இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், மே 06, 2020

கீர்த்தனாவுக்கு பிரார்த்தனைகள்



ந்த திருமண மண்டபத்தில் திருமணம் கோலாகலமாக நிகழ்ந்து முடிந்தது மதிய உணவு முடிந்து மண்டபத்தின் திறந்த வெளியில் இருந்த வேப்ப மரத்தடியில் கிடந்த நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்து இருந்தன் தனது கண்களை மூடி பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தபோது...


‘’நந்தா’’ (பெயர் இப்படியே இருக்கட்டுமே)
நினைவுகள் கலைந்தபோது பக்கத்தில் ஒரு அம்மாவும், ஒரு நாற்பது வயது பெண்மணியும் சட்டென விழித்த நந்தன் மகிழ்ச்சியாய்.....
கமலாம்மா நல்லா இருக்கீங்களா ? வீட்டில் நல்லா இருக்காங்களா ?
நல்லா இருக்கேன்பா... நீ எப்படி இருக்கே ?
நல்லா இருக்கேன்.... உட்காருங்கம்மா....
நந்தா இது யாருன்னு தெரியுதா ?
அப்பொழுதுதான் அவளைப் பார்த்தான் நந்தன்...
இது..... இது... திடீரென்று மின்சாரம் தாக்கியவன் போல் எழுந்து விட்டான்
உட்கார் நந்தா...
கீர்த்தனா.... எப்படி... எப்படி... இருக்.....கீங்க... ?
சுற்றும் முற்றும் பார்த்தான் விழிகள் அவளது கணவனை தேடியது...
கீர்த்தனாவுக்கு கண்ணீர் எப்பொழுது வெடித்து வெளியேறும் என்ற நிலைப்பாடு.
நந்தா கீர்த்தனாவும், நானும் மட்டும்தான் கல்யாணத்துக்கு வந்து இருக்கிறோம் அவளோட கணவன் எப்பொழுதும் பிஸினஸ்தான்.
கீர்த்தனாவுக்கு குழந்தைகள்.... ?

இல்லப்பா இறைவன் அவளுக்கு அந்த பாக்கியத்தை கொடுக்கவில்லை.
மீண்டும் கீர்த்தனாவை பார்த்த நந்தன் மனம் புழுங்கி பார்வையை தாழ்த்தினான்.
அம்மா எப்போ வந்தீங்க ?
காலையில் தாலி கட்டும் முன்பே வந்து விட்டோம். கீர்த்தனா உன்னையே பார்த்துக் கொண்டு இருந்தாள் நான்தான் பிறகு பேசுவோம் என்று சொல்லி வைத்து அழைத்து வந்தேன்.
நான் கவனிக்கவே இல்லையேமா...

கமலாம்மாள் முப்பது வருடங்களுக்கு முன்பே விருத்தாசலத்தில் இருந்தபோது தூரத்து சொந்தம் நந்தன்-கீர்த்தனா காதல் விவகாரம் முழுமையாக அறிந்தவர். நல்ல குணம் நந்தன்-கீர்த்தனா உறவினர்கள்தான் கீர்த்தனாவுக்கு பதினைந்து வயது இருக்கும்போது இவர்கள் மனதில் காதலை வளர்த்து விட்டது இருவரது அம்மாக்கள்மாரே... ஆசைப்பட்டு வளர்ந்தவர்கள் பருவம் வந்தபோது காதலையும் சேர்த்து வளர்த்து வந்தபோது எதிர்பாராத விதமாக நந்தனின் தங்கையை கொடுத்த இடத்தில் திருமணம் செய்தாக வேண்டிய சிக்கல் வேறு வழியின்றி விருப்பமின்றி நடந்த திருமணம்.

நந்தனின் மனைவியோ கீர்த்தனாவின் காதல் விவகாரம் அறிந்து நந்தனை தினமும் தேளைப்போல் கொட்டித் தீர்க்க ஊரை விட்டு மதுரை வந்த நந்தன் சிங்கப்பூர் போய் பணத்தை மட்டுமே  சம்பாரித்து வாழ்ந்து இதோ முப்பது வருடங்கள் கடந்த நிலையில்... இன்று மதுரையில் உறவினர் கல்யாணத்தில்.... கீர்த்தனாவைக் கண்டு கலங்கி....

அம்மா சாப்பிட்டீங்களா ?
சாப்பிட்டோம்பா...
வாங்களேன் என்னோட வீட்டுக்கு போவோம்.
வீடு எங்கேப்பா ?
இதே வரிசையில்தான் நாலாவது வீடு
சரி இதோ மொய் செய்தாச்சு சொல்லிட்டு வர்றோம்.
சரிம்மா நானும் சொல்லிடுறேன்.

