தெருக்குரல்
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
திங்கள், நவம்பர் 28, 2016
வெள்ளி, நவம்பர் 25, 2016
செவ்வாய், நவம்பர் 22, 2016
அழகிய மரணம்
Chennai Airport V.V.I.P Hall
வணக்கம் ஐயா நாத்திகம் பேசும் தங்களிடம் சில கேள்விகள்.
நல்லது கேட்கலாம்.
கடவுள் இருக்கின்றார் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா ?
உண்டு என்றால் அது உண்டு இல்லை என்றால் அது இல்லை.
இது கண்ணதாசனின் பாடல் வரிகள் உங்களது பதில் ?
கண்டால் நம்பலாம் என்பது எமது கருத்து.
ஒருக்கால் கண்டால், என்ன கேட்பீர்கள் ?
கண்டவுடன் உண்டு என்ற நம்பிக்கை வந்து விடும் அதன் காரணமாய் ஒரேயொரு கோரிக்கை வைப்பேன்.
எப்படி ?
ஒரே நாளில் இந்தியாவில் இருக்கும் அனைத்து அரசியல்வாதிகளையும் அழைத்துச்செல் என்று.
இதனால் தங்களுக்கு பலன் ?
இந்தியாவுக்கு புதிய மாற்றம் கிடைக்கும், இந்திய மக்களுக்கு வாழ்க்கை இனியாவது மாறும் காரணம் மாற்றும் சக்தி தனக்கு இருந்தும் அதன் மகிமை தெரியாதவர்கள் இந்தியாவில் அதிகம் ஆகவேதான் இந்த கோரிக்கை இதில் எனக்கும் பலன் உண்டு காரணம் நாளை எனது சந்ததிகள் நலமுடன் வாழும்.
தங்களுக்கென்று சுயமாக ஏதும் கேட்க மாட்டீர்களா ?
சுய ஆசைகள் எனக்கு கிடையாது காரணம் சொந்த வாழ்க்கையையே அனுபவிக்கத் தெரியாமல் காலத்தை கை விட்டவன் நான் இதுகூட ஒருவகை அறியாமையே....
கடவுளைக்கண்டு விட்டோம் இனிமேல் நினைத்ததை எல்லாம் அடையலாம் என்ற ஆசையில் ஏதாவது..... ?
வேண்டுமானால் ஒன்று கேட்பேன் எனக்கு இன்றோ என்றோ எப்பொழுதாக இருந்தாலும் சரி அழகிய மரணம் கொடு என்று கேட்பேன்.
அதென்ன, அழகிய மரணம் ?
இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் மரணம் பல வகைகளில் கோரமாக, கொடூரமாக, இருக்கின்றது சிலருக்கு புதைப்பதற்கு சரீரம்கூட கிடைக்காமல் சிதறிச் சாகின்றார்கள் மரணத்தை இறைவன்தான் கொடுக்கின்றான் என்பது பொதுவான நம்பிக்கை ஆனால் இயற்கையின் சீற்றத்தால் ஆயிரக் கணக்கானோர் சாகும் பொழுது அது இறைவன் செயல் என்பது பொருந்தலாம் சில தீவிரவாதிகளால் பல ஆயிரக் கணக்கான மனிதர்கள் ஒரே நேரத்தில் சாகும் பொழுது இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை இந்த கொடூர மரணத்திற்க்கு காரணம் விஞ்ஞான வளர்ச்சியா ? இல்லை மனிதனின் இவ்வளவு கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கம் கொடுத்த இறைவன் செயலா ? இல்லை தீவிரவாத எண்ணங்களை மனதில் உதிக்க வைத்த இறைவன் செயலா ? என்பதில் எனக்கு நெடுநாள் குழப்பம் உண்டு எதுவாயினும் எனக்கு இயல்பான, இயற்கையான, துன்பம் தராத சட்டென உயிர் துறக்கும் அழகிய மரணம் கொடுத்து எனது சரீரத்தை இந்திய மண் உண்ண வேண்டும் இதுவே எமது சுயநல கோரிக்கை.
தீவிரவாத எண்ணங்களை இறைவன்தான் கொடுக்கின்றான் என்பது உங்கள் குற்றச்சாட்டா ?
