தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், செப்டம்பர் 13, 2016

நெய்ப்பந்தம்



காமாட்சி அம்மாள் வீட்டின் வராண்டாவில் சோகமாய் உட்கார்ந்து இருந்தார் அலுவலகத்திலிருந்து உள்ளே நுழைந்த மதியழகன்.
அம்மா இங்கே உட்கார்ந்து இருக்கே ?
ஒண்ணுமில்லை சும்மாதான் நீ போய் முகம் கழுவிட்டு காபி சாப்பிடுப்பா...
உள்ளிருந்து மருமகள் நர்த்தனாவின் குரல் கேட்டது...
பேசுறதெல்லாம் பேசிட்டு மகன் வந்ததும் காபி சாப்பிடுப்பான்னு பசப்புறது இதே வேலையாப் போச்சு.
என்ன விசயம் கத்திக்கிட்டு இருக்கே ?
உங்களுக்கு நான் பேசுறது மட்டும்தானே கத்துறதா தெரியும், இவ்வளவு நேரம் உங்க அம்மா கத்துனதெல்லாம் தெரியுமா ?
என்னம்மா பிரச்சினை ?
உங்க அப்பா தினேஷை கொஞ்சிக்கிட்டு இருந்தாரு... அதுக்கு உன் பொண்டாட்டி இருமல் ஒட்டிக்கிரும் போகாதேன்னு சொன்னா... கேட்கிறியான்னு அவனைப் போட்டு அடிக்கிறா... நான் கேட்டதுக்கு எம் புள்ளையை நான் அடிக்கிறேன்னு... சொல்றா...
என்னை ரெண்டு பேரும், நிம்மதியா இருக்க விட மாட்டிங்களா ?
நம்ம பிரச்சினைக்கு பச்சப் புள்ளையப் போட்டு இப்படி அடிக்கலாமா ?
அவ நல்லதுக்குத்தானே சொல்லுறா.... அது புரிஞ்சுக்கிறாம... பேசுனா புள்ளையப் போட்டுதான் அடிக்கிறாப்பல வரும்.
தாத்தா பேரனை கொஞ்சுறது தப்பா ?
இவரு.. பேசாமல் மூலையில கிடக்க வேண்டியதுதானே.... அவனைக் கொஞ்சலைன்னு இப்ப யாரு அழுதா ?
மதி நீ பேசுறது உனக்கே நியாயமா இருக்கா ?
இங்கே பாரும்மா அவரை கொடுக்கிறதை சாப்பிட்டுக்கிட்டு உள்ளே கிடக்கச் சொல்லு இல்லைன்னா... எங்கிட்டாவது போகச் சொல்லு இருக்கிறவன் உயிரை எடுக்காம, ச்சே ஆஃபீஸ் விட்டு வந்தாலே நிம்மதி இல்லை.
பேசாமல் கிடந்து சாப்பிடுறதுக்கு அவரு என்ன ஜடமா ?
எங்கிட்டேயே இப்படி பேசுறே... நான் இல்லாதப்ப அவளை எப்படியெல்லாம் பேசியிருப்பே..... ?
அதுக்காக இப்படி பேசுறதை எல்லாம் கேட்டுக்கிட்டு சும்மா இருக்கணுமா ?
பின்னே வேலைக்குப் போய் சம்பாரிச்சுக் கொட்டுறவன் நான் வீட்டுல சும்மா இருந்துக்கிட்டு சாப்பிட்டுக்கிட்டு அதிகாரம் பண்ணுனா ?
நீ சம்பாரிக்கிறதுக்கு காரணம் யாரு ? அவரு கஷ்டப்பட்டு படிக்க வச்சு டிகிரி வாங்குனதாலதானே... அன்னைக்கே உன்னையும் கூலி வேலைக்கு அனுப்பி இருந்தா... இன்னைக்கு நீ இப்படி பேசுவியா ?