கமலாம்மாவும், கீர்த்தனாவும் முன்னே போய் பெண் வீட்டாரிடம் சொல்லி விட்டு புறப்பட்டனர்.
நந்தனும் சொல்லி விட்டு மண்டபத்தை விட்டு வெளியே வர...
ஆட்டோ பிடிக்கணுமாபா...
வேண்டாம்மா இதோ வாங்க நடப்போம்,

நகரின் முக்கியமான இடத்தில் நந்தனின் வீடு தனக்கு வேண்டிய அளவுக்கு வீடு கட்டியது போக மீதி இடங்களில் மூன்று கடைகள் வாடகை வந்து கொண்டு இருந்தது. வீட்டைத் திறந்த நந்தன் சோபாவில் உட்காரச் சொல்லி விட்டு கிச்சன் சென்று ஜாடியில் தண்ணீரும், குளிர் சாதனப் பெட்டியிலிருந்து பவண்டோவும் எடுத்து வந்து கண்ணாடி குப்பிகளில் ஊற்றிக் கொடுத்தான். வெயிலுக்கு இதமாக இருந்தது.

சுவர்களில் நந்தனின் அப்பாவும், அம்மாவும் மாலையோடு கண்ணாடி புகைப்படத்தின் வழியாக சிரித்தார்கள். பக்கத்தில் நந்தனின் மனைவி கலையரசியும் மாலையோடு...

நந்தா சாப்பாடு எல்லாம் எப்படி ?
நாந்தாம்மா சமைச்சு சாப்பிடுறேன்.
சமைக்கத் தெரியுமா ?
தெரிந்த அளவு வேறென்ன செய்யிறது.
எல்லாம் கேள்விப்பட்டேன் பவானிதான் போன் செய்யும்போது சொல்வா... உன்னோட மகன்கள் மூணு பேருமே தனியாக போயிட்டதாக... நீ எதுக்குப்பா அவசரப்பட்டு சொத்துகளை பிரிச்சுக் கொடுத்தே ?
அவங்களும் சுயமாக நிற்கட்டும் நாம இறந்த பிறகு அவர்களுக்குள்ளே சண்டை வரக்கூடாதுனு நினைச்சேன். இந்த இடம் மட்டும் எனது பெயரில்தான் இருக்கு இந்த வாடகையை வச்சுதான் நான் காலத்தை ஓட்டுறேன் நான் இறந்த பிறகு இது சென்னை சிவாநந்தா குருகுலத்துக்கு போறது மாதிரி உயில் எழுதி வச்சுட்டேன். ஆமா எந்த பவானியை சொன்னீங்கம்மா ?

நம்ம மாணிக்கம் பேத்தி அவதான் ஆமா அவளைப் பார்க்கணுமே...
அடுத்த வீதியில்தாம்மா இருக்காங்க... நான் அழைத்துப் போறேன்.
நந்தா என்னை மட்டும் ஒரு ஆட்டோ பிடிச்சு அனுப்பி வை நான் போயிட்டு வந்துறேன்.
நந்தாவும், கீர்த்தனாவும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டனர்.
நந்தா, கீர்த்தனா உங்கள் ரெண்டு பேரைப்பற்றியும் எனக்கு நல்லாத் தெரியும் கீர்த்தனா உன்னிடம் நிறைய பேசணும்னு ஆவலா இருக்கிறது எனக்குத் தெரியும் கீர்த்தனா பேசிக்கிட்டு இரு நான் போயிட்டு வர்றேன்.

வெளியே வந்த நந்தன் கை காட்டவும் ஆட்டோ ஸ்டாண்டிலிருந்து ஒருவன் பறந்து வந்தான்.
காளியப்பா பின்னாலே மனோரஞ்சித வீதியில் சோடா கம்பெனி இருக்குல அதுக்கு அடுத்த வீட்டுல விட்டுட்டு வா பணம் வாங்காதே...
சரிங்க சார்
போயிட்டு வாங்கம்மா
ஆட்டோவை அனுப்பி விட்டு உள்ளே வந்த நந்தன் அதிர்ந்தான் கீர்த்தனா கதறி அழுது கொண்டு இருந்தாள்.

சற்று நேரம் அமைதியாக இருந்த நந்தன்
கீர்த்தனா அழாதே என்ன செய்யிறது விதிப்படிதான் நடக்கும்.
நீண்ட அமைதிக்குப் பிறகு அவளது அழுகை நின்றது
நல்லா இருக்கீங்களா ?
மெதுவாக நிமிர்ந்து பார்த்த நந்தன்
பரவாயில்லை இப்பவாவது கேட்டியே.....

