இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், அக்டோபர் 04, 2023

வெற்றியே தோல்விக்கு காரணம்

 

னது வாழ்க்கையில் நான் விபரம் தெரிந்த நாட்களிலிருந்து எல்லா விடயங்களிலும் தோல்வியைத்தான் சந்தித்து இருக்கிறேன். தோல்வி என்பது எனக்கு மரத்துப் போன ஒன்று. ஆனால் ஒரேயொரு விசயத்தில் நான் மாபெரும் வெற்றி அடைந்து இருக்கிறேன். அந்த வெற்றிதான் என்னை வாழ்வு முழுவதும் நிரந்தர கவலை கொள்(ல்லு)ளும் நிலையாக்கி விட்டது.
 
அதுதான் எனது பிள்ளைகளை என்னிடமிருந்து பிரித்து விட்டது, எனது பெயர்த்திகளை என்னிடமிருந்து பிரித்து விட்டது, பணமிருந்தும் நல்ல உணவு கிடைக்காமல் செய்து விட்டது, மேலும் என்னை நிரந்தர தனி மனிதனாக்கி விட்டது. எப்பொழுதும் பிறருக்கு என்னாலான உதவிகளை செய்யும் எண்ணம் உள்ளவன் நான். அவ்வகையில் நானொரு மிகப்பெரிய ராசிக்காரன் பிறருக்காக நான் எடுக்கும் எந்தவொரு முயற்சிகளும் வெற்றியாகி விடும். அதேநேரம் எனக்கு எடுக்கும் முயற்சிகள் தோல்வியில்தான் முடியும்.
 
நான் வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்த தினங்களை சுலபமாக நினைவு கூர்ந்து விடமுடியும். காரணம் அவ்வளவு குறைவான தினங்களே... எனது திருமணத்தன்றுகூட நான் மகிழ்ச்சியாக இருந்ததில்லை. ஏன், அன்றைய இரவும்கூட எனது வாழ்வை அவரவர்கள் தங்களது தேவைக்காக பயன்படுத்தி விட்டு பிரச்சனைகள் வரும் பொழுது குற்றவாளியாக என்னையே நிறுத்தி விடுவார்கள். நான் பாசத்துக்கு கட்டுப்பட்டவன் ஆகவே எனது வாழ்வு இப்படியே தொடர்ந்து இறுதி கட்டத்திற்கும் வந்து விட்டது.
 
எனக்கு கிடைத்த மாபெரும் வெற்றி எது தெரியுமா ?
 
அபுதாபியில் கடும் முயற்சிக்கு பிறகு எனக்கு கிடைத்த அரசாங்க உத்தியோகம். வழக்கம் போல அதிலும் நான் தோல்வி அடைந்திருந்தால் நான் அப்பொழுதே இந்தியாவுக்கு வந்து இருப்பேன். ஏதோவொரு கூலி வேலை செய்தாவது எனது செல்வங்களை அன்போடு, பாசப்பிணைப்போடு, கஷ்டப்பட்டு, இஷ்டப்பட்டு படிக்க வைத்து என்னை புரிந்து கொள்ள  வைத்து இருப்பேன். ஆயினும் இன்றைய நிலைபோல் எனது மனைவிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற மறுமணம் செய்யாமல் இருப்பதும் உறுதி.
 
அந்த அரசு வேலை கிடைக்காமல் போயிருந்தால் நான் லட்சக்கணக்கில் பணத்தை பார்த்து இருக்க மாட்டேன், எனது உறவுகளிடம் ஏமாந்து இருக்க மாட்டேன், அவைகளை இழந்து வாழ்ந்து கெட்டவன் நிலைக்கு வந்து இருக்க மாட்டேன், சராசரி ஓர் ஏழையாக நிம்மதியாக வாழ்ந்து இருப்பேன். ஆனால் கஷ்டப்பட்டு இருப்பேன் அதனால் என்ன ? இன்று மனதளவில் கஷ்டப்படுகின்றேனே... இறைவன் தீர்மானித்ததை நடத்தி விட்டான்.
 
