சமீபத்தில்
ஓர் கோயிலுக்கு சென்று வந்தேன் எதற்காக தெரியுமா ? நேர்த்திக்கடன் என்று காசுகளை மஞ்சள் துணியில் சுற்றி
வைத்து விடுவார்கள் என்பது தாங்கள் அனைவரும் அறிந்த விடயமே... குடும்பத்தில்
வேண்டப்பட்டவர் செய்த வேலை... இல்லை வைத்த, நேர்த்திக்கடன்கள். ஒன்றல்ல, இரண்டல்ல
மஞ்சள் முடிச்சுகளை அவிழ்த்து இரு கைகளிலும் அள்ளிக் கொள்ளும் அளவுக்கு காசுகள்.
இந்தக்காசுகள்
ஐந்து பைசாவிலிருந்து, இன்றைய ஐந்து ரூபாய் காசுகள் வரையில் இருந்தன அப்படி
என்றால் இவைகளின் காலங்கள் எவ்வளவு என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். சரி
இவைகள் எந்தக் கோயிலுக்கு, எதற்காக வைத்த நேர்த்திக்கடன்கள் ? அதை யாமறியோம் பராபரமே... சுமார் இரண்டு ஆண்டுகளாக எனது
மகிழுந்திலேயே இருந்தது. எனக்கும் இது மனசஞ்சலத்தை கொடுத்தது. இதன் முடிவு ? காசுகளை கொல்லங்குடி காளி கோயிலில் கொண்டு போய் ஆத்தாளிடம்
நீயே எல்லாவற்றையும் ஏற்றுக்கொள் என்று சொல்லி விட்டு உண்டியலில் போட்டு விடுவது.
சரி யார் கோயிலுக்கு கொண்டு
செல்வது ? இதை நேர்ந்தவர்கள்தானே கொண்டு செல்லணும் ? ஆத்தாடி நான் வரமாட்டேன் நீ கொண்டு போ அப்படியானால் ஆத்தா
என்னை ஒன்றும் செய்ய மாட்டாளா ? நாம்தான் ’கில்’லர்ஜி ஆயிற்றே ஆகவே விதி விலக்கு போலும்
உண்மையான காரணம் ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி அது நான்தான்.
சரியென்று
உறவினர், மற்றும் பக்கத்து வீட்டு பெண்கள் இருவருடன் அங்கு போனேன். சுமார் அரை
மணித்தியாலம் முடிச்சுகளை அவிழ்த்து துணிகளை வேலியோரத்தில் வீசிவிட்டு காசுகளை
கோயில் குளத்தில் கையில் வைத்து அலசினேன். அத்தோடு எனது ஐம்பத்தி ஒன்றையும்
இணைத்து ஆத்தாளிடம் மனமுருகி வேண்டி விட்டு காசுகளை உண்டியலில் போட்டு விட்டேன்.
பிறகு
சற்று நேரம் உட்கார்ந்து இருந்தேன். அப்பொழுது வயதான பெண்மணி ஒருவர் தம்பி
இந்தப்பெயரை இந்தப் பேப்பரில் எழுதிக்கொடுங்கள் என்றார். பையில் எழுதுகோல் சொருகி
வைப்பதால்தான் நமக்கு இந்த வேலை.. நாமும் எம்.பி.டி.சி படித்தவர் என்பதை உலகறிய
வைக்க வேண்டும் என்பதற்காக இப்படி சிறு அகவையிலிருந்தே தொற்றிக்கொண்ட பழக்கமிது.
ஆங்கிலத்திலும், தமிழிலும் டேன்ஸின் சாம் என்று அழகாக சிறிய பேப்பரில் எழுதி
இருந்தது. இதை அப்படியே பெரிய ஏ-த்ரீ பேப்பரில் எழுத வேண்டும் பிறகு இதையும்
நேர்த்திக்கடனாக கட்டி விடுவார்கள்.