நீங்க ஏன் மறுபடியும் கல்யாணம் செய்துக்கிறலை ?
.....................................................
உங்கள் மனைவியோடு நீங்கள் சந்தோஷமாக வாழலைனு கேள்விப்பட்டேன் உண்மையா ?
அவள் மண்ணுக்குள்ளே போயி இருபது வருஷமாச்சு இனி என்ன சொல்லி என்ன ஆகப்போகுது ?
உங்கள் சந்தோஷம் போனதுக்கு நானும் ஒரு காரணம்தானே ?
நானும்கூடத்தான் காரணம். உன்னோட கணவர் உன்னை சந்தோஷமாக வச்சுக்கிறாரா ?
.........................................................
ஏன் பதில் சொல்ல மாட்றே.... ?
பதில் சொல்லத் தெரியலை பணம், கார், பங்களா இருக்கு அவ்வளவுதான்.
குழந்தைகள் இல்லைனு சொன்னாங்க....
.............................................
நீ சந்தோஷமாக வாழ்வேனுதான் நான் நினைச்சுக்கிட்டு இருந்தேன்.
உங்கள் மனைவி எப்படி இறந்தாங்க ?
மின்சாரம் தாக்கி இறந்து போயிட்டா...
அப்ப நீங்களும் இங்கேதான் இருந்தீங்களா ?
சிங்கப்பூரிலிருந்து உடனே வந்தேன் அவள் இறக்கும்போது நான் இங்கிருந்திருந்தால் நான்தான் கொன்னேனு என்னை பழி சொல்லி இருப்பாங்க...
உங்கள் மீது அவ்வளவு நம்பிக்கையா ?
வாழ்க்கை அப்படித்தானே போய்க்கிட்டு இருந்தது.
என்னை மறந்துட்டீங்களா ?
நந்தன் கீர்த்தனாவை தீர்க்கமாக பார்த்தான் பிறகு...
இதற்கு நான் பதில் சொல்றதைவிட கொஞ்சம் இரு இதோ வர்றேன் அது உனக்கு பதில் தரும்.

சொன்னவன் எழுந்து உள்ளே இருக்கும் அறைக்குள் சென்றான் இரும்பு அலமாரியை திறக்கும் சத்தம் கேட்டது வெளியே வந்தவன் கையில் நோட்டு.
கீர்த்தனா அவனையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள் நோட்டை பிரித்த நந்தன் மையத்திலிருந்து மெதுவாக எடுத்து அந்த பொருளை அவளுக்கு முன்பிருந்த கண்ணாடி டேபிளில் வைத்தான்.

பிரமித்து போய் அதைப்பார்த்தாள் மெதுவாக அதை கையிலெடுத்தவள் அப்படியே முகத்தில் அறைந்து கொண்டு கதறினாள் முப்பது வருடமாக பொக்கிஷம் போலவே பாதுகாத்து வைத்து இருந்தது இன்று கீர்த்தனாவின் முகத்தில் பட்டு சுக்கு நூறாக பொடிபோல உதிர்ந்தது. அவளது கதறல் மேலும், மேலும் கூட நந்தனின் விழிகளிலும் கண்ணீர் பெறுக்கெடுத்து வழிந்தது யார் யாரை அழாதே என்று சொல்வது ?

வாசல் கதவு திறக்கும் சத்தம் கேட்டு நிமிர கமலாம்மாள் இருவரையும் பார்த்தார் ஒன்றுமே சொல்லாமல் அமைதியாக அமர்ந்தார். கீர்த்தனாவின் முகத்தில் ஒட்டியிருந்ததை கண்டு...
நந்தா என்ன இது ?
அது வந்தும்மா... பதப்படுத்திய காய்ந்துபோன இலை நொறுங்கிப் போச்சு.
இங்கே எப்படி வந்துச்சு ?
கீர்த்தனா என்னை மறந்துட்டீங்களானு கேட்கவும் அவள் கொடுத்திருந்ததை எடுத்து வந்து கொடுத்தேன்.
எப்ப தந்தாள் உனக்கு ?
முப்பது வருஷமாச்சு
உன்னை நினைச்சா பெருமையா இருக்கு நந்தா என்ன செய்யிறது விதியை மாற்ற முடியுமா... ?
பவானியை பார்த்தீங்களாம்மா ?
பார்த்தேன் அவங்க அவசரமாக வெளியூர் பயணம் போறாங்க அதான் உடனே வந்துட்டேன் சரி கீர்த்தனா புறப்படலாமா ?
உடன் தலையாட்டி விட்டு எழுந்தாள் பாத்ரூம் சென்று முகத்தை கழுவி விட்டு புறப்பட்டாள்.

சரிங்கம்மா, கீர்த்தனா கவலைப்படாதே உன்னை சந்திச்சதில் மனசுல கொஞ்சம் பாரம் இறங்கியது போலிருக்கு நீ சந்தோஷமாக வாழணும் அதான் என்னோட ஆசை, பிரார்த்தனைகள்.
கை எடுத்து வணங்கினான் இருவரையும்.
வெளியே வந்தனர்.
காளியப்பா
அதே ஆட்டோக்காரன் பறந்து வந்தான்
பஸ் ஸ்டாண்டில் விட்டுட்டு வா பணம் வாங்காதே,,,
சரி சார்
இருவரும் வணங்கினார்கள் கீர்த்தனாவின் விழிகளில் நன்றிப்பெறுக்கு.

கீர்த்தனா ஐந்தாவது படிக்கும் பொழுது அவளது புஸ்தகத்தை எடுத்த நந்தன்.
இந்த இலை எதுக்கு எனக்கு கொடேன் ?
அதெல்லாம் தரமாட்டேன்


வாய் வீம்புக்கு சொன்னாலும் மனம் அவன் எடுத்துக் கொள்ளட்டுமே என்று நினைத்தது. அவனும் வீம்புக்காக அதைக் கொண்டு போய் விட்டான். மறுதினம் அவனிடம் அந்த இலை வேண்டும் என்பாள் அவன் தரமாட்டேன் என்பான் மீண்டும் கேட்பாள் விளையாட்டான சண்டை. அதைக் குப்பையில் போட்டிருப்பான் என்று நினைத்து இருந்ததை இத்தனை வருடமாக பொக்கிஷமாக பாதுகாத்து வைத்து இருக்கின்றாரே... நாம் அவருக்கு கிடைத்து இருந்தால் ? நம்மை எப்படி பார்த்து இருப்பார் ? நம்மிடம் அவர் போன் நம்பர்கூட கேட்கவில்லையே எப்பவுமே அவர் நாகரீகம் தெரிந்தவர்தான் எனக்காக பிரார்த்தனைகள் என்று சொன்னாரே... நாம் சொல்லவில்லையே... அதனால் என்ன ? இனியாவது பிரார்த்திப்போம் அடுத்த ஜென்மத்திலாவது......

