இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, மார்ச் 01, 2024

தர்மம் தலை கேட்கும்

ணக்கம் நட்பூக்களே... தன்மக்களிடம், மக்கள் சொல்லொன்று, செயலொன்றாய் வாழ்ந்து காட்டுகிறோம் இது முரண்பாடு இல்லையா ? தென்னை ஒன்று நட்டால் பனை ஒன்றா முளைக்கும் ? நாம் நமது மக்களுக்கு நல்லதை சொல்லும் முன் நாம் செல்லும் பாதை சரியா ? என்பதை முதலில் அறிவோம்.
 
01.  சுத்தம் சோறு போடும் என்று நாம் நமது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்தோம், பிறகு அடுத்தவர்களின் இடத்தில் குப்பையை கொட்ட பழகி கொடுத்தது யார் ?
 
02.  நாய் நன்றியுள்ள மிருகம் என்று நமது செல்வங்களுக்கு பழகி கொடுத்தோம், பிறகு நாயைக் கண்டால் கல்லெடுத்து எறிய பழகி கொடுத்தது யார் ?
 
03.  அன்னையும், பிதாவும் முன்னெறி தெய்வம் என்று பிள்ளைகளுக்கு போதித்தோம், பிறகு பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்க சென்னது யார் ?
 
04.  ஓட்டுப் போடுவது நமது ஜனநாயக கடமை என்பதை பிள்ளைகளுக்கு தெளிவு படுத்தினோம், பிறகு தேர்தல் வந்தால் வேட்பாளர்களிடம் பணம் வாங்க கற்றுக் கொடுத்தது யார் ?
 
05.  வரவுக்குள் நமது குடும்ப செலவை பராமரிக்க வேண்டுமென்று பிள்ளைகளுக்கு சொன்னோம், பிறகு வங்கியில் கடன் அட்டையை வாங்கி கொண்டு அலைவது ஏன் ?

 
06.  உழைத்தால்தான் வாழ்வில் முன்னேற முடியுமென்று பிள்ளைகளுக்கு சொல்கிறோம், பிறகு அவர்களோடும், சோதிடர்களிடம் எதிர்காலத்தை பற்றி கேட்பது யார் ?
 
07.  பிள்ளைகளின் மதிப்பெண் அட்டையில் நூற்றுக்கு நூறு வாங்கவில்லை என்று கண்டிக்கின்றோம், ஆனால் அன்று நாம் எவ்வளவு மதிப்பெண் வாங்கினோம் என்பதை மறப்பது யார் ?
 
08.  காரியம் நடப்பதற்காக அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் கொடுத்து விட்டு மனதுள் சபிக்கின்றோம், பிறகு தனது மகனே அதிகாரியாக வரும் போழுது தடுக்காதது ஏன் ?
 
09.  மகன் புகை பிடிப்பதாக யாராவது சொன்னால் மகனை கண்டிக்கிறோம், ஆனால் தனக்கு புகை பிடிக்க மகனிடம் பணம் கொடுத்து கடையில் வாங்கி வரச் சொல்வது ஏன் ?
 
10.  தர்மம் தலை காக்கும் என்று பிள்ளைகளுக்கு சொல்கிறோம், வாசலில் யாராவது தர்மம் கேட்டால் கதவைச்சாத்து என்று பிள்ளைகளிடம் சொல்லிக் கொடுப்பது யார் ?
 
கில்லர்ஜி அபுதாபி

37 கருத்துகள்:

  1. 07 வரை எல்லாம் சிறந்த கேள்விகள்.  ஏழாவதற்கு நான் ஒரு பதில் சொல்கிறேன்!!  நாம்தான் சரியாக வாங்கவில்லை, பிள்ளைகளாவது சரியாய் வாங்கட்டுமே என்றுதான்!

    பதிலளிநீக்கு
  2. 08 -  கொடுப்பதில் கஷ்டம்.  வாங்குவதில் இஷ்டம்!  ஆனால் பொதுவாகவே 7,8,9 எல்லோருக்கும் பொருந்தாது.  உதாரணமாக எங்கள் வீட்டில் / உறவுகளில்  99 சதவிகிதம் சிகரெட் பிடிப்போர் இல்லை. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி ஜி

      நீக்கு
  3. 09 - பதில் - ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு என்று சொல்லிக் கொடுக்கத்தான்! அதையும் கற்றுத்தர வேண்டுமே!

    பதிலளிநீக்கு
  4. எல்லாக்கேள்விகளுக்கும் ஒரே பதில். நான் சொல்வது செய்வது, செய்யப்போவது எல்லாம் சரி என்ற மனப்பான்மை தான்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்தவர் பிரச்னைக்கு நாம் நீதிபதி.  நம் பிரச்னைக்கு நாம் வக்கீல்...  சரிதானே JKC ஸார்?

