தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், செப்டம்பர் 17, 2018

பழனியாண்டி



இப்பதிவின் தொடர்பான முந்தைய பதிவுகளை படிக்க கீழே சொடுக்குக...

என் இனிய இந்தியா 1983 மே மாதம் அப்பொழுது எனது அகவை பதினைந்து பழனி முருகன் கோவிலில் எல்லோரும் வணங்குகின்றார்களே என்று நானும் வரிசையில் போய் கருவறையருகில் நிற்கிறேன் யாரையும் கை கூப்பி வணங்க விடாத அர்ச்சகர்கள் தள்ளிக்கொண்டே இருக்கின்றார்கள் இல்லாவிட்டால் யார்தான் இடத்தை காலி செய்வார்கள் நிற்க அதற்குத்தக பலன் என்று நிற்பார்களே...

எல்லோரும் வணங்க வேண்டும் என்றால் இதுவே அறவழி வேறில்லை என்பது எனது அறிவுக்கு அன்றே பட்டது இருப்பினும் நான் அர்ச்சகர் மீது கோபப்பட்டதற்கு காரணம் எனக்கு நான்கு நபர்களுக்கு முன்னால் நின்றவர் இரண்டு ரூபாயை எடுத்து அர்ச்சகரிடம் நீட்டினார், ஒரு நிமிடத்தில் மீண்டும்... மீண்டும்... மீண்டும் எல்லா பக்தர்களும் வெளியேறிக் கொண்டு இருக்க, அவர் மட்டும் அதே இடத்தில் நின்று பழனி ஆண்டியை பார்க்க, அர்ச்சகர் அவரை போண்டியாக்கி கொண்டு இருந்தார். நான் பணம் பட்டுவாடா முறையை காணவேண்டி பின்னோக்கி கொண்டிருந்தேன் இன்றைய காலகட்டமாக இருந்தால் எனது பென் கேமராவில் சுட்டு வந்திருப்பேன். நான் அருகில் போனதும் அர்ச்சகர் என்னைத் தள்ள...

நானும் பணம் கொடுத்தால் நிற்கலாமா ?
அவர் என்னை முறைக்க....
உங்களுக்கு கடவுள் பயமே இல்லையா ?
அர்ச்சகர் என்னை வெளியே தள்ள கடமை தவறாத போலீஸ்காரர் ஒருவர்...
இந்த வயசுல என்ன திமிறா பேசுறே ?
நான் நியாயத்தைதானே கேட்டேன் ?
யாருடா நீ ?
உடன் வெளியே நின்றிருந்த சுற்றுலா அமைப்பாளர் தேவகோட்டை அரு. கணபதி ஐயா அவர்கள் தற்போது அமரராகி விட்டார்
ஸார் தெரியாமல் பேசிட்டான் மன்னிச்சுகங்க....
அழைத்து வந்து விட்டார்.
ஏப்பா சாமி கும்பிட வந்தால் அதைச் செய்யாமல் பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்கே இனி எப்போ சாமி கும்பிட்டு கிளம்புறது ?
நான் சாமி கும்பிட மாட்டேன்
ஏன் ?
நியாயமில்லாத இந்த சாமியை கும்பிட மாட்டேன்.
தம்பி மனுஷன்தான் தப்பு செய்வான் அதுக்காக கடவுளை குறை சொல்லக் கூடாது சரி நீ கீழே போயி சாமான் வாங்கிட்டு பஸ்ஸுல உட்காரு...


