தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, மே 30, 2015

அந்த நாள்.

 30.05.2001
என்னவளே...
என்னை விட்டும், இந்த மண்ணை விட்டும் நமது பொக்கிஷங்களை விட்டும், விண்ணுக்கு போகிறேன் என்று மண்ணுக்குள் போய் பதிநான்கை கடந்து பதினைந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்தவளே... பதினாறாம் ஆண்டைக்காண இந்த பதியுமுண்டோ ? யாமறியேன் பராபரமே... ஒருக்கால் பதினாறில் நாம் விண்ணுலகில் மீண்டும் சதி-பதி ஆனால் ? சம்மதமே... விதியின் சதியால் நீ விண்ணிலும், நான் மண்ணிலும், ஆயினும் நீ என்னுள், நமது பொக்கிஷங்கள் எனது கண்ணுள் நானும் உன்னைப்போல் இந்த மண்ணை விட்டு விண்ணுக்கு வரும் நாள்வரை... அந்நாள் நிச்சயம் எமக்கு பொன்நாளே, பொன்மகளே...
 
என் நெஞ்சமெல்லாம் நீயிருக்க,
உன் நெஞ்சுக்குள்ளும் நானிருப்பேன்
கண்ணுக்குள்ளே வாழ்ந்திருப்போம்
என்றாயே... என்னழகே...

பக்கத்திலே, நீ இருந்தால்
துக்கம் இல்லை துன்பமில்லை
துணையாக தூணாக நீயிருக்க
என்றாயே... எளியவளே...

மீசையென்னை குத்துதென்றே
மீட்டி விடுவாயடி மீசைதன்னை
மீளாத்துயரில் என்னை தள்ளிவிட்ட
மீசையின்று தாடியாகி போனதடி

பசுமையான நினைவுகளை பகிர்ந்து
பேசிக் களித்திருப்போம் கள்ளழகா
குசும்புக்கார குறுகுறுத்த மச்சானே
என குறள் கொடுத்தாய் குரலாளே...

துபாய்க்கு பொருள்தேடி வந்தவனை
தூரமாக போய் விட்டாய் என்றவளே
திரும்பாத தூரத்துக்கு நீ மட்டுமே
போனதேன்டி பொன்மயிலே...

தூக்கத்திலே நீ இருந்து... துக்கத்திலே
என்னை ஆழ்த்தி நீங்காத துயரத்துக்கு
தூங்காத நினைவுகளை கண்ணுக்கு
கொடுத்தாயே... கொம்புத்தேனே...

பத்து மாதம் சுமந்தெடுத்த பனிமலர்
பொக்கிஷத்தை கொடுத்துச் சென்றாய்
நீ எனக்கு பார்த்துக் கொள்ளச்சொல்லி
என்னை பதற விட்டாய்... பாதகத்தி...

நான் வரும் நேரம் எது நானறியேன்
நன்மகளே கெட்டகாலம் என்றுரைப்பர்
கேடுகெட்ட மானிடரே நல்லகாலமென
நானுரைப்பேன் எமக்கும் வரும் அந்த நாளை.
காணொளி.
அன்பு நெஞ்சங்களே என்னவளுக்கு நான் எழுதிய மௌனமொழி கவிதையை படிக்காதவர்கள் மேற்கண்ட இணைப்பை சொடுக்கி படிக்க வேண்டுகிறேன்.
கில்லர்ஜி.

44 கருத்துகள்:

 1. விண்ணுலகம் சென்ற உங்களின் மனைவி மீது இருக்கும் பாசத்தை அழகாய் கவிதையோடு பகிர்ந்த மீசை நண்பா உங்களுக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தையில்லை!

  பதிலளிநீக்கு
 2. நண்பரே..
  பதிவை படித்தவுடன் என்னையும் அறியாமல் சோகம் தாக்கியது. தைரியமாய் இருங்கள்.

  பதிலளிநீக்கு
 3. தங்கள் துயரம் எமக்குப் புரிகிறது. ஆனால், தங்கள் பிள்ளைச் செல்வங்களை பெரிய அறிஞர்களாக்கி தங்கள் துணைக்கும் தங்களுக்கும் பெருமை சேருங்கள்.

  பதிலளிநீக்கு
 4. இன்று உங்கள் துணைவியின் நினைவு நாள் என்று அறிந்து நெகிழ்ந்தேன். பழைய பதிவையும் படித்தேன்.

