இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், பிப்ரவரி 14, 2018

என் நினைவுக்கூண்டு (10)


இதன் பின்னணிகளை அறிவதற்கு கீழே சொடுக்கலாம்...


மதுரையிலிருந்து கோவை வரை விமானத்தில் உன்னை ஜன்னலோரத்தில் உட்கார வைத்து பயணிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது உண்மை.

னிதா உனது மரணம் குடும்பத்தில் பலருக்கும் ஒரு பொருட்டாகவே இல்லாமல் போய் விட்டதே கடந்த தீபாவளி, பொங்கல் வழக்கம் போலவே கொண்டாடி இருக்கின்றார்கள். எது எப்படியோ இறைவனிடம் நான் கேட்டிருந்தது மட்டும் சரியாக நிகழ்ந்து விட்டது ஆனால் இவ்வளவு சீக்கிரமாக நடக்கும் என்று நினைக்கவில்லை. அது எனது மரணத்துக்கு முன் உன்னை நான் அனுப்பி விட்டு நான் பின்னே வரவேண்டும் என்பதே ஒருக்கால் உனக்கு முன் நான் போயிருந்தால் ? உனது உண்மை நிலையை இன்று அறிந்து கொண்டேன். இதோ... இவர்களுக்கு மத்தியில் நானும் இல்லாதிருந்தால் உன்னை எப்படியடா இறுதி யாத்திரை அனுப்பி வைப்பது ? இதற்காக நான் இறைவனுக்கு நன்றி சொல்வேன். உனக்கு சேதுக்கரை சென்று வருவதுவரை எல்லா சடங்குகளையும் முறைப்படி செய்து விட்டேன் இதோ இன்று14.02.2018 தேவகோட்டை வீட்டில் வருடம் திரும்பி விட்டதால் நானும், அம்மாவும், பெரிய தங்கையும் உனக்கு செய்ய வேண்டிய முறைகளை செய்து விட்டோம். இன்று காலை கோவை குருவம்பாளையத்தில் உள்ள ஊனமுற்றோர் அனாதை ஆஸ்ரமத்தில் உனக்காக பிரார்த்தனை நடத்தி இருப்பார்கள் அதற்காக நான் ஏற்பாடு செய்து விட்டேன். உன் ஆன்மா இறைவனடியில் இளைப்பாறும் என்றே நம்புகிறேன்.



வனிதா உனக்காக உடைக்கப்பட்ட எல்லா தேங்காய்களுமே இப்படி உடைந்ததில் எனக்கு மன ஆறுதல் கிடைத்தது நல்லமனம் உள்ளவர்களுக்கு இப்படி அமையும் என்று சொல்வார்கள் உண்மைதான் போல... உனது மனதைவிட உயர்ந்த மனதுடையோர் வேறில்லையே... நீ அடிக்கடி சொல்வாயடா இது ய்யேன் வீடு என்று இதோ... இந்த வீட்டை வாங்கும் பொழுது சாஸ்தா இல்லம் என்று இருந்தது ஐயப்பன் நாமம்தானே என்று எடுக்காமல் விட்டு வைத்திருந்தேன். உனக்காக எவ்வளவோ செலவு செய்த நான் இதோ உனது ஆசைப்படியே மாற்றி விட்டேன் பார்த்துக்கொள். நீ இந்த வீட்டில் உலாவுவதை உணர்கிறேன் ஆனால் பார்த்ததில்லை வருடம் முடிந்து விட்டது இனியெனும் உன்னை காண்பேன் என்று நம்புகிறேன். உன்னை கண்டால் உண்மையிலேயே உன்னிடம் பேசும் நிலை ஏற்பட்டால் உன்னிடம் எனக்கு சொல்லி அழுது தீர்த்து ஆறுதல் தேட என்னிடம் நிறைய விசயங்கள் உள்ளதடா காரணம் யாருமே என்னை புரிந்து கொள்ளவில்லை. இன்றைய தேதியில் உலகில் எனக்கு யாரும் இல்லை. நீயாவது வந்து பேசிச்செல் நிச்சயமாக உன்னைக்கண்டால் பயப்படமாட்டேன். காரணம் உனக்கு நான் எந்த துரோகமும் செய்யவில்லை. இனி நான் இந்த வீட்டிலிருந்து இறுதி யாத்திரை வரும்வரை இந்த வீடும், இந்த கல்வெட்டும் இருக்கும் அதன் பிறகு யாமறியேன் பராபரமே ஒரேயொருமுறை கனவில் வந்து இருக்கிறாய் இனி தொடர்ந்து வருவாய் என்று நம்புகிறேன். ஒரு சகோதரனாய் உனக்கு சரியாக நடந்து இருக்கின்றேன் என்பது இறைவன் அறிந்த உண்மை அதில் நானும் ஆத்ம திருப்தி கொள்கின்றேன். மருத்துவமனையில் நீ என்னிடம் கடைசியாக சொன்ன ‘’போகாதண்ணே’’ என்ற உன் வார்த்தை ஒலிகள் என் மரணகாலம்வரை எனது செவிகளை விட்டு மறையாது மறக்கவும் மாட்டேன் மீண்டும் உன் ஆன்மா மீது சத்தியமடா இது உண்மை.



