வியாழன், நவம்பர் 30, 2017

பூர்வீகம் தேவகோட்டைசிலர் ஆபூர்வமான சிந்தனையாளர்களாக இருப்பார்கள், சிலர் மிகவும் திறமையானவர்களாக இருப்பார்கள் இதைக்காணும் நாம் நாமும் இவர்களைப் போல் முயன்றால் என்ன ? என்று தோன்றக்கூடும் எனக்கும் இப்படித்தான் இதோ கீழே காணும் காணொளியில் இந்த ஜப்பான் நாட்டான் விசிட்டிங் கார்டை வைத்து செய்யும் வேலைகளைப் பார்த்தேன் எனக்குள் ஒரு சந்தேகம், சந்தேகத்தை தீர்க்க இவன் யாரென இணையத்தில் உலாவினால் அது பெரிய ஆச்சர்யத்தைக் கொடுத்தது ஆம் இவன் ஜப்பான் நாட்டுக்காரனாக இருந்தாலும் பூர்வீகம் இந்தியா, தமிழ்நாடு அதுவும் தேவகோட்டையாம் எனக்கு ஒரு சந்தேகம் என்று சொன்னேன் அல்லவா அது இதோ இதேதான் நம்மூருக்காரன் இவ்வளவு திறமைசாலியாக இருக்கின்றானே.... என்று சந்தோசப்பட்டு உடன் நாமும் இதனைப் போல் செய்வோம் என்று நினைத்தேன் அதேநேரம் நாம் இவனைப் போல் செய்யாமல் வித்தியாசமாக செய்வோமே என்று தோன்றியது காரணம் கில்லர்ஜி என்றாலே சராசரி நபர்களிடமிருந்து வேறு படவேண்டும் அதனால்தான் வாழ்க்கை வீணாகப் போனது என்பது வேறு விடயம் சரி விடயத்துக்கு வருவோம்.

01.இவன் என்ன செய்கின்றான் ? ஒருத்தியை காற்றுள்ள பலூனை உயரத்தில் வீசவைத்து அதை விசிட்டிங் கார்டை வீசி உடைத்து எறிகின்றான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
பெரிய தீப்பந்தம் ஒன்று கொளுத்தி வைத்துக் கொண்டு என்னருகே வீச சொன்னேன் பலூன் பக்கத்தில் வரவும் தீயைக் காட்டினேன் அதனைப் போலவே டமார் என்ற சப்தத்துடன் வெடித்தது.

02.பிறகு கொக்ககோலா டின்னை டேபிளின் மீது வைத்து விசிட்டிங் கார்டை வீசி கீழே சாய்க்கின்றான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
டேபிளில் பெப்ஸி டின்னை வைத்து ஒரு அடி தூரத்திலிருந்து சுத்தியலை வீசினேன் அதனைப் போலவே சடார் என்று கீழே விழுந்தது.

03.பிறகு சிறிய ப்ளாஸ்டிக் டம்ளர்களை வரிசையாக அடுக்கி வைத்து விசிட்டிங் கார்டை வீசி கீழே சாய்க்கின்றான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
பெரிய சாம்பார் வாளிகளை அடுக்கி வைத்து மண்வெட்டியை எடுத்து வீசினேன் அதனைப் போலவே சடச்சடவென்று கீழே விழுந்தது.

04.பிறகு ஒரு டேபிளில் மார்ல்போரோ சிகரெட்டை நிறுத்தி வைத்து விசிட்டிங் கார்டை வீசி கீழே சாய்க்கின்றான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
முருகன் சுருட்டை ஒருவன் வாயில் வைத்து சினிமாவில் காண்பிப்பது போல கையில் தீப்பந்தம் வைத்துக் கொண்டு வாயில் பெட்ரோலை கொஞ்சம் வைத்துக் கொண்டு ஊதினேன் தீ சுருட்டை பிடித்தவன் முகத்தை பதம் பார்த்து அவன் முகமே கருகி விட்டது.

05.பிறகு விசிட்டிங் கார்டை பூட்டப்பட்ட கடைகளின் கண்ணாடி கதவுகளின் இடைவெளிக்குள் வீசி உள்ளே தள்ளினான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
அலுவலகத்தில் எனக்கு கொடுத்திருந்த விசிட்டிங்க கார்டை அதைப் போலவே வீசினேன் வீசும் பொழுது கையில் கட்டியிருந்த ராடோ வாட்ச் கழன்று கீழே விழுந்து உடைந்து விட்டது.

06.பிறகு ஒரு தக்காளியை டேபிளில் வைத்து விசிட்டிங் கார்டை வீசி தக்காளியில் சொருகினான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
காய்கறிக் கடைக்குப் போய் ஐந்து ரூபாய்க்காசை எடுத்து தக்காளியை நோக்கி வீச அது நேராக காய்கறிக் கடைக்கார பொம்பளையில் கண்ணாம்பட்டையில் அடிக்க காய்கறி மார்க்கெட் சங்க நிர்வாகிகள் அனைவரும் என்னை ஓட ஓட விரட்டி விட்டார்கள்.

07. பிறகு மாடியில் திறந்திருந்த விண்டோரை நோக்கி விசிட்டிங் கார்டை வீசி அதன் வழியே உள்ளே விழ வைத்தான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
பால்கனியில் நிற்கும் பெண்ணை நோக்கி எனது விசிட்டிங் கார்டை வீச அவள் என்னை தவறாக புரிந்து கொண்டு சட்டென மண்தொட்டியை எடுத்து எனது தலையில் போட்டு உடைத்து விட்டாள் எனக்கு தலையெல்லாம் மண்ணு பிறகு வீட்டுப் போயி குளித்தேன்.

