நமது பிரச்சனைகள் அதனால் ஏற்படும் மனவேதனைகள் கவலைகளுக்கு காரணம் நமது அன்றாட வாழ்வில் பின்னிப் பிணைந்துள்ள மனிதர்களால்தான்.
ஆனாலும் இதற்கு மூலகாரணம் யார் ? இறைவன் ஆம் அவனிடமிருந்து தொடங்குவதுதான் பிரச்சனை.
நடந்த தவறுகளுக்கு நாம் காரணகர்த்தா அல்ல ! இது நமக்கு மட்டுமல்ல இறைவனுக்கும் தெரியும். இருப்பினும் தவறுக்கு நாம் பொருப்பேற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம் நான் தவறு செய்யவில்லையே என அழுது புலம்புகின்றோம் அதிலிருந்து விடுபட வழி கிடைப்பதில்லை.
இதற்கு காரணம் என்ன ? இதை இறைவன் எதற்கு நமக்கு கொடுக்கின்றான் ? நாம் செய்திருந்த, செய்து கொண்டிருக்கிற, மற்றொரு தவறிலிருந்து நாம் நம்மை மறைத்துக் கொண்டிருக்கின்றோம் அதற்கு பகரமாகத்தான் இறைவன் நம்மை இதில் சிக்க வைத்துள்ளான்.
இதுவும் ஒருவகை பண்டமாற்று முறைதான்.
இதை மனதால் உணர்ந்து கொண்டால் இதற்கு காரணமான மனிதர்கள் மீது நமக்கு கோபம் வராது நாம் நமது தவறுகளை உணரத் தொடங்கி திருந்தத் தொடங்கி விடுவோம்.
சரி நம்மை இந்தச் சிக்கலில் மாட்டி விட்ட மற்றவர்களுக்கு தண்டனை கிடையாதா ?
அது நமக்கு அவசியமில்லை அதை இறைவன் பார்த்துக் கொள்வான். நமக்கு மற்ற வேலைகள் நிறைய இருக்கிறது.
ஒரு சிலர் இறைவனிடம் பிரார்த்திப்பார்கள் எனக்கு துரோகம் செய்தவர்களுக்கு கூலியை கொடு, தாலியை எடு என்று.
இந்த வகையான எண்ணங்கள்தான் ஒரு சிலரை கோயிலில் காசு வெட்டிப்போடுவது, மந்திரவாதியிடம் போய் செய்வினை செய்வது போன்ற, இழி செயல்களில் கொண்டு போய் விடுகிறது.
இது அவசியமில்லாத வேலை அப்படி பிரார்த்திக்கத்தான் வேண்டும் என்றால், இப்படிப் பிரார்த்திக்கலாமே.
எனக்கு துரோகம் செய்தவர்களுக்கு இதைவிட நல்ல வாழ்க்கை அமைந்து அவர்கள் என்னை விட்டு, வெகுதூரம் சென்றுவிட அருள் கொடு இறைவா என பிரார்த்திக்களாமே ! இது நம்மை மேலும் தவறுகள் செய்ய விடாமல் தடுப்பதுடன், எதிரிக்கும் நன்மை நினைக்கும் நற்பண்பை வளர்க்கும் இது எனது சின்ன வயது முதல் உள்ள அனுபவ பழக்கம் எனக்கு இடையூறாக இருந்த மேலாளருக்கு இப்படி பிராத்தித்து இருக்கிறேன் அவர் என்னை விட்டு வெகுதூரம் சென்று உயர்ந்த நிலையிலும் இருக்கின்றார் இதன் மூலம் ஒரு கல்லில் இரண்டு கொய்யா அடிக்கலாமே !
சாம்பசிவம்-
அடங்கொய்யாலே நல்லாத்தான் இருக்கு. ஆனால் நம்ம பரம்பரையில யாருமே இப்படி பிரார்த்திக்கலையே இப்ப நாம மட்டும் எப்படி மாத்திக்கிறது ?






