தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஜூலை 27, 2017

தூய்மை இந்தியா


தூய்மை இந்தியா என்று சொல்கின்றார்களே... இதுவும் இந்தியாதானே தமிழகத்தின் மாநகராட்சிகளில் ஒன்றான மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில்.

தெருக்கூட்டுகிறேன் என்று ஒருநாள் கூத்தாடினார்களே அவர்கள் இதை தூய்மை படுத்தமுடியுமா ? இன்னும் மக்(கு)கள் எப்படித்தான் இவர்கள்மீது நம்பிக்கை வைக்கின்றார்களோ... நிச்சயமாக நமது பிரதமர் சாதனையாளர் பட்டியலில் இடம் பெறுவார் அது உலகிலேயே அதிகமான நாடுகளுக்கு சென்று வந்த பிரதமர் என்ற சாதனையாளர் பட்டமே அவ்வகையில் நாம் பெருமை கொள்வோம் பிறநாட்டினரின் பார்வையில் இந்தியன் தனித்தன்மை வாய்ந்தவன் ஆம் உண்மைதானே... நல்லதோ, கெட்டதோ செயல் தனித்தன்மையை வெளிப்படுத்தி விடுகிறதே... நல்ல இடத்தை தேர்வு செய்து அதில் குப்பை போன்று பேப்பர்களை உருவாக்கி கொட்டி பரப்பி விட்டு வாசனைக்கு சந்தனத்தைக் கரைத்து ஊற்றி அடாடா புதுமை.

மறைந்த அக்னிப்பறவை திரு. அப்துல் கலாம் அவர்கள் ஒரு பேட்டியில் சொன்னார் லோடு ஏற்றிப்போகும் லாரியில் பின்புறத்தில் எரியும் பல்ப்பில் சிவப்பு ப்ளாஸ்டிக் டப்பாவை கவிழ்த்தி விட்டு அதை அபாயகரமாக காண்பித்தவனைக்கூட அவனும் ஒரு விஞ்ஞானியே என்றார் அதைப்போலவே இவர்களும் விஞ்ஞானிகள்தானோ ? இனியேனும் இந்தியாவுக்கு நல்லவர்கள் ஆட்சி அமையுமா ?

இன்று உமக்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி

கானல் நீராய் வடிந்திடுமோ...
காலம் ஒருநாள் கூடிடுமோ...
காணும் நாளும் வந்திடுமோ...
கனவு காணச் சொன்னாய் நீ
கண்டோம் நாங்கள் எங்கே நீ
கடந்தாய் மண்ணை விட்டு நீ
காட்டிச் சென்றாய் லட்சியமே...
காலனை அகற்றிய ராஜ்சியமே...
காண்போம் நாங்கள் நிச்சயமே...

 -காணொளி-
தூய்மை இந்தியா அமைவது ஓட்டுப் பொறுக்கிகள் கையில் இல்லை மக்களின் கையில் மனம் இருந்தால் மலையையும் புரட்டலாம் 5 அறிவு ஜீவியே இப்படி வாழும் பொழுது நாமும் செல்வோம் அதன் வழியே...

40 கருத்துகள்:

 1. காணொளி கண்டேன் ,இனிமேல் ஜால்ராகளைக் கூட காக்கா பிடிக்கிறான் என்று சொல்லக் கூடாது !அது மனித குலத்துக்கு வழி காட்டும் காக்கைக்கு செய்யும் துரோகம் ஆகிவிடும் :)

  பதிலளிநீக்கு
 2. மாமனிதர்.. மிகச் சிறந்த பண்பாளர்.. அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த வணக்கங்கள்..

  பதிலளிநீக்கு
 3. காக்கைகளின் அறிவு மனிதனுக்கு இல்லை. ஒரு தெருவில் எல்லா வீடுகளும் கட்டப்பட்டு ஒரு வீடு மட்டும் மனையாகவே இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்தத் தெருக் குப்பை முழுக்க அந்தக் காலிமனையில் கூச்சமின்றி கொட்டுவார்கள். பாவம் அதன் உரிமையாளர்.

