இதன்
பின்னணிகளை அறிவதற்கு கீழே சொடுக்கலாம்...
நம் வீட்டு குழந்தைகள் இந்த வார்த்தைகளை அடிக்கடி
விளையாட்டாக சொல்லி வந்தவை இப்பொழுது யாரும் சொல்வதில்லை...
வனிதா வீட்டில் எல்லா வேலைகளும் முடிந்தவுடன் நீ
சோபாவில் பள்ளி கொண்ட பெருமாள் மாதிரி சாய்ந்து உட்கார்ந்து கொண்டு டிவி
பார்த்துக் கொண்டு இருப்பாய் கையில் ரிமோட் இருக்கும் நான் ஒளிந்து நின்று கொண்டு
உன்னைப் பார்த்து தலையாட்டிக் கொண்டு இருப்பேன் நீ மௌனமாக சிரிப்பாய் நான் டிவியை
அமத்து என்பேன் அதற்கு இது ய்யேன் வீடு, ய்யேன் டிவி என்று ரிமோட்டை ஒரு
மாதிரியாக ஆட்டிக் கொண்டே சொல்வாய் உன் வீடா... எப்போ பத்திரம் போட்டே ? என்று கேட்பேன் இந்த வார்த்தைகளுக்காகவே நான்
உன்னிடம் அடிக்கடி சிலுவிழுத்துக் கொண்டு இருப்பேன் அதேநேரம் மற்ற நேரங்களில்
பிறர் கேட்டால் இது எங்க அண்ணன் வீடு என்று சொல்லி இருக்கின்றாய். ஆக உனக்கு
எல்லாமே தெரிந்து இருக்கிறது இந்த வீட்டை நான்தான் எனது பெயரில் வாங்கி
இருக்கிறேன் என்பது. வனிதா நான் முதன் முதலில் வாங்கியது இந்த வீடுதான். சுமார்
பத்து வருடங்களுக்கு முன்பே சிலரிடம் நான் சொல்லி இருக்கிறேன் என் தங்கையின் நிலையை
உணர்ந்து உண்மையுடன் யாராவது திருமணம் செய்ய முன் வந்தால் இந்த வீட்டை தங்கையின்
பெயருக்கு மாற்றி எழுதிக் கொடுப்பேன் என்று அதற்கு வேலையே இல்லாமல் போய் விட்டது
இருப்பினும் அம்மாவுக்குப் பிறகு உன்னை நான்தான் பார்த்துக் கொள்ள முடியும்
இதற்காகவே எனது வாழ்க்கையிலும் சில உறுதியான முடிவு எடுத்து இருந்தேன் இன்று காலம்
கடந்து அதற்கு அர்த்தமில்லாமல் போய் விட்டது. ஒருமுறை நீயும், நானும் டிவி
பார்த்துக் கொண்டு இருந்தோம் அப்பொழுது டிவியில் வந்த மனிதரை இது யாரு தெரியுமா ? என்று கேட்டாய் நான் தெரியலையே என்றேன் அதற்கு
நீ சொன்ன வார்த்தை கேட்டு சிலிர்த்து விட்டேன் நீ பள்ளிக்கூடம் போனதில்லை எழுதப்
படிக்கத் தெரியாது உனக்கு உலகமே இந்த வீடு மட்டும்தான் அதனுள் காணும் இந்த டிவிதான்.
நீ சொன்ன பதில் குஷ்பு
புருசன் டிவியில்
வந்த நபர் சுந்தர். சி வனிதா என்னால் உண்மையிலேயே நம்ப இயலவில்லை உனக்கு குஷ்புவே
தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று நினைத்திருந்தேன் ஆனால் நீ குஷ்புவின் கணவனையே
சரியாக தெரிந்து வைத்து இருக்கின்றாய் இவர்கள் மட்டுமல்ல, கருணாநிதி, எம்ஜிஆர்,
ஜெயலலிதா, சிவாஜி கணேசன், கமலஹாசன், ரஜினிகாந்த், பிரபு என்று அனைவரையுமே சரியாக
தெரிந்து வைத்து இருக்கின்றாய் என்ன ஒன்று அந்தப் பெயர்கள் சற்று வித்தியாசமான
உச்சரிப்பில் சொல்வாய் மற்றபடி சரியாக தெரிந்து வைத்து இருக்கின்றாய். ஒருமுறை
என்னை அழைத்து இந்தா
சாலின்... சாலின்
என்றாய் யாரு இது ? என்றேன் அதற்கு உன்னை நீயே
தலையில் தட்டிக்கொண்டு இது தெரியலே.... கருணாத்தி மயேன் என்றாய். இதை
எல்லாவற்றையும்விட நான் கடைசியாக வியந்த செய்தி தனுஷை ரசினியாந்த் மருமயேன் என்றதே... இதை எல்லாம்
உனக்கு சொல்லிக் கொடுத்தது அம்மாவாகத்தானே இருக்க முடியும்.
