தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, அக்டோபர் 24, 2021

கலைகளின் நிலைப்பாடு

வணக்கம் நட்பூக்களே... திரைப்படத்தைப் பற்றி எழுதுவோம் என்று நினைத்தபோது... நடிகரைப்பற்றி எழுதினால் என்ன ? என்று மனதில் தோன்றியதின் விளைவே இப்பதிவு. திரு. சிவாஜி கணேசன் அவர்களும், திரு. எம். ஜி. இராமச்சந்திரன் அவர்களும் தங்களை அண்ணன்-தம்பி என்றும், குழந்தைகள் சித்தப்பா, பெரியப்பா என்று அழைத்தார்கள் என்றும் நாம் பத்திரிக்கை வாயிலாக அறிந்த விடயங்கள். 

அதேநேரம் அவர்களின் உள்ளங்களுக்குள் இருவருமே போட்டியாளராகவே கருதி வாழ்ந்தார்கள் என்பதே உண்மை.

இன்றைய கமல்ஹாசன்-ரஜினிகாந்த் போலவே வெளியே வேண்டுமானால் சகோதரர்கள் என்று சொல்லிக் கொள்வார்கள். அவர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது வழக்கம் போலவே தமிழக ரசிகர்கள் இருவருக்குமே ஆளுயர மாலைகள், கட்டிட உயரத்துக்கு பதாகைகள் வைத்து மகிழ்ந்து வாழ்ந்தார்கள் ஆனால் அவர்களது வீட்டில் உலை வைத்து இருப்பார்களா ? என்பது ஐயமே...

எப்படியோ பாதைமாறி திரு. எம். ஜி. இராமச்சந்திரன் அரசியலில் காலடி வைத்து வெற்றிப்பாதையில் பயணித்தபோது... திரு. சிவாஜி கணேசன் அவர்கள் நமக்கு தொல்லை தீர்ந்தது இனி நாமே ராஜா, நாமே மந்திரி என்று நினைத்து இருக்ககூடும் காரணம் இதுதான் மனிதமனம். இதை மறுப்பதற்கில்லை இப்பாதையில் பயணிக்கத் தொடங்கியபோதுதான் அப்பாதையில் வந்தவர்கள் திரு. கமல்ஹாசன் மற்றும் திரு. ரஜினிகாந்த்.

இவர்களின் படங்களோடு திரு. சிவாஜி கணேசன் அவர்களின் படங்கள் எதிர்நீச்சல் போடுவதற்கு சற்று தடுமாறியது என்பது உண்மையே.... லாரி டிரைவர் ராஜாக்கண்ணு, எமனுக்கு எமன் போன்ற டப்பா படங்கள் எல்லாம் அப்பொழுது வெளியான காலகட்டமே... காலப்போக்கில் இவர்களும் சரியான நிலைக்கு வந்தார்கள். நான் வாழ வைப்பேன் என்ற படத்தை நடிகை கே. ஆர். விஜயா தயாரித்தார். இதில் கசாநாயகன் சிவாஜி கணேசன் கசாநாயகி கே. ஆர். விஜயா இதில் ரஜினிகாந்தும் நடித்துள்ளார். சிவாஜி கணேசன் படம் என்றே சொல்லப்பட்டது.

சிவாஜியின் வீழ்ச்சியோ, ரஜினியின் வளர்ச்சியோ, விடுதலை படம் வெளிவந்தது இருவரின் படம் என்றே சொல்லப்பட்டது. படிக்காதவன் படத்தில் சிவாஜி கௌரவ வேடமேற்றதாலோ என்னவோ ரஜினியின் படம் என்று சொல்லப்பட்டது. பின்னாளில் படையப்பா படம் வெளியானது சிவாஜி கணேசன் அவர்கள் இருப்பதே அறியாத வகையில் இருந்தது. அதற்கு தகுந்தாற்போல் கதையில் தொடக்கத்திலேயே அவரை கொன்று விடுவார்கள்.. என்னைக் கேட்டால் சிவாஜி கணேசன் அவர்கள் இப்படத்தில் நடிப்பதை தவிர்த்தே இருக்கலாம். ஒருக்கால் அவர் தற்போது இருந்திருந்தால் பணத்திற்காக விளம்பரப் படத்தில்கூட நடித்து இருப்பார் என்பதே உண்மை.

அதேநேரம் தேவர் மகன் திரைப்படத்திலும் அவரை கதைப்படி கொன்று இருந்தாலும் படையப்பா படம்போல... அவமானப்படுத்தப்படவில்லை இங்குதான் தமிழனை தமிழன் அவமானப்படுத்திவில்லை என்பதையும் கன்னடன் திட்டமிட்டே தமிழனை அவமானப்படுத்தவே படையப்பா படத்தில் நடிக்க வைத்தான் என்பதே மறைமுக உண்மை.

காயத்ரி திரைப்படத்தில் ஜெய்சங்கர்-ஸ்ரீதேவி ஜோடி ரஜினிகாந்த் வில்லன் அன்று படப்பிடிப்பில் நிகழ்ந்த கசப்பான நிகழ்வுகளின் தொடர்ச்சி... முரட்டுக்காளை திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மறைமுக முயற்சியால் ஜெய்சங்கர் வில்லனாக மறுபிரவேசம் செய்யப்பட்டு கடைசியில் அவர் ரஜினியின் பல படங்களில் (தளபதி, அருணாசலம்) டம்மிபீஸ் ஆக்கப்பட்டார் என்பதே உண்மை. தமிழர்களுக்கு பெரும்பாலும் மறதி அதிகம் எந்த விசயத்துக்கும் உட்கருத்து என்ன ? என்பதை உணர்ந்து பார்க்க அலுப்பு கொள்வார்கள்.

எல்லா மனிதர்களின் உயர்வுக்கும், தாழ்வுக்கும் இறைவன் காலவரை வகுத்து இருப்பான் இதில் எல்லா துறைகளில் வாழும் மக்களும் உடன்பட்டே தீரவேண்டும். திரு. சிவாஜி கணேசன் அவர்களின் காலம் அதாவது சுக்கிரதிசை என்பார்களே அது முடிந்து விட்டது. திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு குரு உச்சத்துல இருக்கின்றான்..

ஒரு மனிதன் உயர்ந்த நிலைக்கு வருகிறான் என்றால் எங்கோ ஒருவன் தாழ்வு நிலையை நோக்கி இறங்குகின்றான் என்பதே இறைநியதி. ஆம் ஒரு மனிதன் வாழ்வில் உயர்ந்து வந்து விட்டால் முதலில் வாங்குவது அவனுக்கென்று ஓர் வீடு அந்த வீட்டை எங்கு வாங்குவது ? இதே உலகத்தில்தானே வாங்க இயலும். அதே நேரம் தனது வீட்டை விற்க ஒரு மனிதன் தாழ்வு நிலையை நோக்கி வருவான். இவர்கள் இருவரையும் ஒரே நேர்கோட்டில் இணைத்து வைப்பதே சங்கிலித் தொடர்போல்... விதியால் பின்னப்பட்ட வலை.


சாநாயகனைப் பற்றி எழுதி விட்டோம் நகைப்பு மன்னர்களைப் பற்றி அடுத்த பதிவில்... பார்ப்போம் - தேவகோட்டை கில்லர்ஜி

ChavasRegal சிவசம்போ-
இந்த ஆளு ஏன்... திடீர்னு திரைப்படத்தைப் பற்றி எழுதுறாரு... ?


சிவாதாமஸ்அலி -
இவருக்கு திரைப்படத்தைப் பற்றி எதுவும் தெரியாதுனு ஸ்ரீராம்ஜி நாளைக்கு மண்டபத்துல சொல்லி விடக்கூடாதுல... ?


சாம்பசிவம்-
எல்லாம் முன்னெச்சரிக்கை முத்தண்ணாதான்.

17 கருத்துகள்:

  1. சொல்ல வந்ததை சரியாக முடிக்கவில்லையோ என்று தோன்றுகிறது ஜி...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    நல்ல தெளிவாக அலசியிருக்கிறீர்கள்.

    /ஒரு மனிதன் உயர்ந்த நிலைக்கு வருகிறான் என்றால், எங்கோ ஒருவன் தாழ்வு நிலையை நோக்கி இறங்குகிறான் என்பது இறை நியதி. இவர்கள் இருவரையும் ஒரு நேர் கோட்டில்....... அழகாக சொல்லியிருக்கிறீர்கள். ஒருவனின் துன்பம், மற்றவனின் இன்பத்தில் போய் முடிகிறது என்ற சொல் வாக்கு கூட உண்டே..! அடுத்தப் பதிவையும் காண ஆவலோடிருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. உங்க அனுமானம் தவறு என்றே நான் நினைக்கிறேன்.