மனிதனை படைத்தது இறைவன் என்றால் ? மனிதனுள் பலவகை மனங்களை கொடுத்தது இறைவன் என்றால் ? தீவிரவாதத்தை வளர்த்ததும் இறைவனே.
இறைவன் எப்படி.... மனிதனுக்கு இடையூறுகள் கொடுப்பார் ?
இயற்கை அழிவில் மரணங்கள் நிகழும் பொழுது காரணவாதியாக மக்கள் யாரைச் சொல்வார்கள் ?
இறைவனை.
கஷ்டப்பட்டு உழைத்து சாதித்த மனிதன் தனது வெற்றிகளுக்கு காரணம் இறைவனே எல்லா புகழும் இறைவனுக்கே என்று சொல்கின்றான் இதன் அர்த்தமென்ன ?
இறைவன் நல்ல எண்ணங்களையும், அறிவையும் கொடுத்ததால் இந்நிலைக்கு வந்தேன் என்று தன்னடக்கமாக சொல்கின்றான்.
அப்படியானால் தீவிரவாதிகளுக்கு இந்த எண்ணங்களை மனதில் உதிக்க வைத்தது யார் ?
? ? ? ஜி நீங்க குழப்பாமல் சொல்லுங்கள் தீவிரவாதத்துக்கு காரணம் இறைவன் என்று சொல்கின்றீர்களா ?
நான் சொல்லவில்லை உங்கள் கணக்குப்படி நல்ல எண்ணங்களை கொடுத்தது இறைவன் என்றால் கெட்ட எண்ணங்களை கொடுத்ததும் இறைவனாகத்தான் இருக்க முடியும்.
அதெப்படி இரண்டு சிந்தனைகளை கொடுத்து இறைவன் நல்லதை தேர்ந்து எடுத்துக்கொள் என்று சொல்கின்றான் இதில் குற்றவாளி இறைவனா ?
ஆகவே அதனால்தான் தேர்ந்தெடுத்து கொல்கிறான்.
இதற்கு ஏதும் மாற்று வழிகள் ?
சில கூட்டத்தினரிடம் போய்க் கேளுங்கள் கொசுவுக்கு திருமணம் செய்து வைத்து பரிகாரம் செய்தால் மாற்றம் வரும் என்றும் சொல்வார்கள் நல்லது உகாண்டா நாட்டிற்கு செல்லும் விமானம் தயாராகி விட்டது பேட்டியை இத்துடன் முடித்துக் கொள்வோம்.
நல்லது நன்றி ஐயா தங்களது பயணம் சிறக்க எங்கள் சங்கொலி பத்திரிக்கையின் சார்பாக வாழ்த்துகள்.
நன்றி வணக்கம்.
Chivas Regal சிவசம்போ-
நல்லசாவு வேணுமுன்னா, மருந்தை வாங்கி குவாட்டர்ல கலந்து குடிச்சிட்டு நீட்டி நிமிந்திடலாமே...
சாம்பசிவம்-
கந்தன் புத்தி கவட்டுள்ளேதானே போகும்.
சிவாதாமஸ்அலி-
விமானத்துல பறக்கப் போறவருக்கு சங்கொலியா ? விளங்கிடும்.
சனி, நவம்பர் 19, 2016
காமுகியின் இரவு
விலைமாதரின் விசும்பல்
இரவே நீ விடிந்து விடு
இல்லையேல் நான் மடிந்திடுவேன்.
காமுகியின் களிப்பு
இரவே இரவே விடியாதே
இன்பத்தின் நிலையை கலையாதே.
பறவையின் பதற்றம்
இரவே நீ விடிந்து விடு
குஞ்சுக்கு பசிக்குது புரிந்துகொடு.
ஆந்தையின் அலறல்
இரவே நீ விடியாதே
பகலில் உணவு கிடைக்காதே.
நாய்களின் நாதம்
இரவே இரவே விடிந்து விடு
ஊளையிட ஜீவனில்லை புரிந்துவிடு.
பேய்களின் பேற்றல்
இரவே இரவே விடியாதே
பகலில் நடமாட முடியாதே.
காவலாளியின் கவலை
இரவே சீக்கிரம் விடிந்து விடு
ATM வரிசையில் நிற்கணும் புரிந்துகொடு.
முதலாளியின் முனங்கள்
இரவே சீக்கிரம் விடியாதே
காவலுக்கு ஆட்களுண்டு கலையாதே.
