வணக்கம்
நட்பூக்களே.. ஸ்விட்சர்லாந்தில் வசிக்கும் ஆல்ப்ஸ்
தென்றல் என்ற தளத்தின் நிர்வாகி திருமதி. நிஷாந்தி பிரபாகரன் அவர்களுக்கு என்மேல்
கோபமோ, என்னவோ தெரியவில்லை பயணத்தைக் குறித்த பத்து கேள்விகளுக்கு பதில் ‘’ஜொள்ள’’ வேண்டுமென்று சொல்லி விட்டார்கள் வேறு வழி.
தெரியாத கேள்விகளுக்கு அறியாத பதில்களை
வழக்கம்போல் தேடினேன்.
அது
எது ? இது.
புகைப்படங்களை எலியால் சொடுக்கி பார்க்கவும்.
01. பயணங்களில் ரயில் பயணம் எப்பொழுதும் அலாதிதான் உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கின்றதா ?1975 என்று நினைவு இராமநாதபுரத்திலிருந்து பாம்பன் சின்னம்மா வீட்டுக்கு இரயிலில் போனேன், போவேன் தொடர்ந்து பள்ளி விடுமுறைக்கு அங்கு எனது பொழுது போக்கு சிறிய தூக்குச்சட்டியில் 2 ½ Kg நண்டு மட்டுமே சின்னம்மா மசால் போட்டு பொரித்து தரும் நண்டுகளை வாங்கி கொண்டு இரயில் பாலத்துக்கு சென்று மையத்தில் தலைக்கு மேலே இரயில் போய்க்கொண்டு இருக்கும் அடியில் கூண்டு போல் இருக்கும் அதனுள் உட்கார்ந்து கொண்டு மீன்களுக்கு உணவு அளிப்பேன் ஆம் நண்டின் கறி மீன்களுக்கு பிடிக்காது என்பதை எனது ஞானத்தால் அறிந்த நான் கறியை மட்டும் தின்று விட்டு நண்டின் கூட்டை அன்புடன் மீன்களுக்கு எறிவேன் அதை மீன்கள் நுகர்ந்து பார்த்து விட்டு திங்காதது ஏன் ? என்ற சிந்தை மட்டும் இன்றுவரை எனது ஞானத்தால் அறிய முடியவில்லை அது ஒரு கனாக்காலம் சித்தப்பா இரயிவே டிபார்ட்மெண்டில் பாலத்தின் மையத்தில்தான் வேலை பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது
02.
மறக்க முடியாத
மகிழ்ச்சியான பயணம் எது ?
2012-ல் ஜெர்மனியிலிருந்து ஃப்ரான்ஸுக்கு பேருந்தில்
போகும் பொழுது கிடைத்த அமெரிக்க நண்பன் வில்லியம்ஸ் அவனுடன் பேசிக்கொண்டே போனபோது
குளிருக்காக பேருந்து நின்ற இடங்களில் எல்லாம் அவன் சிகரெட் ஊதிக்கொண்டே வந்தான்
அவனது யோசனைப்படி வாழ்வில் முதல் முறையாக நானும் ஒரே இரவில் அவன் தந்த ஐந்து சிகரெட்டை புகைத்தது அதுவே எனக்கு கடைசி
சிகரெட்டும்கூட மறக்க முடியாதது பிறகு ஜெர்மனியிலிருந்து ஸ்விட்சர்லாந்துக்கு
ரயிலில் பயணம் போனேன் அதில் சந்தித்த இரண்டு ஸ்விஸ் மாணவர்கள் மொழி ஆர்வலர்கள்
அவர்கள் என்னிடம் கேட்டு எழுதிக்கொண்ட தமிழ், ஹிந்தி வார்த்தைகள் அவர்கள் டெல்லி
தாஜ்மஹாலைக் குறித்து கேட்ட பொழுது ஆர்வக் கோளாறு காரணமாக நானும் டெல்லிதான் எனது
வீடு தாஜ்மஹால் எதிர்புறம்தான் என்று பொய் சொல்லி பிறகு அவர்கள் இராமேஸ்வரம்
கோயிலைப்பற்றி கேட்ட பொழுது நானும் தமிழன்தான் எனது ஊர் தேவகோட்டையில் இருந்து
இராமேஸ்வரத்துக்கு 105 K.M தான் என்று சொல்ல முடியாமல்
வருந்தியது.
03.
எப்படி பயணிக்க
பிடிக்கும் ?
தனிமையில்
தூரப்பயணமாக ‘தல’ M.K.T. பாடல் கேட்டுக் கொண்டே நானே
சீரூந்தை ஓட்டிச்செல்வது 220 K.M வரை ஜெர்மனியில் சீரூந்து
ஓட்டிய அனுபவம் உள்ள எனக்கு அதன் கடைசி எல்லையான 380 K.M வரை ஓட்டுவது ஆனால் சாலையில் ஸைத்தான்கள் (RADAR) இருக்ககூடாது அடுத்து
கால்களால் சீரூந்து ஓட்டுவதும் பிடிக்கும், அதை அப்படியே காணொளி எடுப்பது அதைவிட
பிடிக்கும் மற்றொன்று மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு இரயிலில் செல்வது
பிடிக்கும் இது இன்னும் நிறைவேறாத நீண்டநாள் ஆசை.
04.
பயணத்தில் கேட்க
விரும்பும் இசை ?
என்றுமே
எனக்கு பிடித்த ‘தல’ M.K. தியாகராஜ பாகவதர் பாடல்,
சீர்காழி S. கோவிந்தராஜன் மற்றும் புதிய
பாடகர் T.M. சௌந்தரராஜன் பாடல்கள்தான்.
காணொளி
05.
விருப்பமான பயண நேரம் ?
அதிகாலையில்
தெற்கு திசையிலிருந்து... மேற்கு திசை நோக்கி பறக்கும் விமானத்தில் ஜன்னல் ஓரமாக
உட்கார்ந்து கிழக்கு திசையின் ஏழு நிறங்களை ரசிப்பது பிடிக்கும் இது பல
தருணங்களில் எனக்கு கிடைத்தது.
இப்படிப் போகவும் ஆசையிருக்கூ.....
06.
விருப்பமான பயணத்துணை.
துணை தேவையில்லை
காரணம் எனது சிந்தை, பேச்சு பலருக்கும் பிடிக்காது அடிப்படை காரணம் நிகழ்கால
மனிதர்களின் சிந்தனையோடு, செயல் பாட்டோடு ஒத்துப்போக என் மனம் இசைவதில்லை இதன்
காரணமாக சில பதிவர்கள்கூட எனது பதிவுக்கு வருவதை நிறுத்தி விட்டார்கள் என்பது
எனக்கே புரிகின்றது இருப்பினும் எனது தீர்மானமான எண்ணம் எனது சிந்தை உண்மையான
நியாயமே என்னைப்புரிந்து கொண்ட ஒரு ஜீவன் தற்போது உலகில் இல்லை ஒருக்கால் இனி
பிறக்கலாம் அதற்கு முன் நான் இறக்கலாம் ஆகவே நான் தனிமை விரும்பி எனக்கு தனிமை
பிடிக்கும், அப்படி சிந்திப்பது பிடிக்கும் அதன் வழியேதான் எனது பதிவுகள்
பிரசவமாகின்றன... ஆகி கொண்டும் இருக்கின்றன...
07.
பயணத்தில் படிக்க
விரும்பும் புத்தகம் ?
பொதுவாக
சீரூந்து ஓட்டிச்செல்லும் பொழுது புத்தகம் படிப்பது நடவாத காரியம் ரயிலில்
வாயிற்படியில் நின்று கொண்டு இயற்கை அழகை ரசித்து செல்வது பிடிக்கும் அதேநேரம்
இரயில் ஓட்டுவது பிடிக்காது காரணம் இரயிலின் ஹாரன் சப்தம் எனக்கு பிடிக்காததே...
அடுத்து விமானத்தில் போகும் பொழுது நான் ஓட்டுவதில்லை காரணம் சாலையே இல்லாமல்
பக்கத்தில் போட்டியாக வேறு விமானம் வராமல் தனியாக ஓட்டுவதில் விருப்பமில்லாதவன் இதன்
காரணமாக டிரைவர்களிடம் விமானத்தை கொடுத்து விடுவது வழக்கம் பெரும் பாலும் அந்த
நேரங்களில் பதிவு எழுதுவேன் அப்படி எழுதிய பதிவுகளும் இருக்கின்றது அதேநேரம்
கப்பலில் பயணித்த (கனவில்தான்) அனைத்து நேரங்களிலும்
கண்டிப்பாக உறங்கி விடுவேன் அது என்னமோ தெரியவில்லை அது அப்படித்தான்.
இந்த வண்டி ஓட்டவும் ஆசையிருக்கு ஆனால் ஊர் உலகம் Eyeயும், Earரும் வச்சு ஒரு மாதிரியாக பேசிடுமே...