இங்கே பாரு அவசியமில்லாத பழைய கதைல்லாம் பேசாதே....
நான் பேசுறதெல்லாம் உனக்கு பழைய கதையாப் போச்சோ ?
இப்ப அவ என்ன சொல்லிட்டாள்னு பேசுறே... உன்னை குறை சொன்னாளா ?
என்னை எப்படி பேசமுடியும் நான்தான் வீட்டு வேலை எல்லாத்தையும் வேலைக்காரி மாதிரி செஞ்சு முடிச்சுடுறேனே... உங்க அப்பா மட்டும்தான் உங்களுக்கு கண்ணை உறுத்திக்கிட்டு இருக்காரு... எவ்வளவு காலம்தான் அவரும் இதைக் கேட்டுக்கிட்டு இருப்பாரு... இதுக்கு நாலு வீட்டுல பத்துப்பாத்திரம் கழுவியாவது கஞ்சி குடிக்கலாம்.
தாயும், மகனும் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது... முன்னறையிலிருந்து சிறிய மஞ்சள் பையுடன் கம்பு ஊண்றிக் கொண்டு தட்டுத் தடுமாறி வெளியேறி வந்த பெரியவர் ரத்தினத்தை சட்டென ஓடிப்போய் தாங்கிப் பிடித்தார் காமாட்சி அம்மாள் பையை விலக்கி காமாட்சியின் சேலைகள் உள்ளே இருப்பதை காண்பித்த பெரியவரிடம்....
சரி கிளம்புங்க...
நீ எங்கேம்மா போறே ?
இவரு தேவையில்லைங்கிற போது எனக்கு இங்கே வேலை.
பெத்த புள்ளையைவிட உனக்கு இவருதான் முக்கியமாப் போச்சோ... ?
ஆமா நீ நேத்து வந்தவன் இவரு என்னோட அம்மாவும், அப்பாவும் விபத்துல செத்துப்போயி நான் அனாதையா நின்ற காலத்துலருந்து காலம் முழுவதும் என்னை சுமந்தவரு....
வெளியே போனால் பிச்சைதான் எடுக்கணும்.
அடச்சீ... நீயே எனக்கு இவரு பிச்சை போட்ட எச்சிதான்டா நான் முடிஞ்சது வரைக்கும் உழைச்சு இவருக்கு கஞ்சி ஊத்துவேன் முடியாதபோது மருந்து வாங்கி இவருக்கும் கொடுத்துட்டு ஒரே குழியிலே ஒண்ணாப் போயிறுவோம் நாளைக்கு உன் புள்ளை இந்த நிலையை உனக்கு கொடுத்துடாம பக்குவமா வளர்த்துக்க இந்த வார்த்தைதான் நான் உனக்கு போடுற பிச்சை.
சொல்லி விட்டு பெரியவர் ரத்தினத்தை கைத்தாங்களாக பிடித்துக் கொண்டு நடக்கத் தொடங்கினார் காமாட்சி அம்மாள் நடக்கும் பொழுது பெரியவரின் விழிகள் திரும்பிப் பார்த்தது பேரன் தினேஷ் நின்கின்றானா ? புரிந்து கொண்ட காமாட்சி அம்மாள்
இப்படிப் பாசம் வச்சு வளர்த்தாலதானே மகன் தெருவுல விட்டான் பேரன் வந்துதான் நாளைக்கு நமக்கு நெய்ப்பந்தம் பிடிக்கப் போறானா ? நடங்க...
வாய் பேசாத ஊமைக் கணவருடன் நடந்தார் காமாட்சி அம்மாள் அந்த நடையில் சுதந்திரத்தோடு திடகாத்திரமான நம்பிக்கை இருந்தது.

