அன்பு நெஞ்சங்களே கடந்த வருடம் நான் வலைச்சர
ஆசிரியராக இருந்த பொழுது எமிரேட்ஸ் அல் ஸார்ஜாவில் வாழும் பிரபல வலைப்பதிவர் சகோதரி திருமதி. மனோ சாமிநாதன்
அவர்களிடம் ஒரு ஓவியம் வரைந்து கேட்டிருந்தேன் என்பது தங்களுக்கு
நினைவிருக்கலாம் அந்த ஓவியத்தை உள்ளன்போடு வரைந்து தந்த சகோ அவர்களுக்கு எமது
நன்றி.
மீனாம்பதி
முதியோர் காப்பகம்.... வேப்பமரத்தடி நிழலில்...
ஏங்க,
யேன் ஒரு மாதிரியா இருக்கீங்க... ?
ஒண்ணுமில்லே மீனாட்சி.
இல்லை
எனக்குத் தெரியாதா உங்களைப்பத்தி, யேன் எங்கிட்டே மறைக்கிறீங்க ?
இல்லை, என்னைக்காவது நமக்கு இப்படி ஒரு
நிலைமை வரும்னு நீ நினைச்சு பார்த்திருப்பியா ?
நான் எதுக்காக இப்படி நினைக்கப் போறேன் ? அதைப்பத்தியே
நினைக்காதீங்க.... மனசு கவலைப்பட்டா, ஆத்திரமாகி, கோபம் வரும் அதுவே சாபம்
விடச்சொல்லும் அப்புறம் நம்ம புள்ளைங்களுக்குதானே... கஷ்டம் மறந்துடுங்க....
இன்னும்கூட நீ புள்ளைங்கமேலே பாசம்
வச்சுருக்கியா மீனாட்சி ?
என்ன இருந்தாலும் நம்ம புள்ளைங்கதானே....
என்னாலே மறக்க, முடியலையம்மா... அவங்களை நினைச்சாலே கோபமா வருது.....
யேன் கோபம் வருது தப்பு உங்களிடம்தானே
இருக்கு... எல்லா
சொத்தையும் இப்பவே புள்ளைங்களுக்கு எழுதி வைக்க வேண்டிய அவசியம் என்ன வந்துடுச்சு ?
நமக்குப் பிறகு சொத்து பிரிக்கிறதுல
அவங்களுக்குள்ளே சண்டை வரக்கூடாதுன்னு நினைச்சு நியாயமான முறையிலே பிரிச்சு
எழுதுனேன், எல்லாமும் மாத்தியாச்சு இந்த வீடு மட்டும் ஏன்... மிச்சம் இருக்கு நம்ம புள்ளைங்க
எல்லோரும் ஒண்ணாத்தானே இருக்கோம்னு நினைச்சேன், ஆனா நான் உன்னை மறந்துட்டேனே அது
எப்படி ? அதுதான், தாங்க முடியலை.
சேச்சே என்னங்க நீங்க தொழில்ல எவ்வளவு
எதிரிகளை எதிர்த்து வந்தீங்க நீங்களா... இப்படி சின்னக் குழந்தையாட்டம் கண்
கலங்கிகிட்டு, இனி நமக்கு என்னயிருக்கு ? வீடு போ, போன்னு சொல்லிடுச்சு, காடு வா, வான்னு
சொல்லுற வயசு.
தொழில் எதிரிகளெல்லாம் வெளியாட்க அதுனாலே
ஜெயிச்சேன், ஆனா வீட்டுக்குள்ளேயே அதுவும் பெத்த புள்ளைங்களே, இப்படி....
புள்ளைங்கதானே போனாங்க, நான் போகலையே... அப்புறம் ஏன் மனசைப் போட்டு
குழப்பிகிறீங்க....?
நமக்கு கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆச்சு ?
முப்பத்து அஞ்சு வருஷமாச்சு, ஏன் திடீர்னு இந்தக் கேள்வி ?
இந்த முப்பத்து அஞ்சு வருஷத்துல என்னைக்காவது நீ என்னைக் கல்யாணம்
செய்து கிட்டதுக்காக வருத்தப்பட்டு இருக்கியா ?
ஒருக்காலமும் நான் கவலைப்பட்டதில்லை, உங்க மேலே
விருப்பபட்டுதானே எங்க அம்மா - அப்பாவை எதிர்த்து கல்யாணம் செஞ்சோம், என்ன... மனக்கஷ்டம் பத்து வருஷமா
புள்ளையில்லாம தவமா தவமிருந்து கோயில் குளம்னு ஏறி வந்தேன், தெய்வம் கண் திறந்து
ரெட்டை குழந்தை அதுவும், ஆண் குழந்தைங்க எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா... அந்தக் குழந்தைங்களா இப்படி.... ?