எமனின் ஏக்கம்
இரவே சீக்கிரம் விடிந்து விடு
05.48 க்கு கவிய தூக்கணும் புரிந்துகொடு.
கைதி கவியின் கலக்கம்
இரவே சீக்கிரம் விடியாதே
இனிமேல் இரவெனக்கு கிடைக்காதே.
பயணிகளின் பயம்
இரவே சீக்கிரம் விடிந்து விடு
வழிப்பறி கொள்ளையுண்டு புரிந்துவிடு.
திருடனின் திட்டம்
இரவே சீக்கிரம் விடியாதே
வந்த வேலை முடியலை மறவாதே.
சந்திரனின் சலிப்பு
இரவே நீ விடிந்து விடு
தூக்கம் வருது புரிந்துகொடு.
சூரியனின் சோம்பல்
இரவே நீ இப்ப விடியாதே,
Five Minutes Balance உண்டு மறவாதே.
சாம்பசிவம்-
மரமண்டைன்னு சொல்றாங்களே... இதுதானோ ?
வெள்ளி, நவம்பர் 18, 2016
கருப்புச் சட்டையில், சிவப்பு ரத்தம்
கடந்த மாதம் நடந்த சம்பவம்...
எனது இல்லத்திற்கு அருகிலிருக்கும் உணவகத்துக்கு சாப்பிட நடந்து போய்க் கொண்டிருந்தேன் சமிக்ஞை திடலுக்கு அருகில்... திடீரென ‘’டொம்ம்ம்ம்ம்’’ என்ற சப்தம் கேட்டு திரும்பினேன் சமிக்ஞையில் சிவப்பு விளக்கை கடந்த மகிழுந்தும், குறுக்கே பாய்ந்த மகிழுந்தும், மோதிக் கொண்டன... நான்கு புறமும் வாகனங்கள் நின்று கொண்டிருக்க, பலத்த மோதலில் ஒரு மகிழுந்து மையத்தில் திசை திரும்பி நிற்க, மற்றொரு மகிழுந்து வேறு திசையில் கடத்தி நின்றிருக்க இயந்திரத்தின் உள்ளிருந்து புகை மண்டலம் ஒரு மகிழுந்தை ஓட்டி வந்தவன் எஜிப்தியன் மட்டும் அவன் மீண்டும் செய்யக்கூடாத தவறை செய்தான் பொதுவாக விபத்து நடந்தால் காவல்துறை வரும்வரை அப்படியே அதே கோணத்தில் நிறுத்தி வைக்க வேண்டும் ஆனால் அவன் மகிழுந்தை உருட்டிக்கொண்டே வேறு திசையில் நிறுத்தி விட்டான். இதற்காக அவனுக்கு அபராதம் உண்டு அது வேறு விசயம் மற்றொரு மகிழுந்தில் வந்தது இந்தியக் குடும்பம் மகிழுந்தை ஓட்டி வந்த கணவன் வெளியேறி பின்புறத்தில் உட்கார்ந்திருந்த மனைவியையும், குழந்தையும் வெளியேற்றி கட்டிப்பிடித்து அழ யாருமே போகாத சூழலில் 24 மணி நேரமும் ஆட்கள் போகாமல் வாகனங்கள் மட்டுமே ஓடிக் கொண்டிருக்கும் அந்த சமிக்ஞை திடலின் மையத்தில் பச்சை விளக்கு கிடைத்தாலும் எந்த வாகனங்களுமே போகாமல் நின்று கொண்டிருக்க... நான் குறுக்கே ஓடினேன் அவர்களை நோக்கி அந்தச் சகோதரி அழும் குழந்தையை ’’என்டே பொன்னு மோனே’’ எனக்கதற மலையாளியென அறிந்தேன் அந்தச் சகோதரியிடமிருந்து வலுக்கட்டாயமாக குழந்தையை பறித்தேன் மயக்கம் வரும் நிலைக்கு போகவிருந்த அந்த சகோதரியை அணைத்தபடியே மரத்தின் நிழலுக்கு கொண்டு வந்து விட்டேன்.
இதில் முதல் கட்டபார்வையாளர்களுக்கு மகிழுந்தை ஓட்டி வந்தவனும், அந்தப் பெண்ணின் கணவனும் நான்தான் என்பது போல் தோன்றிட்டு குழந்தையின் சட்டையிலும், அந்தப் பெண்ணின் முகத்திலும் குருதி. கணவன் பயந்து உட்கார்ந்து விட்டான் காரணம் மரணத்தின் விளிம்புவரை சென்று வந்தவனுக்கு அப்படித்தான் இருக்கும்.
(அந்தச் சூழலிலும் அவர்களது மகிழுந்தின் SRS AIRBAG Supplemental Restraint System ஊதுகூண்டுகள் இரண்டு வெடித்து இருந்ததை கவனித்தேன்)
குழந்தையின் சொக்காயை கழற்றினேன், ஒருவர் தண்ணீர் குப்பி வாங்கிவர குழந்தையின் மேலிருந்த குருதிதையும், அந்தப் பெண்ணின் முகத்திலிருந்த குருதிதையும் துடைத்து கழுவினேன் குழந்தைக்கு தண்ணீர் கொடுக்க முனைந்தபோது கூடாது என்று ஒருவர் சொல்ல கூட்டத்தில் ஒரு ஆங்கிலேய பெண் நானொரு மருத்துவர் ஏதாவது உதவி வேண்டுமா ? என்றார் யாருடைய உயிருக்கும் ஆபத்தில்லை குருதி வந்தது கணவனுக்கு ஏற்பட்ட காயத்திலிருந்து... மனைவியையும், குழந்தையையும் கட்டிப்பிடித்ததில் ஒட்டிக்கொண்டதே வேறொன்றும் இல்லை ஆனால் இரண்டு மகிழுந்துகளும் கண்டம் அது உறுதி. சிறிது நேரத்தில் நோயாளி விரைவூர்தியும், காவல் துறையும் வர... கூட்டம் கூடியது விசாரிக்கும் பொழுது எஜிப்தியர்கள் இரண்டு பேர் மகிழுந்தை ஓட்டி வந்தது தொப்பி போட்டிருந்த பெரிய மீசைக்காரன் ஒருவன் இந்தியக்காரன் என காவல் துறையினரிடம் சொல்லிக் கொண்டிருப்பதை கேட்டேன் இந்தக் கூட்டத்தில் மீசையும், தொப்பியும் அடையாளம் காண்பது எளிது தொப்பி பலரும் போட்டிருக்கலாம் பெரிய மீசை கண்டிப்பாக நாம் மட்டுமே... இனி நின்றால் சரியாக வராது என நகர்ந்து விட்டேன் வீட்டுக்கு வந்து பார்த்தால் எனது கருப்பு சட்டையில் சிவப்புக்குருதி இருப்பினும் மறுநாள்வரை காவல் துறையில் இருந்து கைப்பேசி வரலாமென காத்திருந்தேன் அழைத்தால் எப்படிச் சொல்லலாம் என ஆலோசித்து வைத்திருந்தேன்.
நான் செய்த தவறு என்ன ?
அந்த இடத்திற்கு காவல் துறையினர்களைத் தவிர மற்றவர்கள் போககூடாது மேலும் தண்ணீரைக் கொண்டு குழந்தையையும் அந்தப் பெண்ணையும், குருதிக் கறையை கழுவி விட்டேன்.
சரி இது அவர்களுக்கு எப்படித் தெரியும் ?
சமிக்ஞை திடலில் நான்கு புறமும் காணொளிக்கருவி (Video Camera) இருக்கிறது விபத்து நடந்தது எப்படி... யார் ? குற்றவாளி எல்லாம் அவர்கள் நேரலையில் (LIVE) பார்த்துக் கொண்டு இருப்பார்கள், எனது அங்க அடையாளங்களை வைத்து எனது I.D எடுத்து அதன் மூலம் எனது கைப்பேசியில் அழைத்து வெகு சுலபமாக மறுநொடியே பிடித்து விடலாம் இருப்பினும் நான் குற்றவாளி அல்ல, ஆனால் விசாரணை தேவைப்பட்டால் மட்டுமே இந்த வகைகள் இப்பொழுது தேவையில்லை என்பது ஊர்ஜிதமாகி விட்டது சந்தோஷம்.
இவ்வளவும் அறிந்திருந்தும் நான் ஏன் அங்கு ஓடினேன் ? என்னை அறியாமல் என்னுள் இருக்கும்.
மனிதநேயம்.
இது சட்டப்படி குற்றமாகலாம், தர்மப்படி நியாயமாகலாம்.