நான் பக்கத்தில் இருந்த குட்டிச்சுவற்றில் உட்கார்ந்து கொண்டு வானத்தை நோக்கி யோசிக்க ஆரம்பித்தேன். தெய்வம் இருக்கா ? இல்லையா ? அப்படினா தாத்தா தேவரின் தெய்வம் சினிமாவில் வந்தது மாதிரி, பெரியப்பா விட்டலாச்சார்யா சினிமாவில் வந்தது மாதிரி, காரைக்குடி மாமா இராம.நாராயணன் சினிமாவில் வந்தது மாதிரி நடக்கவில்லையே ஏன் ? ஆகமொத்தம் நான் பழனி ஆண்டியை கடைசிவரை காணவேயில்லை. அந்தக் கோபத்தின் விளைவு என்னை ஆத்திகத்திலும், நாத்திகத்திலும் சேர்க்கப்படாத விசித்திகனாக மாற்றி மனசாட்சியே இறைவன் என்ற உயர்ந்த கொள்கையை வளர்த்தது. இறைவன் தூரிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்பது உண்மையானால் ? எனது மனசாட்சியிலும் இருப்பது உண்மையே...

முற்றும்

Chivas Regal சிவசம்போ-
சினிமாக்காரவுங்க பூராம் அதிரா மாதிரி ஜொந்தக்காரவுங்களோ ?

29 கருத்துகள்:

  1. இறை உணர்வு மனத்தில் இருந்தால் போதும் ஜி...

    பதிலளிநீக்கு
  2. கில்லர்ஜி... கோவில் என்ற அமைப்பை நிர்வகிப்பது மனிதர்கள். நம்மைப் போன்றவர்கள்தான். நம்மிடம் இருக்கும் சதவிகிதம் மாதிரி அவர்களிடமும் கெட்டவை இருக்கும்.

    தாம கோவிலுக்குப் போவது அவர்களைப் பார்க்க அல்லவே. அந்த தெய்வத்தைப் பார்ப்பதற்குத்தானே. அதனால் அதை மட்டும் நம் கவனத்தில் வைத்தால் போதுமானது.

    ஒவ்வொரு தவறின்போதும் கடவுள் உடனே தண்டிப்பார்னு எதிர்பார்த்தால் நம்மில் எத்தனைபேர் மிஞ்ச முடியும்?

    இன்னொரு வித்த்தில், இறை சன்னிதியில் அரை மணி நேரம் இருந்தால் அவன் அருள் அதிகமாக்க் கிடைக்கும் என்றெல்லாம் இருக்க முடியுமா? அவன் ஒரு நொடியில் சிறு பகுதியில் நம் மீது கடைக்கண் காட்டினால் போதாதா?

    பதிலளிநீக்கு
  3. நண்பரே நம் மனசாட்சியே இறைவன் என்பதில் மாற்று கருத்து இல்லை.
    அர்ச்சகர் செய்த தவறுக்கு இறைவன் மேல் கோவம் ஏனோ

    பதிலளிநீக்கு
  4. நானும் 88ல் திருப்பதியில் அதிக லட்டு கூப்பனுக்காக சண்டை போட்டு வாங்கியிருக்கிறேன் (வரிசையில் எனக்கு முன்பு இருந்தவருக்கு 20 கூப்பனும் எனக்கு வரும்போது ஐந்துதான் தரமுடியும் என்று சொன்னதால்). அங்கிருந்த அதிகாரி, நீ கம்ப்ளெயின்ட் லெட்டர் எழுதினால் விசாரணைக்கு பல முறை வரச் சொல்லுவார்கள், சென்னையிலிருந்து வரமுடியுமா என்றார். நான் அதைப் பற்றிக் கவலையில்லை என்றதால் கடைசியில் எனக்கு எவ்வளவு வேணுமோ அத்தனை கூப்பன்கள் தருகிறேன் என்று பிரச்சனையை முடித்தார் (அப்போ நான் தனியாகச் சென்றிருந்தேன்)

    சென்னை திரும்பியபின் என் அப்பாவிடம் சொன்னபோது, நான் செய்தது தவறு. சண்டை போட்டு பிரசாதம் வாங்கக்கூடாது. அவர்கள் தவறு செய்தால், நம் நலத்துக்காக சண்டை போடக்கூடாது என்றார்.

    பதிலளிநீக்கு
  5. திருச்செந்தூரில் பக்க வாட்டு வழியே ஒரு முருகன்சந்நதிஉண்டு ஒருவர் நிமிர்ந்து நிற்க முடியாது அங்கு ஒருவர் முருகனிடம் வழக்காடிக்கொண்டிருந்ததைக் கண்டிருக்கிறேன் நேருக்கு நேர் பேசுவதுபோல்முழங்கிக் கொண்டிருந்தார் எனக்கு ஆச்சரியமாய் இருந்தது

    பதிலளிநீக்கு
  6. அன்பின் ஜி..

    உங்க மனசாட்சியில் இறைவன் இருப்பதைப் போலவே அனைவரது மனதிலும் இருக்கின்றான்..

    அதுவும் அக்னி வடிவத்தில்...

    அன்றைக்கு அந்த அர்ச்சகரின் மனசாட்சியை பணம் என்னும் மாயை மறைத்திருக்கலாம்.. உண்மையே..

    ஆனால் - அது எத்தனை நாளைக்கு ஆகும்?...

    எப்பேர்பட்ட ஆத்திகனாக இருந்தாலும்சரி.. நாத்திகனாக இருந்தாலும் சரி..
    மாயை எல்லாம் ஒரு நாள் கண்டிப்பாக கழன்றே போகும்...

    அப்போது அந்த மனசாட்சி என்னும் அக்னியானது அவனவனையும் சுட்டுப் பொசுக்கியே தீரும்!..

    இன்றைக்குக் கூட அந்த அர்ச்சகரின் மனம் வருந்திக் கொண்டிருக்கும்..
    பணத்திற்காகப் பக்தர்களை வதைத்தேனே!.. - என்று...

    பழனியாண்டியைப் பார்சல் பண்ணினவனாக இருந்தாலும்
    பாயிலும் நோயிலும் கிடந்து ரத்தக் கண்ணீர் வடித்தே தீர்வான்...

    பழிபாவம் செய்தவர்களின் கண்ணீர் சில சமயங்களில் ஊருக்கும் உலகுக்கும் தெரிகின்றது..
    சில சமயம் தெரிவதில்லை... அதெல்லாமும் நமக்குத் தெரிய வேண்டும் என்ற அவசியமும் இல்லை...

    பழனியாண்டியைப் பார்ப்பதற்கு நீங்கள் - கரடு முரடான பல கற்படிகளைக் கடக்க வேண்டியதாக இருக்கும்..

    அவற்றுள் - கடைசி கற்படியாக அந்த அர்ச்சகரை நினைத்துக் கொள்ளுங்களேன்...

    உங்களை அழைத்துச் சென்ற தேவகோட்டை அரு. கணபதி ஐயா அவர்கள் சொன்னது சரியே..

    பழனியாண்டியின் திருமேனியைப் பார்க்காது வந்தது தவறுதான்..

    அணைப்பதும் அவனே.. அடிப்பதும் அவனே!...
    எல்லாவற்றையும் சரியாகச் செய்து முடிப்பவனும் அவனே!...

    அன்பு செய்வோரை எப்போது அணைத்துக் கொள்வான் என்பது தெரியாததைப் போல
    அராஜகம் செய்வோரை எப்போது அடித்துத் தூக்குவான் என்பதும் தெரியாது...

    எல்லாவற்றையும் நாம் தெரிந்து கொள்ள முடியாது..
    எல்லாவற்றையும் தெரிந்து கொண்டால் நம்மால் நிம்மதியாக இருக்க முடியாது!...

    அன்பின் வாழ்க நலம்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை சொல்வதை வார்த்தைக்கு வார்த்தை ஆமோதிக்கிறேன். எந்தத் தெய்வமும் தண்டிக்காது. அதுவும் உடனே எல்லாம் தண்டிக்காது! தவறு செய்வது மனிதர்கள். ஆகவே இறைவனிடம் கோபம் கொள்ள வேண்டாமே!

      நீக்கு
  7. அர்ச்சகர்களின் கவனம் திசை மாறுவதால்...இப்படி ஆகிவிட்டது நிலைமை. மனதில் வணங்கினால் போதும், இல்லை மனசாட்சி படி நடந்தாலும் போதும் இறைவன் உள்ளே தானே இருக்கிறான்.

    பதிலளிநீக்கு
  8. உங்களோட அந்த வயசும், அந்த வயசுக்கே உரித்தான கோபமும் அப்படிச் செய்யச் சொல்லி இருக்கிறது. ஆகவே அந்த வயசுக்கு அப்படிக் கோபம் வரத்தான் செய்யும். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான், கீசாக்கா சொல்வது போலத்தான் நிறையக் குழந்தைகள் இருக்கிறார்கள்.. அதுக்கு அப்பவே நல்லபடி விளக்கம் கொடுத்திருந்தால் ஆராவது, கில்லர்ஜியின் நம்பிக்கை மாறுபட்டிருக்க வாய்ப்புண்டு.

      நீக்கு
  9. பணம் பெரிதென வெளியில் இருப்பவர்கள் நினைக்கலாம். ஆண்டவனின் அருகாமை கிடைத்தவர்கள் கூட நினைக்கலாமா? கிடைத்த அருமை உணராதவர்கள். துரை செல்வராஜூ ஸார் நன்றாகச் சொல்லி இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  10. நியாயமாகத்தான் கிளவியக் கேட்டிருக்கிறீங்க.. சே..சே.. டங்கு ஸ்லிப்பாகுதேஎ:) கேள்வியைக் கேட்டிருக்கிறீங்க:).. ஆனா மனிசரைக் கோபிச்சு என்ன பண்ணுவது.. கடவுள் ஒன்றும் கட்ட்டளை இடவில்லையே... சில கோயில் பரிபாலன சபையினருக்கு ஒரு நினைப்பு தாம் மட்டுமேதான் கடவுளின் அஸிஸ்டண்ட்ஸ் என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...

    ஒரு பழமொழி இருக்கிறதெல்லோ.. “குழத்தோடு கோபித்துக்கொண்டு கழுவாமல் போகலாமோ” என.. அது போலத்தான்.. நாம் கும்பிடுவது சாமியைத்தானே.. இடையே குறுக்கே நின்று நம்மை வணங்க விடாமல் தடுப்பதும் நம்மை சோதிப்பதும் இறைவனின் திருவிளையாடலில் ஒன்றாக எடுத்துக் கொள்ளலாம்:))

    பதிலளிநீக்கு
  11. மனசாட்சி என்பதே செய்யுமெந்த செயலுக்கும் விளக்கம் கூற உபயோகமாகும் ஒரு காணாதகருவி எதையும் ஜஸ்டிஃபை செய்ய உதவும்

    பதிலளிநீக்கு
  12. சிறு வயதில் இந்த மாதிரி எல்லாம் செய்வதை தட்டி கேட்க சொல்லும்.

    பழனி என்று இல்லை எல்லா கோவில்களிலும் பணம் படைத்தவர், அதிகாரபலம் படைத்தவர் இவர்களுக்கு எல்லாம் முக்கியயத்துவம் கொடுக்கப்படுகிறது.

    இப்போது முருகனை பார்க்க வய்க்க ஏஜெண்டுகள் இருக்கிறார்கள் உடனே தரிசனம் செய்து வைக்கிறோம் என்று ஆயிரக்கண்ககில் வாங்கி கொண்டு இறைவனை சீக்கீரத்தில் பார்க்க வைத்து அனுப்புகிறார்கள், காவல் இருப்பவர் முதல் அர்ச்சகர், வரை பணம் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

    நாம் ஒன்றும் செய்யமுடியாது இப்படி இருப்பவர்களுடன் தான் வாழ்ந்து ஆக வேண்டும்.
    எல்லாம் இறைவன் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்.
    கேட்க வேண்டிய நேரத்தில் கேட்பார்.

    பதிலளிநீக்கு
  13. கூடல் அழகர் கோயிலில் பட்டர் அழகாய் சொன்னார், தாயார் சன்னதியில் ஒரு அம்மா நடுவில் நின்றார்கள், அவர்களை முன்னால் வாருங்கள் வருபவர்களுக்கு இடம் விடுங்கள், எல்லோரும் பார்க்க வேண்டும் தாயாரை.
    நாம் இடைஞ்சல் செய்யக்கூடாது. பார்த்தவர்கள் வழிவிட வேண்டும் வருபவர்களுக்கு. சின்ன இடம் நிறைய பேர் நிற்க முடியாது அவர் அவர்களே புரிந்து நடந்து கொள்ளவேண்டும் என்று.

    புரிதல் நம்மில் வரவேண்டும் தூக்கின கையை இறக்காமல் சிலர் பின்னால் இருப்பவர்களுக்கு மறைப்பார்கள்.
    போனோம் வந்தோம் என்று இறைவனை கும்பிட்டு வந்து விட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  14. தாங்களாவது பழனியாண்டி அர்ச்சகரை பார்த்து முறைத்து வந்து விட்டீர்கள். நான் மீனாட்சி கோவில் வழியாக ஆய்ந்தாறு தடவை..ஏன் ? இன்னமும் அந்தவழியாகத்தான் சென்று வருகிறேன்.. ஒரு தடவை..ஒரே தடவை கோயிலுக்குள் நுழைந்ததில்லை....... நண்பரே.

    பதிலளிநீக்கு
  15. கடவுளைத் தேடி மனிதகுலம் வெகு வெகு வெகு..... தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது.

    உங்களின் இளமைப் பருவ அனுபவம் நம் நண்பர்கள் பலரையும் சிந்திக்கத் தூண்டியிருக்கிறது.

    மகிழ்ச்சி கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
  16. துளசிதரன்: கில்லர்ஜி நீங்கள் சொல்லியிருப்பது பலரது மனங்களிலும் எழும் கேள்விதான். ஆனால் இறைவனுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மனிதர்கள் செய்யும் தவற்றிற்கு இறைவனின் மீது நாம் கோபம் கொள்ள வெண்டிய அவசியம் இல்லை என்றே தோன்றுகிறது. தொடர்கிறோம் கில்லர்ஜி.

    கீதா: கில்லர்ஜி நான் அடிக்கடி உங்களின் இது போன்ற கேள்விகள் எழும் பதிவிற்கு எழுதும் பதில்தான். இறைவனைப் பற்றி அப்படியான எண்ணங்களைப் பலரும் சொல்லிக் கேட்டு நம் மனம் பழகிவிட்டது. சினிமக்களில் வருவது போல இறைவன் டொட்டடெய்ங்க்னு வந்து அருள் பாலிப்பார் அல்லது தண்டிப்பார் என்று பல கதைகள் சொல்லப்பட்டது நாம் நல்ல விதமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அல்லாமல் இறைவன் மீது பயம் கொள்ள வேண்டி அல்ல. நாம் செய்யும் நல்லதற்கும் சரி கெட்டதற்கும் சரி இறைவனுக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