25 கருத்துகள்:

  1. ம்ம்ம்.... என்னத்த சொல்ல! பல வீடுகளில் இப்படித்தான்.

    த.ம. +1

    பதிலளிநீக்கு
  2. அருமை! ஒரு சீரியசான கதையை வெளியிட்டு கண்கலங்க வச்சுட்டீங்க. நகைச்சுவை மட்டுமல்ல எல்லாமே எழுத வருது உங்கள்ளுக்கு

    பதிலளிநீக்கு
  3. படிக்கப் படிக்க வேதனைதான் மிஞ்சுகிறது நண்பரே

    பதிலளிநீக்கு
  4. நெகிழ வைத்த கதை.
    த ம 6

    பதிலளிநீக்கு
  5. என்னத்தைச் சொல்றது!?..

    அவனை படிக்க வெச்ச பாவத்துக்கு இதுவும் வேணும்.. அன்னைக்கே சுண்ணாம்புக் காளவாய்.. ல வேலைக்கு சேர்த்து விட்டுருக்கலாம்..

    பாசம்.. நேசம்..ன்னு பார்த்ததுக்கு இப்படிப் பாதகஞ் செஞ்சுபுட்டானே!..

    பதிலளிநீக்கு
  6. இந்த சம்பவத்தின் தொடர்ச்சி அடுத்த சில தினங்களில் நமது தளத்தில் வெளியாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

    பதிலளிநீக்கு
  7. நாட்டு நடப்பை புட்டு புட்டு வைச்சிட்டீங்க :)

    பதிலளிநீக்கு
  8. கடைசி வரியை படித்து நெஞ்சம் கனத்து விட்டது.எத்தனை பேரன் தாத்தா, பாட்டிக்கு நெய் பந்தம் பிடிக்க வருகிறார்கள்?

    பதிலளிநீக்கு
  9. அருமையான கதை. நிகழ்ந்திருக்கவும் வாய்ப்பு உண்டு. ஆனால் இந்தத் தலைமுறையினர் பிள்ளைகளை எதிர்பார்க்காமல் வாழப் பழகி விட்டனர். :( பிள்ளைகளும் தாய், தந்தையரைத் தாங்குவதைக் குறைத்து வருகின்றனர். பெருகி வரும் முதியோர் இல்லங்களே சாட்சி!

    பதிலளிநீக்கு
  10. நெகிழ்ச்சி.... மகிழ்ச்சி....

    பதிலளிநீக்கு
  11. நடைமுறையில் எங்கும் பார்க்கும்படியான கதை. மனைவி வயது வித்தியாஸமிருந்து,கணவருக்காக போராடமுடியும் அளவிற்கு, ஏற்கெனவே கையுழைக்கத் தெரிந்தவள். கௌரவத்திற்கு ஆசைப்பட்டு, இருவரும் வயதான முதியவர்களாயின் எங்கு போக முடியும்? முதியோர்களில்லத்திலும் யாவரும் ஏதோ ஒரு சோக கதையைக் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள் என்று சொல்லக் கேள்வி. பிள்ளைகளை எதிர்பார்கக் கூடாது என்ற எண்ணம் எல்லோருக்கும் வந்தாலும், முதுமை எங்கும் கஷ்டம்தான். பிள்ளைகள் பாசமுடையவர்களாக இருக்க,எதையும் பொருட்படுத்தாத மனமுடையவர்களாக பெரியோர்களிருப்பின் ஓரளவு காலம் தள்ளலாம். தள்ளியே ஆகவேண்டும்.காசோ,பணமோ எது இருந்தாலும் பிரயோஜனமில்லை. ஆமாம். நெய்ப்பந்தம் இதுக்கெல்லாம் சாவகாசமில்லை யாவருக்கும். இகமும்,பரமும் எங்கும் இதே ஓலம்தான். அடுத்த தலைமுறை இதைவிட மோசமாக இருக்கும். வாழ்க்கை இவ்வளவுதான். நல்ல நிகழ்காலக் கதை. நிஜம் அடங்கியது. கண்ணில் ஜலம் வந்தது. நானும் முதியவளாக இருப்பதால் இருக்கலாம். சட்டத்தில் தாய்தந்தையரை கவனிக்காத பிள்ளைகளிடம் கேஸ்போட்டு ஜெயிக்க இடமிருக்கிறது. அன்பிற்காக எங்கு கேஸ்போட முடியும்? நன்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  12. இப்படியும் எழுத முடிகிறதே உங்களுக்கு

    பதிலளிநீக்கு
  13. நலமாஜீ ?

    நேரில் இருந்து பார்ப்பதை போன்ற எழுத்து நடை... மிக பொருத்தமான தலைப்பு ! பணம் மட்டுமே குறிக்கோளாக மாறிவிட்ட இன்றைய வாழ்வில், ஏழை பணக்காரன் வித்யாசமின்றி அனைத்து நிலைகளிலும் இதுபோன்ற அவலங்கள் சகஜமாகி கொண்டு வருகின்றன...

    பிள்ளைகள் பார்த்துக்கொள்வார்கள் என அனைத்தையும் கொடுத்துவிடாமல் அந்திம காலத்துக்கு என தனக்கான சேமிப்பை வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

    நன்றி
    சாமானியன்

    எனது பயணப்பதிவின் இரண்டாம் பாகம்... தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

    http://saamaaniyan.blogspot.fr/2016/05/2.html

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் ஜி !

    நன்றாக வளர்த்திட்ட நம்மின் மக்கள்
    ....நடுத்தெருவில் விட்டுமனை மகிழ்வைக் காக்கும்
    அன்றாட நிகழ்வுகளைக் கண்ணின் முன்னே
    ....அழகாக அளித்திட்டீர் ! வையம் எல்லாம்
    வென்றாக வேண்டுமொரு வாழ்வின் மீதம்
    ....விடுகதையாய் போனாலும் சமூகம் துஞ்சும் !
    என்றாவ தோர்நாளில் எல்லாம் மாயை
    ....என்றுணரும் வரையிந்த ஈனம் பூக்கும் !


    நிஜத்தின் தேடல் அருமை ஜி
    தொடர வாழ்த்துகள்

    தம +1

    பதிலளிநீக்கு
  15. ரத்தினம் அய்யாவுக்கு..காமாட்சி அம்மா இருந்தாங்க.....அம்மா இல்லாதவர்களுக்கு...???? .....

    பதிலளிநீக்கு
  16. இதுதான் உலகம்!கில்லர்!

    பதிலளிநீக்கு
  17. நெய்ப்பந்தம் நெகிழ்ச்சி. உண்மையில் நடப்பதை கூறியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  18. கில்லார்ஜி...
    நகைச்சுவைத் ததும்பும்
    எழுத்துக்குத்தான் அதாரிட்டி என்பது இல்லை
    என்பதற்கு இந்தக் கதை ஒரு அத்தாட்சி
    நெகிழ்சியான பதிவு
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  19. மறக்க முடியாத நிகழ்வு...கதை.

    பதிலளிநீக்கு
  20. மனதை என்னவோ செய்துவிட்டது கில்லர்ஜி! இதே நிகழ்வு ...எங்கள் வீட்டிலும் சற்று வித்தியாசமாக ஆனால் இதே தான்...எழுதியிருக்கிறோம் ஆனால் வெளியிட பயந்து..வெளியிடாமல் ...வைத்திருக்கிறோம்...

    பதிலளிநீக்கு
  21. நம்பிக்கையோடு நடக்கும் காமாட்சி அம்மாள் நெகிழச்செய்துவிட்டார்!

    பதிலளிநீக்கு
  22. உலக நடப்பை அருமையாக எழுதியிருக்கிறீர்கள்! ஆனால் எப்போது இந்த நிலைமையை படிக்க நேர்ந்தாலும் மனம் கனத்துப்போகிறது! போட்டிருக்கும் படம் மிகப்பொருத்தம்!

    பதிலளிநீக்கு
  23. இயல்பான,யதார்தமான சோகம்

    பதிலளிநீக்கு
  24. ‘பானையிலே சோறிருந்தால் பூனைகளும் சொந்தமடா’ என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. இதுதான் யதார்த்தம் என்பதை சொல்லி நெகிழ வைத்துவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு