30.05.2001
என்னவளே...என்னை விட்டும், இந்த மண்ணை விட்டும் நமது பொக்கிஷங்களை விட்டும், விண்ணுக்கு போகிறேன் என்று மண்ணுக்குள் போய் பதிநான்கை கடந்து பதினைந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்தவளே... பதினாறாம் ஆண்டைக்காண இந்த பதியுமுண்டோ ? யாமறியேன் பராபரமே... ஒருக்கால் பதினாறில் நாம் விண்ணுலகில் மீண்டும் சதி-பதி ஆனால் ? சம்மதமே... விதியின் சதியால் நீ விண்ணிலும், நான் மண்ணிலும், ஆயினும் நீ என்னுள், நமது பொக்கிஷங்கள் எனது கண்ணுள் நானும் உன்னைப்போல் இந்த மண்ணை விட்டு விண்ணுக்கு வரும் நாள்வரை... அந்நாள் நிச்சயம் எமக்கு பொன்நாளே, பொன்மகளே...
என் நெஞ்சமெல்லாம்
நீயிருக்க,
உன் நெஞ்சுக்குள்ளும்
நானிருப்பேன்கண்ணுக்குள்ளே வாழ்ந்திருப்போம்
என்றாயே... என்னழகே...
பக்கத்திலே, நீ இருந்தால்
துக்கம் இல்லை துன்பமில்லை
துணையாக தூணாக நீயிருக்க
என்றாயே... எளியவளே...
மீசையென்னை குத்துதென்றே
மீட்டி விடுவாயடி மீசைதன்னை
மீளாத்துயரில் என்னை தள்ளிவிட்ட
மீசையின்று தாடியாகி போனதடி
பசுமையான நினைவுகளை பகிர்ந்து
பேசிக் களித்திருப்போம் கள்ளழகா
குசும்புக்கார குறுகுறுத்த மச்சானே
என குறள் கொடுத்தாய் குரலாளே...
துபாய்க்கு பொருள்தேடி வந்தவனை
தூரமாக போய் விட்டாய் என்றவளே
திரும்பாத தூரத்துக்கு நீ மட்டுமே
போனதேன்டி பொன்மயிலே...
தூக்கத்திலே நீ இருந்து... துக்கத்திலே
என்னை ஆழ்த்தி நீங்காத துயரத்துக்கு
தூங்காத நினைவுகளை கண்ணுக்கு
கொடுத்தாயே... கொம்புத்தேனே...
பத்து மாதம் சுமந்தெடுத்த பனிமலர்
பொக்கிஷத்தை கொடுத்துச் சென்றாய்
நீ எனக்கு பார்த்துக் கொள்ளச்சொல்லி
என்னை பதற விட்டாய்... பாதகத்தி...
நான் வரும் நேரம் எது நானறியேன்
நன்மகளே கெட்டகாலம் என்றுரைப்பர்
கேடுகெட்ட மானிடரே நல்லகாலமென
நானுரைப்பேன் எமக்கும் வரும் அந்த நாளை.
காணொளி.
அன்பு நெஞ்சங்களே
என்னவளுக்கு நான் எழுதிய மௌனமொழி கவிதையை படிக்காதவர்கள்
மேற்கண்ட இணைப்பை சொடுக்கி படிக்க வேண்டுகிறேன்.
கில்லர்ஜி.