள்கிழமை இந்திய நேரம் மாலை 04.00 pm திறந்து விடுவேன் அனைவருமே மொத்தமாக கணிப்பைத் தெரிந்து கொள்வோம் நன்றி.

காணொளி