பெயர்தானே
என்று எழுதிக் கொடுப்போம் என்று வாங்கிய நான் முதலில் அரபு மொழியில் எழுதுவோமா ? என்று நினைத்தேன் ஆத்தாளுக்கு அரபு தெரியுமா ? கடவுள் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானவர்தானே ? தெரியாமலா இருக்கும் ? வேண்டாம் பிறகு இந்த அம்மாள் வேறு மாதிரி பிரச்சனையை
கிளப்பி விடலாம் ஆகவே தமிழிலேயே எழுதுவோம் என்று பெரிய எழுத்தாக டேன்ஸின் சாம் என்று
எழுதிக் கொடுத்தேன். பேப்பரை மீண்டும் என்னிடம் கொடுத்து அவளோட பேசக்கூடாதுனு
எழுதுங்க என்றது ஆஹா வில்லங்கம் வீராயி வேலையை காண்பிக்கிறதே...
அவளோடவே
திரியிறான் நிவேதிதா கூட இனிமேல் பேசக்கூடாதுனு எழுதுங்க வார்த்தைகளின் நீளம்
கூடிக்கொண்டே சென்றது. இப்படி எழுதுவதால் ஆத்தா நம்மை தண்டிப்பாளா ? மனசாட்சி சொல்லியது மாட்டாள் என்று. காரணம் இரண்டு பேருமே
இந்துவாக இருந்து இப்படி எழுதச் சொன்னால் ஒருவேளை சொந்தங்களாககூட இருக்கலாம்
எழுதினால் தவறாகலாம். இங்கு மதமே வேறுபடுகிறது இந்தப் பெண்மணி நினைப்பதில்
தவறில்லையே ? சரி இந்தப் பெண்மணி இந்துவா ? கிருஸ்துவா ? பார்த்தால் இந்துவாகத்தான் இருந்தது ஆஹா இந்தப் பெண்மணி
ஆத்தாளிடம் வைக்கும் ஆப்பு டேன்ஸின் சாமுக்கா ? நிவேதிதாவுக்கா ? அல்லது கில்லர்ஜிக்கா ?
பெண்மணி
சொன்னதை எழுதிக் கொடுத்தேன், உறவினர் கேட்டார் தப்பாக ஏதும் எழுதச் சொல்லவில்லையே ? இல்லை என்று தலையாட்டி வைத்தேன். ஏனோ தெரியவில்லை அந்த
எழுதுகோலும் அத்தோடு காணாமல் போனது. சரி இதற்காகவெல்லாம் காளி துணை புரிவாளா ? மனம் அசை போட்டது பிரதமர் பதவியை எனக்கு மாற்றிக்கொடு என்று
எழுதிப் போடலாமா ?
இந்தியாவை
நாமாவது பின்னோக்கி மெல்லரசு ஆக்கலாமே... வேண்டாம் திருச்சிக்காரவுங்க கோபத்துக்கு
ஆளாக வேண்டாமென்று அந்த எண்ணத்தை ‘’என்னத்தே’’ என்று கை விட்டேன். மகிழுந்தை ஓட்டி
வரும்போது மனம் நினைத்தது நிவேதிதாவுக்கு இனி யார் துணை ?
Share this post with your FRIENDS…
இப்படியெல்லாம் பேப்பரில் எழுதி ஆத்தாளிடம் வேண்டுதல் வைப்பார்களா?
பதிலளிநீக்குஅது சரி... சம்பந்தமே இல்லாத இரண்டு பெண்களுக்கு எதிராக வேண்டுதல் வைக்கத் துணை புரிந்துவிட்டீர்களே.. ஆத்தா.. இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று ஒரு வரி சேர்த்துக்கொண்டீர்களா?
வருக தமிழரே இதற்குதான் பிறருக்கு உதவுவதில்லை. உதவி செய்ததற்கு இப்படி பழி போடுகின்றீர்கள்.