08.பிறகு டேபிளில் எரிந்து கொண்டு இருந்த ஒரு மெழுகுவர்த்தியை விசிட்டிங் கார்டை வீசி விளக்கை அணைத்தான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
விளக்கை அணைப்பது தவறுதானே... ஆகவே விளக்கை ஏற்றுவோம் என்று மெழுகுவர்த்திக்கு பக்கத்தில் வைத்து அதில் பிடிக்க வைப்போம் என்று குச்சியால் தட்டி விட்டேன் அது பறந்து போய் பக்கத்து வீட்டு கூரையில் பிடிக்க இதற்கு போய் தெருவோடு என்னை துறத்தி அடிக்க வருகின்றார்கள்,

09.பிறகு உயரத்தில் காற்றுள்ள பலூனை தொங்க விட்டு அதை விசிட்டிங் கார்டால் வீசி உடைத்தான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
நாமும் பலூன் உடைப்போமே என்று அதைப் போலவே கட்டித் தொங்க விட்டு கல்லை எடுத்து எறிந்தேன் கல் நேராக பக்கத்தில் கட்டியிருந்த போகஸ் லைட்டை பதம் பார்த்து வீட்டையே இருட்டாக்கி விட்டது.

10.பிறகு ஒருவன் தலையில் டம்ளரை நிறுத்தி வைத்து விசிட்டிங் கார்டால் வீசி டம்ளரை கீழே வீழ்த்தினான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
இதுதாங்க என் வாழ்க்கையில் சோதனையைக் கொடுத்து இப்பொழுது உங்களுக்கு தகவல் சொல்ல வைத்து இருக்கின்றது நானும் அவனைப் போலவே ஒருவனை உட்கார வைத்து தலையில் டம்ளரை நிறுத்தி வைத்து டம்ளரை கீழே வீழ்த்துவதற்காக கோடரியை வீசினேன் அது குறி தவறி அவனது கழுத்தைப் பதம் பார்த்து விட்டது இப்ப அவன் அந்தோ மருத்துவமனை ஐ.ஸி.யூ.வில் இருக்கின்றானாம் இதுக்குப் போயி போலீஸ்ல சொல்லி என்னை கைது பண்ணி உள்ளே வைக்க சொல்றாங்க இது நியாயமா ? 

Chivas Regal சிவசம்போ-
நாயை அடிப்பானேன்... பீயை சுமப்பானேன் ?

காணொளி

திங்கள், நவம்பர் 27, 2017

நான் சொல்வதெல்லாம் உண்மை


அந்தக் குழந்தை பிறந்ததும் குடும்பத்தில் குதூகலம் காரணம் ஆண் குழந்தை அதன் அழகைப் பார்த்து ஆனந்தக் கூத்தாடினர் அவனது தாத்தா பேரனின் காலை தரையில் படாமல் காலின் தடம் பதிக்கும் இடத்தில் எல்லாம் டிஸ்யூ பேப்பர் போட்டு கொண்டே சென்று பார்த்து, பார்த்து வளர்த்தார். அவரே அழகான பெயரும் வைத்தார். இருப்பினும் கண்ணே, மணியே, பொன்னே, முத்தே, ராசா, தங்கம் என்றே அழைத்து வந்தனர். ஒன்றரை வயது நிறைவடைந்ததும் நல்லதொரு திருவோண நட்சத்திர தினத்தில் எல்.கே.ஜி.யில் சேர்த்தார்கள். ஊரிலிருந்த ஆயிரம் ஆண்டிகளை அழைத்து அன்னதானம் செய்தார்கள் அனைத்து ஆண்டிகளும் உண்டு களித்து அண்டாக்களை போண்டி செய்து விட்டு அந்தக் குழந்தைக்கு ஆசி வழங்கிச் சென்றனர். ஆசியின் பலனோ என்னவோ, எல்..கே.ஜி.யில் பயிற்றுவித்த ஆசிரியர் ஆவுடையப்பன் அந்தக் குழந்தையின் அறிவுப்பசியை கண்டு வியந்து பள்ளியில் சேர்த்த ஆறாவது மாதத்திலேயே முதல் வகுப்பில் சேர்த்து விட்டார். முதல் வகுப்பில் படிக்கத் தொடங்கிய மூன்றாவது மாதத்திலேயே வகுப்பு ஆசிரியர் ஆனந்தக்கூத்தன் பள்ளியின் தலைமையாசிரியரிடம் சொல்லி மூன்றாம் வகுப்புக்கு மாற்றி விட்டார். மூன்றாம் வகுப்பு ஆசிரியர் முடிசாத்தானிடம் குழந்தை அசாத்தியமான கேள்விக்கணைகளால் துளைத்து எடுத்தது குடும்ப வறுமையின் நிலையறிந்த முடிசாத்தான் பொறுமை காத்து வாழ்ந்து வந்தார்.

அந்தக் குழந்தை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளருவதோடு நாளுக்கு நாள் அறிவும் மின்னல் வேகத்தில் வளர்ந்தது அத்துடன் மட்டுமல்ல தர்மம் செய்யும் குணத்தில் கர்ணனையே வீழ்த்தும் அளவுக்கு சமூகத்தில் பரவலாக பேச்சு நிலவியது. காரணம் பள்ளிக்கூடம் கொண்டு செல்லப்படும் புத்தகங்களை இல்லாத ஏழை எளிய வீட்டு குழந்தைகள் கேட்டால் உடன் தனது மெமரி பவரால் படித்து விட்டு பிற குழந்தைகளிடம் கொடுத்து விடுவதால். இந்த விடயங்கள் பின்நாளில் திரைப்பட இயக்குனர் சங்கர் கேள்விப்பட்டுதான் எந்திரன் திரைப்படத்தில் புத்தகத்தை எடுத்து ரோபாட் மனிதன் படித்து மெமரியில் ஏற்றுவதாக காட்சி வைக்கப்பட்டது அரசல் புரசலாக பேச்சு வழக்கில் வந்தது. மேலும் இதனால் தினம் புதிய புத்தகங்கள் வாங்குவது பெரும் வேலையாக போய் விட்டதால் அவனது தாத்தா அரசாங்கத்திடம் மொத்தமாக ஆர்டர் செய்து வீட்டின் ஸ்டோர் ரூமில் ஒரு கன்டெய்னர் நிறைய புத்தகங்களை அடுக்கி வைக்க உத்தரவு இட்டார்.