    ரஜினி, ஜெய்சங்கருக்கு மிக மிக அதிகமான மரியாதையை உள்ளத்திலிருந்தும், வெளிப்படையாகவும் அளித்தார். இதில் கன்னட தமிழன் பிரச்சனை இருந்ததில்லை. அர்ஜுன், ஜெயராம் போன்றவர்கள் கன்னட, மலையாள உணர்வுடனே இருந்தவர்கள்.

    சிவாஜியின் காலம் முடிந்தபின்னும் (ரசிகர்கள் வரவேற்பு), அவருக்கு நடிக்க ஆசை இருந்தது. அவரை கௌரவப்படுத்தும் விதமாகத்தான் துண்டு துக்கடா படங்களில் அவரைப் போட்டார்கள்.

    மற்றபடி பதிவு ஒரு இலக்கோடு எழுதியது போல வரவில்லை

    பதிலளிநீக்கு
  4. கலைகளின் நிலைப்பாடுகளை நன்றாக அலசி ஆராய்ந்து இருக்கிறீர்கள்.

    ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொருவர் சிறந்து விளங்கினர்.

    உயர்வும், தாழ்வும் , இன்பமும், துன்பமும் வாழ்க்கையில் சந்திக்கதானே வேண்டி இருக்கிறது கலைத்துறையில் இதெல்லாம் நடந்து கொண்டு தானே இருக்கிறது.
    நீங்கள் சொல்வது போல எல்லா மனிதரின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் இறைவன் தான் பொறுப்பு.
    அவன் நினைத்தால் எதுவும் நடக்கும்.

    பதிலளிநீக்கு
  5. கன்னட மொழி பேசுபவர் என்பதற்காக ரஜினியை வெறுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அதோடு ரஜினி ஜிவாஜியைத் தன் படங்களில் நடிக்க வைத்து கௌரவம் தான் செய்தார் என்றே சொல்லலாம். படத்தில் அவருடைய கதாபாத்திரம் தேவையான அளவுக்குத் தானே இருக்க முடியும்! அதே போல் கமல்ஹாசன் ஜிவாஜியைக் கௌரவப்படுத்தினார் என்றும் சொல்ல முடியாது. ஆங்கிலக் கதையான காட்ஃபாதரின் தழுவலான தேவர் மகன் கமலின் படம் தான். மூலக்கதையை ஒட்டியே தேவர் மகனும் எடுக்கப்பட்டிருக்கிறது. இதை காட்ஃபாதர் படத்தை/தொடராகவும் வந்தது. பார்த்தவர்களுக்கு நன்கு புரியும். கௌதமியக் காதலித்துவிட்டு ரேவதியை மணப்பது என்பது கூட ஆங்கில மூலத்தின் தழுவல் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னாச்சு.... காட்ஃபாதருக்கும் தேவர் மகனுக்கும், கரண்டிக்கும் பாதாளகரண்டிக்கும் உள்ள ஒற்றுமைதான்.

      காட்ஃபாதரின் காப்பி கமலின் நாயகன்.

      நீக்கு
    2. இதுவும் (தேவர் மகன்) அதன் தொடர்ச்சியே! காட்ஃபாதர் தொடரை முழுமையாகப் பார்த்திருந்தால் புரியும்.