ஆக மொத்தம் வெற்றியே எனது தோல்விக்கு காரணம் இதற்கு நானே பொறுப்பாளி ஆம் உண்மையாக, நேர்மையாக, நியாயமாக, பிறர் பொருளுக்கு ஆசைப்படாதவனாக, கொடுத்த வாக்கை காப்பாற்ற நினைத்து வாழ்ந்ததற்காக இறைவன் எனக்கு கொடுத்த பரிசு. இறைவனை நேரில் சந்திக்கும் பொழுது இதற்கான காரணங்கள் எனக்கு நிச்சயம் விளங்கும் என்ற நம்பிக்கையோடு...
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
Chivas Regal சிவசம்போ-
தோல்வி தன்னை எழுதட்டும் வரலாறு துணைக்கென்று இனிமேல் யார் கூறு அப்படினு ஒரு தலை ராகம் டி.ராஜேந்தர் பாட்டை பாட வேண்டியதுதான்.

Share this post with your FRIENDS…

34 கருத்துகள்:

  1. நீங்கள் மிக்க மன உறுதி மிக்கவர் என்று தெரியும்.  மிகச்சசில சமயங்களில் இப்படி ஒரு மன பலவீனம் ஆட்கொள்ளும்.  சீக்கிரம் இந்த மேகம் கலைந்து இன்ப மழை பொழியட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

      நீக்கு
  2. உண்மையாக நேர்மையாக இருந்தால் பலர் விரும்புவதில்லை. ஏதேனும் ப்ரின்ஸிபலோடு வாழ்ந்தால் உறவுகளும் விரும்புவதில்லை (அவர்கள் நம்மைப் புரிந்துகொள்வார்கள், மதிப்பு பெருகும், ஆனால் அப்போது நாமிருக்க மாட்டோம்).

    ஆனா பாருங்க.. நாம் தனியாத்தான் வந்தோம். தனியாத்தான் போவோம். தனியாகவே நம்ம கர்மங்களைக் கழிக்கணும். நம் மனதிற்கு நாம் நேர்மையாக இருந்தோம், தவறு செய்யவில்லை என்பதை உணரும்படி நாம் நடந்தாலே போதுமானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே தங்களது அழகிய கருத்துப் பகிர்வுக்கு நன்றி.

      நீக்கு
  3. “தோழனோடும் ஏழமை[ஏழ்மை] பேசேல்” என்பது முதுமொழி.
    நீங்கள் உங்களின் வறுமை பற்றிப் பேசவில்லை. ‘மன வெறுமை’யை அவ்வப்போது வெளிப்படுத்துகிறீர்கள்.
    உறவினர்கள் துரோகம் செய்துவிட்டதாகச் சொல்கிறீர்கள். துரோகம் பற்றி விரிவாக எழுதிவிட்டு, தொடரை நிறுத்தலாமே.
    அத்தனை பேரும் உங்களை வெறுத்து ஒதுங்கிவிட்டார்கள் என்றால், பணம் மட்டும்தான் காரணமா? உங்களின் பங்கு எதுவும் இல்லையா?
    அபுதாபி அனுபவங்களை எழுதுங்கள்; கவிதை எழுதுங்கள். முன்பு போல் தொடர்கதை எழுதுங்கள். கேள்வி பதில் எழுதுங்கள்.
    அனுதாபப்பட வைக்கும்[அளவு மீறும்போது, அனுதாபம் பிறக்காது. வேடிக்கை பார்த்துச் சிரிக்கத் தோன்றும்] பதிவுகள் இனி வேண்டாம்.
    தயவு செய்து இந்தக் கருத்துரையை வெளியிட வேண்டாம்[மட்டுறுத்தல் செய்யுங்கள்].
    மிகவும் நல்ல மனிதராகவும், வெள்ளை உள்ளம் கொண்டவராகவும் தெரிகிறீர்கள். அதனால்தான் இந்த ஆலோசனை.
    ஆலோசனை உங்கள் மனதைப் புண்படுத்தும் என்றால் மன்னியுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் வருகைக்கும், சிறந்த ஆலோசனைகளுக்கும் மிகவும் நன்றி.

