செவ்வாய், டிசம்பர் 12, 2017

கோவில்பட்டி, கோடாங்கி கோமுட்டி


வணக்கம் நட்பூக்களே... எமது பள்ளி நண்பன் வருசைமுத்து வாழ்க்கையில் விரக்தியாக இருக்கிறது அதனால் எத்தனையோ சோசியர்களை பார்த்து மனம் நொந்து விட்டேன் என்று என்னிடம் வந்து வருந்தினான். சரியென்று நம்ம சோலந்தூர், சோசியர் சோனைமுத்து அவர்களிடம் அழைத்து போகலாம் என்று சொன்னேன் அதற்கு...
அவன் கெடக்கான் வெளங்காமட்டை எத்தனை தடவை பார்க்கிறது போன வருசம் வைகாசிக்குள்ளே எனக்கு புதையல் கிடைக்கும்னு சொன்னான் அவனை நம்பி ஊரைச்சுத்தி கடன் வாங்கி செலவழிச்சுட்டேன் ஒரு எலவும் கெடைக்கலை வேற யாரும் இருந்தால் சொல்லேன்.
சரி நம்ம உசிலம்பட்டி, உடுக்கையடி உலகநாதன் அவர்களை பார்ப்போமா ?
நல்ல ஆளைச் சொன்னே.... அவன் பெரிய உலகப்பிராடு அமெரிக்காவுலருந்து எனக்கு விசா வரும்னு சொன்னான் ரெண்டு வருசமாச்சு வரவேயில்லை.
ஏதாவது ஏஜண்டைப் பார்த்தியா... பணம் கட்டி இருக்கியா ?
நான் யாரையும் பார்க்கலையே ?
பின்னே எப்படி விசா வரும் ?
அவருதான் சொன்னாரு வரும்னு...
ஏண்டா... நானாவது நாலாப்பு வரை படிச்சு இருக்கேன் இங்கிலீஷ் எழுத்துக் கூட்டியாவது படிச்சுருவேன். நீ ரெண்டாவது படிக்கும் பொழுது வசந்தி’’னு எழுதச் சொன்னதுக்கு சிலேட்டுல வா சாந்தி’’னு எழுதி சாந்தி டீச்சருக்கு காண்பிச்சதுக்குத்தானே டீச்சர் வச்ச அறையில ஓடுனவன் மழைக்குகூட பள்ளிக்கூடம் ஒதுங்க மாட்டியடா.... எப்படி உனக்கு இப்படி எல்லாம் பேராசை வருது மதுரைக்கார தமிழர்கள் யாராவது உனக்கு விசா அனுப்புறேன்னு சொன்னாங்களா ?
எனக்கு யாரும் மதுரைக்காரவுங்க பழக்கம் இல்லையே....
சரி இப்ப என்னதான் யோசனையில இருக்கே ?
உடனே முன்னேறணும் அதுக்கு ஏதாவது சொல்லேன் ?
உழைக்கணும் அதுதான் வழி.
அது நமக்கு சின்ன வயசுலருந்து ஆகாதே...
இப்படியே காலம் பூராம் சோசியம் பார்த்துகிட்டே இருந்தால் என்னாகும் ?
கோவில்பட்டியில் ஏதோ கோடாங்கி இருக்கிறதா கேள்விப்பட்டேன் உனக்கு தெரியுமா ?
ஆமா நம்ம கோமுட்டிதான் இருக்காரு..
சரி அவரைப் போயி பார்த்து விட்டு வருவோம்.

அதன்படி கடந்த வாரம் நானும் வருசைமுத்துவும் கோவில்பட்டி போனால் அங்கு வரிசையில் நின்றது கூட்டம் வேறு வழியின்று நானும், வருசையும், வரிசையில் நின்று எங்களுக்கான நேரம் வரும் பொழுது பார்த்தோம் வருசையின் எதிர்காலம் குறித்து அவன் பக்கத்தில் அமர்ந்து கேட்டான்.

