தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, செப்டம்பர் 15, 2017

என் நினைவுக்கூண்டு (6)


இதன் பின்னணிகளை அறிவதற்கு கீழே சொடுக்கலாம்...


சிறிது நேரம் அமர்ந்திருந்தேன் தற்பொழுது உனது அடையாளங்கள் மறைந்து வருகிறது என் நெஞ்சில் மட்டும் பசுமையாய்... நீ

 னிதா உனது மறைவு மற்றவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல ஆனால் எனக்கு வாழ்க்கையை மாற்றி அமைத்து விட்டது எனக்கு சோசியத்தில் நம்பிக்கை இல்லை ஆனால் உனது ராசிப்படி சகோதரர்களில் எனக்கு செல்வந்தனாகும் அமைப்பு இருப்பதாக பலரும் பலமுறை சொல்லி இருக்கின்றார்கள் அதனால்தான் உனக்கு மருத்துவ செலவுகளை நான் செய்தேன் என்று நினைத்து விடாதே... அந்த பாசம் எனது குருதியில் கலந்தது நான் மறையுமவரை உன் நினைவுகள் எனது நெஞ்சில் இருக்கும். உண்மையில் உனது மறைவுக்குப் பிறகு எனக்கு பணவிரயம் மட்டுமே என்னை இப்பொழுது ஆட்டி வைத்துக் கொண்டு இருக்கிறது.

உனது நெற்றியில் வைக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயத்தை நான் போராடி வாங்கிக் கொண்டேன் உனது நினைவாக என்னிடம் இருக்கட்டும் என்று இதை உறவுகள் தவறு என்றும், இதனால் எனக்கு தீங்குகள் வருமென்று சொல்லி அந்த நாணயம் சுடுகாட்டில் இடவேண்டிய பொருள் என்றும் மேலும் அதை யாரும் எடுக்ககூடாது என்று சொன்னார்கள் உண்மையில் எனது கருத்துப்படி அந்த நாணயத்தை அனைவருமே எடுத்து புழங்கி இருக்கின்றோம் ஆம் சுடுகாட்டில் வாக்கரிசி போடும் பொழுது அனைவரும் நாவிதர் வேலை செய்பவருக்கு அரிசியோடு சேர்த்து காசு போடுவார்கள் முடிவில் நெற்றியில் இருக்கும் காசையும் நாவிதர் எடுத்துக்கொள்வார் இதுதான் ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது. அந்த காசுகளை நாவிதர் தனது செலவுக்கு விடும்பொழுது அந்தப்பணம் ஏழை பணக்காரன் என்ற பேதமின்றி அனைவருடைய கையிலும் புழக்கத்கிற்கு வந்து செல்லும் இந்த காசு போட்டவருக்கே திரும்பவும் வந்து இருக்கலாம் இதன் காரணமாகத்தான் உனது நெற்றிக்காசை நான் ஞாபகார்த்தகமாக வைத்துக்கொள்ள விரும்பினேன். அதேநேரம் உறவுகள் சொன்னது இறந்தவர் கையில் பணக்கட்டை கொடுத்து பிறகு வைத்துக் கொண்டால் அவர்கள் நிரந்தரமாக செல்வந்தர்களாக இருப்பார்கள் என்று சொன்னார்கள் எவ்வளவு இழிவான சுயநல எண்ணங்கள். இதில் எனக்கு உடன்பாடு இல்லை இருப்பினும் எனது வாதம் தவறு என்று உறவுகள் சொல்லி சில ஐயர்களின் ஆலோசனை கேட்டால் ஒவ்வொவரும் ஒவ்வொரு விதமாக சொன்னார்கள் காரணம் சாஸ்த்திரங்கள் என்றுமே ஒரே நிலைப்பாட்டில் தமிழர்களிடத்தில் புழக்கத்தில் இருந்தது இல்லை