நட்பூக்களே... உங்களுக்கு ஒரு வேண்டுகோள்... உங்கள் உறவுகள் எத்தனை வயதாக இருந்தாலும் சரி அவர்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை அளிக்கும் பொழுது அவர்களுக்கு மரணம் உறுதி என்று நீங்கள் அறிந்து கொண்டால் உடன் வீட்டுக்கு அழைத்து வந்து விடுங்கள், அவர்களின் மரணத்தை நேரில் கண்டு விடை கொடுத்து அனுப்புங்கள். அவசியமின்றி சமூகத்திற்கு பயந்து வறட்டு கௌரவத்துக்காக மருத்துவமனையில் வைத்து அவர்கள் இறக்கப்போகும் ஆன்மாவை துன்புறுத்தி அவர்கள் பொருள் ஈட்டுவதை தவிருங்கள். இது தங்களுக்கு சங்கடமான விடயமாக இருக்கலாம் இருப்பினும் ஆழ்ந்து சிந்திப்பீர் இதில் உண்மை உண்டு. மருத்துவர்கள் பொய்கள் பல என்னிடம் சொல்லி, சில மணித்துளிகளில் பல ஆயிரங்களை இழந்தும் என் தங்கையை பிணமாகத்தான் கொடுத்தார்கள். இனி மருத்துவர்களிடம் எங்கும் மனிதாபிமானத்தை காண்பது அரிதினும் அரிதே இந்த தொடரை நான் தொடங்கும் பொழுது எனது தங்கை இயற்கையான மரணமடையாமல் மிகச்சாதாரணமாக கொல்லப்பட்டது என்பதின் பின்னணியை விளக்கி எழுதவே நினைத்தேன் அன்று எனது தங்கை மட்டுமல்ல தினம் தினம் இப்படி நிறைய உயிர்கள் பலி போகின்றது. ஆனால் நாட்டை ஆண்ட முதல்வரின் மரணத்தையே வெளிக்கொண்டு வரமுடியாத சமூகத்தில் வாழும் நான் இது சாத்தியமில்லை என்பதை உணர்ந்து மேலும் குடும்ப குழறுபடிகளிலிருந்து ஒதுங்கி விட நினைத்து அவ்விடயங்களை மறக்கின்றேன். மேலும் இந்த நினைவுகளை எழுதுவதற்கு காரணமாக இருந்தது ஐயா திரு. ஜியெம்பி அவர்களின் தில்லை அகத்தாரின் தளத்தில் அவர் கொடுத்திருந்த இந்த பின்னூட்டமே இந்த இடத்தில் ஐயா அவர்களுக்கு நன்றி விழைகிறேன்.

ஆறுதல் தந்த அனைத்து வலைப்பூ உள்ளங்களையும் மறவேன்

நினைவுக்கூண்டுகள் இனி என்னுள் மட்டும் சுழலும் நான் தேவகோட்டையில் உள்ள அமரர் பூங்கா செல்லும்வரை...