கோ.கோ.கோ- என்னடா பிரச்சனை ?
வ.மு- சீக்கிரம் முன்னேறுறதுக்கு ஒரு தொழிலை சொல்லுங்க சாமி.
கோ.கோ.கோ- என்னடா படிச்சுருக்கே... ?
வ.மு- எதுவுமே படிக்கலை சாமி

மற்றவைகளை நீங்களே காணொளியில் பாருங்கள். ஆகவே அடுத்த வருடம் 2018 முதல் எனது நண்பனின் அதிரடி அரசியல் பிரவேசம் நடக்கலாம். நான் கோ.கோ.கோ.வின் எதிர்புறம் அமர்ந்து அவருக்கே தெரியாமல் எனது பென் கேமராவில் நான் சுட்டது.

காணொளி

ஞாயிறு, டிசம்பர் 10, 2017

என் நினைவுக்கூண்டு (9)


இதன் பின்னணிகளை அறிவதற்கு கீழே சொடுக்கலாம்...


நீ சட்டென சொல்வாய் கிழிச்சே... என்று சொன்னவர் மூக்கு உடைபட்டு அந்த சண்டையில் சிரிப்பு வந்து கதை வேறுரீதியில் முற்றுப்பெற்று விடும்.

  னிதா தேவகோட்டை வீட்டில் நீ எவ்வளவு வேலை பார்த்து வந்து இருக்கிறாய் என்பது இன்று எல்லோருக்கும் புரிகிறது இன்று தண்ணீர்க் குடத்தை தூக்கி வைக்க அம்மாவுக்கு நான் தேவைப்படுகிறேன். எல்லா குடங்களிலும் தண்ணீர் பிடித்து வைத்து விட்டு, டாங்க் நிறைப்பதற்கு மோட்டாரைப் போட்டு விட்டு அது நிறைந்து வெளியேறும் பைப்புக்கு கீழே ஒரு பாத்திரத்தை வைத்து விட்டு அதன் அருகிலேயே உட்கார்ந்து இருப்பாய் காரணம் நிறைந்தவுடன் மோட்டாரை அமர்த்த வேண்டும். உன்னைப் பொருத்தவரை தண்ணீர் வீணாக கீழே போய் விடக்கூடாது, மேலும் கரண்டு செலவும் அதிகம் ஆககூடாது டாங்க் நிறைந்தவுடன் அந்த இடத்திலிருந்து முன்புறத்திலிருக்கும் மோட்டார் ஸ்விட்சை அமர்த்துவதற்கு
அமத்து, அமத்து தண்ணி போகுது...
என்று நீ அலறிக்கொண்டு ஓடிப்போய் அமர்த்தி விடுவாய் வீட்டிலிருப்பவர்கள் பயந்து போய் ஏன் இப்படி கத்துறே ? என்றால்
ஒனக்கு என்ன தெரியும் கரண்டு பில் நாப்பது ரூவா
என்பாய் உலகில் உனக்கு தெரிந்தது நாற்பது ரூபாய் மட்டுமே சிலமுறை உன்னிடம் நிறைய பணத்தைக் கொடுத்து எண்ணு என்று சொல்லி இருக்கிறேன் வாங்கி கொண்டு
பத்து, அஞ்சு, ஒம்பது, மூணு, நாப்பது ரூவா இருக்கு.
என்று முடித்து விடுவாய் சிலமுறை பணத்தை கொடுத்து சொல்லி இருக்கிறேன் நீ வச்சுக்க என்று அதற்கு நீ ஆட்காட்டி விரலை நெற்றிப் பொட்டில் தொட்டு சுழற்றிக் காண்பித்து
மூள இருக்கா எனக்கு ரூவா எதுக்கு ?
என்று கேட்டு என்னை திணறடித்து இருக்கின்றாய். ஏழுமுறை தண்ணீர் ஊற்றி நீ பாத்திரம் கழுவுவாய் ஆனால் மற்ற யாரும் தண்ணீர் சிந்தக்கூடாது சாதாரணமாக யாராவது பாத்ரூம் போயிருந்து தண்ணீர் சத்தம் கேட்டால்கூட
கொட்டு. கொட்டு
என்று சொல்வாய் இதற்கு விருந்தாளியும் விதிவிலக்கு இல்லை. நான் வீட்டின் கடைசி அறையில் இருக்கும் பொழுது எனது மகளை ரூபலா என்று பலமுறை அழைத்திருப்பேன் கடைசி வராண்டாவில் இருக்கும் எனது மகளுக்கு கேட்டு இருக்காது இடையில் எங்காவது ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும் நீ
‘’பூபலா’’
என்று வீடே அதிறும் அளவுக்கு அலறுவாய் என்னத்தே ? என்று எனது மகள் கேட்டால்
ஒங்கொப்பா
என்று சொல்வாயே இன்னும் எனது செவிகளில் ஒலிக்கிறது நான் பலமுறை சொல்லி இருக்கிறேன் வனிதா மட்டும் இல்லை என்றால் இந்த வீட்டுக்கு சரியா வராது என்று.. அது உண்மையாகி விட்டது இன்று நீ இல்லாமல் வீடு வேறு நிலைக்கு போய் விட்டது.