பலமுறை நான் கீழக்கரை செல்லும் பொழுதெல்லாம் திருப்புல்லாணி பேருந்து நிலையத்தில் கைகாட்டியில் சேதுக்கரை மூன்று கி,மீ. என்று இருப்பதை பார்க்கும் பொழுது ஒருநாள் கண்டிப்பாக இந்த கடற்கரை சென்று வரவேண்டும் என்று சுமார் முப்பது வருடங்களாக நினைத்துக் கொண்டே வந்து இருக்கிறேன் இதோ இவ்வளவு ஆண்டுகள் கடந்து உனக்கு திதி கொடுப்பதற்காக முதன் முறையாக உனக்காக சேதுக்கரை சென்று வந்த பொழுது மனதில் சிறிய குற்ற உணர்வு இங்கும்கூட சாஸ்த்திரங்கள் என்னை திகைக்க வைத்தன திருமணம் ஆகாமல் நீ இறந்து விட்டதால் ஐயருக்கு வெள்ளியில் செய்த பசுமாடு கொடுக்க வேண்டுமாம். இல்லையெனில் உனது ஆத்மா சாந்தியடையாதாம் இதில் எனக்கு நம்பிக்கை இல்லை. எனினும் உனது ஆத்மா சாந்தியடையாது என்ற வார்த்தைகள் என்னை மனதைக் குடைந்து கொண்டே இருந்தது உனக்காக எவ்வளவோ செலவு செய்தேன் திதிக்கு வேண்டிய சாமான்களும், ஐயரின் தட்சிணையும் சேர்த்து இரண்டாயிரத்தை கடந்து வந்து விட்டது. இந்த வெள்ளியில் செய்த மாடு சுமார் எண்ணூறு ரூபாய்வரை வரலாம் ஒரு மனப்பயத்தில் செய்து விடுவோம் என்ற முடிவில் இருந்தேன் காரணம் எனக்கு எண்ணூறு ரூபாயைவிட உனது ஆத்மா சாந்தியடைவது மிகமுக்கியம் நாத்திகர்களுக்கு மனம் சறுக்கும் முக்கியமான காலகட்டங்கள் இதுதான் சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் சில நேரங்களில் மனிதர்களை இப்படி கொண்டு வந்து நிறுத்தி விடும் என்னை பாசம் நம்ப வைத்தது.


தேவகோட்டையிலிருந்து மோட்டார் சைக்கிளில் நானும், பாம்பன் சின்னம்மா மகன் சண்முகம் அண்ணனும் அதிகாலை புறப்பட்டு சேதுக்கரை கிளம்பினோம் போக, வர நூற்றி அறுபது கி.மீ. இராமநாதபுரத்தில் காய்கறி மற்றும் சாமான்களை வாங்கி விட்டு வெள்ளியில் செய்த மாடு வாங்குவதற்கு ஜூவல்லர்ஸ் எதுவுமே திறக்கவில்லை நேற்று இரவு நேரத்தில் ஐயரிடமிருந்து இந்த தகவல் வந்ததால் தேவகோட்டையில் வாங்காமல் இருந்து விட்டோம் நேரம் கடந்து கொண்டு இருந்தது சரியென்று சேதுக்கரை போய் விட்டோம் ஐயரிடம் சொன்னதற்கு பரவாயில்லை என்று சொல்லி விட்டார் கேட்டதற்கு வாங்கி கொடுக்க இயலாதவர்களுக்கு பிரச்சனை இல்லை என்றார். (சாஸ்த்திரங்கள் என்னவானது ?) எனக்கு கோபம் வந்து கேட்டேன் அப்படியானால் இருப்பவர்களிடம் தங்கத்தில் செய்த மாடு கேட்பீர்களா ? என்று ஐயர் எங்களை முறைக்க, பிறகு அண்ணன் என்னை பார்க்க அமைதியானேன் திதிகள் செய்ய வேண்டிய முறைப்படி ஐயர் சொல்ல செய்தேன் அத்தோடு சுடுகாட்டில் உனது நெற்றியில் எடுத்து வைத்திருந்த ஒரு ரூபாய் நாணயத்தையும் உறவுகள் சொன்னபடி கடலில் மூழ்கி எழும்போது மனக்கசப்போடு பின்னோக்கி போட்டு விட்டேன். வனிதா உனது ஆத்மா சாந்தியடையும் என்று ஆத்மார்த்தமாய் நம்புகின்றேன் மேலும் உனது மறைவு நாளில் எனது மரணகாலம்வரை என்னால் இயன்ற நல்ல காரியத்தை உனக்காக செய்வேன் என்று உறுதியேற்று தேவகோட்டை நோக்கி பயணித்தேன்.

கூண்டுகள் சுழலும்...