  காலம் உங்கள் மனத்துயரைக் குறைக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 5. ஈடு செய்ய இயலா இழப்பு நண்பரே
  ஆண்டுகள் எத்துனை கடந்தாலும்
  தங்களுக்கு ஆறுதல் கூற
  வார்த்தைகள் இல்லை என்னிடம்
  தம +1

  பதிலளிநீக்கு
 6. வருத்தமா இருக்கு...இன்று வரை அவரை எண்ணியே வாழும் உங்களை நினைக்கையில் பெருமையாகவும் இருக்கு...

  பதிலளிநீக்கு
 7. நல்லதோர் நினைவஞ்சலி.

  உங்கள் செல்லங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.....

  பதிலளிநீக்கு
 8. ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை ஜி...

  பதிலளிநீக்கு
 9. தங்கள் துணைவியாரின் நினைவு நாளான இன்று எனது சிரம் தாழ்ந்த அஞ்சலி.

  பதிலளிநீக்கு
 10. இன்பா வமைத்தீர் இனியவளை எண்ணியே
  கண்முன்னே இல்லை யெனினும் எண்ணத்தில்
  என்றுமே வாழ்ந்து உயர்விலும் தாழ்விலும்
  ஒன்றிணைந்து நல்குவள்நல் ஆசி !

  எப்படி ஆறுதல் வழங்குவது என்று தெரியவில்லை ஜி. மனம் பாரமாகிற்று. உங்களை நம்பி விட்டுச் சென்ற பாதி பொக்கிஷம் இருக்கிறதே. பார்த்து ஆறுதல் அடைய வேண்டாமா சகோ? அவர்கள் வளர்ச்சி நிச்சயம் நிம்மதியை தரும். எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவானாக.

  பதிலளிநீக்கு
 11. பொருத்தமான ,எனக்கு மிகவும் பிடித்த பாடல் ,உங்களுக்கு மன ஆறுதலைத் தரட்டும் !

  பதிலளிநீக்கு
 12. காலம் உங்களுக்கு மாறுதலைத் தரும்..
  பெற்றெடுத்த செல்வங்கள் ஆறுதலைத் தரும்..

  பதிலளிநீக்கு
 13. உங்களுடைய பதிவை பார்த்து சிரித்தும் ரசித்தும் இருக்கிறேன் சகோ. ஆனால் இன்று உங்களுடைய பதிவை பார்த்ததும் என்னையும் அறியாமல் சோகம் தாக்கியது. எனக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. தங்களின் துணைவியாருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலியை தேர்வித்துக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 14. உங்கள் பாசத்தின் வேருக்கு "பா" வால் நீரூற்றி அஞ்சலி...

  பதிலளிநீக்கு
 15. படிக்கும்போது கண்ணில் நீர் கசிவதை என்னால் கட்டுப் படுத்த முடியவில்லை. குழந்தைகளுக்காக வாழ வேண்டும், இறைவன் தங்களை இரட்சிப்பானாக.

  பதிலளிநீக்கு
 16. தேவக்கோட்டையாரே...

  சட்டென கலங்கிப்போனேன். ஆறுதல் சொல்லமுடியாத துக்கம்தான்.

  உங்கள் பெரிய மீசைக்குள்ளும் இப்படி ஒரு கதையா..?

  உங்கள் கடமைக்காக கலங்காதிருங்கள்.

  கடவுள் வழி நடத்துவார்.

  பதிலளிநீக்கு
 17. சில நினைவுகள் நீங்காதவை. உற்றவளின் பிரிவும் அதில் ஒன்று. இருந்தாலும் வாழ்க்கை நியதி அறிந்த உமக்கு நான் கூறுவது ” எதுவும் கடந்து போகும்”

  பதிலளிநீக்கு
 18. ஆறுதல் சொல்ல வார்த்தையில்லை சகோ. கண்களில் கண்ணீர். நீங்கள் உயர்ந்து நிற்கின்றீர்கள், மனைவியின் மேல் வைத்திருக்கும் பாசத்தால். கவலைவேண்டாம். நீங்களும், உங்க பிள்ளைகளும் நன்றாக இருக்க இறைவன் துணை இருப்பார்.

  பதிலளிநீக்கு
 19. மண்ணில் மறைந்த வாழ்க்கை துணைக்கு
  விண்ணை வரைந்து கவி படைத்தாய்!
  பொன்னை பொக்கிஷம் என்பது பொய்!
  உன்னை நேசித்தவர் அன்பே மெய்!!!

  அருங்கவிதை எழுதும் ஆற்றலை
  பெருங் காற்றாய் அவர் அளித்தார்
  அவரது நினைவும் உமது புனைவும்
  அழியாது அகிலத்தில் சிறக்கட்டும்!