நீக்குஹாஹாஹா... எனக்கும் இந்த மாதிரி சந்தேகங்கள் வருவதால், வலியப்போய் யாருக்கும் உதவுவதில்லை. வங்கி, பொது இடங்கள் போன்றவற்றில் பேனா கேட்டால்கூட மிகுந்த யோசனையுடன் பெரும்பாலும் கொடுக்கமாட்டேன். (அப்புறம் நாம தேவுடு காத்து நிற்கணும், சரவணபவனில் சாப்பிட்டுக்கொண்டிருப்பவர் எப்படா மோர் சாதம் சாப்பிட்டுட்டு இடத்தைக் காலி பண்ணுவார், நாம அந்த இடத்தில் உட்காரலாம் என்று இருப்பதைப் போல)
நீக்குஹா.. ஹா.. சரவணபவன் அனுபவம் எனக்கு துபாய் கராமாவில் நிறைய உண்டு.
நீக்குகதையா நிஜமா? A 3 பேப்பரில் எழுத யாராவது வருவார்களா? அதை பின்னர் என்ன செய்வார்கள். போஸ்டர் போல் ஒட்டுவார்களா? இப்படி பல சந்தேகங்கள். செவ்வாய் சிறுகதையா?
பதிலளிநீக்குJayakumar
எழுதிய பேப்பரை உண்டியலில் பணத்தோடு போட்டு விடுவார்கள்.
நீக்குபிறகு பணத்தை எடுக்கும்போது அந்த பேப்பர்களை என்ன செய்வார்கள் என்பது தெரியாது.
பல கோயில்களில் மரக்கிளைகளில் கட்டி விட்டு செல்வதை பார்த்ததில்லையா இந்த கோயிலைப்பற்றி தாங்கள் அறிந்திருக்க நியாயமில்லை.
சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு தெரியும். சண்டை போட்டு பிரிந்த குடும்பங்கள் இங்கு வந்துதான் ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் விபூதி பூசிக்கொண்டு, உணவருந்திய பிறகு சேர்ந்து கொள்வார்கள்.
இது சிறிய கிராமம்தான் ஆனால் கார் பார்க்கிங் இருக்கிறது, நகர பேருந்து செல்கிறது. பூசாரிகள் (பிராமணர்கள் அல்ல) சுமார் முப்பது நபர்கள் இருப்பார்கள். தினமும் மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அன்னதானம் நடக்கிறது.
பழனி அருகே கணக்கம்பட்டி அழுக்குமூட்டை சாமியார் மடம் சென்று இருக்கிறீர்களா ? அங்கு பிரச்சனைகளை ஏ-3 பேப்பரில் எழுதி அங்கிருக்கும் விரியம் மரத்தில் கட்டி தொங்க விடுவார்கள்.
தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கைதான் காரணம். பக்கத்து கடைகளில் பண்டல் பண்டலாக பேப்பர் விற்பனை நடக்கிறது.
For போட்டு கடைசியில் கையெழுத்து போட்டீர்களா?!!
நீக்குஒரு படத்தில் ஒருவர் சொல்லச்சொல்ல மணிவண்ணன் எழுதுவார். அந்தப் படம் பார்த்திருக்கிறீர்களா?
நீக்குவாங்க ஸ்ரீராம்ஜி எனது விண்ணப்பமாக இருந்தால்தானே நான் கையெழுத்து போடவேண்டும் ? நீங்கள் சொல்லும் படம் பார்த்ததில்லை ஜி
நீக்குவளர்ப்பு சரியில்லை.. வருத்தம் தான் மிச்சம்.. பெற்றவளின் தலையெழுத்து எப்படி இருக்கின்றதோ?..
பதிலளிநீக்குஊர்க் கோயிலைக் கண் முன் காட்டி விட்டீர்கள்..
சிறப்பு..
வாங்க ஜி நேற்றொரு காணொளி வாட்ஸ்-அப்பில் பார்த்தீர்களா ? ப்ளஸ்-2 மாணவன் சிதம்பரம் பேருந்து நிறுத்தத்தில் ஒரு மாணவிக்கு தாலி கட்டுகிறான். பொதுவில் மக்கள் பார்ப்பதற்காக...