(மீனாட்சியம்மாள் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது சபாபதி
ஐயா காண்பது, வாழ்வில் முதல்முறை என்றுகூட சொல்லலாம்)
மீனாட்சி,
நமக்கு குழந்தைகள் பிறக்காமல் இருந்திருந்தால், இந்த நிலைமை வந்துருக்காது
இல்லே... வீடு இல்லாத நிலைக்கு வந்துருக்க மாட்டோம்ல...
இப்பகூட
என்ன... இருபது வருஷத்துக்கு முன்னே நாம முதியோர் இல்லத்துக்கு
தானம் கொடுத்த வீட்லதான் இருக்கோம், பார்த்தீங்களா ? நம்ம
பேருதான் இப்பவும்கூட இருக்கு, இதுவும் நம்ம வீடுதாங்க....
ஆனா, நம்ம புள்ளைங்க கம்பெனி பேரையெல்லாம்
மாத்தி அவுங்க பொண்டாட்டி பேரை வச்சுட்டாங்களே....
அதனால என்னங்க நம்ம மருமக்களோட பேருதானே...
நீங்க வைக்கலையா என்பேரை... நான்
கட்டாயப்படுத்துனதாலதான் உங்க பேருல பாதியை சேர்த்தீங்க....?
நமக்கு ரெண்டு குழந்தைகள் இருக்கிறதாலதானே
போட்டி போட்டு கிட்டு வெளியே அனுப்பிட்டாங்க ஒரு புள்ளைய பெத்து இருந்தால் இப்படி
ஆகியிருக்காதோ....
நாம, இங்கே வரணும்ங்கிறது விதி குழந்தைகளை
கோவிச்சு என்னங்க செய்ய முடியும் ?
நீ உங்க அம்மா வீட்ல எவ்வளவு வசதியா வாழ்ந்தவ... உன்னை இந்த நிலைக்கு
அதுவும் இந்த வயசுல... மனசு ஆறமாட்டுதுமா...
ஆனாலும் அதைவிட வசதியா என்னை
வச்சிருந்தீங்களே... இனிமே என்ன இருக்கு.
நானாவது சின்ன வயசுல அனாதையா வாழ்ந்து
பழக்கப்பட்டவன், ஆனா நீ உன்னை இப்படி விட்டுட்டுப் போறதை நினைச்சா...
யாரும், யாரையும் விட்டுட்டு போக மாட்டோம்,
பேசாம இருங்க.
ஒரு விசயத்துல, எனக்கு சந்தோஷம்.
என்ன ?
உன்னோட, அப்பா - அம்மா உயிரோட இல்லை,
அவருக்கு முன்னாலே நான் தோற்கலை, ஆனா உன்னோட அண்ணன்கள் போட்ட சவால்
நிறைவேறிடுச்சு.
ஏங்க எப்பவோ உள்ள, விசயங்களை இப்பயேன்...
நினைக்கிறீங்க ?
இல்லை மீனாட்சி நான் தோத்துட்டேன்,
தோத்துட்டேன்...
சரி விடுங்க... அதையே நினைக்காம...
மீனாட்சி உன் மடியில கொஞ்சம்
படுத்துக்கிறவா....
சரி படுத்துக்கங்க...
மீனட்சியம்மாள் மரத்தில் சாய்ந்து கொண்டு
கால்களை நீட்ட சபாபதி ஐயா மடியில் தலைவைத்து சாய்ந்தார்... அவர் நிரந்தரமாக
சாய்ந்தது தெரியாமல் மீனட்சியம்மாள் மனஉலைச்சலில் இவரை அனாதையாக விட்டுப் போகிறோமே...
எனத்தெரியாமல் அப்படியே.... உறங்கினாள் நிரந்தரமாய்.....
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே.
அன்பின் சகோ திருமதி. மனோ சாமிநாதன்
அவர்களுக்கு அன்று மின்னஞ்சலில் சொல்லி இருந்தேன் நான் சொல்ல மறந்த விடயத்தை
தாங்கள் யதார்த்தமாக புகைப்படத்தில் தந்து விட்டீர்கள் எனது பதிவு வரும்பொழுது
தங்களுக்கு புரியுமென அதுதான் இவர்கள் இருவருமே முடிவில் இறந்து கிடப்பது அதன்
பாவத்தை (முக பாவணை) தாங்களாகவே தந்து விட்டீர்கள் அதற்காக எமது சிறப்பு நன்றிகள்.
என்றும் அன்புடன் கணபதி
– மீனாம்பாள் அவர்களின் மகன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.
குறிப்பு – நேற்று முன்தினம்12.06.2015 சார்ஜாவில் இருக்கும்
திருமதி. மனோ சாமிநாதன் அவர்களின் வீட்டுக்குப் போய் அவர்களின் கணவர், மகன்,
மருமகள், மற்றும் பேரன் எல்லோரையும் கண்டு வந்தேன் அனைவரும் உள்ளன்போடு வரவேற்று
உபசரித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காணொளி