  துயரம் உன்னை இனி துரத்தாது
  வைரம் மண்ணில் இனி புதையாது
  மீளாத் துயரை துடைத்தே உந்தன்
  தோளில் சாய்ந்தே தேற்றுகிறேன்!
  நட்புடன்,
  புதுவை வேலு
  பண்பினை விட்டு செறாயோ 10 த ம

  பதிலளிநீக்கு
 20. எப்போதும் கோபமாகவும் ஆவேசமாகவும் நகைசுவையாகவும் எழுதும் எங்கள் கில்லர்ஜி இன்று எங்களை கண்ணீரில் நனைய வைத்துவிட்டார். ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை நண்பரே!

  பதிலளிநீக்கு
 21. எதைச்சொல்லியும் ஈடுசெய்ய முடியாத இழப்பு தங்களுடையது. மனதைரியத்துடன் இருங்கள்.

  பதிலளிநீக்கு
 22. மனைவி மீதான அன்பில் தாங்கள் உயர்ந்து நிற்கிறீர்கள் சகோ. பனிமலர்களை உங்களிடம் பத்திரமாக விட்டுச் சென்றிருக்கிறார்கள். கலங்காதீர்கள். வார்த்தைகள் வரவில்லை சகோ. தம +1

  பதிலளிநீக்கு
 23. இது தான் காதல்.
  வணங்குகிறேன்
  உம்மால் அழவும் வைக்க முடியும் என்பதை உணர்ந்தேன் சகோ,

  பதிலளிநீக்கு
 24. தங்களின் உள்ளத்தின் உள்ளத்தை கலங்க வைத்தவன் ஒரு வஞ்சகன் நண்பரே..

  பதிலளிநீக்கு
 25. வணக்கம் சகோதரரே.

  தங்கள் பதிவை கண்டதும் வருத்தம் மிகுந்தது. காலந்தான் துயரமெனும் மனப்புண்ணை ஆற்றும் மருந்து.! வேறு என்ன சொல்ல.? குழந்தைகளுக்காக மனதை தேற்றிக் கொள்ளவும். கடவுள் துணையிருப்பார்.

  என் கடமையின் நிமித்தம் நான் காணாமல் போனாலும், மனம் தங்கள் பதிவுகளை தவற விட்டமையை நினைத்தபடி வலையுலகை சுற்றி வருகிறது. அனைத்தையும் வாசித்து வருகிறேன். தாமத வருகைக்கு மன்னிக்கவும்.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 26. உங்கள் மன கஷ்டத்தில் பங்கேற்கிறேன் ஒரு அறியாத நண்பனாக ....

  பதிலளிநீக்கு
 27. உங்கள் வேதனை புரிகின்றது. உங்கள் கண்ணீர் அஞ்சலியில் அவரது ஆன்மா இளைப்பாறட்டும். நானும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
  த.ம.17

  பதிலளிநீக்கு
 28. அன்பின் இனிய சகோ! நீங்களும் என்னைப் போன்றவர் தானா! துணையைத் தொலைத்துவிட்டு , தனிமை வயப்பட்டு படும் துயரம் நான் நன்கு அறிவேன்!
  கொள்வோம் ஆறுதல்! வேறென்ன கூற!

  பதிலளிநீக்கு
 29. பெயரில்லா5/31/2015 5:54 PM

  பாடலைக் கேடகத் தான் கவலையாக உள்ளது.
  இணையம் - தமிழ் இருக்கிறது.
  எல்லாம் வெல்லலாம்.
  இறை துணை நிற்கட்டும்.

  பதிலளிநீக்கு
 30. கவிதையும் காணொளியும் மனதை கனமாக்கி விட்டது! கடைசி வரை வரும் என்று நம்பிக்கொண்டிருந்த உறவு இடையிலேயே பிரிந்து போனால் அந்த வேதனை வருடங்கள் கழிந்து சென்றாலும் மறைவதில்லை! எத்தனை ஆறுதல் சொன்னாலும் மனதிற்கினியவளின் பிரிவு ஏற்படுத்திய வலி குறையப்போவதில்லை! இருந்தாலும் மனதிற்கு மகிழ்ச்சி தந்த நினைவுகளை நினைத்து, வேதனையைக் குறைத்துக்கொள்ள‌ முயற்சி செய்யுங்கள்!
  உங்கள் துணைவிக்கு என் நினைவஞ்சலியை சமர்ப்பித்துக்கொள்கிறேன்!