      நீக்கு
  6. நான் ரஜினிக்கோ, கமல்ஹாசனுக்கோ, ஜிவாஜிக்கோ, எம்ஜிஆருக்கோ ரசிகை எல்லாம் இல்லை. எல்லோருடைய படங்களிலும் குறிப்பிட்ட சிலவற்றைப் பார்த்து இருக்கேன். அவ்வளவே! எம்ஜிஆரைத் தவிர்த்து மற்றவர்கள் நடிப்பு குறிப்பிடத்தக்க விதத்தில் அமைந்தன. எம்ஜிஆருக்கு அவருடைய பொது வாழ்க்கைக்கு ஏற்றவாறு கவனமாக நேர்மறைச் சிந்தனைகளோடு கூடிய படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அந்த வகையில் அவர் வெற்றி பெற்றார். ஜிவாஜி தன் நடிப்புத் திறமையைக் காட்டக்கூடிய படங்களாகத் தேர்ந்தெடுத்ததில் பொது வாழ்க்கையில் வெற்றி பெற முடியவில்லை. இப்போக்கூட நடிப்பில் திறமைசாலி எனச் சொல்லப்படும் உலக்கை நாயகர் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை. அதே சமயம் ரஜினி வருவேன் வருவேன் எனச் சொல்லிக் கொண்டு சாமர்த்தியமாகப் பொது வாழ்க்கையில் இருந்து விலகிக் கொண்டு அந்த வகையிலும் வெற்றி பெற்றிருக்கிறார். அவரவர் செயல்பாடு அதன் விளைவுகள் அவரவருக்கே!

    பதிலளிநீக்கு
  7. இந்த விஷயத்தில் நெல்லையின் கருத்தோடு ஒத்துப் போகிறேன். இது திட்டமிட்டுச் செய்ததாகத் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  8. ஜெய்சங்கரை வில்லனாக்கியது ஏவிஎம்மின் முடிவு.  ரஜினிக்கு அதில் பங்கில்லை.  அப்போதும் அவருக்கு உரிய மரியாதையை தரச்சொல்லி ரஜினி சொன்னார் என்பது அப்போதே அனைத்துப் பத்திரிகையிலும் வெளிவந்த செய்தி.  எந்த நடிகருக்கும் உச்சகாலம் என்று ஒன்று உண்டு.  எம் கே டி வாழ்ந்த வாழ்வென்ன, அவர் சிறை சென்று மீண்டதும் நடந்த வீழ்ச்சி என்ன..  அவருடனேயே சிறை சென்று மீண்ட என் எஸ் கே எம் கே டி நிலைக்கு பரவாயில்லை என்று இருந்தார்.  ஏதோ ஒரு படத்தில் சிவாஜிக்கு தந்தையாக நடிக்க எம் கே டியை அழைத்தபோது அவர் மறுத்து விட்டதாக சொல்வார்கள். 

    பதிலளிநீக்கு
  9. Avm சரவணன் அவர்களின் நூலில் முரட்டுக்காளை படத்தில் அந்நிறுவனம் தான் வில்லன் ஆக்கியது என்று படித்துள்ளேன் நண்பரே.
    அப்புறம் கூத்தாடிகள் என்றாலே 10 அடி தள்ளி நிற்பது உங்கள் வழக்கமாச்சே.... என்ன திடீரென அவர்களை அலச வந்து துவங்கி விட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  10. ஜெய்சங்கர் வில்லனாகி விட்டதால் அவரை அவமானப் படுத்தி விடக்கூடாது என்பதில் ரஜினி கவனமாக இருந்தார் என்றுதான் படித்த,கேட்ட நினைவு.

    பதிலளிநீக்கு
  11. உங்கள் கோணத்தில் ஒரு பதிவு. பொதுவாக சினிமா குறித்து அவ்வளவாக ஆர்வம் காண்பிப்பது இல்லை ஜி. சினிமா விஷயத்தில் அளவுக்கு அதிகமாக ஈடுபாடு காண்பிப்பது எனக்கு பிடிப்பதில்லை!

    பதிலளிநீக்கு
  12. உங்களின் இந்தப் பதிவின் மூலம் எனக்குத் தெரியாத செய்திகளை அறிந்தேன். நன்றி கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
  13. ஒவ்வொரு கலைஞனுக்கும் ஏற்றத்தாழ்வு என்பது இருக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை. அதே சமயத்தில் அவர்கள் எந்த அளவு மக்கள் மனதில் பதிகின்றார்கள், சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பதை நோக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  14. கில்லர்ஜி, எனக்கு சினிமா பார்ப்பது அதுவும் குறிப்பிட்ட சினிமாக்கள் மட்டுமே பார்க்கப் பிடிக்கும். பொழுது போக்கு அதுவும் அரிதாக. அதனால் இப்படியான தகவல்களில் நான் கவனம் செலுத்துவதில்லை. ரசனையும் இல்லை

    கீதா

    பதிலளிநீக்கு