08.
விருப்பமான ரைட் அல்லது
டிரைவ் ?
மலைகளில்
வளைந்து குழைந்து சீரூந்து ஓட்டிச்செல்வது ரொம்ப ரொம்ப பிடிக்கும் அது இங்கு அலைன்
என்ற ஊரில் ஜுபைல் அல் ஹபீப் என்ற இடத்தில் அடிக்கடி நிறைவேற்றிக் கொள்வேன்
சீரூந்தில் ஃபாஸ்ட் ட்ராக்கில் வேகமாக போய்க்கொண்டு இருக்கும் பொழுது பின்னால்
வந்து லைட் அடித்து காண்பித்து வழி கேட்பவருக்கு உடன் வழி கொடுத்து விட்டு
விரட்டிப்போய் பின்னால் லைட் அடித்து வழி கேட்பது பிடிக்கும் இப்படி ஒருமுறை 2011-ல் நள்ளிரவில் OMAN நாட்டில் சீரூந்து ஓட்டிச்
சென்று அந்த நாட்டு POLICE C.I.D யிடம் மாட்டிக் கொண்டு எனது பிளேடால் தொலைஞ்சு போடா என்று அபராதத்திலிருந்து
விடுபட்டதும் உண்டு.
09.
பயணத்தில் நீங்கள்
முணுமுணுக்கும் பாடல் ?
சொன்னால்
நம்புவீர்களோ இல்லையோ நான் பிறந்ததிலிருந்து இதோ இந்த பாடல்தான்
நான் எப்பொழுதுமே கேட்பது நீங்களும் கேளுங்களேன்.
காணொளி
10.
கனவுப் பயணம் ஏதாவது ?
சிறிய
வயதில் என் ஐயா ஞானி ஸ்ரீபூவு ஊரில் வீட்டருகே கிடக்கும் சாணம், குப்பைகளை
ஏற்றிக்கொண்டு தொலை தூரத்திலிருக்கும் வயல் வெளிகளுக்கு மாட்டு வண்டிகளில் கொண்டு
செய்வார்கள் அந்த மாட்டு வண்டிகளை பின்புறமாக பிடித்துக்கொண்டே நடந்து போய்
குப்பைகளை வயல்களில் பரப்பி விட்டு காலியாக வரும் மாட்டு வண்டியில் ஏறி வீட்டுக்கு
வருவது மறக்க முடியாத நினைவுகள் அவை மீண்டும் கிடைக்குமா ? என்ற
கனவு எனக்கு இன்னும் இருக்கின்றது மேலும் கப்பலில் ஒரு நாள் உறங்காமல் பயணிக்கும் (நனவில்தான்) கனவும் இருக்கின்றது.
இப்புட்டுதாங்கோ... இதுக்கு மூன்று பதிவர்களை கோல்மூட்டி விடுவதும் மரபாம் இதுதான்
கஷ்டம் காரணம் நான் தொடர் பதிவு ஆரம்பிக்கும் பொழுது வெகு சுலபமாக பத்து நபர்களை வலையில் பிடித்து வலைப்பூவில்
இணைத்து விடுவேன் இப்ப என்ன செய்வது ? விரட்டிப்
புடிச்சேன் இந்த மூன்று நபர்களை...
01. அன்பின்
ஜி குவைத் மன்னர் திரு. துரை செல்வராஜூ அவர்கள்.
02. இனிய
ஜி திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்கள்.
03. அன்பு
நண்பர். ஃப்ரான்ஸ் புதுவை வேலு அவர்கள்.
பதிவர்களுக்கு
பயணம் என்ற பெயரில் நல்ல சிந்தனையை தூண்டி விட்ட சகோ திருமதி. மைதிலி கஸ்தூரி ரெங்கன் அவர்களுக்கு இந்த இடத்தில் பாராட்டுகளையும் தெரிவிக்கிறேன் இவ்வகை தொடர் பதிவுகள் நமது நட்பை இன்னும் இறுக்கமாக்கும் என்பது உண்மை கீழ் காணும்...
‘’தொட்டார் மனதுக்குள் இடாதோர் பிணக்கு
கனி மனதுள் வருமோ இழுக்கு’’
என்ற
குறளைப் போல SORRY என் குரலைப் போல நன்றான செயலே...
வலை
நட்பூக்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துகள்
அன்புடன்
தேவகோட்டை
கில்லர்ஜி அபுதாபி