நீக்குகட்டினவன் தப்பிச்சான். கட்டிக்கொண்டவள் தப்பிச்சாள். காணொளி எடுத்து வாட்சப்பில் அனுப்பியவனை போலீஸ் பிடித்துக்கொண்டு போயிற்று
நீக்குஎல்லாமே விளையாட்டு ஆகிவிட்டது. இன்றைய மாணவர்களுக்கு...
நீக்குநிவேதிதா நன்றாக இருப்பார்கள் - இருக்கட்டும்...
பதிலளிநீக்குவாங்க ஜி ஹா.. ஹா.. நமக்கு அதுதானே கவலையாக இருந்தது.
நீக்குவித்தியாசமான பதிவு!
பதிலளிநீக்குகோவில்களைப்பற்றிய தகவல்கள் ஆச்சரியமாகவும் சுவாரஸ்யமாக இருந்தன!
எழுதத்தெரியாத ஒருத்தருக்கு உதவி செய்தவது நியாயம் தான். ஆனால் இந்த மாதிரி உதவியெல்லாம் நான் செய்ய மாட்டேன் என்று நீங்கள் மறுத்திருக்க முடியுமே?
வருக சகோ வயதான அம்மாள் பாக்கெட்டில் பேனா இல்லாதிருந்தால் எனக்கு எழுத தெரியாது என்று பொய் சொல்லி இருக்கலாம்.
நீக்குமேலும் இப்படியெல்லாம் பரிகாரங்கள் இந்த கோயிலில் இருப்பதே எனக்கு அங்கு போன பிறகுதான் தெரிந்தது. நிச்சயமாக அடுத்தமுறை போனால் இதை செய்ய மாட்டேன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமையாக உள்ளது. கோவிலில் இந்தமாதிரி வேண்டுவதை எழுதி அங்குள்ள மரத்தில் கட்டுவதை பல படங்களில் பார்த்துள்ளேன். உண்டியலிலும் இப்படிப் போடலாம் என்பதையும் சில செய்திகள் மூலம் கேட்டு பார்த்துள்ளேன். தாங்கள் கோவிலுக்கு சென்ற காரணம் இனிது நிறைவேறிய திருப்தியுடன் (மகிழ்வுடன்) இருக்கும் போது, இப்படி ஒரு வில்லங்கமா? அவர்களுக்காகத்தான் நீங்கள் எழுதி தந்திருக்கிறீர்கள் என அம்மன் புரிந்து கொள்ளுவாள். அதனால் எந்த உபத்திரவமும் தங்களுக்கு வராது.
"கொடுமை, கொடுமைன்னு கோவிலுக்கு போனா, அங்கொரு கொடுமை ஜிங்கு, ஜிங்குன்னு ஆடிச்சாம்.." என்ற ஒரு பழமொழியும் ஏனோ நினைவுக்கு வருகிறது. ஹா ஹா ஹா
கொல்லங்குடி கருப்பாயி என்ற ஒரு வயதான அம்மா பல திரைப்படங்களில் வந்து பார்த்துள்ளேன். அவரின் ஊரா?இல்லை இது வேறு கொல்லங்குடியா?
மனதினோடு பல கேள்விகள் பயங்கள், இருந்தாலும் கோவிலுக்கு சென்று வந்த விஷயத்தைப் பற்றியும், கோவிலைப் பற்றியும் சுவாரஸ்யமான எழுதி உள்ளீர்கள். பாராட்டுக்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ தங்களது விரிவான கருத்துரையும், நன்று. பழமொழி எனக்கும் ஞாபகம் வந்தது.
நீக்குகொல்லங்குடி கருப்பாயி அவர்களின் ஊர்தான். தங்களது வருகைக்கு நன்றி
கில்லர்ஜி, அந்த அம்மா நினைப்பது சரியென்று எப்படிச் சொல்ல முடியும்? நமக்கு எந்த மூலக்கதையும் தெரியாதே...அப்படி இருக்க எப்படி சொல்ல முடியும். கூடவே அவர் அப்படி எழுதச் சொல்லி அம்மனிடம் வைக்கச்சொல்வது நல்லதாகத் தெரியவில்லை.
பதிலளிநீக்குகில்லர்ஜி இனி இப்படி எழுதுவதற்குத் துணை போகாதீங்க.....ஆத்தாளுக்குப் பயந்து என்றெல்லாம் சொல்லவில்லை....வேண்டாமே என்றுதான்...
கீதா
அந்த அம்மாவின் மூலக்கதை நமக்கு தெரியாதுதான் ஆனால் பெயரில் மதம் இருந்ததால் இது பிரச்சனை வரக்கூடிய நிலையில் நான் யோசித்தேன்.
நீக்கு//இனி எழுதுவதற்கு துணை போகாதீங்க//
அங்கு போன பிறகுதான் எனக்கு இந்த பேப்பர் சமாச்சாரம் எல்லாம் தெரிய வந்தது. ஆகவே இனி போனால்... எழுத மாட்டேன்.
ஆமா கில்லர்ஜி ஏற்கனவே உங்களைச் சூழ்ந்து பிரச்சனைகள் இதுல இது வேறயான்னுதான்...
நீக்குமுடிச்சு எக்கோயிலுக்கு என்று தெரியாமல் நீங்களாகவே போயிருக்கீங்க அப்படியாச்சும் இந்த ஆத்தா உங்களுக்கும் ஒரு நல் வழியை காட்டட்டும் குடும்பம் ஒன்று சேர்ந்திட...இங்கு ஒன்று சேர்வது நடக்கும்னு நீங்கள் சொன்னதால் இப்படித் தோன்றியது. இத அப்பவே போட்டு போகாம இப்ப, கூட ஒரு லைனும் உங்கள் பதிலுக்குப் பதிலாக (முதல் லைன்) சேர்த்துப் போடுறேன். கருத்து வரணும் காளியம்மா!!!!
கீதா
கீதா
ஆம் ஏற்கனவே எனது நிலைப்பாடு சரியில்லை இதில் மேலும் எதற்கு ? தங்களது மீள் வருகைக்கு நன்றி.
நீக்குஇப்படி எல்லாம் கூடச் செய்வார்களா என்றா ஆச்சரியம் ஆனால் உண்மையில் நடப்பதுதான் செய்வினை என்றெல்லாம் கூட வைக்கிறாங்களே!!!
பதிலளிநீக்குஇப்படியும் கோயில்கள் - ம், கோயிலைச் சொல்ல மனிதர்களைச் சொல்கிறேன் இறைவன் இறைவியை எப்படி எல்லாம் பாடாய்ப்படுத்துகிறார்கள்!!!
கீதா
கடவுளை உருவாக்கியதே மனிதர்கள் தனது கற்பனைப்படிதானே...
நீக்குஆகவே தங்களுக்கு தேவையாவது போலவே கடவுளை உபயோகப்படுத்துகின்றார்கள்.
வேண்டுதல் எழுதி மரத்தில் கட்டுவதுண்டு பார்த்திருக்கிறேன். சமீபத்தில் பானுக்கா கூட ஒரு வேண்டுதல் என்று முனீஸ்வரன் கோயில் பற்றிச் சொல்லியிருந்தாங்களே...!! இப்படிப் பல கோயில்களில் சீட்டு கட்டுவது நடக்கிறதுதான்..
பதிலளிநீக்குகீதா
எத்தனையோ வேண்டுதல்கள் அதில் இவையொன்று.
நீக்குகொதிக்கும் எண்ணையில் கையால் அதிரசத்தை போட்டு எடுப்பார்களே... அதைப்போல்தான். தங்களது வருகைக்கு நன்றி.
நேர்த்திகடன் முடிந்து வைத்தது இந்த கோவிலுக்கு தானா?
பதிலளிநீக்குஎந்த கோவிலுக்கு என்று தெரிந்து கொண்டீர்களா?
இந்த கோவிலில் முன்பு காசு வெட்டி போடுவார்கள் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்.
இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு போன போது காசு வெட்டி போடுவது இப்போது இல்லை என்றார்கள். "நாணயம் தவறியோருக்கு நாணயம் வெட்டி போடு" நீதிபதியாக இருந்து தவறு செய்பவர்களை தண்டிப்பார் அம்மன் என்று படித்து இருக்கிறேன்.
பிரிந்தவர்களை சேர்த்து வைப்பார் என்று சொல்வார்கள். இந்த அம்மா பிரித்து வைக்க உங்களிடம் எழுதி தர சொல்கிறார்.
காளிக்கு யாரை யாருடன் இணைப்பது என்று தெரியும்.
எது நல்லதோ அதை காளி அம்மன் நிறைவேற்ற வேண்டும்.
நீங்கள் குடும்ப ஒற்றுமைக்கு வேண்டி வந்தீர்களா? நீங்கள் பேத்திகளுடன் மகிழ்வாய் இருக்க காளியை வேண்டிக் கொள்கிறேன்.
வருக சகோ நேர்த்திக்கடன் எந்த முடிச்சு எந்த கோயில் என்று தெரியாது. ஆகவேதான் கொல்லங்குடி காளி கோயில் போவதாக முடிவு.
நீக்குஆம் காசு வெட்டிப் போடுவதும் இந்த கோயில்தான், ஒன்று கூடுவதும் இந்த கோயில்தான்.
நான் செய்தது உதவிதான் ஆனால் இதைச் செய்யக்கூடாது என்பதும் எனக்கு பிறகே தெரிந்தது என்ன செய்வது ?
புதுசா இருக்கே இந்த விஷயங்கள் எல்லாம். இப்படியும் நேர்த்திக்கடன்கள் கழிப்பது உண்டா? கொல்லங்குடிக் காளி கோயிலுக்குப் போன வேளை உங்கள் குடும்பத்தோடு நீங்கள் சேர்ந்து இருந்து வரும் காலத்தை மன மகிழ்ச்சியுடன் கழிக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குவருக சகோ தங்களது பிரார்த்தனைகளுக்கும், கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நீக்குமக்களின் பிரார்த்தனைகள் எத்தனை எத்தனையோ? அந்தக் காளிஅம்மாதான் அறிவாள்.
பதிலளிநீக்குநீங்கள் வயதான பெண்ணுக்கு எழுத்து உதவிதான் செய்திருக்கிறீர்கள் பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களிடம் இல்லை அம்மன் புரிந்துகொள்வாள்.
வருக சகோ ஆம் தங்களது கருத்து சரியே. வருகைக்கு நன்றி
நீக்குஇந்தக் கோயிலில் காசு வெட்டிப் போடுவது பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். .போனதில்லை. விரிவான தகவல்கள். மக்களின் நம்பிக்கையின் பல பரிமாணங்கள்.
பதிலளிநீக்குவருக கவிஞரே ஆம் காசு வெட்டிப் போட்டே மக்களை பயப்படுத்தி வைத்து விட்டார்கள்.
நீக்குநேர்த்திக்கடன்.
பதிலளிநீக்குதுணி முடிதல்.
அவன் நாசமாகப்போகவேண்டும்.
இவள் கை கால் விளங்காமல்
சாகட்டும்.
இப்படியெல்லாம்
மனித அவலங்களின்
நியாய அநியாயக்குரல்களுக்கு
தீர்ப்புகள்
அந்த அம்மனின் தொங்கும் நாக்கிலும்
முண்டக்கண்ணிலுமே
இருக்கின்றன
என்று உண்மையாகவே நம்புகிறார்கள்.
ஆனால்
எல்லா நீதிமன்றங்களும்
விறைத்த பார்வையுடன்
வானத்தை நோக்குகின்றன.
வழக்குகளின் கூச்சல்கள் மட்டும்
கேட்டுக்கொண்டே இருக்கின்றன.
________________________ருத்ரா
நேர்த்திக்கடன்.
துணி முடிதல்.
அவன் நாசமாகப்போகவேண்டும்.