சட்டத்தின் தண்டணையை மனிதன் கொடுக்கின்றான்.
நியாயத்தின் பலனை நாளை இறைவன் கொடுக்கலாம் ? ? ?
நட்பூக்களே.... நான் நடந்து கொண்டது சரியா... தவறா ?
குறிப்பு – பழைய காலங்களில் விபத்துக்கள் நடந்தால் வாகனங்கள் தப்பித்து விடும், மனிதர்கள் இறந்து விடுவார்கள், இன்றைய காலங்களில் வாகனங்கள் கண்டமாகி விடுகிறது மனிதர்கள் காயங்களோடு பிழைத்துக் கொள்கிறார்கள் இது எப்படி ? இதனைக் குறித்த பதிவை விரைவில் தருகிறேன் – கில்லர்ஜி.
குருதி – Blood
மகிழுந்து – Car
சொக்காய் – Shirt
சமிக்ஞை – Signal
ஊதுகூண்டு – Balloon
நோயாளி விரைவூர்தி – Ambulance
என்டே பொன்னு மோனே – My Gold Son
புதன், நவம்பர் 16, 2016
திடப்பாண்டியன்
யே... புள்ளே பொன்னழகி ஒங்க அப்பாரு வீட்டுக்கு போனியே.. மச்சானுக்கு என்ன கொடுத்து விட்டாக.... ?
நீங்க கூடத்தான் ஒங்கொக்கா வீட்டுக்கு போனீக... யெனக்கும், எம்புள்ளைக்கும் என்னத்தை கொண்டு வந்தீக ?
யேண்டி யெனக்கும், ஒனக்கும் தோதாடி ? ந்நான் ஒங்க வீட்டுக்கு வந்த மூத்த மாப்புள்ளடி...
ஆங்... பொல்லாத மாப்புளே... மொச்சைக்கொட்டை மாப்புள்ளைக்கு மச்சம் ஒண்ணு கொறைச்சலாம்...
யென்னடி... பழமொழியெல்லாம் ஒரு தினுசா இழுக்கிறே... கில்லர்ஜி சைட்டுக்கு போகாதேனு சொன்னா, கேட்கிறியாடீ.....
ஆங்..... இப்ப அதான் கொனச்சலா போச்சாக்கும் ? புள்ளைக்கு சடங்கு செய்யணுமே அதைப்பத்தி கொஞ்சமாவது யோசனை உண்டா ? குட்டி போட்ட பூனை மாதிரி வீட்டைச்சுத்தி வாறீகளே...ந்நாந்தேன் யெங்க அண்ணன் கிட்ட போயி பேசிட்டு வாறேன்....
யாரு ? ஒங்கொண்ணன் கோணவாயன்ட்டே அப்புடி என்னத்தடி பேசிட்டே...
இப்பிடியே பேசிக்கிட்டு திரிஞ்சீக.... ?
என்னத்தே, செஞ்சிருவே.... ?
குடிக்க கஞ்சி ஊத்தமாட்டேன் சொல்லிப்புட்டேன் ஆமா...
நீ ஊத்தாட்டிப்போடீ.... மேலத்தெருவுல ஓந்தங்கச்சி மேகலா வீட்டுக்கு போறேன்...
அவள் எத்தனை நாளைக்கு ஊத்திடுவா ? ரெண்டு நாளைக்கு ஊத்துவா, மூணாம்நாளு மூஞ்சியில வடிச்ச கஞ்சிய ஊத்திடுவாளே...
யேண்டி, அவளுக்கு நீயே சொல்லி வச்சுருப்பே போலயே... ஹூம் நல்ல வீட்டுல பொண்ணு எடுத்தேன்டா சாமி.
மாயவரம் மாப்புள்ளைக்கு வரம் கொடுத்தவரு மாயாண்டியாம் வாய் மட்டும் நல்லாப்பேசுறீக... சம்பாரிக்கத்தான் வக்கு இல்லை.
வர, வர ஒனக்கும் வாய் நல்லாத்தான்டி நீளுது... நீடாமங்களத்துக்காரிக பூராம் இப்பிடித்தானாடி ?
சம்பாரிச்சுக்கொட்டுனா, ந்நாயேன் கேக்குறேன்... ஊருக்காரங்கே சும்மாவா சொன்னாங்கே... சேனாப்பானானு....