25 கருத்துகள்:

  1. மருத்துவர்களிடம் எங்கும் மனிதாபிமானத்தைக் காண்பது அரிதிலும் அரிதே - காலம் அப்படி மாறி இருந்தாலும், இப்போதும் நல்ல மருத்துவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். அவர்களுக்கும் நிறைய மன அழுத்தம் உண்டு. நான் கழுத்து, தோள் வலிக்காக ஒரு மருத்துவரிடம் போனபோது, அவர்தான் எனக்கு ஒரு இருதய மருத்துவரைப் பரிந்துரை செய்தார். இருவரிடமும் எனக்கு நல்ல நம்பிக்கை வந்தது. இருதய மருத்துவர்தான், வேறொரு மருத்துவ மனையில் முழு செக்கப் செய்யச்சொன்னார் (அவரைப் பார்த்த கிளினிக் அல்லாத ஒன்று). நிச்சயம் நிறைபேர்கள் இருப்பார்கள்.

    இன்னொன்று, மருத்துவமனையிலிருந்து சில கேஸ்களில்தான் வீட்டுக்கு அழைத்துவர முடியும். பல சமயங்களில், ஒருவேளை மருத்துவமனையில் இன்னும் சில தினங்கள் வைத்திருந்தால் பிழைத்திருப்பாரோ என்று மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும்.

    இந்தியாவில் மட்டுமல்ல, எங்கும், 'வியாபாரம்' ஆகிவிட்டது மருத்துவமனைகள். இதுதான் எனது அனுபவம் (including Middle East). நோயாளிகளின், அவர்களது உறவினர்களின் 'பயத்தை' உடனே காசாக்கிவிடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  2. கில்லர்ஜி, உங்கள் தங்கைக்கு எங்கள் அஞ்சலிகள். என்றென்றும் உங்கள் இல்லத்தில் பெயரளவுக்கு இல்லாமல் தெய்வமாகவே வாழ்வாள். உங்கள் மகன்/மகள் ஆகியோரில் எவருக்கேனும் மீண்டும் பெண்ணாகவே பிறந்து வந்து உங்கள் முகத்தில் சிரிப்பு மலரச் செய்வாள். கவலைப்பட வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  3. மற்றபடி மருத்துவமனைகள் குறித்த உங்கள் கருத்தோடு நானும் ஒத்துப் போகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. அன்பின் ஜி..
    ஆறுதல் கொள்க..

    பதிலளிநீக்கு
  5. மருத்துவமனைகள் - இப்போதெல்லாம் அவை பணம் காய்க்கும் மரங்கள். வேறென்ன சொல்ல.

    எனது அஞ்சலிகளும்.

    பதிலளிநீக்கு
  6. மன வேதனைகளிலிருந்து நீங்கள் மீண்டு வர மனதார பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. நமக்கு நெருங்கியவர்கள் எத்தகைய நிலையிலிருந்தாலும் எப்படியாவது பிழைத்துக்கொள்ள மாட்டார்களா என்று நினைப்பது தான் மனித இயல்பு. சில மருத்துவமனைகள் இந்தத் தவிப்பை காசாக்குகின்றன. ஆனாலும் சில‌ நல்ல மருத்துவமனைகளும் நல்ல மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒவ்வொரு சிறு விஷயத்தையும் ஊன்றி கவனித்து சிகிச்சை செய்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

    இங்குள்ள [துபாய் ] அரசு மருத்துவமனையில்தான் உயிரின் விளிம்பில் மயங்கியிருந்த என் கணவரை முழுமையாக மீட்டுக்கொடுத்தார்கள்.

    நல்ல மருத்துவரும், நல்ல மருத்துவமனையும் அமைவதற்கு உண்மையிலேயே இப்போதெல்லாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. நினைவுகள்பலநேரங்களில் சுகமாகத் தோன்றினாலும்பல நேரங்களில் சுமையே எது எப்படி என்பதைப்பிரித்து உணர வேண்டும்

    பதிலளிநீக்கு
  9. நிணைவு(கூண்டு) அஞ்சலி தொடரட்டும்.....