ஒருமுறை டிவி பார்த்துக் கொண்டு இருந்த நீ பலமாக
கைதட்டி சிரித்துக் கொண்டு அப்டி போடு ஸூப்பர் என்ற சத்தம் கேட்டு
ஓடிவந்து பார்த்தேன் அங்கு நாடகத்தில் வில்லியை ஒருத்தி அறைந்து கொண்டு இருந்தாள்
நான் ஏன் பாவமில்லையா... ? என்றேன்
அதற்கு நீ சொன்னாய் ஒனக்கு தெரியாது ஆத்தாடி பெல்லாது... மூஞ்சியும்,
மொகரக்கட்டையும் பாரு... என்றாய். உண்மையிலேயே அவளது முகம் அழகாகத்தான் இருந்தது. வில்லி
நல்லவள் இல்லை என்பது உனக்கு தொடர்ந்து நாடகம் பார்த்து வருவதால் தெரிகிறது. அதேநேரம்
நல்லவர்கள் பாதிக்கப்படுவதை பார்க்கும் பொழுது ஐயோ... பாவம் என்று சொல்கின்றாய். வனிதா
சில நேரங்களில் நான் நினைத்துப் பார்ப்பது உண்டு தொலைக்காட்சி நாடகங்களை
அறிவுப்பூர்வமாக சிந்தித்து பார்த்தால் இந்த சமூகத்தை சீரழித்துக் கொண்டு இருப்பது
உண்மையாயினும் இது உன்னையும், உன்னைப் போன்றவர்களையும் சற்று செம்மை படுத்தி
இருக்கிறதோ என்றும் தோன்றுகிறது. இரவில் வீட்டின் முன் கேட்டையும் வீட்டின்
மையத்தில் இருக்கும் திறந்தவெளிக் கதவையும் நீதான் பூட்டுவாய் மற்றவர்கள்
பூட்டக்கூடாது சில நேரங்களில் நான் வீட்டின் பின்புற திறந்த வெளியில்
உட்கார்ந்திருப்பேன் நீ, உள்ளே வா கதவைப் பூட்டணும் என்பாய் நான் பூட்டிட்டு
வாறேன் நீ போய்த் தூங்கு என்பேன் உனக்கு பூட்டத் தெரியாது என்பாய் சில நேரங்களில்
வேண்டுமென்றே நான் இருந்தாலும் அந்த இடத்திலேயே உட்கார்ந்து தூங்கி விடுவாய்.
பிறகு உன்னை எழுப்பி உள்ளே அழைத்துப் போவேன் எப்படியாயினும் நீதான் பூட்டணும்
ஒருக்கால் நான் பூட்டினாலும் அதைத்திறந்து மீண்டும் பூட்டுவாய் அப்பொழுதுதான்
உனக்கு நிம்மதி. சில நேரங்களில் தாமதமானால் பேய் இருக்கு எந்திரிச்சு வா என்பாய் உனக்கு பேய்
தெரியுமா ? என்று கேட்பேன் எந்திரிச்சு வா காமிக்கிறேன் என்று டிவியில் இரவு பத்து
மணிக்கு மேல் போடும் நாகினி என்ற பேய்த்தொடரைப் போட்டு இந்தா பேய் பாரு யாகினி என்பாய் பயப்பட மாட்டியா ? என்றால் எனக்குப் புடிக்கும் என்று தினம் அந்த தொடர்
முடிந்த பிறகே டிவியை அமர்த்தி விட்டு உனது தலைமாட்டில் உன்னுடைய டார்ச்லைட், ஒரு
சிறிய செம்பில் தண்ணீர், அதற்கு மூடி எல்லாம் வைத்து விட்டு அப்பாவின்
புகைப்படத்துக்கு முன் நின்று முணுமுணுத்தபடி சுமார் ஐந்து நிமிடம் பிரார்த்தனை
செய்து விட்டு அப்பொழுதும் என்னை ஓரக்கண்ணால் பார்த்து மௌனமாய் சிரித்து விட்டு நைட்லாம்ப்
போட்டு லைட்டை அமர்த்திய பிறகே வந்து படுப்பாய் நான் அபுதாபியில் இருக்கும்
பொழுதும் இதில் ஒருநாள்கூட மாற்றம் கிடையாது. நீ ஏதாவது தவறு செய்து விட்டால்
சத்தம் போடுவேன் அடிக்க வருவதுபோல் கோபமாக பேசுவேன் ஆனால் அடிக்க மாட்டேன் சட்டென
நீ சொல்வாய் எனக்கு
அப்பா இல்லை
சில நேரங்களில் நீ எல்லோரையுமே சிந்திக்க வைத்து விடுவாய் இது மட்டுமல்ல எனது மகளை
எதற்காவது நான் பேசினால் உடன் நீ சொல்வாய் பாவம் அம்மா இல்லைல... ய்யேன் பேசுறே ? என்று.