      நீக்கு
    2. வாங்க ஐயா தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தங்களது கேள்விகள் நியாயமானது அத்தனை கேள்வியையும் ரசித்தேன்.

    தவறு என தெரிந்து செய்வதும், தவறை நியாயப்படுத்துவதும் தவறை கண்டித்து திருத்துவதுவும் மனித இயல்புகளில் ஒன்றுதானே... மனிதனாய் பார்த்து திருந்தாவிட்டால், எதுவும் சிரமம்தான்.( இந்தப் பாடல் நினைவுக்கு வருகிறது.)
    கருத்தில் வந்திருக்கும் இதற்கான பதில்களையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கும், பதிவை ரசித்தமைக்கும் நன்றி.

      நீக்கு
  6. பொது நலம் கருதி போட்ட பதிவு அருமை.
    உங்கள் கேள்விகள் எல்லாம் நியாயமான கேள்விகள்
    "தவறு என்பது தவறி செய்வது தப்பு என்பது தெரிந்து செய்வது" என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. சில தப்புகள் தெரிந்தே செய்கிறார்கள். தன் வீட்டுப்பக்கம் காலி மனை முன், பின், பக்கவாட்டில் எங்கு இருந்தாலும் குப்பையை போடுகிறார்கள். அதனால் அவர்களுக்கே அது தீங்காய் முடியும் என்பதை உணரவில்லை.

    குழந்தைகளை சிகரெட் வாங்கி வர சொல்வது தப்பு.

    வரவுக்குள் செல்வு செய்வது அந்தக்காலம் சேமிக்க கற்று கொடுத்தார்கள். இப்போது இருக்கும் வரை அனுபவிக்க வேண்டும் அதற்கு யார் கடன் கொடுத்தாலும் வாங்க வேண்டும். தினம் தொலைக்காட்சியில், வானொலியில் கடன் பெறும் திட்டம் சொல்லி தான் மக்களை கடன் பெற வைக்கிறார்கள்.

    சேமிப்பை நிறைய தொகை வட்டியாக தருகிறார்கள் என்று யாரிடமாவது கொடுத்தும், சீட்டு கட்டுகிறேன் என்றும் ஏமாந்து போகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  7. இது இருந்தால் அதுவும் சேர்ந்திருக்கும் என்ற பொது விதி தான் காரணம்..

    உள்ளங்கை இல்லாத புறங்கை எங்கேனும் உண்டா,?..

    பதிலளிநீக்கு
  8. /// தர்மம் தலை கேட்கும் ///

    தலையையும் கொடுப்பது தர்மம்!...

    கவச குண்டலங்களைக் கொடுத்த கர்ணன்..

    தலையைக் கொடுத்த குமணன்..

    இதேபோல தன்னையே கொடுத்த வள்ளல் பாரி..

    நினைவுக்கு வருகின்றார்கள்...

    பதிலளிநீக்கு
  9. பலவற்றிர்க்கு காரணம் இருக்கில்லையா கில்லர்ஜி. அதனால எல்லாமே முரண் என்று சொல்லிட முடியாது.

    நாய் நன்றி உடையதுதான். ஆனால் தெரு நாய் குலைத்தால் கல்லைத் தூக்கியோ கம்பைக் காட்டியோ பயமுறுத்துவது தவறா? மக்கட் செல்வம் சிறந்தது. ஆனா பையன் வம்பு பண்ணினா ரெண்டு அடி போடுவதில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  10. சோதிடர்ட்ட கேட்டாத்தானே அவர் இந்தக் கம்பெனில உழைக்கலாமா? வெளியூர் கோய் உழைக்கணுமா? இல்லை அம்மா அப்பா கூடவே இருந்து கிராமத்திலேயே ஏதாவது சொந்தத் தொழில் செய்யலாமான்னு சொல்லுவாரு. அது சரி ஜோசியம் சொல்லித்தானே அவர் உழைக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே ஜோதிடர்களுக்கு அவர்களது ஜாதகம், சாதகமாக இருக்குமோ ?

      நீக்கு
  11. நாமதான் நல்லாப் படிக்கலை. மகனாவது நல்லாப் படிக்கட்டும் என்று நினைப்பது தவறா? புகை, குடி இருந்த ஒருவர் தன் மகன் நல்லா இருக்கட்டும் என்று நினைத்தால் தவறா? ஊர் அரசியல் உலக அரசியல் எல்லாம் தினமும் அலசிட்டு தேர்தல் அன்னைக்கு ஓட்டுப் போடப் போகாம சீரியல் பார்க்கறவங்களைக் கண்டிங்க ஒத்துக்கறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக வாக்கை ஐநூறு ரூபாய்க்கு விற்பவனைவிட, ஓட்டு போடாதவன் சற்றே உயர்ந்த ஜாதிதான்.

      நீக்கு
  12. நல்ல கேள்விகள். நம்மில் பலருக்கும் தோன்றும் என்றாலும் அதனை இப்படி பதிவு செய்வது சிறப்பு.

    பதிலளிநீக்கு
  13. சுத்தம் சோறு போடும் என்று  சொல்லிக் கொடுத்த போது கொழம்பு ஊத்துறது யாருன்னு கேட்டவனுங்க நம்ம ஆளுங்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாக சோறு போட்டவர்களே குழம்பு ஊற்றுவது உண்மை.

      திருமண வீட்டில் சோறு போட்ட கை ஒன்று, குழம்பு ஊற்றுவது வேறு கைதான் ஜி

      நீக்கு
  14. உங்கள் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் பதில் இருக்கின்றது..

    முன் ஏர் சரியில்லை..

    அவ்வளவு தான்..

    பதிலளிநீக்கு
  15. கில்லர்ஜி, கேள்விகள் நல்லாதான் இருக்கு ஆனால் எல்லாம் முரண் கிடையாது. 3ற்கான பதில் அதில் பேசுவதற்கு நிறைய இருக்கு.

    பெரும்பான்மையான பெற்றோருமே குழந்தைகளை வளர்க்கும் போது குழந்தைகள்தான் பெற்றோரைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி ஒரு எதிர்பார்ப்போடு வளர்ப்பது சரியல்ல. நாம் அதற்கான சூழலை வகுத்துக் கொடுத்தாலே போதும். குழந்தைகள் வளர்ப்பு என்பது விளையாட்டல்ல. எல்லா வீடுகளிலும் குழந்தைகளுக்கு நல்ல சூழல் கிடைக்கிறது என்று சொல்ல முடியாது.

    அடுத்து, குழந்தைகள் நம்மிடம் கற்றாலும், நல்ல முறையில் வளர்க்கப்பட்டால் சுய சிந்தனையுடன் வளர்க்கப்பட்டால் வெளியில் சென்றாலும் கற்பவற்றில் எது நல்லது எது வேண்டாம் என்று எடுத்துக் கொள்ளும் திறன் வரும்.

    வீட்டில் கற்பது ஒன்று, வெளியில் வேறு அனுபவங்கள் கிடைக்கும் போது குழந்தைகளுக்குக் கண்டிப்பாக ஒரு குழப்பம் வரும்.

    போதிப்பதை விட வளரும் சூழல் நன்றாக இருந்தாலே போதும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  16. 10 ரொம்பவே முரண் கில்லர்ஜி. தர்மம் தலை காக்கும் என்று சொல்லிக் கொடுப்பதே என்னைப் பொருத்த வரை அது idealistic. வீட்டு வாசலுக்கு வந்து தர்மம் கேட்பவர் நல்லவர் என்று யார் சொல்ல முடியுமா?

    உழைத்தால் பலன் கிடைக்கும் என்று நாம் சொல்வதுண்டு. ஆனால் இதுவும் idealistic. உழைக்காமலேயே சம்பாதிப்பவர்களைப் பார்க்கும் போது உழைத்தும் பெரிய அளவு கிடைப்பதில்லையே என்று ஒரு மனச் சோர்வு வரும்.

    எனவே எது செய்தாலும் வாழ்க்கையில் மன அமைதி என்பது வேண்டும் (இதிலேயே எல்லாம் அடங்கிவிடும்!) அது எப்படிக் கிடைக்கும் அதைப் பெறுவது எப்படி என்பதற்கான சூழல் இருந்தால் நல்லது அடுத்த தலைமுறையும் நன்றாக வளரும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  17. கேட்கப்ப்ட வேண்டிய கேள்விகளும், அதற்கான சாட்டையடி போன்ற பதில் தாங்கிய பதில் கேள்விகளும் அருமை. எல்லாவற்றிற்கும் ஒரே பதில்தான். ஊருக்கும் மற்றவர்களுக்கும் தான் உபதேசம். நமக்கு அல்ல என்பதுதான். அது எல்லோருடைய மனதிலும் ஆழமாகப் பதிந்துவிட்டது. அதன் விளைவுதான் இதெல்லாம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  18. கேள்விகளும் அதற்கான பதில்களும் அருமை.

    பதிலளிநீக்கு