வனிதா நான் கோவையில் வீடு வாங்கி ஒன்பது வருடங்களாகியது உன்னை அந்த வீட்டுக்கு அழைத்துப் போகும் சந்தர்ப்பம் எனக்கு வரவில்லை ஆகவே நான் நிரந்தரமாக இந்தியா வந்து விட்டதால் கோவைக்கு அழைத்து வந்தேன் ஒரு வாரத்தில் நான்கு நாட்கள் நன்றாகத்தான் இருந்தாய் கடைசி மூன்று நாட்கள் நலமில்லாமல் மருத்துவமனை சென்று உனக்கு கடைசி நாளாகவும் ஆகி விட்டது. அந்த நான்கு நாட்களும்கூட நினைவில் வைக்க கூடிய நிகழ்வுகள். சராசரியைவிட எந்த நேரமும் எனது மடியில் படுத்தாய் இதை நான் வழக்கம் போலவே நினைத்திருந்தேன் அதன் அர்த்தம் இப்பொழுதே புரிகின்றது. உன்னை கோவைக்கு அழைத்து வந்ததால்தான் மரணம் என்று என்னை பலரும் குற்றம் சொன்னாலும் உன்னை கோவை வீட்டுக்கு அழைத்துப்போய் ஒரு வாரம் தங்கி இருந்தது எனக்கு சந்தோஷமே. மரணம் எங்கிருந்தாலும் இறைவன் தீர்மானித்தபடி, தீர்மானித்த நாளில் வந்தே தீரும் நானும்கூட அபுதாபியில் பலமுறை மரணத்தின் பிடியிலிருந்து தப்பி இருக்கிறேன் காரணம் என்ன ? எனது மரணம் நிகழ வேண்டியது நான் விரும்பும் இந்தியாவில் என்று இறைவன் தீர்மானித்து உள்ளான். பலமுறை எனது மடியில் படுத்துக்கொண்டு எனது மகளை அழைத்து
பூபலா இங்க பாரு
அதைக் கண்டவுடன் எனது மகள் ஆஹாங் என்று சொல்ல நீ
ஓஹோங்
என்று சொல்வாய் இந்த வார்த்தைகள் எனக்குள் இன்னும் ஒலிக்கின்றதடா..

தேவகோட்டையில் சொன்னது போலவே கோவை வீட்டிலும் சோபாவில் சாய்ந்து கொண்டு கையில் ரிமோட்டுடன்
இது ய்யேன் வீடு, ய்யேன் டிவி
என்றாய் இதையும் வாங்கி விட்டாயா ? என்றேன் மொட்டை மாடியில் நீயும், நானும் நின்று கொண்டு இருக்கும் பொழுது தலைக்கு மேலே ஒரு பனைமர உயரத்தில் பறந்த விமானத்தின் பிரமாண்டத்தை கண்டு பிரமித்தாய் மேலும்
நீ இப்படித்தான் துபாய் போவியா ?  பயப்படவே மாட்டியா ?
மாட்டேன் நீ வாறியா ?  
ஆத்தாடி பயமாக்கு பூபலா குட்டியை கூட்டிப்போ
என்றாய் எனது மகளை நான் விமானத்தில் அழைத்துச் செல்லவேண்டும் என்று சொன்னதை கேட்டு உனது மனதின் உயர்வைக் கண்டேன். என் மனதில் நெடுங்காலமாகவே ஒரு ஆசை இருந்தது உன்னை அவ்வளவு சுலபமாக கொண்டு செல்லமுடியாது என்றாலும்கூட அனுமதி பெற்று விமானத்தின் வரையாவது உனது கண்ணைக் கட்டி அழைத்துச் சென்று மதுரையிலிருந்து கோவை வரை விமானத்தில் உன்னை ஜன்னலோரத்தில் உட்கார வைத்து பயணிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது உண்மை இது உன் ஆன்மா மீது சத்தியமடா.

கூண்டுகள் சுழலும்...

வெள்ளி, டிசம்பர் 08, 2017

சேரன் சோழன் பாண்டியன்


வாழவே புடிக்கலைனா என்ன செய்யிறது ?
அப்ப செத்துட வேண்டியதான்.
சாகவும் புடிக்கலைனா ?
அப்ப வாழவேண்டியதுதான்.
என்னய்யாநீ ஏடாகூடமா பேசுறே ?  
யாரு நானு... ஏண்டா டேய் நானே சாவோம்னு போயிக்கிட்டு இருக்கேன்... யேங்கிட்டே வந்து,
யேன் சாகப்போறே ?
வாழப்புடிக்கலே.
யேன் வாழப்புடிக்கலே ?
மொதல்லே ஒனக்கு யேன் வாழப்புடிக்கைலைனு சொல்லு.
விருப்பமே இல்லை வாழ
ரெண்டும் ஒரு எலவுதான்யா... 
என்னய்யா...  நீ எலவு கிலவுனு பேசுக்கிட்டு..
யேன் பேசுனா என்ன ?
அந்த மாதிரி பேசுனா எனக்குப்புடிக்காது.
புடிக்கலைனா போயி சாவுடா யேங்கழுத்தை அறுக்காம...
என்னை சாகச்சொல்ல நீ யாருடா ?
எங்கிட்டே ஏண்டா...  ஐடியா கேட்டே ?
நான் சாகத்தான் வந்தேன் ஆனா நீ சொல்லி சாகவேண்டிய அவசியம் இல்லை வேணும்னா நீ போயி சாவு.
என்னடா நீ தகராறு பண்ணுறதுக்கு வந்துருக்கியா ?
சட்டையை விட்றா...
என்னடா செய்வே ?
விட்றா....

இருவரும் சண்டையில் இருந்த மும்முரத்தில் தண்டாவாளத்தை விட்டு விலகாமலே பேசிக்கொண்டிருக்க.... பாண்டியன் எக்ஸ்பிரஸ் வருவதை கவனிக்காமல் உருண்டு கொண்டிருக்க.. அடுத்த சில நொடிகளில் இருவரும்  .......................................

பாண்டியன் சேரன் மாதேவியை விட்டு, சோழந்தூரை நோக்கி பாய்ந்து கொண்டிருந்தான்

Chivas Regal சிவசம்போ-
சாவுகிராக்கி பயலுகள் சண்டை போடுறதுக்கு வேற இடம் கிடைக்கலை ?

புதன், டிசம்பர் 06, 2017

பிடித்த விச(ய)ம்

December - 06
மதம் மறப்போம் மனிதம் காப்போம்

கிருஸ்து மதத்தில் எனக்கு பிடித்த விசயம்.

பொய் சொல்லாமை இவர் கிருஸ்தியன் இவர்கள் அணியும் வெள்ளையுடையை போல மென்மையானவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என ஆணித்தரமாக நம்பக்கூடிய நிலையிருந்தது ஒரு காலத்தில் ஒரு மனிதன் பொய் சொல்வதை நிறுத்தும் பொழுது எல்லா கெட்ட செயல்களும் அவனை விட்டு விலகி விடும் இன்று பொய் சொல்லாத மனிதர்களும் இருக்கிறார்களா ? என்று ஆச்சர்யப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.

இஸ்லாம் மதத்தில் எனக்கு பிடித்த விசயம்.

பலதார மணங்களுக்காக சொல்லப்பட்ட காரணங்கள் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படக்கூடாது என்பதின் பின்னணியில் சொல்லப்பட்டது மட்டுமல்ல, வாழ்க்கை வாழ்வதற்கே என்ற உயர்ந்த நோக்கத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டது அன்றைய காலகட்டத்தில் போர்கள் நடந்தது இன்றைய காலகட்டத்திலும் WARகள் நடக்கிறது ஆனால் இன்று அந்த காரணங்கள் அடியோடு மறக்கப்பட்டு சில அற்ப காரணங்களுக்காக நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.

இந்து மதத்தில் எனக்கு பிடித்த விசயம்.

ஒருத்தி ஒருவனுக்காகவும், அந்த ஒருவன் ஒருத்திக்காகவும் வாழும் அற்புதமான வாழ்க்கை நெறிமுறை ஆனால் இன்று 100க்கு 99.9 % மாறுபட்ட நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது, அந்த 00.1 %த்திற்குள் நானும் இருக்கின்றேன் என்பதில் பெருமை பட்டுக்கொள்கிறேன். உணவுக்கும், உறக்கத்திற்கும் அப்பாற்பட்ட இறைவனுக்கு தெரியும் இது உண்மையென்று ஆனால் உணவருந்தி மலம் கழிக்கும் மானிடர்கள் நம்ப மாட்டார்கள் இதை ஏனெனில் அம்மணத்தான் ஊரிலே கோவணம் கட்டியவன் கிறுக்குப்பயல் என்பது நமது பாரம்பரிய நம்பிக்கை. இருப்பினும் எனது குருதிவற்றி இறுதிபாதை செல்லும் வரையில் இப்படியே செல்லுமென உறுதியோடு.....

காணொளி
(தலைப்பு எமக்கல்ல பாழும் சமூகத்திற்கு)

ஞாயிறு, டிசம்பர் 03, 2017

நீங்க அழகா இருக்கீங்க...

எனது ஐயா ஞானி ஸ்ரீபூவுவின் கொள்ளுப்பேத்தியின் மகள் எம்.விஷாலி

மரியாதை
தண்ணீர் எடுக்கும் பாவையிடம் சொன்னேன்
ரொம்ப அழகாக இருக்கீங்க என்று
செருப்பு பிஞ்சுடும் என்றாள்
நல்ல வார்த்தைதானே சொன்னேன் ?
* * * * * * * * * * 01

கணவன்
அவனைப் பார்த்து உங்கள்
மனைவியாக வர வேண்டும்
என்றேன் அவன் சொன்னான்
நீ வர-தட்சிணை வேண்டும் என்று.
* * * * * * * * * * 02

செழிப்பு
மரம் கேட்டது மேகத்தைப் பார்த்து
நான் செழித்து வளர மழை தா என்று
உடன் மேகம் மழையுடன் காற்றையும்
கொடுத்து மரத்தை வீழ்த்தியது.
* * * * * * * * * * 03

பருப்பு
ஐஸ்வர்யா அழகி அவளை அழைப்பது
போல் ஐஸ் வண்டியை அழைத்தேன்
ஐஸ் என்று ஐஸ் வாங்கி கொண்டிருந்தவள்
என்னிடம் சொன்னாள் இங்கே பருப்பு வேகாது.
* * * * * * * * * * 04

கண்ணீர்
மாப்ளே எம்மக கண்ணீர் வடிக்காமல்
பார்த்துக்கோங்க மாமனார் கலங்கிட,
மருமகன் சொன்னான் இனி குழம்புக்கு
வெங்காயம் வாங்க மாட்டேன் மாமா.
* * * * * * * * * * 05

அகம்பாவம்
இமை சொன்னது விழிகளிடம்
உனக்கு பாதுகாவலனே நான்தான் என்றதற்கு
வேல்விழியாள் என்று கில்லர்ஜி
வர்ணிப்பது உன்னையல்ல என்னையே
* * * * * * * * * * 06

சினம்
இரயில் கேட்டது தண்டவாளங்களை
செருப்புகளா சௌக்கியமா ? சினம் கொண்ட
தண்டவாளம் சொன்னது இரயிலை
நாங்க காலை விரிச்சோம் ? டப்பா கழன்றுமுடீ...
* * * * * * * * * * 07

எழுத்து
நான் ரொம்ப அழகாக எழுதுவேன் ஸார்
அவன் மேலாளரிடம் சொல்லும்போது
விரல் நினைத்தது நம்ம எழுத
மூதேவி வாய் பெருமை பேசுதே...
* * * * * * * * * * 08

பழிச்சொல்
இவன் லாரியால மொக்கைராசுவை
ஏத்திக் கொன்னதை நான் பார்த்தேன் ஐயா
பார்த்தசாரதி சாட்சி சொல்ல, எமன் நினைத்தான்
பிறகு என்னை எதுக்கு பழி சொல்றாங்கே ?  
* * * * * * * * * * 09

சிரிப்பு
குழந்தை அழுவதை இரசித்துப் பார்த்து
உறவுகளோடு சிரித்தனர் தாயும், தந்தையும்
யாருக்கும் கவலையில்லை காரணமென்ன ?
இதோ இப்பொழுதுதானே குழந்தை பிறந்தது.
* * * * * * * * * * 10

Chivas Regal சிவசம்போ-
ஹைக்கூவுல நம்ம ஐயிட்டத்தை பத்தி வரவேயில்லையே ?

வியாழன், நவம்பர் 30, 2017

பூர்வீகம் தேவகோட்டைசிலர் ஆபூர்வமான சிந்தனையாளர்களாக இருப்பார்கள், சிலர் மிகவும் திறமையானவர்களாக இருப்பார்கள் இதைக்காணும் நாம் நாமும் இவர்களைப் போல் முயன்றால் என்ன ? என்று தோன்றக்கூடும் எனக்கும் இப்படித்தான் இதோ கீழே காணும் காணொளியில் இந்த ஜப்பான் நாட்டான் விசிட்டிங் கார்டை வைத்து செய்யும் வேலைகளைப் பார்த்தேன் எனக்குள் ஒரு சந்தேகம், சந்தேகத்தை தீர்க்க இவன் யாரென இணையத்தில் உலாவினால் அது பெரிய ஆச்சர்யத்தைக் கொடுத்தது ஆம் இவன் ஜப்பான் நாட்டுக்காரனாக இருந்தாலும் பூர்வீகம் இந்தியா, தமிழ்நாடு அதுவும் தேவகோட்டையாம் எனக்கு ஒரு சந்தேகம் என்று சொன்னேன் அல்லவா அது இதோ இதேதான் நம்மூருக்காரன் இவ்வளவு திறமைசாலியாக இருக்கின்றானே.... என்று சந்தோசப்பட்டு உடன் நாமும் இதனைப் போல் செய்வோம் என்று நினைத்தேன் அதேநேரம் நாம் இவனைப் போல் செய்யாமல் வித்தியாசமாக செய்வோமே என்று தோன்றியது காரணம் கில்லர்ஜி என்றாலே சராசரி நபர்களிடமிருந்து வேறு படவேண்டும் அதனால்தான் வாழ்க்கை வீணாகப் போனது என்பது வேறு விடயம் சரி விடயத்துக்கு வருவோம்.

01.இவன் என்ன செய்கின்றான் ? ஒருத்தியை காற்றுள்ள பலூனை உயரத்தில் வீசவைத்து அதை விசிட்டிங் கார்டை வீசி உடைத்து எறிகின்றான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
பெரிய தீப்பந்தம் ஒன்று கொளுத்தி வைத்துக் கொண்டு என்னருகே வீச சொன்னேன் பலூன் பக்கத்தில் வரவும் தீயைக் காட்டினேன் அதனைப் போலவே டமார் என்ற சப்தத்துடன் வெடித்தது.

02.பிறகு கொக்ககோலா டின்னை டேபிளின் மீது வைத்து விசிட்டிங் கார்டை வீசி கீழே சாய்க்கின்றான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
டேபிளில் பெப்ஸி டின்னை வைத்து ஒரு அடி தூரத்திலிருந்து சுத்தியலை வீசினேன் அதனைப் போலவே சடார் என்று கீழே விழுந்தது.

03.பிறகு சிறிய ப்ளாஸ்டிக் டம்ளர்களை வரிசையாக அடுக்கி வைத்து விசிட்டிங் கார்டை வீசி கீழே சாய்க்கின்றான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
பெரிய சாம்பார் வாளிகளை அடுக்கி வைத்து மண்வெட்டியை எடுத்து வீசினேன் அதனைப் போலவே சடச்சடவென்று கீழே விழுந்தது.

04.பிறகு ஒரு டேபிளில் மார்ல்போரோ சிகரெட்டை நிறுத்தி வைத்து விசிட்டிங் கார்டை வீசி கீழே சாய்க்கின்றான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
முருகன் சுருட்டை ஒருவன் வாயில் வைத்து சினிமாவில் காண்பிப்பது போல கையில் தீப்பந்தம் வைத்துக் கொண்டு வாயில் பெட்ரோலை கொஞ்சம் வைத்துக் கொண்டு ஊதினேன் தீ சுருட்டை பிடித்தவன் முகத்தை பதம் பார்த்து அவன் முகமே கருகி விட்டது.

05.பிறகு விசிட்டிங் கார்டை பூட்டப்பட்ட கடைகளின் கண்ணாடி கதவுகளின் இடைவெளிக்குள் வீசி உள்ளே தள்ளினான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
அலுவலகத்தில் எனக்கு கொடுத்திருந்த விசிட்டிங்க கார்டை அதைப் போலவே வீசினேன் வீசும் பொழுது கையில் கட்டியிருந்த ராடோ வாட்ச் கழன்று கீழே விழுந்து உடைந்து விட்டது.

06.பிறகு ஒரு தக்காளியை டேபிளில் வைத்து விசிட்டிங் கார்டை வீசி தக்காளியில் சொருகினான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
காய்கறிக் கடைக்குப் போய் ஐந்து ரூபாய்க்காசை எடுத்து தக்காளியை நோக்கி வீச அது நேராக காய்கறிக் கடைக்கார பொம்பளையில் கண்ணாம்பட்டையில் அடிக்க காய்கறி மார்க்கெட் சங்க நிர்வாகிகள் அனைவரும் என்னை ஓட ஓட விரட்டி விட்டார்கள்.

07. பிறகு மாடியில் திறந்திருந்த விண்டோரை நோக்கி விசிட்டிங் கார்டை வீசி அதன் வழியே உள்ளே விழ வைத்தான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
பால்கனியில் நிற்கும் பெண்ணை நோக்கி எனது விசிட்டிங் கார்டை வீச அவள் என்னை தவறாக புரிந்து கொண்டு சட்டென மண்தொட்டியை எடுத்து எனது தலையில் போட்டு உடைத்து விட்டாள் எனக்கு தலையெல்லாம் மண்ணு பிறகு வீட்டுப் போயி குளித்தேன்.

08.பிறகு டேபிளில் எரிந்து கொண்டு இருந்த ஒரு மெழுகுவர்த்தியை விசிட்டிங் கார்டை வீசி விளக்கை அணைத்தான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
விளக்கை அணைப்பது தவறுதானே... ஆகவே விளக்கை ஏற்றுவோம் என்று மெழுகுவர்த்திக்கு பக்கத்தில் வைத்து அதில் பிடிக்க வைப்போம் என்று குச்சியால் தட்டி விட்டேன் அது பறந்து போய் பக்கத்து வீட்டு கூரையில் பிடிக்க இதற்கு போய் தெருவோடு என்னை துறத்தி அடிக்க வருகின்றார்கள்,

09.பிறகு உயரத்தில் காற்றுள்ள பலூனை தொங்க விட்டு அதை விசிட்டிங் கார்டால் வீசி உடைத்தான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
நாமும் பலூன் உடைப்போமே என்று அதைப் போலவே கட்டித் தொங்க விட்டு கல்லை எடுத்து எறிந்தேன் கல் நேராக பக்கத்தில் கட்டியிருந்த போகஸ் லைட்டை பதம் பார்த்து வீட்டையே இருட்டாக்கி விட்டது.

10.பிறகு ஒருவன் தலையில் டம்ளரை நிறுத்தி வைத்து விசிட்டிங் கார்டால் வீசி டம்ளரை கீழே வீழ்த்தினான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
இதுதாங்க என் வாழ்க்கையில் சோதனையைக் கொடுத்து இப்பொழுது உங்களுக்கு தகவல் சொல்ல வைத்து இருக்கின்றது நானும் அவனைப் போலவே ஒருவனை உட்கார வைத்து தலையில் டம்ளரை நிறுத்தி வைத்து டம்ளரை கீழே வீழ்த்துவதற்காக கோடரியை வீசினேன் அது குறி தவறி அவனது கழுத்தைப் பதம் பார்த்து விட்டது இப்ப அவன் அந்தோ மருத்துவமனை ஐ.ஸி.யூ.வில் இருக்கின்றானாம் இதுக்குப் போயி போலீஸ்ல சொல்லி என்னை கைது பண்ணி உள்ளே வைக்க சொல்றாங்க இது நியாயமா ? 

Chivas Regal சிவசம்போ-
நாயை அடிப்பானேன்... பீயை சுமப்பானேன் ?

காணொளி
Related Posts Plugin for WordPress, Blogger...