இயல்பாகவே உனக்கு நகைச்சுவை உணர்வுகள் உண்டு என்பதை
நெடுங்காலமாகவே நானறிவேன். யாராவது அத்தாச்சி முறையில் அழைப்பவர்கள் வந்தால்
அவர்களுடன் கிண்டலடித்து விளையாட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமில்லை அத்தாச்சி பாத்தியா...? எங்க அண்ணேன் மீச எப்படி ஸூப்பராக்கு.... அவர்களை ஏதாவது சூடேற்றி
விட்டு பேசவிட்டு விடுவாய் அவர்களும் என்னை நக்கலடித்து போவார்கள். மீசை வைப்பதில்
இது அழகு, இது அழகு இல்லை என்பதுகூட உனது அறிவுக்கு எட்டுகிறதே என்று
ஆச்சர்யப்பட்டு சந்தோஷப்பட்டு இருக்கிறேன். வனிதா பத்து வருடங்களுக்கு முன்பு நீ
இப்படி எல்லாம் பேசியிருந்தால் உன்னை கல்யாணம் செய்து கொடுக்க முழுமூச்சாய் இறங்கி
இருப்பேனடா... ஒருக்கால் அந்த வாழ்க்கை உனது மனதை மாற்றி இருக்கலாமோ... குடும்பத்தில்
ஏதாவது பிரச்சனை, சண்டைகள் வரும் பொழுது யாராவது யாரையாவது உன்னை என்ன செய்யிறேன்
பாரு என்று பேசிக்கொள்ளும் பொழுது எங்கிட்டாவது ஒரு அறையில் துணிகளை மடித்து
வைத்துக் கொண்டு இருக்கும் நீ சட்டென சொல்வாய் கிழிச்சே... என்று சொன்னவர் மூக்கு
உடைபட்டு அந்த சண்டையில் சிரிப்பு வந்து கதை வேறுரீதியில் முற்றுப்பெற்று விடும்.
கூண்டுகள் சுழலும்...
ஒருவர் இருக்கும்போது, பேசுவது சிரிப்பது எல்லாம் பெரிதாகத் தெரியாது, இல்லை என்றானபின் ஒவ்வொரு வார்த்தையும் முத்துக்களாகத் தெரியும்.
பதிலளிநீக்குப்தேச்லைச்குத் திறன் குறைவானோரோடு, அதிகம் பேச வேண்டும் அப்போதான் அவர்களும் பேசுவார்கள் என்பினம், அதைத்தான் தொலைக்காட்சி பார்ப்பதாலும் கிடைத்து விடுகிறதுபோலும். பாஷைகள்கூட ரிவி பார்ப்பதால் பழக்கப்பட்டு விடுகிறதே.
“நடந்தவை யாவும் நடந்தவை தானே”.. அதனால முடிந்ததை எண்ணி வருந்தக்கூடாது.. அப்படிப் பண்ணியிருக்கலாமோ.. இப்படிப் பண்ணியிருக்கலாமோ என.. அதனால் நிம்மதி போய் விடும்... அது விதி.. என நினைச்சு மனதைத் தேற்றிட வேண்டும்... வேதனைதான்:(.