இது மட்டுமல்ல குழந்தை யார் வந்து உனது கழுத்தில் கிடக்கும் செயினை எனக்கு கொடு ராசா என்று கேட்டு வாங்கிப் போவோர்களும் உண்டு. மேலும் பள்ளியில் பிற குழந்தைகள் கேட்டாலும் கொடுத்து விடும் பழக்கம் அந்தக் குழந்தைக்கு இருந்தது இப்படியே மூன்றாம் வகுப்பில் கூடவே படிக்கும் கூடலிங்கம் அடிக்கடி நகையை கேட்டு வாங்கி வீட்டில் கொடுத்து அவனது மூத்த சகோதரி கரை ஏறுவதற்கு வழி வகுத்து இருக்கிறான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இதன் காரணமாகவே அந்தக் குழந்தையை பார்க்க உறவினர் கூட்டம் தினம்தோறும் வந்து போனது. நகை மட்டுமல்ல யாராவது இல்லாத வீட்டு குழந்தைகள் கேட்டால் மேல்சட்டையை கழட்டிக் கொடுத்து விட்டு வீட்டுக்கு வரும் நாட்களும் இருந்தது. ஒருமுறை பள்ளி விட்டு கையிலும் புத்தகம் இல்லாமல் வெறுமனே பிறந்த மேனியாக வந்த அந்தக் குழந்தையை பார்த்து அவனது தாத்தா கேட்டார் ராசா உன்னோட உடை எல்லாம் எங்கே ? தன்னுடன் படிக்கும் இனியா கேட்டதால் கழட்டிக் கொடுத்து விட்டதாக சொல்ல, பொம்பளைப் புள்ளைக்கு எதுக்கய்யா உன்னோட உடையை கொடுத்தே ? என்று கேட்க அதற்கு நான் கொடுக்கணும்னு தீர்மானிச்சுட்டா எதைக் கொடுப்பேன்னு எனக்கே தெரியாது என்று சொல்லி இருக்கிறது அந்தக் குழந்தை. பின்நாளில் இந்த வசனத்தை கேள்விப்பட்டுத்தான் எலைய தலைவிதி வெசய் ஒரு திரைப்படத்தில் ///நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா எம் பேச்சை நானே கேட்க மாட்டேன்/// என்று வசனத்தை உல்டா செய்து எழுதியதாக அரசல் புரசலாக மக்கள் பேசிக்கிட்டாங்க...

மூன்று மாதம் ஆனது மூன்றாம் வகுப்பு ஆசிரியர் முடிசாத்தான் எப்படியோ தனது பள்ளி தலைமை ஆசிரியரிடம் தனது குடும்ப நிலையை சொல்லி அழுது அந்தக் குழந்தையை நான்காம் வகுப்புக்கு கடத்தி விட்டார். நான்காம் வகுப்பில் நுழைந்த மறுநாளே வகுப்பு ஆசிரியர் வணங்காமுடி சற்றே நிலை குலைந்தே போனார் காரணம் பதில் சொல்லி முடிப்பதற்குள் அந்தக் குழந்தையிடமிருந்து அடுத்த கேள்வி வந்து விழுந்தது பிற குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கவே நேரமில்லை அவரும் ஆறு மாதம் பார்த்தார், நேராக தலைமையாசிரியரிடம் முறையிட அவருக்கு ஏற்கனவே பிடிக்காத காரணத்தால் நான்காம் வகுப்பு ஒரு வருடம் படிக்கட்டும் அப்பொழுதுதான் இந்தக் குழந்தையின் அறிவு இன்னும் கூர்மையாகும் என்று உறுதியாக சொல்லி விட்டார். மீண்டும் ஒரு மாதம் கடந்தது வாழ்வை வெறுத்து வேறு வழியின்றி கடிதம் எழுதி வகுப்பின் கரும்பலகையில் ஒட்டி வைத்து விட்டு விட்டத்தில் தொங்கி விட்டார் வணங்காமுடி வாத்தியார். மூன்றரை வயது நிறையாமல் நான்காம் வகுப்பு படிக்கும் குழந்தையிடம் இவ்வளவு அறிவா ? பதினெட்டு பட்டியும் பரவலாக பொறணி பேசியது. நிலையை அறிந்த பள்ளி தலைமையாசிரியர் வீட்டுக்கே வந்து அந்தக் குழந்தையின் தாத்தாவிடம் இனியும் நாங்கள் வாத்தியார்களை காவு கொடுக்கத் தயாரில்லை என்று சொல்லி விட்டு மழைக்குகூட எங்கள் பள்ளி பக்கம் தயவு செய்து ஒதுங்க விடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டு போய் விட்டார்.

பள்ளி செல்லாமலேயே... அந்தக் குழந்தை ஊர் வம்பு இழுத்து வந்தது காலம் உருண்டோட குழந்தை ஞானத்தால் தன்னைத்தானே உணர்ந்து வாழ்க்கைப்பாடம் கற்றது பிறர் தன்னை அடிக்க நினைக்கும் முன்னே மற்றவரை அடித்து விடும் குழந்தை. திடீரென்று ஒரு கன்னத்தில் அறைந்தவுடன் மறு கன்னத்தையும் காட்டியது இதுதான் சந்தர்ப்பம் என்று கருதிய பிற குழந்தைகள் சாத்தி விட்டு நகன்றது விசயத்தை கேள்விப்பட்ட தாத்தா மனம் வருந்தினார் வீட்டில் சாயா குடித்துக் கொண்டு இருந்த அந்தக் குழந்தையிடம் ஏண்டா நம்ம பரம்பரைக்கே கொடுத்துதானடா பழக்கம் நீ வாங்கிட்டு வந்து நிற்கிறேயடா என்று சொல்ல சாயா சாயா எல்லாம் மாயா என்று சொல்லி விட்டு தேநீர் கோப்பையை கவிழ்த்தி விட்டு நடந்தது. பின்நாளில் இவைகளை கேள்விப்பட்டுதான் மாயா மாயா மாயா எல்லாம் சாயா சாயா என்று திரைப்படத்தில் பாடல் வந்ததாக செவி வழிச்செய்தி. மனம் வருந்திய தாத்தா படுத்த படுக்கையில் வீழ்ந்தார் இறுதியில் அந்தக் குழந்தையை அழைத்து நாட்டில் வில்லங்கத்தார் நிறைய வாழ்கின்றார்கள். இது மட்டுமல்ல அப்பாவி என்று பெயர் வைத்துக்கொண்டு அதிரடியாய் பேசி வாழ்பவர்களும் உண்டு நீ எப்படித்தான் இதையெல்லாம் கடந்து போகப்போகிறாயோ.... எதற்கும் நீ ஜேம்ஸ் ஊரணிப்பக்கம் குளிக்கப் போகவேண்டாம் என்று சொல்லி ///ஹும் உனக்குப்போயி கொலை தெய்வத்துக்கு வேண்டிக்கிட்டு கில்லர்ஜி''னு பேர் வச்சேனே.... என்னைச் சொல்லணும்/// என்று மனம் நொந்தே கிடந்து திருவோண நட்சத்திர தினத்தில் ஒருநாள் மறைந்தார்.

Chivas Regal சிவசம்போ-
ஹும் சரித்திரம் தறுத்திரம் புடிச்சதா இருக்கும் போலயே...


காணொளி

வெள்ளி, நவம்பர் 24, 2017

மனதில் ஒட்டாத, ஒட்டக ஓட்டம்


1998 நான் அபுதாபி மனநல மருத்துவமனையில் வேலை செய்த காலகட்டம் வேலை நேரம் காலை 06:30 மணி ஆனால் அதிகாலை 05:00 மணிக்கே எனது நிறுவனம் குப்பை அள்ளும் சிறிய லாரி போலிருக்கும் வண்டியில் பணியாட்களை கொண்டு வந்து கொட்டிச் செல்லும் அப்பொழுதெல்லாம் இப்பொழுது மாதிரி பேருந்துகள் கிடையாது கடுங்குளிரிலும் ஊரைவிட்டு வெளியே பாலைவனத்தில் அறுபது கி.மீ தூரமிருக்கும் விடுதியிலிருந்து நகரத்துக்குள் வரணும் அப்படி என்றால் எத்தனை மணிக்கு எழுந்து குளிக்க வேண்டும் அப்படியானால் மிகவும் அதிகமான சம்பளமாக இருக்குமோ என்று எண்ண வேண்டாம் அடி மட்ட சம்பளமும் இதுவே அடி மட்ட வேலையும் இதுவே நான் தொடக்கம் முதலே பேசப்பழகிக்கொண்டு வாழ்வாதாரத்தை மாற்றிக்கொண்டு எனது தகுதிக்கும் மீறிய உச்சாணிக் கொம்புக்கும் போய் விட்டேன் முதன் முதலில் நான் படித்த பாடம் இங்கு உயர்வதற்கு படிப்பறிவு வேண்டும் என்பதே அது நமக்கு எட்டாக்கனியாகி விட்டது இனி செய்ய வேண்டியது என்ன ? அரபு மொழி மட்டுமல்ல எந்த மொழியும் தெரிய வேண்டும். வாழ்வில் உயரலாம் இதையறிந்த நான் தொடக்கம் முதலே எல்லா மொழிகளிலும் ஆர்வம் காட்டி பேசப்பழகினேன். மொழி பயில்வதை ஒரு வேலையாகவே கருதினேன். இந்த மொழி என்று இல்லை தொடர்பே இல்லாத பிலிப்பைன்ஸ் மொழியைக் கூட சரளமாக பேசினேன். தற்பொழுது கொஞ்சம் தூரமாகி விட்டது மட்டுமல்ல மறதியும் கூடவே காரணம் வயதும் கடந்து விட்டதே... அன்று என்னோடு சென்று இன்றுவரை எந்த மொழியும் பழகாத நண்பர்களும் அங்கு உண்டு. வாழ்வும் அந்நிலையே காரணம் விரிவான சிந்தனை உணர்வுகள் கிடையாது இதற்கு முக்கிய காரணம் இன்னும்கூட திரைப்பட நடிகனின், அரசியல் தலைவனின் அடிமையாய் இருக்கின்றோமே என்று உணராதவர்கள். இதற்கு மேல் நடிகனைப்பற்றி எழுதினால் திரு. ஜியெம்பி ஐயா அவர்கள் கோபப்படலாம் நான் இப்பதிவை எழுதுவதே திரு. ஜியெம்பி ஐயா அவர்கள் கேட்டுக் கொண்டதற்காகவும், நண்பர் திரு. நெல்லைத்தமிழன் அவர்களுக்காகவுமே..சரி இனி விடயத்துக்குள் செல்வோம். காலை வந்தவுடன் அந்த அரையிருட்டில் நோயாளிகள் மட்டுமல்ல இரவுப்பணி செவிலியர்களும் உறங்கி கொண்டுதான் இருப்பார்கள் நான் உள்ளே வந்தவுடன் நேராக தொலைக்காட்சி காணும் கூடத்துக்குப் போயி உட்கார்ந்து விடுவேன் மற்ற நண்பர்கள் ஒருமணி நேரம் உறங்கி விடுவார்கள் அப்பொழுது அரபு நாட்டு தொலைக்காட்சி அலைவரிசைகளை விரும்பி பார்ப்பேன் முக்கிய காரணம் அதிலிருந்தும் சில வார்த்தைகளை புரிந்து கொள்ள இயலும் என்பதால் இதில் ஒட்டக பந்தயக் காட்சிகளை தினமும் பார்ப்பேன் அதில் ஒட்டகத்தை இயக்கி செல்வது எட்டு வயது முதல் பதினைந்து வயது வரையுள்ள ஆண் குழந்தைகள் அரேபியர்களின் உடைணிந்து இருக்கும் முதுகில் உட்கார்ந்து லாவகமாக விரட்டிச் செல்வதைக் கண்டு அரபி குழந்தைகள் திறமைசாலிகள்தான் என்று வியந்ததுண்டு வெகுகாலமாக பார்த்து வந்த நான் ஒருமுறை செவிலியர்களின் முதன்மையாளர் பாலஸ்தீனியர் பெயர் வலீத் முகம்மத் நான் மிகவும் மதிப்பவர் எனக்கு பல வகைகளிலும் உதவியாய் இருந்தவர் மொழி சொல்லிக் கொடுத்ததிலும்கூட மனிதனிடம் மதம் காணாமல் மனிதம் காணும் மாமனிதர் எமது நண்பர் திரு.வலீத் முஹம்மத் அவர்கள். இக்குணம் பாலஸ்தீனியரிடம் காண்பது மிகவும், மிகவும், மிகவும் அபூர்வம். நான் பார்த்துக் கொண்டு இருந்த பொழுது அவர் வந்தார் எழுந்த என்னை உட்கார் என்று சொன்னதோடு நான் இரசித்து பார்க்கிறேன் என்பதால் அலைவரிசையை மாற்றாமல் பார்த்துக் கொண்டு இருந்தவர் என்னிடம் கேட்டார்.இந்தக் குழந்தைகள் எந்த நாடு தெரியுமா ?
இந்த நாட்டு அரபிகளின் குழந்தைகள்தானே...
சற்றே விரக்தியாய் சிரித்தவர் சொன்னார்.
இது எல்லாமே உனது நாட்டுக் குழந்தைகள்தான்.
திடுக்கிட்டு ஆச்சயர்யமாய்....
எப்படி இது..... ?
இந்த பந்தயத்துக்காக இந்தியா, பங்களாதேஷ், ஸ்ரீலங்கா போன்ற ஏழை நாடுகளிடமிருந்து கடத்தப்பட்டு வரும் குழந்தைகளே இவர்கள்.
அப்படினா.... இது காவல்துறைக்கு தெரியாதா ? இந்தக் குழந்தைகள் மீண்டும் இந்தியா போகுமா ?
இது அடுத்து போவது அல்லாவிடம்தான்.
அதிர்ச்சியில் சட்டென எழுந்த என்னை உட்காரச் சொல்லி சைகை காட்டினார்..
இது கடத்தப்பட்டு வந்தாலும் சட்டப்படி விலைக்கு வாங்கி விசா கொடுத்து கொண்டு வரப்படுகிறது இந்த நாட்டுக்காரன் மீது கோபப்படாதே இவர்களை விற்ற உனது நாட்டுக்காரன் மீது கோபப்படு. அதற்காக இவன் செய்தது நியாயமென்று நான் சொல்லவில்லை. இந்தக் குழந்தையின் ஆயுள் காலம் இந்த ஒருநாள்தான் இது பிழைத்தால் மீண்டும் அடுத்த பந்தய நாளில் நிச்சயமாக இறந்து விடும்.
எப்படி ?
இந்த ஒட்டகம் எப்படி ஓடுதுன்னு நினைக்கிறே ?
அந்தக் குழந்தைகள் விரட்டுவதால்.
இல்லை உனக்கு தெரிந்தது அவ்வளவுதான் இந்த பந்தயத்தில் குழந்தைகள் கையில் கயிற்றை பிடித்து இருப்பது தெரிகிறது ஒட்டகத்தின் வயிற்றோடு குழந்தைகள் கட்டி இருக்கும். பந்தயத்திடலின் இருபுறமும் வரும் சீறுந்தை காட்டுகின்றார்கள் ஒட்டகம் ஓடுவதை காட்டுகின்றார்கள் எந்தக் குழந்தையையாவது நெருக்கமான காட்சியில் பார்த்து இருக்கின்றாயா ?
இல்லையே ஏன் ?
காட்ட மாட்டார்கள் காட்டினால் அது அரேபியக் குழந்தைகள் இல்லை என்பது தெரிந்து விடும் அதனுடைய உடைகள் மட்டுமே அரபி மற்றபடி இந்த ஒட்டகம் வேகமாக ஓடுவது எதனால் என்றால் இந்தக் குழந்தைகள் பயந்து அலறும் இந்த சப்தம் ஒட்டகத்துக்கு பிடிக்காது அதனால் மிரண்டு ஓடும், வேகமாக ஓடும். குழந்தைகள் முடிந்தவரை அலறி இறந்து விடும் அதையும் மீறி பந்தயம் முடியும்வரை குழந்தை பிழைத்து இருந்தால் அரபிகளின் அதிர்ஷ்டம் அடுத்த பந்தயம்வரை அதற்கு சோறு போட்டு வளர்ப்பார்கள். பிறகு மீண்டும் பந்தயத்தில் ஓடவிட கட்டி விடுவார்கள். அதிக பட்சம் மூன்று தடவை ஓடலாம் பிறகு கண்டிப்பாக குழந்தை இறந்து விடும்.
இதெல்லாம் எதற்காக ?
குறிக்கோள் முதல்பரிசை நமது ஒட்டகம் பெறவேண்டும்.
முடிவில் பணம்தானே... ?
ஆமாம் வேறென்ன ?


கேட்டுக்கொண்டு இருந்த எனது விழிகளின் ஓரம் ஈரம் கசிந்தது. எழுந்தவர் எனது முதுகில் ஆறுதலாக தட்டிக் கொடுத்து விட்டு உள்ளே சென்றார். ச்சே பணத்துக்காக குழந்தைகளின் உயிரில் விளையாட்டா ? இதற்கு அடிப்படை காரணம் நமது நாட்டை ஆள்பவர்களின் அவலட்சணம்தானே.... இந்த நாட்டுக் குழந்தை ஒன்றையாவது நமது நாட்டுக்கு கடத்தி செல்ல இயலுமா ? காரணமென்ன ? சட்டம் மக்களை சரியான வகையில் பாதுகாக்கிறது சிறிய நாட்டில், சிறிய மக்கள் தொகையில் செயல்பாடு அறிவாற்றலோடு இருக்கிறது. பரந்து விரிந்த மக்கள் தொகை நிறைந்த இந்தியாவில் ? ? ? இதற்கெல்லாம் ஆரம்ப காரணம் மக்கள்தானே அறியாமையாய் தேர்தலில் மை இட்டுச்சென்றதால் வந்த வினையா ? இது இறைவனுக்கு தெரியாதா ? உலகையே காக்கும் பரம்பொருள் என்கின்றார்களே அப்படியானால் இது வேற்றுக்கிரகமா ? தமிழ்க்கடவுள் முருகன் என்கின்றார்களே அப்படியானால் அவருக்கு அரபு பேசத்தெரியாதா ? எனக்கு இறை நம்பிக்கை அரை நம்பிக்கையாய் மாறுவது இந்த தருணங்களில் மட்டுமே எல்லா மனிதனும் தன் மதம் உயர்வானது என்றும், தனது கடவுளே உயர்ந்தவர் என்றும் கூவுகின்றனர். இவைகளை தடுக்க எந்த மதக்கடவுள் வருவார் ?

அதன் பிறகு காணொளிக் காட்சிகளை கூர்ந்து கவனித்தேன் ஆமாம் எந்தக் குழந்தைகளையும் அடையாளம் காண்பது கடினமாய் இருந்தது காரணம் நெருக்கமாக காட்டுவதில்லை. இந்த ஒட்டகத்தில் குழந்தை மடிந்து கிடக்கிறதே... ஏன் ? ஒருவேளை குழந்தை இறந்து விட்டதோ இந்த ஒட்டகத்தில் குழந்தையை காணவில்லையே ஏன் ? ஒருவேளை குழந்தை கீழே விழுந்து விட்டதோ ஓடும் ஒட்டகக் கூட்டத்தின் இடையில் தவறி விழுந்தால் அந்தக் குழந்தையின் நிலை ? இறைவா நீ இருப்பின் இவைகளை தடுக்க வேண்டும் இல்லையேல் மொத்தமாய் உலகை அழிக்க வேண்டும். நமது நாட்டில் மாட்டு வண்டி பந்தயங்களில் ஓடும் மாட்டின் வாலை முறுக்குவதும், அதை கடிப்பதையும் கண்டு கோபப்பட்டு இருக்கிறேன். பணத்துக்காக மாட்டை வதைக்கின்றார்களே என்று கேட்டால் முதல் பரிசுக்காக என்கின்றார்களே அதுவும் பணம்தானே இங்கு மனித உயிர்களே அதுவும் பிஞ்சு உயிர்கள் சிதைக்கப்படுகிறது என்னால் என்ன செய்யக்கூடும் ?

///அநியாயங்களை தட்டிக் கேட்க முடியவில்லை
என்றால் மனதால் வெறுத்து ஒதுங்கு///

இது இஸ்லாம் மதத்தில் சொல்லப்பட்டது என்பதை நண்பர் திரு. வலீத் முகம்மத் அவர்கள் அன்று எனக்கு சொன்னது நான் இதையே பாவிக்கிறேன் அதன் பிறகு தொலைக்காட்சியில் அவைகளை பார்ப்பதை நிறுத்தி விட்டேன் நல்லதை யார் சொன்னால் என்ன ? நான் திரு. கிருபானந்த வாரியார் அவர்களின் சொற்பொழிவையும் கேட்டவன், திரு. தந்தை பெரியார் அவர்களின் பேச்சையும் கேட்டவன் – கில்லர்ஜி

 

கணினி பிரச்சனை காரணமாக காணொளியில் சித்து வேலை செய்ய இயலவில்லை ஆகவே யூட்டியூப் இணைப்பு இதோ...


இப்பொழுதெல்லாம் இயந்திர மனிதனை வைத்தும் இயக்குகின்றார்களாம் நான் கண்ட காணொளிகள் இருபது வருடங்களுக்கு முன்பு உள்ளவை.

புதன், நவம்பர் 22, 2017

விஸ்வநாத் & ரூபன்


ரூபன் எப்படி இருக்கே ?
வா... விஸ்வா நல்லாயிருக்கேன் விஸ்வரூபம் வருமா ?
கமல் ஸார் நல்லாத்தானே படம் எடுத்துக்கிட்டு வந்தாரு தீடீர்னு ஏன் இப்படி ?
ஆமா அவுங்க ஆளுகளே... அவருக்கு பிரச்சனை கொடுக்கிறாங்க...
என்னையா சொல்றே அவுங்க ஆளுக யாரு ?
முஸ்லீம்
முஸ்லீம் அவுங்க ஆளா ? என்னையா குழப்புறே... அவரு ஐயங்கார் இது எல்லோருக்கும் தெரியுமே...
அவரு பேரென்ன ?
கமல் ஹாசன்.
அவரு பேரு கமல் ஹாசன் இல்லே கமால் ஹசன்
யாருய்யா சொன்னா உனக்கு... துணை எழுத்த தூக்கி வேற இடத்துல போட்டு புதுசா குழப்புறே ?
நீ அவரு பேரை இங்கிலீஷ்ல எழுது.
KAMAL HASSAN இந்தா படி
பார்த்தியா ? கமால் ஹசன்
உன்னைச் சொல்லி குற்றமில்லை பிறந்ததிலேருந்து உனக்கு தமிழை ஊட்டி வளர்க்காம உங்க அப்பா உன்னை ஊட்டி இங்கிலீஷ் காண்வெண்ட் ஸ்கூல்ல. படிக்க வச்சாருல அதான் இப்படி தமிழே தெரியாம வளர்ந்துட்டே அது மட்டுமில்லை ஆரம்பத்திலே கமலஹாசன்’’னு இருந்ததை கமல் ஹாசன் னு’’ மாத்துனாருல அதான் இனிமே நீ தமிழ் நாட்டு விசயங்களை படிக்காதே நிறைய குழப்பத்தை உண்டு பண்ணிடுவே பிறகு வெட்டும், குத்தும் நடக்கும்.


விஸ்வரூபம் வெளியான நேரத்தில் வெளியிட்டு நான் மட்டுமே படித்த பதிவு காரணம் அன்று அப்பாவி கில்லர்ஜியை யாருக்கும் தெரியாது. மூலப்பதிவை நீக்கி இதோ தங்களின் பார்வைக்கு...

காணொளி

திங்கள், நவம்பர் 20, 2017

மனிதாபிமானம்


இறைவன் மிகப்பெரிய ரசனையாளனாக இருக்க வேண்டும், மனிதன் விஞ்ஞான பாதையில் முன்னோக்கி ஓட முயற்சித்து அதன் விளைவாய் இறைவனிடமும் முந்திக் கொண்டு போய் விடுகிறான், இது இறைவனுக்கு முன் கூட்டியே தெரியாதா ? தெரிந்திருக்கும் என்பதே எமது கருத்து. புதிய முயற்சியென விண்கலம் உருவாக்குகிறான் தவறுதலாக எங்கோ போய் விழுந்து மனிதர்களை அழிக்கிறது, புதிய முயற்சியென விஷவாயுவை கண்டு பிடிக்கிறான் சோதனை ஓட்டமாக அப்பாவி மக்களின் உயிர்களை கொல்கிறான், இறைவன் நினைத்தால் இதை தடுக்க முடியாதா ?


ஸ்பெயின் நாட்டில் காளையை மைதானத்தில் விட்டு நான்கு வீரர்கள் சிவப்புத் துணியை காளையிடம் காண்பித்து மிரட்சியடைய வைக்கிறார்கள், காளை முட்ட வரும் பொழுது பாதுகாப்பான மரப்பெட்டிகளில்... மரப்பட்டியைப் போல் ஏறிக்கொள்கிறார்கள், அப்பொழுது ஒரு வீரன் குதிரையில் சுற்றி வருகிறான் கையில் மீன் தூண்டில் போலுள்ள மூன்று ஈட்டிகளை ஒன்றன்பின் ஒன்றாக காளையின் முதுகில் பாய்ச்சுகிறான், ஒரு குறிப்பிட்ட நேரம்வரை காளை தாங்குகிறது, பிறகு குருதி மொத்தம் வடிந்து வலி தாங்க முடியாமல் மயங்கி விழுந்து இறந்து போகிறது, உடன் தோற்று விட்டதென... அறிவித்து இரண்டு குதிரைகளில் கட்டி இறைச்சிக்காக இழுத்துப் போகிறார்கள், உடன் கூடியிருந்த மனிதர்கள். கை தட்டுகிறார்கள், மனிதாபிமானம் என்று சொல்கிறார்களே... அதை இந்த இடத்தில் நினைவு கொள்..


ரஸ்லிங் என்ற பெயரில் இரும்புக் கூண்டுக்குள் மனிதனை மனிதன் மிருகங்களைப்போல் ஆயுதங்கள் எடுத்து அடித்தே கொல்கிறான், இதை ஆயிரக்கணக்காண மனிதர்கள் ரசித்து கை தட்டுகிறார்கள், மனிதாபிமானம் என்று சொல்கிறார்களே... அதை இந்த இடத்தில் நினைவு கொள் எந்த பாவமும் செய்ய பக்குவப்படாத நான்கு வயதுக்குழந்தை ஸர்ப்பம் தீண்டி துடிதுடித்து இறந்து போகிறது, இறைவன் நினைத்தால் இதை தடுக்க முடியாதா ?

விபத்தில் அடிபட்டு துடிதுடிக்கிறான், உடனடியாக மருத்துவரிடம் தூக்கி கொண்டு போனால் காப்பாற்ற முடியும், சட்டத்தின் காரணமாய் எல்லோருமே ஒதுங்க வேண்டிய வாழ்க்கைச்சூழல், மனிதாபிமானம் என்று சொல்கிறார்களே... அதை இந்த இடத்தில் நினைவு கொள், இறைவன் நினைத்தால் இதை தடுக்க முடியாதா ?

மனிதனிடம் கேட்டால் விதி என்றும் முன் ஜென்மப்பாவம் என்றும் சொல்கிறான். மனிதாபிமானம் இது மனிதனிடம் இல்லை, இது இறைவனிடம் இல்லை, சட்டத்திடமுமா இல்லை ? அது எப்படி இருக்கும் ? சட்டத்தை அமைத்ததே மனிதன்தானே... ஆகமொத்தம் இதன் விடையென்ன ? இறைவன் தனது பொழுது போக்கிற்காக உலகமெனும் நாடக மேடையை அமைத்து மனிதன் என்ற பூச்சிகளை நடிகனாக உலாவ விடுகிறான், இறைவன் மிகப்பெரிய ரசனையாளனாக இருக்க வேண்டும் என்பதே எமது கருத்து. தங்களின் கருத்தென்ன நட்பூக்களே...