இவள் கை கால் விளங்காமல்
சாகட்டும்.
இப்படியெல்லாம்
மனித அவலங்களின்
நியாய அநியாயக்குரல்களுக்கு
தீர்ப்புகள்
அந்த அம்மனின் தொங்கும் நாக்கிலும்
முண்டக்கண்ணிலுமே
இருக்கின்றன
என்று உண்மையாகவே நம்புகிறார்கள்.
ஆனால்
எல்லா நீதிமன்றங்களும்
விறைத்த பார்வையுடன்
வானத்தை நோக்குகின்றன.
வழக்குகளின் கூச்சல்கள் மட்டும்
கேட்டுக்கொண்டே இருக்கின்றன.
________________________ருத்ரா
தவறுதலாய் இரு தடவை அச்சு ஆகி விட்டது கில்லர்ஜி அவர்களே
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களது கருத்தை கவிதை வழியாக விரிவாக தந்தமைக்கு நன்றி.
நீக்குஅன்பு நண்பர் திரு. கரந்தை ஜெயக்குமார்
பதிலளிநீக்குஅவர்களின் கருத்துரை எனது தவறுதலால் அழிந்து விட்டது மன்னிக்கவும்.
இருப்பினும் அவரது கருத்தை அப்படியே இங்கு பதிவு செய்கிறேன்.
இதோ...
ராணி வேலு நாச்சியார் அவர்கள, ஆங்கிலேயர்களிடம் இருந்து காப்பதற்காகத் தன் உயிரையே தியாகம் செய்த உடையாள் என்பவருக்காக, வேலு நாச்சியார் எழுப்பிய கோயில் இந்த வெட்டுடைய காளி அம்மன் கோயில்.
இன்று இந்தக் கோயிலில், இவர் நல்லா இருக்கக் கூடாது, அவர் நல்ல இருக்கக் கூடாது என்ற வேண்டுதலோட, காசு வெட்டிப் போடும் கோயிலாக மாறியுள்ளது தாங்களும் பார்த்து இருப்பீர்கள்.
ஆம் நண்பரே தங்களது பழைய பதிவில் இதனைக் குறித்து தெளிவாக எழுதி இருந்தீர்கள் நினைவு இருக்கின்றது, தங்களது வருகைக்கு நன்றி.
இது மிகவும் புதியதாக இருக்கிறது. நான் பிறந்து வளர்ந்த ஊரான ராசிங்கபுரத்தில் ஊர் தெய்வத்திற்கு மரத்தடியில் காசு போடுவார்கள், வண்டிகளில் செல்வோர் ஜன்னல் வழியே காசு போடுவதுண்டு.
பதிலளிநீக்குபல நம்பிக்கைகள் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை.
எப்படியோ உங்கள் உறவினரின் நேர்த்திக்கடனை முடித்து வைத்தீர்களே. அந்த அம்மன் பார்த்துக் கொள்வாள்.
இப்படி எழுதிப் போடுவது அதாவது எதிர்மறையாகச் செய்வது கிட்டத்தட்ட செய்வினை என்று சொல்வதுண்டே அது போல இருக்கிறது.
துளசிதரன்
வருக தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நீக்குநான் நினைப்பது தவறான வேண்டுதல்களுக்கு தெய்வம் துணை போகுமா ?
பிரதமர் பதவி வேண்டும் என்று எழுதி போட்ட பிறகு எழுதுகோல் காணமல் போயிருந்தால் ஒரு வேளை ....................................
பதிலளிநீக்குவருக நண்பரே ஒருவேளை ஆத்தாளுக்கு விருப்பம் இல்லை என்று போக வேண்டியதுதான்.
நீக்குஆத்தாளிடம் மனமுருகி.....பொதுவாக நான் கோயில்களுக்குச் செல்லும்போது இவ்வாறே என் மனம் இருக்கும்....குறிப்பாக பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் கோயில்.
பதிலளிநீக்குவருக முனைவர் அவர்களே... தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
நீக்கு