ஊருக்காரங்களைவிட நீயே தேளு கொட்டுறது மாதிரிதானடி கேட்குறே ?
ஒங்களைக்கட்டிக்கிட்டு என்ன சொகத்தைக்கண்டேன் ?
யேண்டி ஊருச்சிருக்கிக... எவளாவது ஒன்னை நாக்கு மேலே பல்லுப்போட்டு மலடினு சொல்ல முடியுமாடி ?
அய்யோடா.. பொல்லாத வீரத்தைக் காட்டிப்புட்டீக... ஊரு ஒலகத்துல இல்லாதத... கழுதை கூடத்தான் குட்டிபோடுது....
அப்ப நீ ஒங்கப்பன்ட்டே சொல்லி கழுதையைக்கட்ட வேண்டியதானடி....
எங்க அப்பாரு இப்பவும் அதைத்தான் செஞ்சு இருக்காரு..... ஒதைப்பட்டு சீரழிஞ்சதுதான் மிச்சம்.
அன்னெக்கே எங்க ஆத்தா சொல்லுச்சு... யேந்தம்பி மக மைலாஞ்சியக் கட்டுடானு... நாந்தேன் விட்டுப்புட்டு... இப்படி....
அவளுக்கு வந்த நல்லநேரம் தப்பிச்சுட்டா... மகராசி ய்யேங்கெரகம் ஒங்களைக் கட்டிக்கிட்டு மாரடிக்கிறேன்...
யேண்டி... ஒங்க வீட்டுல இதத்தான் சொல்லிவுட்டாகளா ?
நமக்கு கண்ணாலம் ஆகி பொம்பளைப்புள்ள பெரிய மனுஷி ஆகிட்டாளே இதுவரைக்கும் ஏதாவது சோலிக்கு போய் நாலு காசு சம்பாரிக்க துப்பிருக்கா ?
யேண்டி நமக்கென்ன ? சோத்துக்கு வழியில்லாமலா இருக்கோம் ந்நான் வேலைக்குப்போக... ராஜபோகமா சாப்புட்டுக்கிட்டுதானே இருக்கோம்.
அதெல்லாம் எங்க அப்பாரு வீட்டுலருந்து வருது ஏதோ நீங்க சம்பாரிக்கிற மாதிரி சொல்லுறீக....
அதனால என்னடி நான் உழைச்சாயென்ன ? ய்யேன் மாமனாரு உழைச்சாயென்ன ? எல்லாமே நம்ம பணம்தான் நாளைக்கு அவருக்கு ஒண்ணுனா நாந்தேன் முன்னாடி நிப்பேன்.
ஒங்க கருநாக்குல வசம்பை வச்சுத்தேய்க்க சும்மா இருக்குற எங்க அப்பாரைப்பத்தி பேசுனீங்க.... நடக்குறது வேற சொல்லிப்புட்டேன்.
இப்ப என்னடி தப்பா பேசிட்டேன்....இந்தக் குதி குதிக்கிறே ?
வீட்டுக்குள்ளேயே... இருந்துக்கிட்டு குடைச்சல் கொடுக்காம போங்க புள்ளைக்கு ஸ்கூலு விடுற நேரமாச்சு போயி கூட்டிக்கிட்டு வாங்க...
ச்சே மனுஷனை கொஞ்சமாவது ரெஸ்டு எடுக்க விடுறியாடி....
ஆங்.... ரெஸ்சுட்டு... எடுக்கிறாகளாம் ரெஸ்சுட்டு போதாது 15 வருஷமாத்தான் எடுத்துக்கிட்டு இருக்கீக... போங்க போயி புள்ளையை கூட்டிக்கிட்டு வாங்க...
போகவில்லையெனில் ராத்திரிக்கு சோறு கிடைக்காது என்பதால், எழுந்து டவுசரை மாட்டிக்கொண்டு மகளை அழைக்கப் போனான் சேனாப்பானா என்ற திடப்பாண்டியன்.
சிவாதாமஸ்அலி-
உடம்பை வளர்த்து வச்சதுக்காக.... ஊருக்காரன் சொல்றான்னு கட்டுன பொண்டாட்டியுமா... செனைப்பன்னினு சொல்றது ?
சாம்பசிவம்-
டவுசர் பாண்டியன் திடமாத்தான் இருக்காரு...