    பதிலளிநீக்கு
  17. துரை அண்ணாவின் கருத்து அட்டகாசம்!!! செம செம!!!! அழகான புரிதல் விளக்கம். நான் அப்படியே ஒரு எழுத்து கூட விடாமல் அப்படியே அதனை டிட்டோ செய்கிறேன். நான் பெரிதாகச் சொல்ல நினைத்த கருத்து ஆனால் அண்ணா அளவிற்கு இவ்வளவு அழகாகச் சொல்லியிருக்க முடியாது என்னால். அருமை அருமை!!! அங்கு பதில் கொடுக்க முடியவில்லை அந்த பாக்ஸ் வரவில்லை. அதனால் இங்கேயே கொடுக்கிறேன். துரை அண்ணா உங்கள் கருத்தை மிக மிக மிக ரசித்தேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
  18. மனமது செம்மையானால்
    மந்திரங்கள் ஜெபிக்க வேண்டாம் என்பது திருமூலர் வாக்கு
    விசித்திகனாருக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    பழனி மலை முருகன் கோவில் படங்கள் அருமை. மனிதர்களில் பெருபான்மையான வர்கள் பணத்திற்கு அடிமைதான். சும்மாவா சொன்னார்கள். "பணம் என்றால் பிணமும் வாய் திறக்குமென" எல்லாமே பணம் படுத்தும் பாடுதான்..ஆசைகளும் உடன் சேர கேட்கவா வேண்டும்.? ஆனால் அதைச் சொன்னவர்கள் "அரசன் அன்று கொல்வான்.. தெய்வம் நின்று கொல்லும்." எனறும் கூறி விட்டார்கள். இடையில் நாமெதற்கு? தவறை மனிதன் உணரும் காலம் ஒருநாள் கண்டிப்பாக வருமில்லையா? பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  20. அன்பு தேவகோட்டை ஜி, உங்கள் பதினைந்து கோபம் தெளிவாகப் புரிகிறது.
    என் மகளும் 1983 //அதே 15//இல ,திருப்பதி போய் வந்து புலம்பிக் கொண்டே இருந்தாள்.

    நியாயம் இல்லையே என்று. இப்பொழுது இந்த ஊரு பெருமான், அவசரமில்லாமல் எல்லோரையும் காண்கிறார். பாடுகிறார்கள்.
    தூங்க வைக்கிறார்கள். வரிசையில் சந்தடி இல்லை.

    அன்பு பால முருகன் காருண்யம் உங்களைச் சூழ்ந்திருக்கும்.

    தவறிழைத்தது மனிதர். காப்பவர் முருகன்.
    நலம் பெருகட்டும்.நலமாக இருங்கள்.

    பதிலளிநீக்கு
  21. மனிதர்கள் தவறு செய்த வண்ணமே இருல்கிறார்கள். அதற்கான பலனும் அவர்களுக்கு கிடைக்காமல் இருப்பதில்லை. பின்னூட்டங்கள் ஸ்வாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  22. சன்னதி முன் நின்று நின்று அவனிடம் வேண்டுகோள் வைப்பதை விட..மன கண்ணில் அவனை காண சில நிமிடங்கள் பார்த்தால் போதும் என்பது என் எண்ணம்..



    நான் பிறந்த ஆண்டு நீங்கள் பழனி க்கு சென்று இருக்கிறீர்கள்...அண்ணா..

    பதிலளிநீக்கு
  23. நாம எதிர்பார்த்தது நடந்தா கடவுள் இருக்கார். இல்லன்னா கடவுள் இல்லை

    பதிலளிநீக்கு
  24. பழனியில் தங்களுக்கு கடவுள் நம்பிக்கை பற்றிய முடிவை எடுக்க முருகன் உதவியுள்ளதாக எடுத்துக்கொள்ளலாமா?

    பதிலளிநீக்கு
  25. அந்த வயதில் நியாயமான கேள்வி

    பதிலளிநீக்கு
  26. நினைத்தது நடந்தேற விரதமிருந்து கருவறை வாசலில் காத்திருந்தேன். நடை திறந்தது, மூச்சு முட்டியது. வியர்வை வழிந்தது.
    கும்பிட்டது போதும் என்று அவர்கள் தள்ளிவிட்டார்கள். வாசலில் விழுந்தேன். "அம்மா தாயே பிச்சைப்போடு" என் முன்
    நீ.. நான் நீயானேன்... நீ மீண்டும் சிலையானாய்.. என்று ஹேராம் தொகுப்பில் எழுதியிருந்தேன்.
    இப்படியான ஓர் அனுபவத்தில் நானும் எழுதியிருந்ததை இப்பதிவு நினைவூட்டியது.

    பதிலளிநீக்கு
  27. பதினைந்து வயதில் நீங்கள் படபடத்தது இயற்கையானது. அப்போதைய புரிதல் அப்படித்தானிருக்கும். இப்போது நீங்கள் பதினைந்தில்லை அல்லவா?

    பதிலளிநீக்கு