விசும்பல் சத்தம் கேட்டு பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த கமலாம்மாள் கீர்த்தனாவை மடியில் கவிழ்த்தி படுக்க வைத்தார் பேருந்து விருத்தாச்சலம் செல்லும்வரை அந்த தாயின்மடி ஈரத்திலேயே இருந்தது.

இதுவொரு உண்மை நிகழ்வின் புனைவு.

இப்படி நொந்த நந்தன் தாங்கள் அறியப்பட்டவனும்கூட...

75 கருத்துகள்:

  1. புரிகிற மாதிரிதான் இருக்கு. செயற்கைத்தனம் இல்லாமல் சொல்லி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //புரிகிற மாதிரிதான்//

      புரியாததுபோல் இருக்கிறதா ஜி ?

      நீக்கு
  2. பெருமூச்சுதான் வருகிறது.
    நல்லதொரு காதல் கதை.

    காலம்தான் எத்தனை சதி செய்துவிடுகிறது.
    நந்தாவை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. கௌரவமான மனிதன்.

    இது போல பிரிந்த இரண்டு மூன்று காதலர்கள் நினைவுக்கு வருகிறார்கள்.
    மிக நன்றி அன்பு தேவகோட்டைஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா கதையை அழகாக விமர்சித்தமை கண்டு மகிழ்ச்சியும், நன்றியும்.

      நீக்கு
  3. நல்லதொரு பகிர்வு.

    காலத்தின் கைகளில் நாம் எல்லோருமே பொம்மைகள் ஆகிவிடுகிறோம்.

    சிறப்பாகச் சொன்ன உங்களுக்கு பாராட்டுகள் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி ஆம் இறைவன் முன் நாம் விளையாட்டு பொம்மைகளே...

      நீக்கு
  4. ஆயிரம் வாசல் இதயம் அங்கே ஆயிரம் எண்ணங்கள் உதயம் ----நினைப்படெல்லாம் நடந்து விட்டால்......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா பொருத்தமான பாடல்தான் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  5. நீங்கள் சொல்வது போல் உண்மை நிகழ்வு என்றால் தான், இப்படி ஆழ்ந்து எழுத முடியும் ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  6. நொந்த நந்தன் யார்ன்னு புரியுது.. ஆனா புரியல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஆறு மாதத்திற்கு ஒருமுறை வருகை தரும் தங்களுக்கு நன்றி.

      நீக்கு
  7. உணர்வுப் பூர்வமானப் பதிவு
    நந்தன் யார் என்று நான் நினைப்பது சரியா? நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நந்தா தங்களுக்கு அறியப்பட்டவர் என்றேனே.... நன்றி.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    அருமையான கதை. இல்லை உண்மை நிகழ்வின் நெகிழ்ச்சி. இருவரின் நிலையையும் படித்ததும் மனதை கலங்க வைத்தது. இந்த மாதிரி அன்பின் நினைவோடு, ஆனால் எதையும் வெளிக்காட்டாது, தியாகம் உருவாய் வாழ்வை வாழ்ந்து முடிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதற்கு நந்தா ஒரு உதாரணம்.அது ஒரு கற்பனை பாத்திரம் இல்லாத பட்சத்தில் நந்தாவுக்கு, அவரின் உன்னத காதலுக்கு வாழ்த்துக்கள்.

    அடுத்த பிறவி என்பது உண்மையானால் இருவரும் இதே மாதிரி நல்ல எண்ணங்களோடு பிறந்து தடைகள் ஏதுமின்றி ஒன்று சேர்ந்து வாழ வேண்டுமென நானும் அந்த கீர்த்தனா மாதிரி வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ கதையை அழகாக உள்வாங்கி படித்து வாழ்த்தியமைக்கு நன்றி.
      அடுத்தபிறவி உண்டு என்ற நம்பிக்கையே சிலருக்கு ஆறுதலைத் தருகிறது என்பது உண்மையே...

      நீக்கு
  9. ரொம்ப நல்லா எழுதப்பட்டிருக்கு. அனுபவிக்காமல் எழுத்தில் இவ்வாறு வராது. கதாசிரியருக்குப் பாராட்டுகள்.

    1. நாம இறந்த பிறகு சொத்து யாருக்குப் போகணும் என்பது அதற்கு முன்னாலேயே வெளிப்படையாக பிறரிடம் சொல்வது சரியா?