    பதிலளிநீக்கு
  10. வருத்தபடாதீர்கள்.
    தங்கை பெயரை வீட்டுக்கு வைத்து வனிதாவின் என் வீடு ஆசையை பூர்த்தி செய்து விட்டீர்கள். மகிழ்ச்சி அடைவார் தங்கை.


    பதிலளிநீக்கு
  11. மருத்துவ மனைகள் வணிகவளாகங்களாக மாறி வெகுகாலம் ஆகிவிட்டது நண்பரே
    தாங்கள் தங்களின் மன வேதனையில் இருந்து மீண்டு வெளிவர வேண்டும் என்பது எங்களின் விருப்பம்.
    வாய்பிருக்குமாயின், சிறு தொகையினை முதலீடு செய்து, தங்கள் தங்கையின் பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவுங்கள்.
    அறக்கட்டளையின் பெயரால், படிக்க இயலா வறுமையில் இருப்போருக்கு உதவுங்கள், தங்களின் தங்கையின் பெயர், மற்றவர் உள்ளங்களிலும் என்றென்றும் வாழும்.

    பதிலளிநீக்கு
  12. இறந்த பிறகும் கூட சகோதரியின் விருப்பத்தை நிறைவேற்றி இருக்கிறீர்கள். உங்கள் சகோதரி தெய்வமாக இருந்து உங்கள் துணைக்கு வருவார். மருத்துவ மனைகள் வியாபார ஸ்தலங்களாகி வெகு நாட்களாகி விட்டது.
    உறவுகளை கோபிக்க வேண்டாம். அது இயல்பு. உங்கள் துயரத்திலிருந்து மீண்டு வர கடவுளை வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  13. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  14. இது போன்ற கடவுளின் சிறப்புக் குழந்தைகளை நமக்குத் பின் யார் பார்த்துக் கொள்வார்கள் என்கிற கவலை பெரிய கவலை. நான் அதை இது போன்ற குழந்தைகள் உள்ள வீடுகளில் பார்த்திருக்கிறேன்.

    அதற்குள் ஒருவருடம் ஓடிவிட்டதா? எங்கள் அஞ்சலிகள். உங்களுக்கு ஆறுதல்கள்.

    பதிலளிநீக்கு
  15. சில நிலைகளில் மருத்துவ மனையிலிருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடிவெடுப்பது என்பது மிகவும் கடினம். என் அம்மா பற்றி அவர் மறைந்த உடன் என் அப்பா தனது கவிதையில் எழுதி இருந்தது நினைவுக்கு வருகிறது. "வீட்டுக்கு வீட்டுக்கு என்றவளை கடைசியில் அங்கிருந்து காட்டுக்கே அழைத்துச் சென்றேன்" என்று மறுகி இருந்தார்.

    பதிலளிநீக்கு
  16. நேற்று அறிந்ததுபோல இருக்கிறது அதிக்குள் ஓராண்டு... நாள் செய்வதுபோல் நல்லோர் செய்யார், என்பார்கள்.. சில விசயங்கள் காலம் போனாலும் மறக்க முடியாதவை:(.

    பதிலளிநீக்கு
  17. தங்கைக்கு அஞ்சலிகள் அதற்குள் ஓராண்டு ஆகிவிட்டதா :(
    தங்கையின் பெயரை வீட்டுக்கு வைத்தது நெகிழவைத்தது .
    உங்கள் தங்கை தேவதையின் மனதுக்கும் குணத்திற்கும் ஏற்றார் போலத்தான் அந்த தேங்காயும் வெளேரென்ற பூவாய் புன்சிரிக்குது .
    மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் பற்றி சொன்னவை இங்கும் இப்போ நடப்பதே :(
    சில விஷயங்கள் செய்தித்தாள்களில் வாசிக்கும்போது மனம் பதறும் .நாளை நமக்கும் இதே நிலைதானே :( என்று .

    பதிலளிநீக்கு
  18. வணக்கம்
    ஜி

    நான் படித்த போது மனம்உருகிவிட்டது நினைவில் இருந்து மீண்டு வர இறைவனை பிராத்திக்கிறேன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  19. ஓராண்டு ஆகிவிட்டதா....

    காலங்கள் ஓடுகின்றன....

    உங்கள் வார்த்தைகள் மிக சரி..

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் சகோதரரே

    தங்கள் பதிவினை கண்டு மனது பாரமாக உள்ளது.முந்தைய பதிவுகளையும் இப்போதுதான் கண்டேன்.காலம்தான் உங்கள் மனப்புண்ணை ஆற்றவேண்டும்.தங்கை மீது இவ்வளவு பாசமாக இருக்கும் உங்களை தேற்ற வார்த்தைகள் இல்லை. மன தைரியத்தை அளிக்க ஆண்டவனை வேண்டுகிறேன். தங்கள் தங்கையின் ஆத்மா சாந்தியடையவும் வேண்டிக் கொள்கிறேன்..வேறு ஒன்றும் சொல்லத்தெரியவில்லை.

    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  21. கில்லர்ஜி தங்களின் தங்கையின் ஆன்மா இறைவனோடு ஒன்றி ஐக்கியமாகி தங்களுடன் எப்போதும் எதேனும் ஒரு ரூபத்தில் இருந்திடுவார் . நீங்கள் தொடர்ந்து நல்லது செய்யுங்கள்....அவரது நினைவில்....காலங்கள் கடந்தாலும் சில நினைவுகள் நம்முள் உறங்காமல் விழித்திருக்கும்...நல்லதே நடக்கும் கில்லர்ஜி..

    கீதா: துளசியின் கருத்துடன்....ஜி, மருத்துவ மனைகள் கார்ப்பரேட் ஆகி வியாபார தளங்கள் ஆகியது நாமெல்லோருக்கும் தெரியும்....நல்ல மருத்துவர்கள் இருக்கிறார்கள் ஆனால் கண்டுபிடிப்பது, நமக்கு அமைவது...அபூர்வம்....மறுத்துவமனைக்குள் நுழைந்து விட்டால் அதிலிருந்து மீள்வது...கிட்டத்தட்ட சக்ர வியூகம் தான்....நடந்தது நடந்துவிட்டது...ஒருவருடம் அதற்குள் ஓடியும் விட்டது...நம்ப இயலவில்லை...ஒரு வகையில் மனத்தைத் தேற்றி க் கொள்ளலாம்...இப்ப தியான நட்சத்திரக் குழந்தைகள் நாமில்லாமல் ஜீவிப்பது கஷ்ட்டம்....ஆதரவுடன் இருப்பவர் மறைந்துவிட்டால் அவர்களின் கதி? எனவே மனதை இப்படித் தேற்றி க் கொள்ள வேண்டியதுதான்...வேறு என்ன சொல்ல என்று தெரியலை ஜி...

    பதிலளிநீக்கு
  22. நம் உணர்வுகளை ஆதாயமாக்கி ககார்பரெட் மருத்துவ மனைகள் கொள்ளையடிக்கின்றன. அத்தருணத்தில் உறவுகளிடம் வெளிப்படையாக சொல்ல முடியாமல் நாமும் பலிகடாவாகிறோம். தங்கை உஙௌகளுடன் அரூபமாக பயணிக்கிறாள்.

    பதிலளிநீக்கு
  23. வேதனையுடன் அஞ்சலி

    பதிலளிநீக்கு
  24. ஒரு சகோதரனாக உங்கள் கடமையை சரிவரச்செய்ததை எண்ணி மனதை தேற்றிக்கொள்ளுங்க அண்ணா ஜீ. கண்டிப்பா அவங்க உங்க கூடவே இருப்பாங்க.

    அவரின் ஆசைபடி அவரின் பெயரையே வீட்டுக்கு வைத்தது மனதையே கலங்கவைத்தது மட்டுமல்லாது உங்கள் பாசம் அசரவைத்துவிட்டது அண்ணாஜீ.

    பதிலளிநீக்கு

  25. தங்கள் தங்கையின்ஆன்மாவிற்கு அஞ்சலி. வீட்டிற்கு அவர் பெயரையே வைத்திருக்கிறீர்கள். கவலை வேண்டாம் இனி அவர் தங்கள் வீட்டிலேயே வளைய வருவார். மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு