தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஆகஸ்ட் 30, 2021

நிஜத்துடன் யுத்தம், நிழலுக்கு முத்தம்

 

Kalaiselvi Killergee
30.08.1991 – 30.08.2021
 
சேனா உனக்கு நிஜத்தில் தந்தவைகளை விட இன்று நிழல் படத்துக்கு நான் தருபவை அதிகமாகி விட்டதே... அது முத்தம் மட்டுமல்ல... உனக்கு பிடித்தமான மல்லிகைப்பூவும்தான். அன்று வெறும் இரண்டு ரூபாய்க்கு வாங்கி கொடுக்க முடியாத வாழ்வு இன்று எவ்வளவுக்கும் வாங்கி கொடுக்கலாம் ஆனால் உனது படத்துக்குதானே கொடுக்க முடிகிறது. என்னவொன்று இதில் பெண்கள் மல்லிகைப்பூ சூடிக்கொள்வதற்கான அடிப்படைக் காரணத்தை நீ மறந்து, மறுத்து விடுவாய்.
 
இதன் காரணமாககூட நான் உனக்கு மல்லிகைப்பூ வாங்குவதை விரும்பி இருக்க மாட்டேனோ... என்ற சிந்தை இன்று எனக்கு எழுகிறது. கண் போன பின்னே சூரிய நமஸ்காரம் என்பது காலம் கடந்தே சிலருக்கு உணர்த்துகிறது. நாம் நேரில் பேசியவைகளைவிட, இன்று உன்னிடம் பேசுபவை அதிகமாகி விட்டது. காரணம் இனி நிரந்தர தனிமனிதன். அன்று கேள்வியும் பதிலுமாக இரண்டு குரல்கள், இன்று கேள்வியற்ற பதிலாகவோ, பதிலற்ற கேள்வியாகவோ ஒரே குரல் மட்டும்தான்.
 
பிறரின் ஆசைக்காக நாம் இணைக்கப்பட்டோம் என்பதுதானே நிஜம். இருப்பினும் நான் என்றுமே உன்னை வெறுத்ததில்லை. இதற்கு இறைவன் ஒருவனே சாட்சி. அவன் சாட்சி சொல்ல வரமாட்டான். அடுத்தது எனது மனசாட்சி அது செல்லாக்காசு. பொருளாதாரச்சூழல் நமது தாம்பத்ய வாழ்வை பத்யமாக்கி விட்டது. நீ நூறு சதவீதமான உத்தமி என்பதுதான் நான் என்றுமே மகிழும் மிகப்பெரிய விடயம். வாழாமலேயே நீ மண்ணுள் மறைந்து விட்டாய். அதனால் நாமும் இப்படி வாழ்வதுதான் நமது தாம்பத்ய வாழ்வுக்கு நான் கொடுக்கும் மரியாதை. என்று எனது வாழ்வை இப்படி ஆக்கி கொண்(ன்றே)டேன். நம்மை இணைத்தவர்கள் எல்லோருமே மறைந்து விட்டார்கள் அவர்களோடு நீயும் சென்று விட்டாய் பாக்கி நான் மட்டுமே...
 
இச்சமூகத்தில் நானும் ஆண் மகன்தான் என்பதற்கு நீ கொடுத்துச் சென்ற பொக்கிஷங்களே சாட்சி. இவ்வுலகில் நானும் ‘’வாழ்ந்து’’ இருக்கிறேன் என்பது நீ எனக்கு கொடுத்த அந்த ‘’சில’’ கூடல்கள்தானே... வேறு யார் ? சேனா நான் நன்மை செய்தும் தண்டனை பெறும். இந்த வாழ்வுமுறை எனக்கு விளங்கவேயில்லை. இதற்கு பதில் தருவது யார் ? உன்னிடம் இணையும் நாளில்தான் இதற்கு விடை கிடைக்குமோ... ?
 
இன்று முப்பதாம் (30) ஆண்டின் நமது திருமணநாள் உன் நினைவோடு...

15 கருத்துகள்:


  1. உங்களுக்கு ஆதரவாக சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை கில்லர்ஜி.. நிச்சயம் உங்கள் மனைவியின் ஆத்மா சாந்தி அடைந்திருக்கும்.... ஆனால் உங்கள் உள்ளமோ இழப்பின் காரணமாக அமைதி அடையவில்லை என்றே நினைக்கின்றேன்

    பதிலளிநீக்கு
  2. நல்லது செய்தும் தண்டனை பெறும் நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.. ஆனால் அதற்கான தெளிவான விடைகள்தான் கிடைக்கவில்லை

    பதிலளிநீக்கு
  3. உங்களின் நல்ல மனதால் எல்லோர் மனதிலும் உயர்ந்த நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  4. நல்ல மனிதரான உங்கள் எண்ணத்தில் மனைவி என்றும் வாழ்வார். உங்களுக்கு ஒரு குறைவும் ஏற்படாது. உங்கள் கடமையைச் செய்திருக்கிறீர்கள். காலம் உங்களைக் கைவிடாது

    பதிலளிநீக்கு
  5. ஆறுதல்கள்.  மனதில் வாழும் உங்கள் மனைவி உங்களுடனே என்றும் இருப்பார்.  உங்கள் மனக்கவலைகளும் தீர வழி வகுப்பார்.

    பதிலளிநீக்கு
  6. ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை... இது போன்று வாழ்பவர்களும் இல்லை...

    தவ வாழ்க்கை ஜி...

    பதிலளிநீக்கு
  7. துணையை இழந்து இத்தனை வருடங்களாக அந்தத் துயரத்திலேயே ஆழ்ந்திருக்கும் உங்களுக்கு என்னவென்று ஆறுதல் சொல்வது? எந்த வார்த்தையும் எந்த உறவும் இந்த காயத்தைப் போக்க முடியாது என்பது தான் உண்மை! உங்கள் மன தைரியத்தால் மட்டுமே இதைக் கடந்து போக முடியும்!

    பதிலளிநீக்கு
  8. ஆறுதல் கூறு வார்த்தைகள் இல்லை நண்பரே
    தங்களின் மன வலிமை தங்களை வழி நடத்தும்

    பதிலளிநீக்கு
  9. துணையை இழந்துவிட்டுத் தவிக்கும் உங்கள் நிலை மனதை வருத்துகிறது. ஆறுதல் சொல்லக் கூட வார்த்தைகள் இல்லை. இந்த இழப்பை ஈடுகட்ட எதுவும் இல்லை என்பதே நிஜம். உங்கள் குழந்தைகளாவது உங்களைப் புரிந்து கொண்டு ஆறுதல் தர வேண்டும். உங்கள் மனம் அமைதி பெற வேண்டும். அதுவே என் பிரார்த்தனை.

    பதிலளிநீக்கு
  10. வாழ்க்கை துணையை சிறு வயதில் இழப்பது மிகவும் வருத்தமான நிகழ்வுதான்.
    மறக்கமுடியாத நினைவுகளை நீங்கள் பகிர்ந்தவை, மனதை கனக்க வைக்கிறது.
    இறைவன் ஏன் நல்லவர்களை சோதனை செய்கிறார் தெரியாது.
    உங்கள் மனைவி உங்களின் அன்பை புரிந்து கொண்டு தன் குழந்தைகளிடம் பேசி உங்களை இணைத்து வைக்க வேண்டும். இறை அருளால் எல்லோரும் மகிழ்வாய் இருக்க வேண்டும்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. //இந்த வாழ்வுமுறை எனக்கு விளங்கவில்லை//

    எனக்கும்தான்.இந்தப் பட்டியல் நீளும். ஆறுதல் பெறுங்கள்.

    பிறர் வேடிக்கை பார்க்கும் நிலையைத் தவிர்த்து, வேடிக்கை 'பார்த்து' எஞ்சிய வாழ்நாளைக் கழிப்போம்.

    பதிலளிநீக்கு
  12. ஆறுதல் சொல்ல வார்த்தையேது. அவர் இல்லாவிடிலும் உங்களை கவனித்துக் கொண்டே இருக்கிறார். மன அமைதியைப் பெற எனது பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  13. இந்த பதிவின் தலைப்பே கவிதைத்தனமாக இருக்கிறது. அதுவே உங்களின் காதலை பல மடங்கு உயர்த்துகிறது.

    பல கேள்விகளுக்கு பதில் தெரியாமல்தான் நாம் எல்லாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதையும் கடந்து போவோம்.

    பதிலளிநீக்கு
  14. எமது மனதையும் உலுக்குகிறது. உங்கள் மன அமைதிக்கு பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  15. இவ்வாறாகப் பதியும்போது உங்களின் மனச்சுமை சற்றே குறையும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. கொடுப்பினை என்ற சொல்லை நான் அடிக்கடி கேள்விப்பட்டுள்ளேன். என் வாழ்வில் எதிர்கொண்டுள்ளேன். கொடுப்பினை என்ற அளவில் மனதை தைரியப்படுத்திக்கொண்டு வாழுங்கள். உங்களின் எழுத்து வீச்சு உங்களுக்கு மன நிம்மதியைத்தரும்.

    பதிலளிநீக்கு