இழப்பு எவ்வளவு வலி என்பது இந்த நினைவுகள் மூலம் தெரிகிறது.
பதிலளிநீக்குஒவ்வொன்றாக நினைத்து நினைத்து வருந்தினாலும் போனவர் வரப் போவதில்லை! மனதில் வேதனை தான் மிஞ்சும். மெல்ல மெல்ல வேறு செயல்களில் மனதைத் திருப்புங்கள்!
பதிலளிநீக்குநண்பரே, சில நினைவுகள் மனதில் என்றென்றும் பசுமையாகவே இருக்கத்தான் செய்யும்
பதிலளிநீக்குதங்களின் வேதனையினை உணர்கிறேன்
ஒவ்வொன்றையும் நினைவுவைத்து நீங்கள் எழுதும்போது உங்களின் அன்பு வெளிப்பாட்டை உணரமுடிகிறது. நம்மை நேசிப்பவர்களோ, நாம் நேசிப்பவர்களோ நம்மை விட்டுப் பிரிந்தால் நாம் படும் வேதனை என்பதானது அளவிட முடியாதது. இவ்வாறான பதிவுகளும், பகிர்வுகளும் உங்களின் மனச்சுமையைக் குறைக்கும் என்று நம்புகிறோம்.
பதிலளிநீக்குமனம் அமைதி பெறுக..
பதிலளிநீக்குஆம் இன்னொரு கோண சிந்தனையை கொடுக்கும் சில விஷயங்கள். தீமையிலும் நன்மை என்பது போல் ....
பதிலளிநீக்குஉள்ளத்தில் இருக்கும் உணர்வை இல்லையென்று எண்ணி கொள்வது எப்படி முடியும் இருப்பது போலத்தான் பேச முடியும் தெரியவில்லை என்று நினைத்திருக்கும் ஒருவரிடம் நமக்கு தெரியாது நிறைய ஒளிந்திருக்கும் அந்த அறிவு நமக்கும் இருக்காது, நீங்கா இடம்பிடித்த நினைவுகள் உங்களை ஆறுதல் படுத்தட்டும் இருப்பது போலவே
மாண்டவர் மீளப்போவதில்லை என்றாலும், நினைவுகளை மீட்டிப்பார்ப்பதில் உள்ள சுகமும், அது அளிக்கும் ஆறுதலுமே தனி.
பதிலளிநீக்குதங்கள் தங்கையின் மேல் எவ்வளவு பாசம் வைத்திருந்தீர்கள் என்பதை ஒவ்வொருமுறையும் நீங்கள் விவரிக்கும்போது தங்களை நினைத்து பெருமையாக இருக்கிறது. தங்களின் இழப்பை காலம் சரி செய்யட்டும்.
பதிலளிநீக்குமனநெகிழ்வான பதிவு
பதிலளிநீக்குமிகவும் ஒன்றிப் போய் வாசித்தோம். உங்கள் நட்சத்திரத் தங்கையின் செயல்கள், பேச்சுகள் அனைத்தும் சுவாரஸ்யமாகவும், வியப்பாகவும் குழந்தைகளோடு இருப்பது போலவும் இருக்கிறது. நாம் விரும்பும் நபர்களை, அவர்கள் இறாந்த வேதனை இருந்தாலும், இப்படியான இனிய நினைவுகளும் நமக்குப் பல சமயங்களில் இனியதாகத்தான் இருக்கிறது.
பதிலளிநீக்குவரிக்கு வரி மனதை நெகிழ்த்திய பதிவு .
பதிலளிநீக்குமிக எளிமையான நெஞ்சை தொடும் பதிவு. வாழ்த்துக்கள் நண்பரே
பதிலளிநீக்குமனதை நெகிழ்த்திய பதிவு
பதிலளிநீக்குமனம் அமைதி கொள்க
பதிலளிநீக்குசில உணர்வுகளுக்கு வார்த்தைகள் தடை போட முடியாது ஜீ! நெகிழ்ச்சியான பகிர்வு தொடரட்டும் தங்கையின் நினைவுகள்!
பதிலளிநீக்குஉங்கள் நினைவுகளின் வழி ....வாசிக்கும்போது உடன் நின்று பார்ப்பது போல் உள்ளது..
பதிலளிநீக்குகிழிச்ச...என்ன அழகா உங்களுக்காக பேசியுள்ளார்...