டொங்கு நாட்டு மன்னன் கங்குதேவனை வாழ்த்தி
பாடி பரிசுகள் பெற்று செல்வோமென கருதி புலவர் கருமி முத்தன் வந்தான், இளவயது
புலவனென்றாலும், வார்த்தைகளில் முதுமையே ஓங்கி நிற்கும் இதனால் இவணுக்கு ’’முதுவாங்கி புலவன்’’ என்ற பெயரும் உண்டு.
மன்னரே... தங்களை புகழ்ந்து கவியொன்று கொண்டு
வந்திருக்கிறேன்.
புத்துணர்ச்சி தரும்... புரட்சி புலவரே, புதுமை புத்தனே,
புலம்புங்கள் புதுக்கவியை புலங்கட்டும், புதிராய், புரளட்டும் இந்த
புவியெங்கும்....
நீர் வாழ்க ! மன்னா !
நீரே எம் அண்ணா !
எதிரியை வஞ்சம்
தீர்க்காமல் லஞ்சம்
கொடுத்து தஞ்சம்
அடைந்தாய்...
மக்கள் நெஞ்சம்
அடைத்தாய்...
நீர் வாழ்க ! மன்னா !
நீரே எம் அண்ணா !
ஆஹா, அற்புதம் முதுவாங்கி புலவா ! வா ! வாங்கிகொள்
உமது பரிசை.
மன்னரே, சற்றுப்பொருங்கள்.
யாரது ஓ... பக்கீரரோ தாங்களும் இங்குதான் இருக்கின்றீர்களா ? கவியில் மயங்கி விட்டேன்,
ஆதலால் தங்களை காண மறந்து விட்டேன் சொல்லுங்கள் பக்கியாரே...
மன்னிக்க வேண்டும் மன்னா, இந்த கருமியிடம் நான்
சற்று உரையாடிய பிறகு பரிசை கொடுக்கலாமே...
காரணம் என்னவோ பக்கி ?
இந்தக் கவியில் பிழை இருக்கிறது.
அப்படியா ? ஹும் தானும் படுப்பதில்லை, தள்ளியும்
படுப்பதில்லை... நல்லது தொடங்கட்டும் உமது உரையாடல்கள்.
கருமியே, இந்தக்கவியை எழுதியது....
பால்பாயிண்டு பேனா கொண்டு.
அது எமக்கும் தெரியும், யார் எழுதியது ?
எமது புதல்வன் தமிழ்வாணன்.
எழுதிய தங்களது புதல்வன் தமிழ்வாணன் வராமல் தாங்கள் வருவது ஏன் ?
அவனுக்கு காலில் முள் குத்தி விட்டது நடக்க
முடியவில்லை, ஆகவே யாம் வந்தோம்.
கவியின் பொருளை நான் எப்படி தெரிந்து கொள்வது ?
எமக்குத்தான் தெரியுமே...
எழுதிய உமது மகன் தமிழ்வாணனுக்கல்லவா ! பொருள்
தெரியும்.
புலவரே, எழுதியதுதான் புதல்வன், கவிதை
என்னுடையது.
நீர் எழுதாமல், உமது புதல்வன் எழுதக்காரணம் ?
எமக்கு கை விரலில் நெகச்சுத்தி ஆகவே எமது
புதல்வனை எழுதச் சொன்னோம்.
மகனுக்கு காலில் முள்குத்தி, தந்தைக்கு கையில்
நெகச்சுத்தி, ஹும் நன்றாக இருக்கிறது உமது வேஷம்.
யார் வேஷமிடுவது ? அறுபது வயதான நீர், பணிப்பெண்கள் அருகில் நின்று
சாமரம் வீசவேண்டும் என்பதற்காக ! வெண்தாடிக்கு
கருப்பு டை அடிக்கும் நீரே வேஷதாரி.
புலவர்களே... Don’t talk about personal life கவிதைக்கு வேண்டிய விசயங்களை
குறித்து மட்டும் உரையாடுங்கள்.
மன்னியுங்கள் மன்னா, என்னை வேஷமிட்டாய் என்றதால்
கோஷமிட்டேன்.
புலவரே, உமது கவியின் ‘’அடைத்தாய்’’ என்பதின் பொருள் என்ன ?
மக்களை தாயைப்போல் அடை + காத் = தாய் என்று பொருள், நம்மை ஆண்டாள் நமது ஆத்தாள்,
நம்மை காத்தாள் அதாவது... கில்லர்ஜியை போன்ற
பாமரர்கள்கூட சொல்வார்களே ’’அம்மா’’ என்று
அதைப்போல்.
இல்லவே இல்லை நீர் மன்னரை பெட்டைக்கோழி
எனபொருள்பட எழுதியுள்ளீர்... அதாவது மன்னரை பொட்டைப்பயல் என்கிறாய்.
சிவ சிவா என்ன, கொடுமை இது எனது பொருளில் இருளா ?
பக்கீரா, புலவரை வேதனை படவிடாதீர்... Mr.சிவா எனக்கு சோதனை கொடுத்து
விடப்போகிறார்.
நல்லது மண்ணே, புலவரே, எமது மூன்று வினாக்களுக்கும்
விடையளித்து விட்டு நீர் பரிசை பெறலாம்.
நானும் தயார்.
சுவைக்க முடியாத காரம் எதுவோ ?
உம்மைப் போன்றவர்களின் அகங்காரம்.
கொள்கை இல்லாத மதம் எது ?
சோம்பேறிகளின், தாமதம்.
ஓட்ட முடியாத கார் ?
உம்மைப்பற்றி நான் மன்னரிடம் கொடுக்கப்போகும்
புகார்.
எம்மைப்பற்றி பெட்டிஷனா ? உம்மை பொட்டிப்பாம்பாய்
அடக்கி விடுவேன்.
(திடீரென
மன்னரின் SAMSUNG செல்லுக்கு அந்தப்புரத்திலிருந்து NOKIA வில் ‘’அந்த’’ அழைப்புக்கு அர்த்தமாய் செல்லிருந்து MISSED CALL வர)
யாரங்கே ? சந்தடி சாக்கில் என்னை மண்ணு என்றும்,
பொட்டைக்கோழி என்றும் இழிவாக சொல்லி என்னை பழி வாங்கியவர்களை பலி கொடுக்கும் நேரம்
வந்து விட்டது, பெட்டியென்றும், பொட்டியென்றும், வெட்டியாக பேசி அவையின் பொன்னான
நேரத்தை கட்டிப்போட்ட பக்கீரர், கருமி முத்தன் இருவரையும் ஜட்டியோடு முட்டியில்
தட்டிக்கொண்டே... ஆபரேஷன் தியேட்டருக்கு இழுத்துப்போய் தலையை வெட்டி விடுமாறு
உத்தரவிடுகிறேன். (உடன் புறப்பட்டார் ’’அந்த’’புரத்தை நோக்கி)
பக்கீரர், கருமி முத்தனைவிட மன்னர் கங்கு
தேவன் புலவர் போலவே பேசுகிறாரே... மண்ணே என்று சொன்னதை கப்புனு
புரிஞ்சுக்கிட்டாரே... கற்பூரப்புத்தியோ...
சினிமா காண முடியாத தியேட்டர் எது ?
ஆபரேஷன் தியேட்டர்.