காணொளி

வெள்ளி, நவம்பர் 17, 2017

தமிழ் வாழ்க !


கோவை விமான நிலையம் சித்ரா அவினாசி சாலை இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த எனது விழிகளில் கண்டதுதான் மேலேயுள்ள புகைப்படத்திலிருக்கும் வாகனத்தின் இலக்கப் பலகை உடன் என் மனம் படபடத்தது காரணம் தமிழ் எண்களில் எழுதியது மனதுக்கு சந்தோஷமளித்தாலும் அந்த எண்கள் எழுதிய முறைகளில் பிழைகள் இருக்கிறது அவரிடம் சொல்ல வேண்டுமே... சொன்னால் ஏற்றுக்கொள்வாரா ? இருப்பினும் பிழை என்றறிந்தும் சொல்லாமல் செல்வது தமிழன்னைக்கு செய்யும் துரோகம் அல்லவா ! ஆகவே விரட்டினேன் அவருடையது ஃபல்சர் என்னுடையது ஸ்கூட்டி அவர் பறந்தார். நானும்தான் இருப்பினும் நான் அபுதாபியில் ஓட்டும் சட்டத்தை இன்னும் கடைப்பிடித்து வருகிறேன் இவரோ சராசரி இந்தியனாய் தொடர்ந்து விடாமல் துறத்தி கொடிசியா, ஹோப் காலேஜ், ஃபன் மால், பீளமேடு, கடந்து வந்தும் அவரைப் பிடிக்க முடியாமல் இனி இந்தியனாய் மாறுவோம் என்று விரட்டினேன் நவஇந்தியா வரும் பொழுது பிடித்து விட்டேன் தலைக்கவசத்தை உயர்த்தியபடியே....
ஸார் இது நீங்களாக எழுதியதா ?
ஆமா..
இதுல பிழை இருக்கு.
வாகனத்தை ஓரங்கட்டி நிறுத்தினார் நானும் நிறுத்தினேன்.
ஸார் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க...
சொல்லுங்க ஸார்
இந்த எண்கள் தமிழில் எழுதி இருக்கீங்க சந்தோஷம் ஆனால் எண்களில் பிழைகள் இருக்கிறது இது சராசரி தமிழ் எழுத்துகள்தான் எண்கள் அல்ல ! இதில் நான்கும், மூன்றும் பிழை மற்றவைகள் சரிதான் இருந்தாலும் எல்லாமே தமிழ் எழுத்து வழியாக எழுதி இருக்கீங்க...
உங்களுக்கு தெரியுமா ஸார் ?
தெரியும்.
சரி எழுதித்தாங்க நான் மாற்றிக் கொள்கிறேன்.
உடன் ஒரு பேப்பரில் ஒன்றிலிருந்து பத்துவரை எழுதிக் கொடுத்தேன்.
ரொம்ப சந்தோஷம் ஸார் எல்லா நண்பர்களிடமும் தமிழ்ப்பற்று உள்ளது போல பேசுவேன் ஆனால் சரியாக தெரியாமல் எழுதியதற்காக வருந்துறேன்.
நான்கூட கோபப்படுவீங்களோன்னு நினைச்சேன் சித்ராவிலிருந்து விரட்டி வர்றேன் ஸார்.
உங்களைப் பார்த்தால் கோபம் வராது பார்த்திருந்தால் நிறுத்தி இருப்பேன்.
பரவாயில்லை.
உங்களை சந்திச்சதில் ரொம்ப சந்தோஷம் ஸார்.
நன்றி மாற்றி எழுதிடுங்க...
நல்லது ஸார் இன்றைக்கே எழுதிடுறேன்.
போலீஸ்காரங்க யாருமே கேட்டதில்லையா ?
யாருக்கு ஸார் இதெல்லாம் தெரியுது ?
நன்றி வர்றேன்.
நன்றி ஸார்.
அதற்கு மேல் பேசுவதற்கு சூழல் சரியில்லை அடுத்த ஸிக்னலில் நிற்கும் பொழுது கிளிக்கினேன். அந்த முகம் அறியாத நண்பர் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்தியனான நான் ஹிந்துஸ்தான் கல்லூரி சாலையில் பறந்தேன்.

நட்பூக்களே சமீபத்தில் வாட்ஸ்-அப் குழுக்களில் பலமுறை தமிழ் எண்களை அறியத் தருகிறேன் என்று தமிழ் எழுத்துகளையே பதிவிட்டு எண்கள் என்று சொல்கின்றார்கள் இது தவறு பொது விடயத்தை அதுவும் நம் தமிழ் மொழியைப்பற்றி பிறருக்கு பொது இடத்தில் சொல்லும் பொழுது அதில் மிகத்தெளிவான பொருளை நாம் முன்வைத்தல் வேண்டும் இதுவே நாம் நமது அடுத்த தலைமுறைக்கு கொடுத்துச் செல்லும் பாடமாகும். இதற்கு மறுப்பு சொல்லி உடனே நானும் வாட்ஸ்-அப்பில் பதில் விளக்கி செல்லிலேயே தமிழ் எண்களை கொடுத்து இருக்கிறேன். ஏற்கனவே இதனைக் குறித்து எனது தளத்தில் பதிவும் எழுதி இருக்கிறேன் இதோ அந்த இணைப்பு தமிழ் எண்கள்


இதுதான் தமிழ் எண்கள் அறிந்து கொள்க – கில்லர்ஜி
௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰
1  2  3  4  5  6  7  8  9  0

காணொளி
Related Posts Plugin for WordPress, Blogger...