      எனது தவறுகளும் இருக்கலாம் ஆனால் நம்பிக்கை துரோகம் என்னால் எப்பொழுதுமே ஏற்கமுடியவில்லை.

      நான் எந்த வகையான கருத்துகளையும் மறைப்பதால் லை.

      இது நமது முகத்தின் அழுக்குகளை பிரதிபலித்து காட்டும்‌.

      தங்கள் மீது வருத்தமோ, கோபமோ இல்லை நண்பரே தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
    2. பிழை திருத்தம்: ஏழமை>ஏழைமை[ஏழ்மை]

      நீக்கு
    3. மீள் வருகைக்கு நன்றி நண்பா!

      நீக்கு
  4. நீங்கள் சொல்லி விட்டீர்கள். பலரும் சொல்வதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் ஐயா அவர்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  5. நீங்கள் சொல்வது சரியே! அதுவும் உறவுகள் இடத்தில் அவர்களுக்கு ஏற்றார் போல பேசவில்லை என்றால் தனித்து விடபடுவோம் என்பது உண்மை.

    உறவுகளின் எதிர்பார்ப்புகள் அதிகம், நம்மால் என்ன முடியுமோ அதை மட்டும் செய்து விட்டு போக வேண்டும்.

    பிறருக்கு நீங்கள் செய்யும் செயல்கள் வெற்றி அடைவது மகிழ்ச்சியான விஷயம்.
    பிரார்த்தனைகள் பிறருக்கு செய்வது பலிக்கும் . நமக்கு நாமே செய்யும் செயல்கள் காலத்தால்தான் சரியாகும்.

    பிறருக்கு உதவி கொண்டு இருங்கள், அதில் நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும் உங்களுக்கு. மனதை தளர விடாதீர்கள். அனைவருக்கும் உங்கள் நல்ல குணங்கள் புரிந்து ஒரு நாள் உங்களை தேடிவருவார்கள்.

    ஏன் இப்படி ! என்ற கேள்விகள் எல்லோருக்கும் இருக்கிறது ஜி இறைவனிடம் கேட்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ மிகச் சிறப்பான தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  6. கில்லர்ஜி, முதலில் வாழ்க்கையில் வெற்றி என்பது, பணம் ஈட்டுவதோ, தொழில் வெற்றியோ அல்ல. உங்களுக்கும் தெரியும். நாம் கொள்கைகளோடு வாழ்ந்தால், நம்மைச் சுற்றி உள்ளவர்களின் விருப்பங்கள் செயல்கள் நமக்கு ஒத்துவராமல் இருக்கலாம் ஆனால் அதை நாம் வெளிப்படுத்தினால், நாம் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தால், கண்டிப்பாக நம்மைப் புரிந்து கொள்பவர்கள் வெகுசிலரே. விரல் விட்டு எண்ணிடலாம்.

    நான் வாழ்க்கையில் வெற்றி என்பதற்கான ஒரு பதிவு வைத்திருக்கிறேன்...வழக்கம் போல ஹிஹிஹிஹி....வெளியிடும் முன் கொஞ்சம் பார்க்க வேண்டும் எனபதால்...இப்ப உங்க பதிவு பார்த்ததும் இதற்குப் பதில் கருத்தாக அது என்று தோன்றுவதால் இங்கு அதிகம் சொல்லவில்லை. வேறு சிலவற்றுக்குச் சொல்லிச் செல்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது பதிவை விரைவில் வெளியிடவும்.

      அழகிய கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  7. நீங்க மறுமணம் செய்துகொள்ளாமல் வாழ்வதற்கு. மனைவிக்குச் சத்தியம் செய்துகொடுத்ததால் என்ற காரணம் தேவையே இல்லைகில்லர்ஜி. உங்கள் மனம் அந்த எண்ணத்தில் உறுதியாக இருந்தால் போதுமானதே. நாம் செய்யும் பலவற்றுக்கும், நம் மனசு சரின்னு சொல்லி நாம் செய்தால் அதற்கு எந்த நியாயவாதங்கள், காரணங்கள் சொல்லத் தேவையே இல்லை. உங்கள் மன உறுதிதான் இங்கு முக்கியம். உங்களுக்கு அப்படி வாழ்வது ஓகே என்றால்.