  பதிலளிநீக்கு
 31. பேரிழப்புகளுக்கு காலம் ஒன்றே அருமருந்து என்பார்கள்.
  உங்கள் விசயத்தில் இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் வலி இருந்துகொண்டே இருக்கும் போல் உணர்கிறேன்.
  மீண்டுவாருங்கள் தோழரே.
  மனம் கனக்கிறது.
  நேற்றே வர முயற்சித்தேன்.
  மோடம் என்னை பாடாய்ப்படுத்தி இன்றுதான் அனுமதித்தது..
  தம+

  பதிலளிநீக்கு
 32. வணக்கம்
  ஜி

  பதிவை படித்த போது மனதில் வேதனை... அதிலும் கவியை படித்த போது கண்கள் ஆறாகிவிட்டது.. தங்களின் அன்புக்கு உரிய மனைவி தங்களை விட்டு சென்று 15 ஆண்டுகள் நடை போடுகிறது.. கவலை வேண்டாம் பிறப்பு ஒன்று இருந்தால் இறப்பு என்ற ஒன்று இருக்கு..ஜி.. எல்லாவற்றுக்கும் உதவியாக உங்கள் செல்வங்கள் உள்ளது.. ஜி.. கவலை வேண்டாம்.... த.ம 21

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 33. நெகிழவைக்கும் நேசம். ஆறுதலுக்கு அப்பாற்பட்ட துயரம் இது. ஆற்றிக்கொள்ளவும் தேற்றிக்கொள்ளவுமாய் காலமும் சூழலும் துணையிருக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 34. ஆண்டுகள் கடந்தாலும் சோகத்தின் ஆழம் குறைவதில்லை.உங்கள் அன்பின் ஆழமும் புரிகிறது.ஆறுதல் வார்த்தை சொல்வதைத் தவிர வெறென்ன செய்ய இயலும்?

  பதிலளிநீக்கு
 35. இத்தனை நாளும் குறும்புக்கார கில்லர் ஜி என்று நினைத்திருந்தேன் ஆனால் எவ்வளவு வலிகளைச் சுமந்துகொண்டு வாழ்கின்றீர்கள் என்று இன்றுதான் கண்டுகொண்டேன் விதிவழி பயணங்கள் யார் யார் எப்போ என்று அவனுக்கே வெளிச்சம் ....இருக்கும் செல்வத்தின் எதிர்காலம் வேண்டி அமைதி கொள்ளுங்கள் தோழரே ..உங்கள் அன்பு மனைவியின் ஆன்மா இறையோடு என்றும் ஒன்றித்திருக்கட்டும் ..உங்கள் மனதும் ஆறுதல் கொள்ள ஆண்டவனை வேண்டுகிறேன் நன்றி
  தம கூடுதல் ஒன்று

  பதிலளிநீக்கு
 36. நோ வேர்ட்ஸ் இன் தெ டிக்ஷனரி தமிழ் ஆனாலும், ஆங்கிலமானாலும்...சொல்லுவதற்கு. ஏனென்றால் இதற்கு வார்த்தைகள் அவசியமில்லை....மொழி கிடையாது...உணர்வுகள் தான்....உங்கள் கவிதை நன்று என்று சொல்ல மனம் வரவில்லை ஏனென்றால் அது உங்களின் சோக உணர்வுகளின் வெளிப்பாடு.....நன்று என்றால் அது உங்களின் உணர்வுகளைக் குத்துவது போல்....ஆனால், சொல்லியவிதம் நன்று.

  காலம் எதையும் ஆற்றும் என்பார்கள்....ஆனால் அதை என்னால் ஒத்துக் கொள்ள இயலாது.....சில விடயங்கள் நமது மனதில் ஆழமாகப் பதிந்து போகும்....இரண்டறக் கலந்து போகும் நம்முடனே...மரணம் வரை...விலகாமல்...

  உங்கள் இரு செல்லக் கண்களும் உங்களுக்கு உறுதுணையாக இருந்து, இறுதிவரை அந்தக் கண்கள் உங்களைத் தாங்கிச் செல்வார்கள். அதற்கு இறைவனின் அருள் கிடைக்க பிரார்த்தனைகள். தங்களின் மனைவி அவர்களுக்கு எங்கள் மௌன அஞ்சலி.....இதுவும் கடந்து போகும் என்பார்கள்...கடக்கும் ஆனால் மனதினுள் சுற்றிச் சுற்றிக் கி/கடக்கும்....

  பதிலளிநீக்கு
 37. அன்புள்ள ஜி,

  இதயம் கனத்த கவிதை. பத்துத் திங்கள் சுமந்து தங்கத்தைத்தந்து தங்களைப் பரிதவிக்க விட்டுச் சென்று விட்டார்கள் என்றே எண்ணுகிறேன்.

  தங்கமகன் தங்களைத் தாங்குவான். பட்ட இன்னல் பனியாய் விலகும்.

  ஒரு கையில் தட்டச்சு செய்கிறேன்.

  நன்றி.
  த.ம. 24

  பதிலளிநீக்கு
 38. தாயோடு அறுசுவைபோம் தந்தையொடு கல்விபோம்
  சேயோடு தான் பெற்ற செல்வம் போம்..மாய வாழ்வு
  உற்றாருடம் போம்..உடன் பிறப்பால் தோள் வலி போம்..
  பொற்றாலியோடு எவையும் போம்..

  என்பார் ஒளவையார் -

  மனைவியோடு எல்லாமும் போகும் என்கிறதாய்த் தோன்றுகிறது ஔவையின் வாக்கு.

  உங்கள் பதிவு கண்டதும்.

  நினைவுகளில் வாழும் அவரை நினைவு கொண்ட உங்கள் உள்ளம் காட்டி கவிதை நெகிழச்சி.

  நன்றி நண்பரே!

  தாமதத்தைப் பொறுக்க மாட்டீர்கள் என்றாலும் வருந்துகிறேன்.

  பதிலளிநீக்கு
 39. காலம்தான் சோகத்தை மாற்றும் ஒரே மருந்து. உங்கள் தியாகம் சிறக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 40. ஐயா! தாமத வருகைக்காக வருந்துகிறேன்!

  கவிதைப் பதிவு என்று நீங்கள் கூறியவுடன் கடந்த ஆண்டைப் போல ஏதோ போட்டியில் கலந்து கொண்டு அதற்கான கவிதையை வெளியிடப் போகிறீர்கள் என்று நினைத்தேன். இப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. கடந்த ஆண்டு நீங்கள் எழுதிய 'மௌன மொழி' கவிதையையும் நான் படித்துக் கருத்திட்டது உங்களுக்கு நினைவிருக்கும் என நம்புகிறேன்.

  உங்களுக்கு ஆறுதல் சொல்வதா அல்லது இப்படி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் தன் மனைவியிடம் எப்பொழுது போய்ச் சேர்வோம் என்கிற எதிர்பார்ப்புடனே ஒவ்வொரு நாளையும் கடத்தும் இப்பேர்ப்பட்ட காதல் கணவனோடு வாழக் கொடுத்து வைக்காத உங்கள் மனைவியை எண்ணி வருந்துவதா? எனக்குத் தெரியவில்லை.

  வார்த்தைகளின்றி விடைபெறுகிறேன்!

  பதிலளிநீக்கு
 41. உங்களது துணைவியாரைப் பற்றிய தங்களின் பதிவை முன்னரே படித்துள்ளேன். அதனைத் தற்போது மறுபடியும் தாங்கள் நினைவுகூறியுள்ளீர்கள். அண்மையில் சார்ளி சாப்ளின் வரலாறு படித்து முடித்தேன். அவ்வளவு சோகங்கள். தந்தையின் முகத்தை சரியாக அறியாதவர், உடல்நிலை முடியாத தாய், வறுமையின் கொடுமை என்ற நிலையில் நம்மை முழுக்க முழுக்கச் சிரிக்க வைத்தவர். அதே சமயம் அவருக்கு நடிப்பு, தொழில்நுட்பம், இயக்கம் என்ற நிலைகளில் பல அபார திறமைகள் உண்டு. வழக்கமாக கிண்டலும், கேலியும், சிரிப்பும் (அத்துடன் பாடம் தரும் செய்திகளைத் தருகின்ற) கொண்ட உங்கள் பதிவுகளுக்கிடையே இப்பதிவானது எங்களை நெகிழவைத்துவிட்டது. நீங்கள் எச்சூழலையும் எதிர்கொள்வீர்கள் என்பது நாங்கள் அறிந்ததே. உங்களுக்கு அவ்வகையான உரிய மனப்பக்குவத்தையும் தைரியத்தையும் இறைவன் தொடர்ந்து அளிக்க வேண்டுகிறேன். சொந்தம் என்ற நிலையில் மனைவிக்கு ஈடு எவருமில்லை என்பதை உணர்த்தும் தங்களது கருத்துக்களை முழுமையாக ஏற்கிறேன்.

  பதிலளிநீக்கு
 42. நெஞ்சை பிழிந்து, தமிழால் பூஜித்து கண்ணை கலங்கவைக்கும், இதய ஓலம்

  பதிலளிநீக்கு
 43. நெஞ்சை நெகிழ வைத்த கவிதை.

  பதிலளிநீக்கு