இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், பிப்ரவரி 13, 2024

கோவில் அல்ல கோயில்


ம்மை படைத்தது இறைவன் என்பதில் பலருக்கும் ஐயமில்லை. என்னவொன்று தனி மனிதனின் தலைமை ஆசையால் மனங்கள் பிளக்கப்பட்டு, மதங்களாக பிரிக்கப்பட்டு கடவுள்களையும் படைத்து விட்டோம். தொடக்கத்தில் நம்மை படைத்தது இறைவன், என்ற வார்த்தை மாறி மனிதன் கடவுளை படைத்தான் என்ற நிலைக்கு வந்து விட்டோம்.
 
பண்டைய காலத்தில் அரசர்கள்தான் கோயில்களை கட்டி எழுப்பினர் இதற்கு மக்களும் பிரதி பலனை எதிர்பாராது உழைத்தனர். காரணம் நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளை என்ற உணர்வு. இன்று கோயிலில் வேலை செய்யும் கொத்தனார், சித்தாள்களுக்கு ஐம்பது ரூபாய் குறைவாக சம்பளம் கொடுத்து பாருங்கள் ? கோயிலுக்குதானே என்று போய் விடுவார்களா ?
 
நீர் எப்படி ? என்று என்னை கேட்க வேண்டாம் எனக்கு கொத்தனார் வேலை தெரியாது. கோயில்கள் எல்லா இடங்களிலும் கட்டுவதற்கு உகந்தது அல்ல அதற்கென்று சாஸ்த்திர சம்பிரதாயங்கள் உண்டு. இன்று சில மனிதர்கள் சம்பாத்தியத்துக்கு வழி வகுக்கும் விடயமாக போய் விட்டது. மதுரை மாநகரில் எங்கு பார்த்தாலும் தெருவின் முனையில் கோயில் அந்த தெருவே எட்டு அடி அகலமே இருக்கும். ஒரு ஆட்டோ போனால் எதிர்புறம் மறு ஆட்டோ வரமுடியாது. இந்த நிலையில் கோயில்கள்.
 
அந்த கோயிலின் வாயிற்படியும் சில வீடுகளின் வாயிற்படியும் ஒன்றாக இருக்கும். கோயில் என்பது சுத்தமாக இருக்க வேண்டிய இடம் ஆனால் வீடு அப்படி இல்லையே... இந்நிலையில் அந்த வீட்டு பெண்களுக்கு இடையூறாக இருக்காதா ? இதை தெரு மக்கள் அனைவரும் உணர்தல் வேண்டும். இந்த இடத்தில் நான் சட்டக்கல்லூரியில் படித்த ஓர் பொன்மொழி நினைவில் நிழலாடுகிறது.
 
உன் வலியை உணர்ந்தால்... நீ உயிரோடு இருக்கிறாய் என்று அர்த்தம்,
பிறர் வலியை உணர்ந்தால்... நீ மனிதனாக இருக்கிறாய் என்று அர்த்தம்.
 
சரி அதுவாவது தெருவில் இருக்கின்றது இருக்கட்டும் பெரும்பாலான இடங்களில் சாக்கடையோரம் இருக்கிறது இதை புகைப்படங்களோடு நான் சொல்ல முடியும் வேண்டாமே... இது முறையா ? இந்த இடத்தில் இறைவன் வந்து கட்டச் சொல்லவில்லையே... ? அசுத்தமான இடத்தில் பல கோயில்களை பார்த்து விட்டேன். கோயில் என்பது புனிதமான இடம்தானே ? அங்கு கொடுக்கும் பிரசாதங்களை அந்த இடத்திலேயே நின்று உண்கின்றார்கள். நான் இவைகளை எல்லாம் பார்த்து தான் வருகிறேன்.
 
கோயிலை சுற்றி ஆடு, மாடுகள், அதன் கழிவுகள் இதனோடு மனித கழிவுகளும். இந்த வகை கோயில்களை கட்டத் தொடங்கும்போதே மக்கள் தடுத்து இருக்க வேண்டும். ஆனால் அது பாவச்செயல் என்று ஒதுங்கி போய் விடுவார்கள். புறம்போக்கு இடத்தில் கட்டிய பிறகு இதற்கு மின்சார வாரியமும் மின் இணைப்பு கொடுக்கிறது ? இதற்கு மின்சார வாரிய விதி முறைகளில் விலக்கு இருக்கிறதா ?
 
பிறகு திடீரென்று சாலை அகலப்படுத்துகின்றோம் என்று இடிக்கும் இயந்திர வண்டிகளோடு வந்து நிற்பார்கள். அன்று மக்களும் இதற்கு போராடுவார்கள். இந்த முறைகேடான தவறுகளுக்கு அடிப்படை காரணவாதிகளான... மாநகராட்சி அதிகாரிகளை முதலில் கைது செய்ய வேண்டும். அவர் இல்லை அவர் ஓய்வு பெற்று விட்டார், இறந்து விட்டார் என்றாலும்கூட அவர்களது சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். இப்படி செய்தால் இருக்கும் அதிகாரிகள் முறையாக வேலை செய்வார்கள்.
 
எத்தனையோ பழைய கோயில்கள் சிதிலமடைந்து கிடக்கிறதே அதில் தெய்வம் இல்லையா ? அங்கு சக்திதான் இல்லையா ? இங்கு சாக்கடையில் நின்றுதான் வணங்க வேண்டுமா ? மக்களிடம் நியாயமான செயல்பாடுகள் இல்லை ஆகவேதான் மருத்துவமனைகள் பெறுகி வருகிறது. மக்கள் மருத்துவமனைக்கு செல்வதே இறைவன் நமக்கு மறைமுகமாக கொடுக்கும் தண்டனைதான். சாதாரண கோயிலுக்கு போனால் உண்டியலில் சில்லரைகளை இடுவதும், திருப்பதி கோயிலுக்கு போனால் கட்டுக்கட்டாக பணத்தை கொட்டி பெட்டி, பெட்டியாக திருப்பி கேட்பது தவறில்லையா ?
 
ஓரிடத்தில் பிள்ளையார் கோயில் பின்புறம் சாக்கடை, பக்கத்தில் மின்சார டிரான்ஸ்பார்மர் திடீரென்று அங்கு அசம்பாவிதம் நிகழ்ந்தால் உயிருக்கு உத்திரவாதம் யார் தருவது ?  . அரசை குற்றம் சொல்லும் முன்பு அதற்கான காரணத்தை ஆராய்வதுதான் நல்ல செயல். இதோ திருப்பதி கோயிலில் நடந்த அநியாயத்தை நடந்த போலி தரிசன சீட்டு இந்த கோயில் ஊழியர்களுக்கு திருப்பதி வெங்கடாசலபதி மீதி பயம் இல்லைதானே... கேட்டால் அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்று பழங்கதை சொல்லக் கூடாது. எல்லா மதத்து மனிதர்களுக்கும் பக்தி அவசியம்தான் ஆனால் அது உண்மையாக இருக்க வேண்டும் என்பதே எமது எண்ணங்களும், ஆசைகளும்...
 
குறிப்பு – கோவில் என்று சொல்வது தவறல்லதான் ஆனால் கோயில் என்று சொல்வதே முறையானது. கோவில் என்பது வழக்குச் சொல்லானது
 
கில்லர்ஜி அபுதாபி

12 கருத்துகள்:

  1. இறைவன் நமக்கு அரசன். அதாவது கோ. அவனது இல்லம் இல் கோ+இல். தமிழ் இலக்கணப்படிகோவில் என்றுதான் எழுதணும். வார்த்தையின் மூலத்தைப் பிரித்து, நிலைமொழியின் ஈற்று, அ ஆ உ ஊ ஓ என முடிந்து, வருமொழி (அடுத்த வார்த்தை) உயிரெழுத்தில் ஒன்றாக இருந்தால், சேரும்போது வ் வரும். அப்படி இல்லாவிட்டால் ய் வரும். கோ என்பது ஓ வில் முடிந்து இல் என்பது உயிரெழுத்தில் ஆரம்பிப்பதால், வ் சேர்ந்து, கோவில் என ஆகும். தேனை நாவில்வைத்தால் தித்திக்கும். நா + இல் இது, நாயில் என மாறுவதில்லை. நாவில் என்றே மாறும். பனியில் நனையாதே. பனி + இல். இது இ ல் முடிவதால் சேரும்போது பனியில் என மாறுகிறது. பனிவில் நனையாதே எனச் சொல்வதில்லை. கன்னியின் உடம்பு, கனியில் ரசம் எனப் பல உதாரணங்களை நாம் அறிவோம்.

    பதிலளிநீக்கு
  2. பிறரது வலியை உணர்ந்த உயர்ந்த மனித நேய கருத்துகள் தாங்கிய பதிவு நன்று. கோயிலா கோவிலா என்பதற்கு நெல்லைத்தமிழன் சொன்ன இலக்கணக் கருத்துகள் அழகிற்கு அழகு சேர்க்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  3. கில்லர்ஜி எனக்கும் கோவில்களைக் கண்ட இடத்தில் கட்டுவதில் உடன்பாடில்லை. அதுவும் போக்குவரத்திற்குத் தடையாக, அது போன்று கோவில்களுக்கு என்றில்லை, பல ஜவுளிக் கடைகள் நகைக்கடைகளும் அப்படித்தான் பொதுமக்களுக்கு இடைஞ்சலாகக் கட்டுகிறார்கள். கில்லர்ஜி இதில் சில கோவில்கள் எப்போதிலிருந்தோ இருக்கின்றன ஆனால் அதைச் சுற்றி இப்போது வீடுகள் முளைத்திட கழிவுநீர் போகும் சாக்காடைகளும் வந்தாயிற்று. இதில் புதிய கோயில்களும் வருகின்றன. உள்ள பழமையான கோயில்களைப் பராமரிப்பதில்லை! கோவிலகள் எப்போது வணிகமாகத் தொடங்கினவோ அப்போதே தெரியலையா அங்கு என்ன நடக்கும் என்று!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. நெல்லை சொல்லிருக்கும் இலக்கணம் தான்...கோவில்ல் என்பதற்குக் காரணம். எங்கத் தமிழ் ஆசிரியை இலக்கணம் ரொம்ப நல்லா சொல்லித் தந்தாங்க. வகுப்பில் சொல்லிக் கொடுக்கும் போது நான் அவங்களோடு அப்ப (நல்ல ஆசிரியை கோபித்துக் கொள்ள மாட்டாங்க!!!) விவாதம் செய்வேன்..... ஆனா பாருங்க தெரிஞ்சாலும் கோயில்னு பயன்படுத்துவதைத்தான் உணர்வுபூர்வமாக என் மனம் விரும்புகிறது!!!! மூளையை ஓரங்கட்டி!!!!! அப்ப அவங்க சொன்னாங்க பரீட்சைக்கு எழுதறப்ப, அல்லது கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டின்னு வரப்ப கோவில்னு எழுதிக்க, சொல்லிக்க....மற்றபடி உனக்கு விருப்பம்னு சொல்லிட அப்பலருந்து இப்படியே ஆகிப் போச்சு!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவில் தங்களின் ஆதங்கம் புரிகிறது. இறைவன் ஒளிமயமானவன். எங்கும் எதிலும் நிறைந்திருப்பவன். இறைவனை நம் விருப்பப்படி ஓரிடத்தில் அடைத்து வைக்கவோ, ஒளித்து வைக்கவோ இயலாது. இந்த மாதிரி சின்ன கோவில்களை பல ஆரோக்கியமற்ற இடங்களில் பார்க்கும்போது எனக்கும் மனதில் வருத்தம் வரும். என்ன செய்வது?

    கோயில் என்பது பேச்சு வழக்கில் வரும். கோவில் என்பது சரியான இலக்கண உச்சரிப்பு என நினைக்கிறேன். இறைவன் ஒருவன் அவனே பரம்பொருள், பரமாத்மா என்பதை அனைவரும் நினைத்தால் சரிதான். தங்கள் அருமையான பதிவுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. சிறப்பான பகிர்வு. தற்போது எல்லா கோவில்களிலும் - புதியதாக இருந்தாலும், பழமையானதாக இருந்தாலும் நிறைய பிரச்சனைகள். கட்டியபோது இருந்த நிலை இல்லாமல் அவற்றைச் சுற்றிய இடங்கள் அனைத்தும் மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன என்பது வேதனையான உண்மை.

    கோயில், கோவில் - எது சரி என்பதை விட, இரண்டுமே பயன்படுத்துகிறோம். இரண்டுமே பயன்படுத்தப்படுகிறது. எது சரி என்பது என் சிற்றறிவுக்கு எட்டாதது!

    பதிலளிநீக்கு
  7. கடவுளின் பெயரைச் சொல்லி காசு பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகமானபின் இதை எல்லாம் தடுக்க முடியுமா?  25 வருடங்களுக்கு முன்னரே ன்னுடன் பணிபுரிந்த ஒரு ஊழியர் மாலை பணி முடிந்ததும் அவர் ஏரியா ரோடோர கோயிலுக்கு பொறுப்பேற்று சென்று விடுவார்.  நல்க காசும் பார்ப்பார்.

    பதிலளிநீக்கு
  8. உதயகீதம் கவுண்டமணி ஜோக் நினைவிருக்கிறதா?

    பதிலளிநீக்கு
  9. எனக்கும் புது கோவில்கள் கட்டுவதில் உடன்பாடு இல்லை. என்ன செய்வது?
    நீங்கள் சொல்வது போல மதுரையில் நிறைய இடங்களில் இப்படி கோவில்கள் இருக்கிறது.

    அழகர் கோயில் ரோடில் "அப்பன் திருப்பதி" என்று பழமையான கோயில் இப்போது அண்ஹ்த கோயிலின் முன்புறம் ரோடு அகலபடுத்தபடும் போது இடிபடுகிறது. நான் பதிவு போட்டு இருக்கிறேன், அதன் முன் ஒரு பெரிய மண்டபம் இருக்கும் அதை என்ன செய்வார்களோ தெரியவில்லை.

    மதுரையில் ஒரு கோயிலை மக்கள் இடிக்க கூடாது என்று நிறைய பணம் வசூல் செய்து அப்படியே நகர்த்தி வைத்து இருக்கிறார்களாம்.

    இரண்டு நாள் முன்பு அழகர் கோவில் அருகில் உள்ள கல்யாண மண்டபத்தில் திருமணம், அதற்கு போகும் போது பார்த்தோம்.

    கோயில் என்பதே சரியான சொல்.சொல் வழக்குதான் கோவில்.

    பதிலளிநீக்கு
  10. கில்ல்ர்ஜி, யாருக்குமே வாழ்க்கையில் ஏற்ற இறக்கம் வருமே. எனவே அவங்களுக்கும் மார்க்கெட் போறப்ப இது உதவும். பலரும் அப்படித்தான் முதலீடு செய்யறாங்க. இல்லைனா எப்படி பிழைக்க.

    தொகுப்பு நல்லாருக்கு. ஆனா அவங்க சண்டைக்கு வந்துட மாட்டாங்கதானே!!! ஹிஹிஹி அவங்க கடைகள்னு போட்டதைப் பார்த்து!!!

    நானும் இப்படிப் பார்த்திருக்கிறேன் ஆனால் பாருங்க எடுக்கத் தோணலை!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. கில்லர்ஜி அதென்ன அனுஷ்கா அவங்க தமிழ்நாட்டில் கடை வைக்காமல் பெங்காலில்? விரைவில் இங்கு தொடங்கச் சொல்லுங்கள்ல்!

    நடிக நடிகைகள் பெயரில் இருக்கும் கடைகள் அத்தனையையும் தொகுத்திருப்பது வித்தியாசம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  12. நல்ல பகிர்வு. கோவில்கள் வியாபார தலங்களாக மாறிவருவதும் புதிய கோவில்கள் உருவாக ஒரு காரணமாக அமைகிறது என நினைக்கிறேன்.

    இக்காலம் மக்கள் பிரச்சினைகளில் மூழ்கித் தவிப்பதில் நிம்மதி தேடி தெருவுக்குத் தெரு புதிய கோவில்களை அமைத்துக் கொள்கிறார்கள் .

    பதிலளிநீக்கு