  வாழ்க கலாமின் புகழ். மாமனிதர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் ஜி சரியான நடைமுறை உண்மையை சொன்னீர்கள்.

   நீக்கு
  2. உங்கள் கருத்தை அப்படியே டிட்டோ செய்கிறேன் ஸ்ரீராம். காலி மனை மட்டுமில்லை மக்கள் குடியிருந்தாலும் கூட அடுத்த வீட்டின் பின்புறமோ முன் புறமோ இருந்துவிட்டால் கொட்டிவிடுகிறார்கள். சண்டைதான்...எங்கள் தெருவில் இதெல்லாம் சர்வ சகஜமப்பா....

   கீதா

   நீக்கு
  3. உண்மை தேவகோட்டையில் எனது காலியிடம் இப்படித்தான் இருக்கிறது ஆனால் சுற்றிலும் வீடுகள் குப்பையை கொட்டுபவர்கள் இவர்களே.....

   இவர்களே என்னிடம் குறை சொல்கின்றார்கள் இடத்தை வீடு கட்டுங்க இல்லைனா.... சுத்தப்படுத்துங்கள் என்று.

   நானும் எத்தனை முறைதான் செலவு செய்வது ?

   நீக்கு
 4. நீங்களே சொல்லிட்டீங்க! தூய்மை இந்தியா அமைவது ஓட்டுப் பொறுக்கிகள் கையிலே இல்லைனு! மக்கள் தானே மனம் மாற வேண்டும். அதுக்கும் பிரதமருக்கும் அவர் வெளிநாடு செல்வதற்கும் என்ன சம்பந்தம்னே புரியலை! எதுக்கெடுத்தாலும் பிரதமரைக் குற்றம் சொன்னால் எப்படி? இதுக்கு முன் இருந்த பிரதமர்களை எல்லாம் யாரும் எதுவும் கேட்டதே இல்லை! இவரை மட்டும் ஏன் தெருக்கள் சுத்தமாய் இல்லை என்பதற்காகக் கூடக் குற்றம் சாட்ட வேண்டும்? இதை ஓர் அரசின் ஆணையாகக் கொண்டு வந்தால் அப்போதாவது மக்கள் சுத்தத்தைக் கடைப்பிடிக்கிறார்களா என்பதே அவர் கருத்து. அதே போல் அபராதம் என்றால் தான் நம் மக்களும் குப்பை போடுவதில்லை. அம்பத்தூரில் எங்க வீட்டுப் பக்கத்துக் குடியிருப்புக்காரங்க வருஷக் கணக்காகக் கழிவு நீரைத் தெருவில் விட்டுக் கொண்டு இருந்தார்கள். நாங்க எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம். சொன்னால் அவங்க குப்பையெல்லாம் எங்க வீட்டுச் சுற்றுச்சுவர் அருகே கொட்டி இருப்பாங்க. இப்போச் சென்னை மாநகராட்சி அம்பத்தூரைத் தன் வசம் எடுத்துக் கொண்டதும் இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக அவங்களுக்கு அபராதம் விதித்துக் கட்டச் சொன்னதும் இப்போக் கழிவு நீரை ஒரு வருஷமாக விடுவதில்லை! தெருவும் சுத்தமாக இருக்கிறது. உண்மையில் நம் சுற்றுப்புறத்தை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் அரசாங்கம் வந்து சொல்லும்வரை அசுத்தமாக வைத்திருப்பதற்கும், அசுத்தம் செய்வதற்கும் நாம் தான் வெட்கப்படவேண்டும். நாடு சுத்தமாக இருக்க வேண்டும் என ஒரு பிரதமர் நினைப்பதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ சுத்தம் செய்வதுபோல் புகைப்படத்துக்கு போஸ் கொடுப்பவர்கள் உண்மையிலேயே ஒருமுறை இந்த மாதிரியான இடத்தில் இறங்கி வேலை செய்யலாமே ?

   எந்த பிரதமருமே இப்படி அடிக்கடி வெளிநாடு பறந்த்தில்லை ஆளால் எல்லோருமே பணம் சுருட்டத் தவறியதில்லை.

   சமீபத்தில் பிரதமருக்காக தனி விமானம் வாங்கி இருக்கின்றார்கள் இந்தப் பணத்தை மக்களுக்காக செலவு செய்யலாமே ?

   தமிழக விவசாயிகள் பிரதமர் இவ்வளவு தூரம் வரமாட்டார் என்று தெரிந்தே கூட்டமாக டெல்லி போய் போராடினார்கள் அவர்களை சந்திக்க 10 நிமிடம் ஒதுக்க முடியாத பிரதமர் யாராக இருந்தாலும் மக்கள் தலைவனாக தகுதியில்லை.

   அதேநேரம் கோவையில் வந்து கோவிலை விளம்பரப்படுத்த நேரமிருக்கிறது.

   ஃப்ரான்ஸ் போய் நடிகை பிரியங்கா சோப்ராவுடன் டிஸ்கஸ் செய்ய நேரமிருக்கிறது.

   கோவை எனது வீட்டுக்கு முன்புறம் பூங்கா இருக்கிறது அதாவது பெயர்தான் பூங்கா சுற்றுப்புற மக்கள் இதில்தான் குப்பை கொட்டுகிறார்கள் இங்கு கொட்டாதீர்கள் பெட்டியில் கொண்டுபோய் கொட்டுங்கள் என்றால் இது உங்கள் இடமா ? என்று கேட்கின்றார்கள் இதனால் எங்கள் வீட்டுக்குள் கொசு வருகிறது என்றால் கமிஷனரிடம் போய் புகார் செய்யுங்கள் என்று சொல்கின்றார்கள் ஸ்ரீராம் ஜி சொல்லியது போல் தனது வீடு மட்டும் நல்லா இருந்தால் போதும் என்ற மனநிலை இன்றைய மக்களிடம் இருக்கிறது என்ன செய்வது ?

   சரி நானும் பெட்டிசன் கொடுக்கலாம் என்ற முடிவில் எந்த நேரம் டெல்லி போனாலும் அவர் வெளிநாடு போய் விட்டார் என்றே சொல்கிறார்கள் ஆகவே இதுவரை சந்திக்க முடியவில்லை.

   உண்மை மக்கள் மனதளவில் நினைத்தாலே நாடு சுத்தமாகும் இதற்கு அடிநாதம் சிங்கப்பூர் மாதிரி அபராதம் கட்டும் சட்டம் கண்டிப்பாக கொண்டு வரவேண்டும்.

   நான் எந்த கட்சியை சார்ந்தவனும் இல்லை இது ஜனாதிபதி மேல் சத்தியம்.

   வருகைக்கு நன்றி சகோ

   நீக்கு
  2. கில்லர்ஜி, எல்லாப் பிரதமர்களும் வெளிநாடு சென்று வரத் தான் செய்தார்கள். புள்ளி விபரங்களுடன் பதில் சொல்ல முடியும். வித்தியாசம் என்னன்னா இவர் ஊடக நிருபர்களைத் தன்னுடன் சலுகை கொடுத்து அழைத்துச் செல்வதில்லை. முக்கியமாய் எல்லா செய்தி சானல்களுக்கும் ஊடகங்களுக்கும் அது ஒரு பெரிய குறை. அரசுச் செலவில் அவர்களை அழைத்துச் செல்லாததோடு அங்கே ஊர் சுற்றிப் பார்க்க ஏற்பாடுகளும் செய்து கொடுத்ததில்லை. வெளிநாடுகள் என்று போனாலும் மூன்று நாட்களில் மூன்று நாடுகள் என்று இடைவிடாமல் பயணம் செய்து போகிறார். சும்மாச் சுத்திப் பார்த்துவிட்டு வந்ததாக இது வரை யாரேனும் சொல்லிக் கேட்டிருக்கீங்களா? சுத்திப் பார்க்கவா போகிறார்? அதற்கான காரணங்களையும் பட்டியலிட முடியும்.

   நீக்கு
  3. நீங்கள் பெட்டிஷன் கொடுக்க தில்லி வரை போகவே வேண்டாம். இங்கே இருந்தே அனுப்பலாம். பிரதமரின் அலுவலகத்துக்குச் செல்லும். முக்கியமான விஷயமாக இருந்தால் பிரதமரின் தனிச் செயலாளர் பார்வைக்குப் போய்ப் பின்னர் பிரதமர் பார்க்க வேண்டும் என்றிருந்தால் அவர் பார்வைக்கும் போகும். தமிழக விவசாயிகள் அங்கே போய்ப் போராட்டம் நடத்துவது என்பது கொஞ்சமும் தேவை இல்லாதது. இங்கே மாநில அரசைக் கேட்க வேண்டியதை அவர்கள் மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் பெரிய பண்ணையார்கள். அவர்கள் கேட்பதில் நியாயம் இல்லை! அதற்குத் தமிழ்நாட்டிலேயே இருந்து அவரவர் கிராமத்தில் நீர்ப் பிடிப்புப் பகுதிகளைத் தூர்வாரலாம். தினம் தினம் போராட்டம் நடத்துவதற்கும், அவர்கள் சாப்பாட்டுச் செலவுக்கும் என்ன செய்கிறார்கள்? அவர்களில் யாரைப் பார்த்தாலும் வறுமையில் வாடுப்வர்களைப் போல் இல்லையே! வயலில் இறங்கி வேலை செய்யும் விவசாயியைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். இங்கே இருந்து கொண்டு செய்ய வேண்டியதைச் செய்யாமல் தில்லியில் போய்ப் போராட்டம் நடத்துகிறார்கள். இங்கே செய்ய வேண்டிய விவசாயம் சார்ந்த பணி எவ்வளவோ இருக்கிறது. அரை ஏக்கர், ஒரு ஏக்கர், 2 ஏக்கர் வைத்திருக்கும் சிறு விவசாயி யாருமே போராட்டம் நடத்துவதாகத் தெரியவில்லை. எப்போப் பார்த்தாலும் கடனைத் தள்ளுபடி செய்! இலவச மின்சாரம் கொடுங்க! இதான் அவங்க வேண்டுகோள். அப்புறமா இன்னொரு பக்கம் தண்ணீர் இல்லை, விளைச்சல் இல்லை, விவ்சாயம் செய்ய முடியலைனும் சொல்றாங்க. விவசாயமே செய்ய முடியாமல் இருக்கையில் கடன் எங்கிருந்து வந்தது? தண்ணீர் வரத்துக்கு வழி செய்யட்டும் மழைக்காலத்துக்குள்! மற்ற மாநிலங்களிடம் கையேந்தியது போதும்! :(

   நீக்கு
  4. மீள் வருகைக்கு நன்றி சகோ

   எல்லா பிரதமருமே அரசு பணத்தில் "வாழ்ந்து" விட்டது உண்மையே... தாங்கள் சொன்ன விடயத்தை இவர் செய்யாதவரை மகிழ்ச்சி.

   சந்திரனுக்கு ராக்கெட் விட்டது இந்தியா.
   அதில் முதலிடம், இதில் இரண்டாவது இடம் என்று வெட்டியாக பெருமை பேசுகிறது மத்திய, மாநில அரசுகள்.

   அடி மட்ட ஏழையின் வாழ்வில் இன்னும் மாற்றமில்லை யாருமே அதனைக்குறித்து சிந்திக்கவில்லை.

   அடுத்து யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரட்டும் அரிசி விலை குறையணும் இது ஒன்றே எனது கோரிக்கை.

   உலகிலேயே தலை சிறந்த 100 தலைவர்களின் பட்டியல் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.

   பிலிப்பைன்ஸ் அதிபர் முதலிடம் நமது மோடி 100-லும் வரவில்லை

   இது நமக்கு பெருமையா ?

   நிச்சயம் எனனைப்போல் எண்ணங்கள் கொண்ட தலைவன் ஒருநாள் வருவான் எனக்கு நம்பிக்கை உண்டு

   மீண்டும் நன்றி.

   நீக்கு
  5. நேரடியாக பெட்டிசன் கொடுப்பதுதான் மரியாதை அதனால்தான் அலைந்து கொண்டு இருக்கிறேன் ஹி.. ஹி.. ஹி..

   உண்மைதான் அவர்கள் ஏழைகள் இல்லை என்பது 100% உண்மை.

   இருந்தாலும் இவ்வளவு கோமாளித்தனங்கள் அவசியம் இல்லைதான்.

   செல்போனில் மறுமொழி தருகிறேன் முடியல...
   ஐயாம் பாவம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

   நீக்கு
  6. அவங்க போராட்டமே ஒரு கேலிக்கூத்தாக இருப்பதை அவர்கள் உணரவில்லைனு நினைக்கிறேன். இதைப் பற்றி விரிவாக எழுதலாம். ஆனால் வேண்டாம்னு விட்டுட்டேன். :( உலகிலேயே தலை சிறந்த 100 தலைவர்களில் இந்தியப் பிரதமர் வரவில்லை என்பது ஓர் குற்றம் என நான் நினைக்கவில்லை. ஏனெனில் மோதி அவர்களுக்கு வெளிநாடுகளில் பலத்த வரவேற்பும், மரியாதையும் காட்டி வருவதைத் தொலைக்காட்சிகள் மூலம் பார்த்துக் கொண்டு தானே இருக்கேன். :)

   நீக்கு
  7. வாங்க சகோ மோடி அவர்கள் முதலிடம் பெற்றால் நமக்கு பெருமைதானே... அவர் அதற்கான முயற்சி எடுக்கவில்லை

   வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு இந்தியாவின் முக்கிய நபர் யார் வந்தாலும் அவர்களை கண்டு வரவேற்பதில் அவர்களுக்கு எப்போதுமே ஆர்வம் உண்டு.

   இந்தியாவில் அடித்தட்டு மக்களின் அடிமனதில் வரவேண்டும் அது மிகப்பெரும் சவால் மட்டுமல்ல, சாதனையும்கூட...

   நீக்கு
 5. நல்லதோர் அஞ்சலி.

  மனிதர்கள் நிறையவே மாற வேண்டும் - குப்பை போடுவதை போட்டுக் கொண்டே இருப்பேன் - எங்கே வேண்டுமானாலும் போடுவேன் என்று இருக்கும் வரை ஒன்றும் நடக்கப் போவதில்லை. ஒவ்வொருக்கும் நமது நாட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டிய கடமை உண்டு. பேருந்துச் சீட்டை, பேருந்தில் இருந்து இறங்கிய பிறகு, நான் குப்பைக்கூடையில் போட, என்னை ஒரு ஜந்துவைப் போலப் பார்த்து, தனது பயணச்சீட்டை, கீழே நடு ரோட்டில் போட்டு சிரித்தது ஒரு ஜந்து!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி சரியானபடி சொன்னீர்கள் இதே கருத்தையே நானும் மேலே சகோ திருமதி. கீதா சாம்பசிவம் அவர்களுக்கு மறுமொழி கொடுத்து இருக்கிறேன்.

   இதே நிலை எனக்கும் வந்து இருக்கின்றது ஜி ஜந்துவை சந்தித்த அனுபவம்

   நீக்கு
 6. நீங்கள் சொல்லியிருப்பது போல் நம் நாட்டைச் சுத்தமாக வைத்திருப்பது நம் கையில் தான்.

  கேரளத்தில் பொது இடங்களில் குப்பை போடுவது என்பது குறைவுதான். ஏங்கேனும் ஒரு சில டவுன், நகரங்களில் குப்பை குமிந்திருப்பதைப் பார்க்கலாம் என்றாலும் பொதுவாக மக்கள் போடுவதில்லை. துப்பல்கள் உண்டு.

  மாமனிதரைப் போற்றுவோம். சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! மாமனிதரே கலாம்!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேரளம் இப்படி இருப்பதற்கு முக்கிய காரணம் அவர்கள் இயற்கையாகவே சுத்தமானவர்கள் மேலும் பெரும் பாலானோர் கல்ப் நாடுகளில் வசிப்பதால் சுகாதாரத்தை விரும்புகின்றார்கள்

   தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 7. கலாம்வாழ்க!த ம 9

  பதிலளிநீக்கு
 8. அப்துல் கலாம்… நீ
  ஒற்றை வார்த்தையில்
  உருவான இந்தியக் கவிதை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அருமை சகோ தங்களது ஒற்றைவரி.

   நீக்கு
  2. இணையத்தில் வாசித்து ரசித்தது ..கவர்ந்த வரிகள்...

   நீக்கு
  3. மீள் வருகைக்கு நன்றி
   இப்படி உண்மையை பேசுபவர் சமூகத்தில் ஒரு சிலரே வாழ்த்துகள்.

   நீக்கு
 9. கில்லர்ஜி - இது இந்தியன் மென்டாலிட்டி. பொதுவா இந்தியர்கள், அவர்களது வாழ்விடங்களை (வீடு) ஓரளவு சுத்தமாக வைத்துக்கொள்வார்கள், தாங்கள் ஓரளவு சுத்தத்துடன் இருப்பார்கள், ஆனால் பொது இடங்களைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள். இது நம் நாட்டு மக்களின் குணம். நம்ம வியாதிக்கு அடுத்தவன் மருந்து சாப்பிடமுடியுமா? நாமதான் திருந்தணும். வாத்தியார் சொல்வார், மாணவர்கள் கடைபிடிக்கணும். பிரதமர் சொல்லிவிட்டார், மற்றவர்கள் கடைபிடிக்கணும்.

  காக்கை குப்பையைத் தொட்டியில் போடுது. பூனையும் சுத்தமாக இருக்கும் பிராணி. மனிதர்கள் சுய'நலம் மிக்கவர்கள்.

  கலாம் அவர்கள் ஒரு எக்செப்ஷனல் (தனித்துவம் வாய்ந்த அபூர்வமான) பிறவி. என்ன செய்வது. நல்லவர்களை இயற்கை 100 ஆண்டுகள் வாழச்செய்வதில்லை. கெட்டவர்கள் விரைவில் மடிவதுமில்லை. (த ம காலையிலேயே போட்டாச்சு)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நமது இயல்பு குணத்தை அழகாக வெளிப்படுத்தினீர்கள் உண்மை நமது வியாதிக்கு நாமே மருந்து உட்கொள்ளல் வேண்டும்.

   கலாம் அவர்களின் பிறப்பு இந்தியாவின் பயன்

   தாங்கள் காலையில் தமன்னா இட்டதை ஏற்கனவே அறிந்தேன் நன்றி.

   நீக்கு
 10. தூய்மை இந்தியாவுக்குச் செய்யும் செலவை உண்மையில் தூய்மையாகச் செலவு செய்தால் இன்னும் தூய்மை அடையலாம் அமைச்சர்கள் தெருக் கூட்டுவது போல் தொலைக்காட்சியிலும் ஊடகங்களிலும் வந்தால் அதில் நிறைவு பெறுபவர் நம்மில் அதிகம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா "அந்த" பல அரசியல்வாதிகள்தானே ஏழை மக்கள் இல்லையே...

   நீக்கு
 11. ஆளுகின்ற மக்காத குப்பைகளைய அந்த குப்மைகளை ஓட்டு மூலம் அனுப்புகின்ற மக்கும் குப்பைகளையும் இல்லாது துடைத்து அப்புறப் படுத்தி விட்டால்.... உண்மையிலே எல்லாம் துய்மை ஆகிவிடும்....

  பதிலளிநீக்கு
 12. அப்துல் கலாம் அவர்களுக்கு நல்ல அஞ்சலி.
  சுத்தம் தன் வீடு வரை என்று நினைத்து விட்டார்கள்.
  அடுத்தமனை காலி மனை என்றால் குப்பைகளை கொட்டி வைப்பார்கள்.
  காணொளி அருமை. காகம் சுற்றுபுறத்தின் தூய்மையாளர் அல்லவா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது கருத்துப்பகிர்வுக்கு நன்றி.

   நீக்கு
 13. Dr அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நம் மக்களுக்கும் சரியான அறிவுரையை சொல்லியிருக்கிறீர்கள் அந்த காணொளி மூலம். பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது விரிவான கருத்துரையை பகிர்ந்தமைக்கு நன்றி

   நீக்கு