    2. எத்தனையோ பேர் நம் வாழ்க்கையில் வருவாங்க, சிலர் நெருக்கமாக. ஆனால் திருமணம் என்பது விதிப்படிதானே. என் எண்ணம், அதுவே நமக்குச் சரியானதாக இருக்கும் என்பதுதான். நம் பூர்வஜென்ம பாவ புண்ணியங்களையும் கழிக்கணும் இல்லையா?

    ஆனா இந்தக் கதையில், எதிர்பாராத விதமா, பெண் கொடுத்த வீட்டிலேயே பெண் எடுக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அதில்தான் காதல் கருகியிருக்கிறது. ரொம்ப துரதிருஷ்டம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதாசிரியரை பாராட்டியமைக்கு நன்றி நண்பரே
      இறந்த பிறகு வெளிப்படையாக சொல்வதில் நல்லதும் உண்டு அதேநேரம் அவை உயிருக்கு உலை வைப்பதாகவும் முடிய வாய்ப்பும் உண்டு.

      திருமணம் என்பதை இறைவன் தீர்மானிக்கின்றான் என்பதில் எனக்கும் நம்பிக்கை உண்டு என்றாலும்கூட.... உங்களது நண்பர் பரமக்குடியார் கணக்கு வழக்கு இன்றி வாழ்கிறாரே இதையும் தீர்மானிப்பது இறைவனா ?

      சிலரது ஆசையால் பலரது வாழ்வு அழிவதை நான் அனுபவத்திவ் உணர்ந்தவன்.

      நீக்கு
    2. பரமக்குடியார் வாழ்க்கை நம்ம எல்லோருக்கும் தெரிந்ததுதான். அவருடைய 'நலம் விரும்பி'கள் மனைவி ரூபத்திலும் இல்லை, உறவினர்கள் ரூபத்திலும் இல்லை.

      அது சரி... அவரை 'என் நண்பர்'னு சொல்லிட்டீங்களே..... என் மேல் உங்களுக்கு ஏன் இந்த கடுப்பு?. ஹா ஹா

      நீக்கு
    3. பதிவுலகமே அவரை உங்களது நண்பர் என்றே சொல்கிறது.

      நீக்கு
  10. பெரும்பாலான கல்யாணங்கள் இப்படி ஓர் நிர்ப்பந்தத்துக்குக் கட்டுப்பட்டே நடக்கின்றன. இந்த உண்மைக்கதை நன்றாகவே புரிகிறது. இத்தனை வருஷங்கள் கழித்துப்பார்க்கும் காதலியும் மகிழ்ச்சியாக இல்லை என்றால் மனதில் வேதனை தான் வரும். எப்படியோ இனியாவது அவளுக்கும் ஓர் குழந்தை பிறந்து நல்லபடியாக வாழப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ ஆம் பலரும் தனது ஆசையை பிறரிடம் தினிப்பது மடத்தனமான செயல். எனது மருமகனுக்கும், மகளுக்கும் பெயர் வைத்தது நான்தான் ஓர் கணக்கு வைத்து பெயர் சூட்டினேன்.
      ஆனால் தவறு செய்து விட்டேனோ என்றும் வருந்தினேன்.

      இறையருளால் நல்லதே நிகழ்ந்தது இதில் இருவருக்கும் சம்மதம் இருந்ததில் மகிழ்ச்சி

      நீக்கு
  11. சொத்துக்களை நாம் உயிருடன் அதுவும் நல்ல மனோநிலையில் இருக்கையிலேயே பிரித்துக் கொடுப்பது தான் நல்லது. ஆனால் உயிலாக எழுதி வைக்கும் சொத்துக்களை, உதாரணமாக சிவாநந்தா குருகுலத்துக்குப் போகவேண்டிய சொத்தை எழுதியதோடு மட்டுமில்லாமல் பத்திரப் பதிவும் 2,3, சாட்சிகளுடன் பண்ணி வைக்க வேண்டும். வெறும் எழுத்து மூலமாக இருந்தால் அது செல்லாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொத்துகளை உயிருடன் இருக்கும்போதே கொடுத்து விடுவது நல்லதே காரணம் இன்று பிள்ளைகளுக்கு நல்ல எண்ணங்கள் கிடையாது நாமே சுபமாக்கி விடல் வேண்டும்

      மேலும் பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றி

      நீக்கு
    2. இன்னொன்று சொல்ல விட்டுப் போய்விட்டது. சாட்சிகளை வைத்துக்கொண்டு பதிவு செய்யும் உயிலை நகல்கள் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். சிவாநந்தா குருகுலம் பற்றியும் தீர விசாரித்து இப்போதைய மானேஜர் யார் என்பதைத் தெரிந்து கொண்டு யார் பெயரில்/அல்லது எந்த அறக்கட்டளையின் பெயரில் பத்திரப் பதிவு செய்யணும் என்பதையும் கேட்டு வைத்துக்கொண்டு பின்னர் முறைப்படி சட்ட ஆலோசனைகள் பெற்ற பின்னர் பத்திரப் பதிவு செய்யுங்கள். நீங்கள் விரும்பினால் ஒரு நகலை உடனே குருகுலத்தின் நிர்வாகத்திடம் ஒப்படைக்கலாம். அல்லது உங்கள் காலத்துக்குப் பின்னரும் செய்யலாம்.