    நேர்மையாக, வெளிப்படையாக இருந்தால் நாம் பல விதச் சங்கடங்களைச் சந்திக்க நேரிடும். அது குடும்பம் என்றாலும் சரி, வேலையில் என்றாலும் சரி. உங்கள் மனம் சொல்லும் நல்லவற்றின் படி வாழுங்கள் கில்லர்ஜி. இவ்வுலகில் பிறந்தவர்கள் எல்லோருமே தனியாகப் பிறந்தார்கள், போவதும் தனியாகத்தான்...தனியாக வாழவும் நேரிடலாம். உறவுகள் நட்புகள் எல்லாமே பயணம் போலத்தான் ஆங்காங்கே கழன்று விடும். நம் பரிமாற்றத்திலும் சில தவறுகள் இருந்திருக்கலாம் என்றாலும், உறவுகள் துரோகம் செய்தார்கள் என்பதை விட, நீங்க நல்லெண்ணத்துடன் இருக்கீங்க அதில் சந்தோஷப்படுங்கள். அதை நினைத்துக்கொள்ளுங்கள் நிம்மதியான தூக்கம் வரும்.

    இதில் உளவியல் படி நிறைய சொல்லலாம். கவுன்சலிங்க் என்பார்களே அப்படி. ஆனால் கருத்து நீண்டுவிடும். அதைப் பற்றியும் பதிவா க எழுத ஆசைதான் ஆனால் நேரமும் மனதும் ஒத்துழைக்க மறுக்கிறது. பணிகளின் காரணத்தினால்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆறுதலான வார்த்தைகளோடு சிறப்பான முறையில் தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல!

      நீக்கு
  8. மிகவும் அழுத்தமான பதிவு..

    தங்களைத் தெரிந்தவர்களுக்கு இது சாதாரணம்...

    பதிலளிநீக்கு
  9. எல்லாரிடமும் கேள்விகள் இருக்கின்றன - தம்மிடம் தாமே கேட்டுக் கொள்வதற்கு!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி நாம் இறைவனிடம் கேள்விகளை முன் வைக்கும் முன்பு...

      அவரது கேள்விகளுக்கு நாமும், பதில் வைத்து இருக்க வேண்டும்.

      நீக்கு
  10. நான் ஒரு முட்டாளுங்க.
    நல்லாத்தான் படிச்சவங்க
    நாலு பேர் சொன்னாங்க.
    ..............
    புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை.
    வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
    புத்திசாலி இல்லை.

    இந்த பாட்டை நினைவூட்டியது இன்றைய பதிவு.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா சரியான பாடலை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி .

      காரணம் நான் அடிக்கடி இந்த பாடலை நினைப்பேன்.

      நீக்கு
  11. என்ன செய்யலாம்? நான் அங்கே (எபியில்) கேட்டிருக்கும் கேள்விகளுக்கு இங்கே பதில். உண்மை தான். ஒருத்தர் உதவி செய்பவராகவும் அதே சமயம் நேர்மையானவராகவும் இருந்துவிட்டால் அவருக்கு எதிரிகள் தான் அதிகம். அவரின் நேர்மை கேலி செய்யப்படும். உதவியைப் பொருட்டாகவே நினைக்க மாட்டார்கள். ஆனால் நீங்க எல்லாவற்றையும் கடந்து வந்து விட்டீர்கள். உங்களை மதிக்காத குழந்தைகளைப் பற்றி நினைக்காமல் விலகியே இருங்கள். என்றேனும் ஒரு நாள் புரிஞ்சுப்பாங்க. பேரன், பேத்திகளிடம் நீங்க அன்பாய் இருக்கீங்க இல்லையா? அது போதும். எதுவும் வீணாகாது. நிச்சயம் உங்களிடம் பல மடங்கு அன்பைக் காட்டுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      ஆம் நானும் இதேபோல் ஆங்கு பதில் சொல்லி இருந்தேன்.

      இது எனக்கான கேள்வி - பதில் என்று தங்களது விரிவான கருத்துக்கு நன்றிகள் பல!

      நீக்கு
  12. எல்லோருக்கும் இந்நிலை உண்டு...

    இதுவும் கடந்து போகட்டும்...

    பதிலளிநீக்கு
  13. நம் வாழ்க்கை முழுவதும் நம் முதுகுக்குப்பின்னால் வருவது இந்த மாதிரி காயங்கள் தான்! நான் உணர்ந்த வரைவில் காயங்கள் உங்கள் வாழ்க்கையில் ஆழமாய் புரையோடி இருப்பது தெரிகிறது. ஆனால் நீங்கள் அந்த காயங்களுக்கு மருந்து போடவேயில்லையா? புண்ணாகவே, பச்சை ரணமாகவே இருக்கட்டும் என்று விட்டு விட்டீர்களா? சுய இரக்கம் தான் எப்போதுமே காயங்களை ரணமாகவே ஆறாமல் வைத்திருக்கும். அதிலிருந்து எழுந்து வாருங்கள். கடந்த கால கசப்புகளை புறந்தள்ளுங்கள். இந்த உலகத்தை ரசிக்க அழகான நிறைய விஷயங்கள் இருக்கின்றன கில்லர்ஜி! ரசித்து, சிரித்து வாழ பழகிக்கொள்ளுங்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      தங்களது விரிவான அழகிய கருத்துப் பகிர்வுக்கும், மன ஆறுதல் தந்தமைக்கும் மிகவும் மகிழ்ச்சி.

      நீக்கு
  14. இதுதான் இன்றைய உண்மையான உலகம்.
    அனைவருமே பிரச்சனைகளோடும், மாறா மனத்துயரோடும்தான் வாழ்வைக் கடத்துகிறார்கள். இன்றைய பிள்ளைகளுக்குப் பெற்றோரைப் பற்றி நினைக்கவும், அவர்களின் மேன்மையை, உணரவும் நேரமும், மனமும் இருப்பதில்லை.
    பிள்ளைகளே இப்படியென்றால் உறவுகளைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. காழ்ப்புணர்ச்சியில் சுழலும் உலகம் இது.
    அதிகம் யோசித்தால் நம் நிம்மதி போய் விடும்.
    கவலையை விடுங்கள்.
    மனதிற்குப் பிடித்ததைச் செய்து மகிழ்வோடு வாழ முயலுங்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      தங்களது ஆறுதல் வார்த்தைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள் பல!

      நீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    பதிவில் தங்களது மன வேதனை புரிகிறது. பதிவை படிக்கையில் என் மனதும் வேதனையுற்றது. உங்கள் குணநலன்களை சிறிது காலம் பழகிய நாங்களே கண்டு கொண்டிருக்கிறோம். ஆனால் உங்கள் உறவுகள் உணராது அலட்சியபடுத்தியது உங்கள் உள்ள வேதனைகளை அதிகரித்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் கடமைகளை யாரைப் பற்றியும் கவலை கொள்ளாது, தவறாது நிறைவேற்றி கொண்டேயிருங்கள். இறைவன் நல்லபடியாக உங்களுக்கு நல்லதையே நடத்தித் தருவார். கூடிய விரைவில் உங்கள் நெருங்கிய உறவுகள் பாசத்துடன் தங்களை பார்த்துக் கொள்ளும் காலம் வர நானும் அந்த இறைவனை வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கும், விரிவான கருத்தை பதிவு செய்து ஆறுதல் தந்தமைக்கும் மிகவும் மகிழ்ச்சி.

      நீக்கு
  16. எல்லாம் கடந்து போகும் . நல்லதே நடக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு