தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், மார்ச் 22, 2022

சித்து விளையாட்டு

வசந்த்-வசந்தா இந்த தம்பதிகள் வாழ்க்கையில் மட்டும் வசந்தமில்லை காரணம் விருப்பமற்ற விவாஹம் விருத்திக்கு வராது, கட்டாய கல்யாணம் களத்தில் நிற்காது, திடீர் திருமணம் திருப்தி தராது. எல்லா மானிடர்களுக்கும் நடக்கும் திருமணம் என்ற சவகிடங்கு வசந்துக்கும் வசந்தாவுக்கும் நடந்தது.
 
அதை காடாத்து என இவனும், கருமாதி என இவளும் நினைத்து கீறியும் பாம்புமாய் வீட்டை சுடுகாடாய் பாவித்து நடை பிணமாய் வாழ்ந்து வந்தார்கள். அழுக்கான சேற்றில் அழகான செந்தாமரை முளைக்கும் அதிசயம் போல இவர்களது இந்த கேடுகெட்ட வாழ்விலும் ஓர் அழகிய இளந்தளிர் துளிர்த்து உதிர்த்து நடந்தும் வளர்கிறது.
 
இவன் என்ன சொல்கிறானோ அதற்கு எதிப்பதமாக இவள் சொல்வது மட்டுமல்ல, மனதில் நினைப்பதுகூட எதிப்பதமாகவே இருக்கும் அதேபோல் அவள் நினைப்புக்கு எதிராகவே இவனும் நினைப்பான், சொல்வான். இருவருக்கும் ஒன்பதாம் பொருத்தம்தான் சோலந்தூர், சோஸியர் சோனைமுத்து சொன்ன பொருத்தமாம்.
 
பிறகு எப்படி இளந்தளிர் ? என்று என்னிடம் கேட்கப்படாது இது இறைவனின் சித்து விளையாட்டு இவர்களது உரையாடல் மிகவும் அபத்தமாகவும், மரியாதை இல்லாத வார்த்தை பிரயோகமாகவுமே இருக்கும். திருமணமான இளம் ஜோடிகள் இந்தப்பதிவை படிப்பதை தவிர்ப்பது நல்லது.
 
என்னோட செல்லுக்கு ரீ சார்ஜ் பண்ணி விடுங்க...
உன்னோட அப்பன், ஆத்தாளோட கடலை போடுறதுக்கு நானா ஆளு ?
 
என் தங்கச்சி மகளுக்கு பிறந்தநாள் வருது கௌண் எடுக்க பணம் வேணும்.
போனவாரம் என் தம்பி மகளுக்கு மட்டும் வேண்டாம்னு சொன்னே...
 
இந்த வருசம் தீபாவளிக்கு அப்பா வரச்சொல்லி இருக்காரு...
எங்கிட்டே தீபாவளி கொண்டாட பணம் இல்லையா ?
 
உங்க அம்மா எதுக்கு அடிக்கடி வர்றாங்க ?
உங்க ஆத்தா மட்டும் வந்து பேத்தியை பார்த்துட்டு போகலையோ... ?
 
உங்க ஆபீஸ்ல என்னோட தம்பிக்கு வேலை வாங்கி கொடுக்கலாம்ல..
ஊருல உள்ளவங்களுக்கு வேலை வாங்கி கொடுக்க நான் புரோக்கரா ?
 
என் தங்கச்சி புருசன் வீடு வாங்க ரெண்டு லட்சம் கடன் கேட்க சொன்னாரு.
அந்த வெண்ணை எங்கிட்டே கேட்க மாட்டாகளோ...
 
கரண்டுப்பில் இந்த மாசம் எண்ணூறு ரூபாய் வந்துருக்கு...
எந்த நேரமும் டி.வி. ஓடிக்கிட்டு இருந்தால் வரத்தான் செய்யும்.
 
மாமா கல்யாண பத்திரிக்கை அனுப்பி இருக்கார் ரெண்டு பேரும் போகணும்.
இலவு வீட்டுக்கு நான் வரமுடியாது வேணும்னா நீ போயிட்டு வா.
 
நேத்து மாதிரி ராத்திரி லேட்டா வந்தால் வீட்டை திறக்க மாட்டேன்.
இது உன் அப்பன் விட்டு வீடு இல்லை நான் உழைச்சு வாங்குனது.
 
இன்னைக்கு சுமங்கலி விரதம் சாயங்காலம் கோயிலுக்கு போகணும்.
அது மட்டும்தான் கொறைச்சல் ம.....ராப் போச்சு
 
இவள் மட்டும் சாதாரணமான ஆளா ? ஏற்காடு, ஏட்டிக்குபோட்டி ஏகம்மை மாதிரி எகனைக்கு மொகனையாக, பதில் சொல்வாள்.
 
என்னோட செண்ட் பாட்டில் எங்கே ?
ஆபீஸ்ல எவளை மடக்குறதுக்கு செண்டு ?
 
டையை அயன் பண்ணி வைக்கலாம்ல...
விளக்கமாத்துக்கு பட்டுக்குஞ்சம் எதுக்கு ?
 
முருங்கைக்காய் வாங்கிட்டு வரவா ?
ஹூம் நினைப்பு பொழைப்பை கெடுத்துறாம...
 
வெண்டைக்காய் பொறியல் வைக்கலாம்ல ?
அது மூளை இல்லாதவங்க சாப்புடுறதுல...
 
சோத்துல உப்பு குறைவா இருக்கு
ரோசம் இல்லாதவங்களுக்கு எதற்கு ?
 
கொஞ்சம் பால் காய்ச்சி கொடேன்
கள்ளிப்பால் இருக்கு காய்ச்சட்டுமா ?
 
குழம்பு ஒரு மாதிரியா வாசம் வருது
ம்... மணக்குறதுக்கு செண்ட் அடிச்சு வச்சேன்.
 
இன்னைக்கு ஆட்டுக்றி வாங்கிட்டு வரவா ?
அடுப்புக்கரியை போட்டு வைப்பேன் சாப்புடுறியா ?
 
மோர்க்குழம்பு வை இன்னைக்கு
தார் ஊற்றித்தான் வைப்பேன்.
 
இன்னைக்காவது ரசம் வைக்கலாம்ல...
ஏன் விசம் வச்சுட்டேன்னு சொல்றதுக்கா ?
 
இதனால் ஐயப்பாட்டின் காரணமாக வீட்டுக்கு வேண்டிய பொருட்களை மனைவிக்கும், மகளுக்கும் வாங்கிப் போட்டு விட்டாலும் பலமுறை உணவகத்தில்தான் சாப்பிட்டு காலத்தை கடத்துகின்றான். கூட்டுக் குடும்பம் பிரிந்ததின் பிரதிபலிப்புதான் இதற்கு முதன்மை காரணமேயன்றி வேறென்ன ?
 
இவர்களது வாழ்வு இப்படி சென்று கொண்டு இருந்தாலும் இவர்களது இளந்தளிர் மகிழினியின் குறுஞ்சிரிப்பு இவர்கள் இருவரையுமே பிரிக்க விடாமல் ஏதோவொரு நிலையில் சேர்ந்து வாழ வைக்கிறது. இதுதான் ரானா, பானா போல... இதுவும் இறைவனின் சித்து விளையாட்டுதான். வசந்த் நல்லதொரு சம்பளம் வரும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்வதாலும் சமூகத்தின் கௌரவமான பார்வைக்காகவும் வாழ்வை கடத்துகின்றான்.
 
இந்த சமூகத்தில் இன்றளவும் குழந்தைகளுக்காக கணவனும், மனைவியும் சகித்துக் கொண்டு காலத்தை கடத்துவது பல குடும்பங்களில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது இதுதான் சற்றே நம்மிடம் உயிர்ப்புடன் இருக்கும் தமிழ்க்கலாச்சாரம். இந்த இழிநிலைக்கு காரணம் வீட்டில் முதியோர் இல்லாததே... மகிழினியின் திருமணம் நிகழ்வதற்குள் வசந்தும், வசந்தாவும் புரிந்துணர்ந்து வாழ்வில் வசந்தத்தை பெற்று வாழ இறைவன் அருள் புரியட்டும். வாழ்க வளமுடன் நாளும் நலமுடன்.
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
சிவாதாமஸ்அலி-
கல்யாணத்துக்கு கத்திரிக்காய் கேட்டால் காடாத்துக்கு முருங்கைக்காய் வாங்கி கொடுப்பான் போலயே... என்னாங்கடா குடும்பம் ?

33 கருத்துகள்:

  1. தம்பதியர் இடையே உரையாடலில் அவ்வளவு காரம் இல்லை போலவே...   ஒரு மறைமுக அன்பும் பிரியம்  தெரிகிறது!  பதிலுக்கு பதில் வரும் வார்த்தைகள் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இதற்கெல்லாம் காரணம் மகிழினிதான்...

      நீக்கு
  2. நிறைய தம்பதிகள் இன்று இப்படிதான் இருக்கிறார்கள்.  நீங்கள் சொல்வது போல மூத்தவர்களுடன் சேர்ந்து இல்லாததும் ஒரு காரணம்.  ஆனால் சில இல்லங்களில் மூத்தவர்களே வில்லர்களாய் இருப்பர்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் சூல்நிலையை புரிந்து கொள்ளாத முதியவர்களும் உண்டு.

      நீக்கு
  3. தம்பதிகள் இடையே வரும் கேள்வி பதில் நல்லா தான் இருக்கு நண்பரே. அந்த வகையில் இருவரும் பொருத்தமானவர்கள் போல தெரியுதே.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இப்படி இல்லா விட்டாலும் அடிதடிதான் விழும்.

      நீக்கு
  4. ஏட்டிக்கு போட்டி தம்பதிகளாக இருக்கிறார்களே...... கேள்வியும் எடக்கு மடக்கு பதில்களும்..... :)

    இன்றைக்கு பல குடும்பங்கள் இப்படித்தான்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி பலரது வீட்டில் இப்படித்தான் இருக்கிறது.

      நீக்கு
  5. இன்றைக்குப் பல குடும்பங்கள் இப்படித்தான் என்றாலும் இதற்குப் பென்ணின் பெற்றோரும் ஓர் முக்கியக் காரணம். புக்ககத்தில் கொசுப் பறந்தால் கூட அது தன்னைக் கொடுமைப் படுத்த எனப் பெற்றோரிடம் புகார் செய்யும் பெண்ணும், அதைக் கேட்டுக் கொண்டு ஆடும் பெற்றோரும் இருக்கும்வரை இதெல்லாம் ஓயாது. கணவனின் சம்பாத்தியத்துக்கு மட்டும் உரிமை கொண்டாடிக் கொண்டு அவனுக்கு ஓர் தம்பளர் வெந்நீர் கூடப் போட்டுக் கொடுக்காத பெண்களும் உண்டு. :( காலம் தான் இவர்களை எல்லாம் மாற்ற வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      //இதற்குப் பென்ணின் பெற்றோரும் ஓர் முக்கியக் காரணம்//

      ஆம் உண்மை இதை பலரது வீட்டில் உணர்வதில்லை.

      நீக்கு
  6. நம்ம சூழ்நிலை, புருஷன் வீட்டில் அவங்க வீட்டுப் பெரியவர்களோடு வாழ்க்கை நடத்துவதாக இருந்தது. என்றைக்கு, வேலை எங்கேயோ என்று வீட்டை விட்டுப் பிரிந்து தனிக்குடித்தனம்னு ஆரம்பித்தார்களோ அப்பவே இந்தப் பிரச்சனை தலைதூக்க ஆரம்பித்துவிட்டது.

    பெண்ணைக் கொடுத்தவர்கள், பெண்ணிடமிருந்து எதிர்பார்ப்பதும், பெண்ணின் வீட்டுக்குள் நுழைவதும்தான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம் என்று நினைக்கிறேன் (விதிவிலக்குகள் உண்டு)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே ஆம் பலரது வீட்டில் பெண் வீட்டாரின் தலையீடு அதிகமாக இருப்பதால் இந்த பிரச்சனைகள்.

      நான் தாங்கள் சொன்ன விதிவிலக்கு கூட்டத்தில் இருக்கிறேன்.

      நீக்கு
  7. கில்லர்ஜி, கூட்டுக் குடும்பமாக இருந்தாலும், தனிக்குடித்தனமாக இருந்தாலும் சரி இரண்டிலும் சாதகங்கள் பாதகங்கள் உண்டு. பெரியவர்களும் சரி சிறியவர்களும் சரி மனப்பக்குவம் பெற்றிருந்தால் மட்டுமே சாத்தியம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஆம் இன்று பல பெண்களும் பக்குவம் பெறாத நிலையில் திருமணம் செய்து கொடுப்பதுதான் பல வீடுகளில் பிரச்சனை உருவாகுகிறது.

      நீக்கு
  8. நான் கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவள், பெரிய குடும்பத்தில் புகுந்தவள். எனக்குக் கூட்டுக் குடும்பம் பிடிக்கும் ஆனால் அதன் பாதகங்களும் தெரியும். அதாவது சாதகங்களை விடப் பாதகங்கள் கூடுதலாக இருந்தால். மனப்பக்குவம் ரொம்ப வேண்டும் பொறுமை ரொம்ப வேண்டும். மனம் மிகவும் சென்சிட்டிவாக, கண்ணாடி போன்று இருந்தால் எந்தக் குடும்பமும் கஷ்டம்தான். இது இருபாலாருக்கும் பொருந்தும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைத்தான் நானும் சொல்கிறேன் மனப்பக்குவம் வேண்டும்.

      நீக்கு
  9. எல்லோரும் சொல்வது, ஒரு குடும்பம் ஆலமரம் போல் இருக்கணும்னா அதைத் தாங்கி நிற்பவள் பெண் என்று. முறிப்பவளும் பெண் தான் என்று. என் கருத்து - பெண் என்று மட்டும் சொல்ல மாட்டேன். ஆணிற்கும் வேண்டும். கூட இருக்கும் ஆண் முதுகெலும்புடன் இருக்க வேண்டும் அதாவது சுய சிந்தனையுடன் இருக்க வேண்டும். அதனால்தான் குடும்பத்தில் தலைவன் என்று சொல்லப்படுகிறது. இல்லை என்றால் குடும்பம் ஆட்டம் காணும் தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் சொல்வது போல் தலைவன் என்பவன் ஆணாக இருக்க வேண்டும்.

      நீக்கு
    2. கணவன் பொறுப்பு எடுத்துக் கொண்டு குடும்பத்தில் அனைவருக்கும் புரிய வைக்கலைன்னா அந்த மனைவி பாடு திண்டாட்டம் தான். எல்லாவற்றுக்கும் அவளையே குற்றம் சொல்லுவார்கள். கணவனின் முழு ஆதரவு இருந்தால் தவிரக் கூட்டுக் குடும்பத்தில் பெண்ணால் எளிதில் ஜெயிக்க முடியாது, என்னதான் நல்லவளாக இருந்தாலும்!

      நீக்கு
    3. உண்மைதான் கணவனை நம்பித்தானே பெண் அந்த வீட்டுக்குள் நுழைகின்றாள்.

      நீக்கு
  10. மகிழினியோடு மகிழ்ந்து வாழட்டும் வசந்தும், வசந்தாவும்.
    பேரில் வசந்தம் இருக்கிறது. வசந்தகாலம் விரைவில் வரட்டும். மகிழினி திருமணம் வரை சண்டை நீடிக்க வேண்டாம். விரைவில் வரட்டும் வசந்தம்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  11. பெருமூச்சுதான் விட முடிகிறது.
    வாழ்வின் நற்பொருட்களையே தொலைத்து விட்ட தம்பதிகளைப் பார்க்க முடிகிறது.
    இவர்களாவது வாயாடுகிறார்கள்.

    பேசாமல் கொல்லும் மனைவி,கணவனும் உண்டு.
    இவர்கள் ஏன் ஸேர்ந்தார்கள். ஏன் குழந்தை பெற்றார்கள்?

    அந்தக் குழந்தையும் ஒரு சார்பாக வளராமல்
    தந்தையை மதிக்க,தாயை மதிக்க உணரும் காலம்
    வரவேண்டும்.
    வசந்தம் அவர்களுக்கு வந்தால்
    பெற்றொருக்கு நிம்மதி.
    நம் கர்மா நம்மை விடுமா.
    பிரார்த்தனைகள் செய்யத் தான் முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா எல்லாம் விதிப்படிதான் நடக்கும் வேறென்ன சொல்ல முடியும் ?

      நீக்கு
  12. பல குடும்பங்களில் குழந்தைகள் தான் இணைப்பு பாலமே...

    பதிலளிநீக்கு
  13. தங்களின் பார்வையில் நான் தப்பித்தேனா நண்பரே!!

    பதிலளிநீக்கு
  14. பல குடும்பங்களில் நடப்பதை விட்டு வைத்து விட்டீர்கள். குழந்தை இருவரையும் திருத்தட்டும்.

    பதிலளிநீக்கு
  15. விண்டு வைத்து விட்டீர்கள் என்று வந்திருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மேடம்
      "கொண்டு" என்று இருக்க வேண்டுமோ... தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  16. தனிக் குடித்தனப் பிரச்னைகள் போல கூட்டுக் குடும்பத்தில் வேறு மாதிரி பிரச்னைகள். அதையும் போட்டு உடைக்கலாமே. இக்கரைக்கு அக்கரை பச்சை . அடிப்படைக் காரணம் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே தாங்கள் சொல்வதும் உண்மை.

      இரண்டில் எது அமைந்தாலும் அவைகளை பயனுள்ளவைகளாக அமைத்துக் கொள்வது தம்பதிகளுக்கு நலன்.

      ஆனால் வீண் பழி சுமற்றுவதும் கூட்டுக் குடும்பத்தில் நடக்கிறதே...

      நீக்கு