      நீக்கு
    3. மீள் வருகைக்கும், பயனுள்ள தகவல்களுக்கும் நன்றி.

      சிவாநந்தா குருகுலம் சென்று இருக்கிறேன் 15 வருடமாக தொடர்பில் இருக்கிறேன்.

      நிறுவனர் டாக்டர் திரு.ராஜாராம் அவர்களுடன் அலைபேசியில் பலமுறை பேசி இருக்கிறேன்.

      நீக்கு
  12. ஆட்டோகிராப்? 3 இலை கணவன் மனைவி குழந்தை என்று சூசகமோ? தமிழ் சினிமா டைரக்டர் ஆகவேண்டியது. விதி மாற்றிவிட்டது.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா மூன்று இலைகளில் ஒன்று சிதைந்தும் இருக்கிறதே....
      உண்மையில் எனக்கு நடிக்கத் தெரியாது ஆனால் நடிப்பை பெற வைக்க முடியும் நன்றி ஐயா

      நீக்கு
  13. நந்தா, கீர்த்தனா இருவருமே மிக நல்லவர்களா இருந்தது தவறு. முடிவெடுப்பதில் வல்லவர்களாகவும் இருந்திருக்க வேண்டாமா? ‘நல்லவராக வாழ்ந்தால் போதாது. வல்லவராகவும் வாழப் பழக வேண்டும்’ என்னும் டாக்டர் மு.வரதராசனாரின் கருத்துரை நினைவுக்கு வருகிறது.

    மனம் ஒன்றி எழுதியதால் கதை விறுவிறுப்பாகச் செல்கிறது. மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பாசத்தில் கால் வைத்தவன் வாழ்க்கையில் வழஉக்கி விழுந்தே தீருவான் இது ஆண்டாண்டு காலமாக நிகழ்கிறது அவரவர் வாழ்வை அவரே தீர்மானிப்பதே நன்று.

      வருகைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  14. பாவம் கீர்த்தனாவும் நந்தரும் .இந்த காலத்திலாவது இல்லையில்லை இனி வரும் காலத்திலாவது பெற்றோர் பிள்ளைங்க மனமறிந்து அவங்க   விருப்பத்திற்கேற்ப நடக்கணும் .நான்  மகள் படிப்பையே அவள் விருப்பப்படிதான் தேர்ந்தெடுக்க விட்டேன். வாசிக்க நெகிழ்ச்சியா இருந்தது சகோ .அந்த கமலாம்மாள் உண்மையில் பெரிய மனத்துடையவர்தான் ஆனால் அவரினும் நந்தர் க்ரேட் .ஆட்டோவுக்கு தானே பணம் கொடுக்கும் குணம் சிலருக்கே வரும் .அதோடு வயதானோர்கிட்ட கையில் பணம் இருக்குமோ இருக்காதோ குறிப்பா ஊரில் கிராமம்பக்கம் .இதெல்லாம் நோட் செய்துக்கறேன் சகோ .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நந்தன் நல்லவன் என்பதை கதையில் பல தருணங்களிலும் நிரூபித்தல் நல்லதல்லவா... குறிப்பாக அலைபேசி எண் கீர்த்தனாவிடம் கேட்காதது, அவளுக்காக பிரார்த்திப்பது, துளி கண்ணீர் சிந்துவது, அவள் கொடுத்த இலையை (பத்துப்பைசா பெறாதது என்பது வேறு விசயம்) திரும்ப கொடுப்பது பல வருடங்களுக்கு பிறகு அது நொருங்குவதே காதலின் அழுத்தம்.

      வருகைக்கு நன்றி சகோ

      நீக்கு
  15. என்னதான் காதலிச்சாலும் ஆண்டவன் எங்க முடி போட்டிருக்கானு யாருக்கு தெரிவியும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மைதான் எல்லாம் அவன் செயல்.

      நீக்கு
  16. பெண் எடுத்து,பெண் கொடுப்பதில் சிக்கல் அதிகம். ஆசைப்பட்டவளும் கிடைக்காமல், கிடைத்தவளும் அன்பாக இல்லாமல் அப்பப்பா எத்தனை வேதனை! நந்தனுக்கு இனியாவது நிம்மதி கிடைக்கட்டும். நந்தன்,கீர்த்தனா,கமலாம்பா என்று எல்லோரும் உயர்ந்து நிற்கிறார்கள். நல்ல படைப்பு. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் தங்களது கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  17. என்னமோ... போங்க...
    காலை..ல கதையப் படிச்சதில இருந்து ஒன்னும் புரியலை...

    இப்படி எத்தனை எத்தனை நந்தா விளக்குகளோ!..
    காது கொடுத்துக் கேட்கப்படாமல் போன கீர்த்தனைகள் எத்தனையோ!...

    ஓடிப் போன ரயிலுக்கு காத்திருந்து என்ன ஆகப் போகிறது...

    கற்பகத்தைச் சார்ந்தார்க்கும் காஞ்சிரங்காய் ஈந்தன்றேல்
    முற்பவத்தில் செய்த வினை..

    - என்று ஔவையார் சும்மாவா சொன்னார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      உண்மை வெளியில் தெரியாமல் உள்ளுக்குள் அழும் உள்ளங்கள் எத்தனையோ...

      நீக்கு
  18. அது சரி.. கற்பகம்... ங்கறது யாரு!?..
    ஒழுங்கா உண்மையைச் சொல்லிடுங்க!..

    குழவிக் கட்டையும் கையுமா யாரோ வர்றாங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. இது ஔவையாரிடம்தான் கேட்கணும்.

      நீக்கு
  19. ‘காதல் என்பது எதுவரை, கல்யாண காலம் வரும் வரை’ என்பது பொய் என்பதை தங்களின் கதையில் சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள். நந்தன் எந்த அளவுக்கு உண்மையாய் காதலித்திருந்தால் சிறுவயத்தில் கீர்த்தனாவிடமிருந்து பெற்ற பதப்படுத்தப்பட்ட இலையை பொக்கிஷம் போல் பாதுகாத்திருப்பான். உண்மையான காதல் நிகழ்வை அருமையான காதல் காவியமாகப் படைத்துவிட்டீர்கள். இனி நந்தன் கீர்த்தனா வந்துபோன நிகழ்வை நினைத்தே மகிழ்ச்சியாய் வாழ்வான்.

    மனதை நெகிழ வைத்த நிகழ்வை அருமையான கதையாக வடித்த தங்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சிலர் நினைப்பார்கள் காதலர்கள் பரிமாறிக் கொண்டது "பொருள்" என்று மட்டுமே விலையுயர்ந்தவை மட்டும்தான் பெரிதென்று நினைப்பதில் "பொருள்" இல்லை.

      தங்களது விளக்கத்தை அழகாக தந்தமைக்கு நன்றிகள் பல!

      நீக்கு
  20. கதை படித்து முடித்தவுடன் மிகவும் மனம் கனத்து போனது.
    கதை நாயகர் உங்களுக்கு தெரிந்தவர் என்று சொல்லி விட்டீர்கள். அதை படித்தவுடன் இன்னும் மனம் கனத்து போனது. பெண் கொடுத்து பெண் எடுப்பது நல்லதே இல்லை. ஒன்று வாழும் ஒன்று தாழும். என்பார்கள்(ஓருவர் வாழ்க்கை நன்றாக இருக்கும், ஒருவர் வாழ்க்கை நன்றாக இருக்காது என்பார்கள்)
    எங்கள் வீட்டில் இரண்டு அனுபவமாக கண்டு விட்டோம்.

    நந்தன் மனது, கீர்த்தனா மனதும் நல்ல மனது.
    இப்படி பிரிய நேர்ந்து விட்ட்தே என்று வருத்தமாய் இருக்கிறது.

    இருக்கும் போதே சொத்தை பங்கு வைத்து விட்டது தான் இருக்கும் இடம் தனக்கு பின் சிவானந்த குருகுலத்திற்கு என்று படித்தவுடன் நந்தன் உயர்ந்து விட்டார் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      பெண் கொடுத்து பெண் எடுப்பதில் தொடக்கத்திலேயே பேசி முடித்தவர்கள் வாழ்வாவது நன்றாக இருக்கும்.

      இங்கு ஒன்று முடிந்ததால் மற்றொன்று கட்டாயமாக்கப்பட்டது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதுபோல் ஆகிவிட்டது.

      கதையை உணர்வுப்பூர்வமாக படித்து தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  21. கட்டாயமாக்கப்பட்டது தெரிகிறது ஜி.
    முதல் கோணல் முற்றிலும் கோணல் என்றும் தெரிகிறது.

    இருவீட்டாரும் மகிழ்ச்சியோடு பெண் கொடுத்து ,பெண் எடுத்த கல்யாணமும் நன்றாக இல்லை அதைத்தான் சொன்னேன். என் அண்ணனுக்கு பெண் எடுத்த வீட்டில் என் தங்கையை கொடுத்தோம்.
    என் அண்ணன் விபத்தில் இறந்து விட்டான். என் பெரிய மாமா பெண்ணுக்கு மணம் முடித்த வீட்டில் என் சின்ன மாமாவுக்கு பெண் எடுத்தோம். என் மாமா பெண் குழந்தை பிறந்த வீட்டில் இறந்து விட்டாள். இரண்டு கல்யாணத்தில் ஒன்று தான் நன்றாக இருக்கும், இன்னொன்று ஏதாவது பிரச்சனை வரும் என்று எங்களுக்கு ந்மபிக்கை ஏற்படுத்திய சம்பவங்கள். அதைதான் சொன்னேன்.

    யாராவது இப்படி செய்து கொண்டு நன்றாக இருந்தால் அது அவர்கள் வாங்கி வந்த நல் வரம் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் எனக்கு தெரிந்த நண்பர்கூட ஒரே மேடையில் இரண்டு கல்யாணம் நடந்தது.
      அதில் ஒன்று இன்று விதவை. அதாவது எனது நண்பர் இறந்து விட்டார்.

      எப்படியாயினும் சில நேரங்களில் விதியே வெல்லும்.

      மீள் வருகைக்கு நன்றி சகோ.

      நீக்கு
  22. மனதை தொட்டு விட்ட அருமையான கதை அண்ணா ஜீ. மூன்று பேரை நல்ல படைப்பாக உருவாக்கி கதையை எழுத்திய உங்களுக்கு வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை வாழ்த்தியமைக்கு நன்றி.

      நீக்கு
  23. இந்த அம்மாக்களுக்கு வேற வேலையில்ல,
    சின்ன வயசுல ஆசைய வளத்து விடுறது,
    அப்புறமா குட்டிக்கரணம் போட வைக்கிறது....
    ச்ச்சை...............

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை பல இடங்களில் அம்மாக்களே காரணம் நண்பரே

      நீக்கு
  24. மனதை நெகிழ்த்திய கதை சகோ..உள்ளத்துக்காதல் இணையாவிடில் எவ்வளவு கஷ்டப்.. பாவம் இருவரும்.

    பதிலளிநீக்கு
  25. ஆ...இந்தக்கதை 96 பட சாயல் மாதிரி தெரிகிறதே. தலைவரே!!...! சே..எனக்குதான் கொடுப்பினை இல்லையே போலியிருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட அப்படியா ?
      நான் அந்த படத்தையெய்லாம் கண்ணுல காணல நண்பரே...

      நீக்கு
  26. கதை மிக அருமை ... கதை என்று நினைத்த எனக்கு "இது ஒரு உண்மை நிகழ்வின் புனைவு" என்ற அந்த கடைசி வாக்கியம் புரிந்த போது நந்தனுக்காக கண்கள் கலங்கியது ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கதையை உணர்ந்து படித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  27. மூன்று கண்ணியமான பாத்திரங்கள்! என்றோ எங்கோ கனவு கண்ட வாழ்க்கை தொலைந்து போயிருந்தாலும் பல வருடங்கள் கழிந்து சந்திக்கும்போது மறைந்து போன உணர்வுகளை கண்ணீருடன் மீட்டெடுக்கும் அந்த சில நிமிடங்களை மிக அழகாய் எழுதியிருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை அழகாக விமர்சித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  28. நல்ல காதலெல்லாம் முறிந்து போவது ஏனோ?

    நமது வலைத்திரட்டி: வலை ஓலை

    பதிலளிநீக்கு
  29. மனம் கனக்கத்தான் செய்தது நண்பரே , இந்த பதிவை கண்ட பின்னர்.

    பதிலளிநீக்கு
  30. உண்மையின் புனைவு என்பது கதாநாயகன் பெயரை அறிமுகம் செய்த விதத்திலேயே கொஞ்சம் மூளக்கு எட்டியது. சில கதைகளைப் படித்தால் விமர்சனம், அபிப்பிராயம் என்று எதுவும் தோன்றாது. நிகழ்வுகளை விமரிசிக்காமல்... என் பிரார்த்தனைகளையும் இணைத்துக் கொள்கிறேன்.

    :-) பவன்டோ எண்டால் என்ன எண்டு தெரியாமல் மண்டைக் குடைச்சலா இருந்துது. கூகுள் பண்ணிப் பார்த்த பிறகுதான் நிம்மதியா இருக்கு. அடுத்த முறை இந்தியா போகேக்க கட்டாயம் ட்ரை பண்ண வேணும். :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பதிவை உணர்ந்து படித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  31. அது மட்டுமல்ல நண்பரே .
    பூவே உனக்காக திரைபடத்தின் இறுதி காட்சியே நினைவுக்கு வருகிறது , விஜய்யும் சங்கீதாவும் பேசும் வசனங்கள் .
    நான் மிகவும் / என்றும் ரசிக்கும் படங்களில் இதுவும் ஒன்று. என மனதை என்றும் பிசையும்.அந்த நினைவுகள் வருவதை என்னால் தவிர்க்க இயலவில்லை.
    நிச்சயம் அடுத்த பிறவியில் ......................................

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா ? நான் தியேட்டருக்கு சென்று 30 வருடங்களாகிறது நண்பரே...

      நீக்கு
  32. படிக்கும் போதே மனதைத் தொட்டு சென்றது.
    உண்மை நிகழ்வு என அறிந்து மனம் நெகிழ்ந்து போய்விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  33. நான் எழுதுவது ஒன்னுமே இல்ல கடைசி பென்ச் மாணவி நான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக இன்னும் சற்று நேரத்தில் பதிவு வரும் முதலாவதாக வரலாமே...

      நீக்கு
  34. நான் இப்போஸ்ட் காலம் இங்கு வராமல் போனதால் கவனிக்கவில்லை இதை...

    இப்படி பல நிகழ்வுகள் பலரது வாழ்வில் நிகழ்கின்றதுதான்... விதி வரைந்த பாதை...

    அந்த இலைபற்றி எனக்கு முன்பே தெரியும் கில்லர்ஜி:).. சொல்லியிருக்கிறீங்கள் ஏற்கனவே ஒரு போஸ்ட்டில்.. மறக்கவில்லை நான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நீங்கள் மட்டும் இதை ஞாபகம் வைத்து சொல்லி விட்டீர்கள் நன்றி.

      நீக்கு