18 கருத்துகள்:

  1. சாத்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லை எனினும் பல சமயங்களில் பாசம் அதை செய்ய வைத்து விடுகிறது. இதனால் தான் யாரையும் பார்த்து மூட நம்பிக்கையோடு நடக்கிறார்கள் எனச் சிம்பிளாகச் சொல்லிடக்கூடாது என நினைப்பேன்ன்.. பார்ப்பதற்கு மூட நம்பிக்கைபோல் தெரிந்தாலும்.. அந்த செயல்களின் பின்னால் பெரிய சோகக்கதையோ அல்லது பாசக் கதையோ ஏதோ ஒன்று இருக்கத்தான் செய்கிறது.

    நீங்கள், கவலைப்படாமல் அமைதியாகும்போது, தங்கையின் ஆத்மா நிட்சயம் சாந்தியடையும் கில்லர்ஜி... அதனால முதலில் நீங்கள் உங்கள் மனதை சாந்தப்படுத்தி... சந்தோசமாக இருங்கோ..

    பதிலளிநீக்கு
  2. இது போன்ற செயல்களின் பின்னால் நம்பிக்கை என்பதை விட பாசம்தான் இருக்கிறது. உங்கள் அன்பு இருக்கும்வரை, உங்கள் மனதில் அவர் இருக்கும்வரை சகோதரியின் ஆன்மா வெள்ளிப்பசு இல்லாமலேயே சாந்தி அடையும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் சொல்லவந்தது இங்கு அதிராவின் முதல் கமென்ட் மற்றும் ஸ்ரீராமின் கமென்டும் கண்ணில் பட்டுவிட்டது...அதே..நம்பிக்கை என்பதைவிட .பாசம் தான்...யெஸ்!!!! உங்கள் சகோதரியின் ஆன்மா சாந்தியடையும்...உங்கள் அன்பையும் புரிந்து கொள்ளும். நீங்களும் தொடர்ந்து நல்லது செய்துகொண்டே இருங்கள் அதுவே உங்களை மகிழ்வாக வைத்திருக்கும்!!!

      நீக்கு
  3. கோதானம் இயன்றவர்களால் தான் செய்ய இயலும். எல்லோராலும் இயலாது! ஆகவே புரோகிதர்களும் வற்புறுத்த மாட்டார்கள். அதற்கு ஈடாகப் பணம் கொடுக்க முடிந்தால் சரி, இல்லை எனினும் கொடுப்பதைப் பெற்றுக் கொள்வார்கள். எல்லோருமே வெள்ளியிலோ, தங்கத்திலோ அல்லது உண்மையாகவோ பசுமாடுகளை வாங்கி தானம் செய்ய முடிந்தவர்கள் அல்லவே! அதற்கான மாற்று மந்திரங்களைச் சொல்லுவார்கள். இது எங்கேயும், எல்லோருக்கும் ஈமச்சடங்குகள் செய்கையில் நடக்கக் கூடியதே!

    பதிலளிநீக்கு
  4. இறந்தவர்கள் கைகளில் காசுகளைக் கொடுத்து எரித்த பின்னர் மறுநாள் அந்தக் காசுகளை எடுத்து நெருங்கிய உறவினர்களிடம் கொடுத்துப் பணப்பெட்டியில் அல்லது நகைப்பெட்டியில் சுற்றி வைத்திருக்கும்படி சொல்வார்கள். அப்படி எங்களிடம் என் அம்மா, எங்கள் மாமனார் ஆகியோரிடம் கொடுத்த காசுகள் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  5. தங்கையின் பெயரில் ஏதேனும் ஒரு நிறுவனத்தைத் தொடங்குங்கள்,
    தங்கையின் பெயரால் ஏழ்மையில் வாடும் மாணவ மாணவியரின் கல்வி வளர்ச்சிக்காக தங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.

    பதிலளிநீக்கு
  6. படித்தேன். தங்கையின் ஆத்மா சாந்தியடையும் என்று நம்பி வாழ்க்கைய ஆரம்பியுங்கள். இதுபோன்ற சமயங்களில் நடத்தி வைப்பவர் சொல்லுவது முன்னுக்குப் பின் முரணாகத் தெரியும், ஆனால் நேரக் குறைவு காரணமாக அவர்கள் முழுமையாக விளக்கமாட்டார்கள். நமக்கும் எப்படியாவது செய்துமுடித்தால் சரி என்று அப்போதைய மன நிலையில் தோன்றும்.

    வட நாடுகளில் பண்டாக்கள் இன்னும் அடாவடியாக நடந்துகொள்வார்கள் என்று படித்திருக்கிறேன் (அவர்கள் 1920களில் அடாவடியாக நடந்துகொண்டார்கள் என்று ஒரு புத்தகம் படித்தேன். இப்போ இன்னும் அதிகமாக இருக்கும்)

    கரந்தை ஜெயக்குமார் சார் சொன்னது சரியானது. ஆங்கோர் ஏழைக்கு அறிவுக்கு உதவுவதுபோல் நமக்கு நன்மை தரக்கூடிய செயல் பிறிதொன்றுமில்லை. இதனைவிட மேலானது, வயிற்றுக்குச் சோறிடுவது.

    பதிலளிநீக்கு
  7. நம் பாசம் பிறருக்குப் புரியாது ,வீட்டுக்குள் புகைச்சல் வராமல் முடிந்த மட்டிலும் (ஆதரவற்றோர்,முதியோர் இல்லங்களுக்கு அன்னதானம் போன்ற )உதவிகள் செய்து மன ஆறுதல் பெறலாம் :(

    பதிலளிநீக்கு
  8. இந்த சம்பிரதாயங்களுக்கெல்லாம் அஞ்ச வேண்டியதே இல்லை .என் தாய் என் வீட்டில் இறந்த போது எதுவுமே எனக்குத் தெரியாது. . நானும் செய்யவில்லை . 19வருடம் கழித்து என் அக்கா கணவர் இறந்த போது மாய்ந்து மாய்ந்து எல்லோரும் செய்தபோது தான் தெரியும் ,ஓ ........ இவ்வளவு செய்யணுமா என்று .
    என் தாயின் ஆசீர்வாதங்கள் எனக்கு உள்ளது. தாங்கள் தூய அன்போடு செய்ததனால் நிச்சயம் அந்த ஆன்மா சாந்தி அடைந்து இருக்கும் .தங்களுக்கு நல்லதே நடக்கும் .என் லாப்டாப் ஸ்கிரீன் போய் விட்டது .செல் போனில் காமெண்ட் போடுவதற்குள் .......யப்பப்பா

    பதிலளிநீக்கு
  9. ஆறுதல் பெறுக.. ஆறுதல் பெறுக..

    பதிலளிநீக்கு
  10. மதிப்புக்குரிய கீதா சாம்பசிவம் அவர்கள் சொன்னமாதிரி - நெற்றியில் வைக்கப்பட்ட காசு - மகனிடமோ மகளிடமோ தான் ஒப்படைக்கப்படும்..

    மயானத்திலோ அல்லது கடலிலோ விடுவது எங்கள் பக்கம் வழக்கமாக இல்லை..

    ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான பழக்க வழக்கங்கள் போலும்!..

    பதிலளிநீக்கு
  11. இதில் கருத்து சொல்லவே தயக்கமாக இருக்கிறது பலவிஷயங்கள் நம் மீது அன்பு பாசம் ஆன்மா என்றெல்லாம் கூறப்பட்டு திணிக்கப் படுகிறது நாமும் அந்நேரம் இவை பற்றி சிந்திப்பதில்லை எந்த ஒரு செயலின் பின்னுமொரு உறுதி வேண்டும் சிலரது ஆலோசனைகள் பேரில் தங்கை நினைவாக ஏதாவது நல்ல காரியம் செய்து நினைவை நிலைப்படுத்திக் கொள்ளுங்கள் நம்மை நாமே ஏதாவது சொல்லி தேற்றிக் கொள்ளத்தான்வேண்டும்

    பதிலளிநீக்கு
  12. வலியும் வாழ்வும் தனக்கு வந்தால்தான் தெரியும். அனுபவமும் அதுவே.

    பதிலளிநீக்கு
  13. உங்கள் மனம் அமைதி பெற பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. பல பல நம்பிக்கைகள்....

    ஒவ்வொரு இடத்திலும்..ஒவ்வொரு மனிதரிடமும்

    நீங்கள் செய்வது அனைத்தும் வனிதா ...என்னும் அன்பு தங்கைக்காக மட்டுமே..

    பதிலளிநீக்கு
  15. ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை..நிணைவுக்கூண்டுகள் சுழலட்டும்....

    பதிலளிநீக்கு
  16. சரியோ தவறோ தங்களின் தங்கையின் ஆத்மா சாந்தியடைய செய்யவேண்டியதை செய்துவிட்டீர்கள். அதைப்பற்றி எண்ணாது மனதை தேற்றிக்கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  17. பல்வேறு பழக்கங்கள்! த ம 10

    பதிலளிநீக்கு