எனக்கு ஐந்து அல்லது ஆறு
வயதிருக்கும் என்று நினைக்கிறேன் நான் கட்டிக்கொள்ள வேண்டிய முறைப்பெண் இதற்கு
மேல் ஊர், பெயர் விபரம் வேண்டாமே காரணம் இந்தப்பதிவுகூட நாளை இந்தப் பெண்ணின்
வாழ்க்கைக்கு இடையூறு வரலாம் அந்தப்பெண் மூக்கை வடித்துக் கொண்டு பார்ப்பதற்கு
அசிங்கமாக இருக்கும் எல்லோரும் என்னிடம் நீ தான் இந்தப் புள்ளையை கல்யாணம்
செய்துக்கிறணும் என்பார்கள் எனக்கு கோபம் வரும் சண்டை போடுவேன் இன்னும் ஞாபகம்
இருக்கின்றது பலமுறை பிள்ளையார் கோயிலுக்கு சென்று பிள்ளையாரப்பா எனக்கு இந்தப்
புள்ளையை கல்யாணம் செய்து வச்சிடாதே எந்த நேரமும் மூக்கை வடிச்சுக்கிட்டே இருக்கு
எல்லோரும் எனக்கு கட்டி வைக்கப் போறதாக சொல்றாங்க இந்த ஆபத்திலிருந்து நீதான்
என்னை காப்பாற்றணும் என்று வேண்டுவேன்.
எனது அப்பத்தா கேட்பார் நீ அடிக்கடி
கோயிலுக்கு போறீயே... எதற்கு ? நான் சொல்வேன் எனக்கு அறிவு (?) நிறைய வளரணும்’னு வேண்டிக்கிட்டேன் அன்றே நான் பொய் சொல்லப்
பழகியதற்கு காரணம் நானா ? இந்த சமூகம்தானே... காலம் உருண்டோடியது சொந்தம்
தொடர்ந்து கொண்டுதான் இருந்தது ஊர் மாற்றங்கள் வேலை வாய்ப்புகள் நான் அப்பெண்ணை
சுத்தமாக மறந்து விட்டேன் என்பதே நிதர்சனமான உண்மை காரணம் நான் கட்டிக்கொள்ளும்
முறைப்பெண்கள் மட்டும் 17 பிறகு அப்படி இப்படி என்று
ஒரு 10 இருக்கலாம் ஆனால் நடந்தது
என்ன ?
காலம் உருண்டோடி மீண்டும்
அப்பெண்ணை சந்தித்தேன் உண்மையிலேயே நான் வியந்து மயங்கி மனம் வருந்தினேன் இதுவும்
நிதர்சனமான உண்மை அப்சரஸ் என்றும், அழகி என்றும், அஜந்தா என்றும், தேவதை என்றும்,
ரம்பா, என்றும், ஊர்வசி என்றும், மேனகா காந்தி என்றும் சொல்வார்களே அதெல்லாம்
எனக்கு சர்வ சாதாரணமாக தோன்றியது எத்தனை ஆண்டுகள் கழித்து இந்த சந்திப்பு
நிகழ்ந்தது தெரியுமா ? எனக்கு மணமுடித்து இரண்டு பொக்கிஷங்கள்
பிறந்து என்னவள் மறைந்து இவ்வளவும் கடந்த பிறகு. விடுமுறையில் வரும் பொழுது
அனைவரது வீடுகளுக்கும் ஒருமுறை மட்டுமே சென்று விடுவது வழக்கம் மீண்டும் செல்ல
காலம் போதாது காரணம் சொந்தங்கள் அதிகம் ஒருமுறை இந்தியா வந்திருந்த பொழுது அந்த
வீட்டுக்கு போனேன் உள்ளே அப்பெண் முதல் பிரசவம் ஆண் குழந்தை பெற்று ஒரு மாதமே ஆன
நிலையில் பிறந்த வீட்டில் முதல் முறையாக கண்டேன் குழப்பமாகி, தர்ம சங்கடத்துடன்
இது..... யார் ? எனக்கேட்டேன்.
யாரா ? தெரியலை
இவதான் ................. பார்த்து பல வருஷம் ஆச்சுல..... அதான்
எனக்குள் வியப்பு,
குழப்பம், ஆச்சர்யம், கவலை, வேதனை, ஆத்திரம் யார் மீது ஆத்திரம் ? எனக்கே புரியவில்லை இப்பெண்ணையா ? நாம் பிள்ளையாரிடம் வேண்டாம் என்று அன்று வேண்டிக் கொண்டோம்
நீண்ட நேரம் பேச்சு வராமல் மௌனமாகி விட்டேன் என்ன சொல்ல... யாரிடம் சொல்ல ? குழந்தைக்கு
அன்பளிப்பு பணத்தை கையில் திணித்து விட்டு வெளியேறினேன் ச்சே விதி என்று
சொல்வார்களே அது உண்மைதானோ ?
விதி ஊமையாகி விட்டதே நாம் இவ்வளவு காலம்
கடந்து சந்தித்து இருக்கின்றோமே... இதற்கு அயல்தேச வாழ்க்கையும் ஒரு காரணம்தானே ? பணத்துக்கு ஆசைப்பட்டு பந்தத்தை இழந்து விட்டோமே நம்மைப்போல
எத்தனை மனிதர்கள் இப்படி மனம் புழுங்கி வாழ்வார்கள் இவள் வாழ்க்கையைத் தொடங்கும்
பொழுது நமக்கு எல்லாமே முடிந்து விட்டதே நமக்கு எல்லாமே விரைவில் முடிந்து விட்டதே
இன்னும் ஒன்றுதான் பாக்கி நாம் விரும்பாத வாழ்க்கையை நமக்குள் திணித்து விட்டது
என்னை புரியாத ஆறறிவு (?)
மனிதர்களா ? அல்லது பிள்ளையார் போன்ற இடைப்பட்டவர்களா ?
சட்டென ‘’அந்த’’ பிள்ளையாரின் நினைவு வந்தது அவரைப் பார்த்து
திட்டி விட்டு வந்தால் மனப்பாரம் குறையும் போல் தோன்றியது அவரும் இதே ஊரில்தானே
இருக்கின்றார் எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு உடனே அதே பிள்ளையாரை காணப் போனேன்
நுழைவாயிலில் ஒரு பெரியவர் நேர்த்திக்கடனுக்கு லஞ்சமாக ஒரு தேங்காயை உடைத்து
விட்டு பிள்ளையாருக்கு ஆன்மீக இரு கை சல்யூட் வைத்து விட்டு சென்றார் வாசலில்
பண்டைகால மளிகைக் கடையில் இருப்பது போல மரத்தில் அடுக்குப் பெட்டிகள் டோக்கன்
பெற்று செருப்புகள் அதனுள் சிறை வைக்கப்பட்டது, அன்று நான் கயிற்றைப் பிடித்து
இழுத்த அடித்த கோயில் மணி தொங்கவில்லை எலட்ரானிக் செட்டிங் ஸிஸ்டத்தில் சுவற்றில்
பதிக்கப்பட்டு இருந்தது, தூண்களில் கருப்பு அழுக்குகளோடு விபூதியும், குங்குமமும்
இல்லை டைல்ஸ் பதிக்கப்பட்டு இருந்தது, தடுப்புக்கம்பிகள் இருந்தது, டியூப் லைட்கள்
அதன் மையத்தில் இறை பயம் இல்லாத மனிதர்கள் உபயம் திரு. இன்னாரு மகன் மன்னாரு என்று
வைத்திருந்தார்கள் உண்டியல் வெகு உறுதியாக ஸ்டீல் பாக்ஸில் இருந்தது, அதன்
கீழிலும் உபயம் மாவுடியான் வெல்டிங் ஒர்க்ஸ் என்று எழுதி இருந்தது, ஐயரின் தலையில்
குடுமி இல்லை இடுப்பில் சாம்ஸாங் செல்பேசி சொருகி இருந்தது ஆனால் பிள்ளையார் கொஞ்சமும் மாற்றமின்றி அதே அழுக்குத் துண்டை
இடுப்பில் கட்டி இருந்தார் நான் பிள்ளையாரைக் கண்டதும் பிள்ளையார் என்னிடம்
சொல்வது போல் ஒரு அசிரீரி குரல் ஒலிப்பது போன்ற உணர்வு
பீடை பிடித்த உன்னை அவள்
மணந்திருந்தால் அவளது இன்றைய நிலையென்ன ?
செவிட்டில்
அறைவது போலிருந்தது எனக்கு உடல் சிலிர்க்க சட்டென என்னுள் எண்ணம் மாறியது
உண்மைதான் அவள் நீண்ட தீர்க்காயுசுடன் சுமங்கலியாய் எல்லா வளமும், நலனும் பெற்று
பல்லாண்டு காலம் வாழட்டும் பிள்ளையாருக்கு நன்றி உரைத்து அவருக்கு கொடுக்க வேண்டிய
லஞ்சத்தை உறுதியான ஸ்டீல் பாக்ஸில் போட்டு விட்டு எல்லாம் நன்மைக்கே என்ற பெரியோர்
வாக்கு உண்மைதானோ என்ற சிந்தையுடன் கோயிலை விட்டு வெளியேறினேன்.