தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, டிசம்பர் 10, 2017

என் நினைவுக்கூண்டு (9)


இதன் பின்னணிகளை அறிவதற்கு கீழே சொடுக்கலாம்...


நீ சட்டென சொல்வாய் கிழிச்சே... என்று சொன்னவர் மூக்கு உடைபட்டு அந்த சண்டையில் சிரிப்பு வந்து கதை வேறுரீதியில் முற்றுப்பெற்று விடும்.

  னிதா தேவகோட்டை வீட்டில் நீ எவ்வளவு வேலை பார்த்து வந்து இருக்கிறாய் என்பது இன்று எல்லோருக்கும் புரிகிறது இன்று தண்ணீர்க் குடத்தை தூக்கி வைக்க அம்மாவுக்கு நான் தேவைப்படுகிறேன். எல்லா குடங்களிலும் தண்ணீர் பிடித்து வைத்து விட்டு, டாங்க் நிறைப்பதற்கு மோட்டாரைப் போட்டு விட்டு அது நிறைந்து வெளியேறும் பைப்புக்கு கீழே ஒரு பாத்திரத்தை வைத்து விட்டு அதன் அருகிலேயே உட்கார்ந்து இருப்பாய் காரணம் நிறைந்தவுடன் மோட்டாரை அமர்த்த வேண்டும். உன்னைப் பொருத்தவரை தண்ணீர் வீணாக கீழே போய் விடக்கூடாது, மேலும் கரண்டு செலவும் அதிகம் ஆககூடாது டாங்க் நிறைந்தவுடன் அந்த இடத்திலிருந்து முன்புறத்திலிருக்கும் மோட்டார் ஸ்விட்சை அமர்த்துவதற்கு
அமத்து, அமத்து தண்ணி போகுது...
என்று நீ அலறிக்கொண்டு ஓடிப்போய் அமர்த்தி விடுவாய் வீட்டிலிருப்பவர்கள் பயந்து போய் ஏன் இப்படி கத்துறே ? என்றால்
ஒனக்கு என்ன தெரியும் கரண்டு பில் நாப்பது ரூவா
என்பாய் உலகில் உனக்கு தெரிந்தது நாற்பது ரூபாய் மட்டுமே சிலமுறை உன்னிடம் நிறைய பணத்தைக் கொடுத்து எண்ணு என்று சொல்லி இருக்கிறேன் வாங்கி கொண்டு
பத்து, அஞ்சு, ஒம்பது, மூணு, நாப்பது ரூவா இருக்கு.
என்று முடித்து விடுவாய் சிலமுறை பணத்தை கொடுத்து சொல்லி இருக்கிறேன் நீ வச்சுக்க என்று அதற்கு நீ ஆட்காட்டி விரலை நெற்றிப் பொட்டில் தொட்டு சுழற்றிக் காண்பித்து
மூள இருக்கா எனக்கு ரூவா எதுக்கு ?
என்று கேட்டு என்னை திணறடித்து இருக்கின்றாய். ஏழுமுறை தண்ணீர் ஊற்றி நீ பாத்திரம் கழுவுவாய் ஆனால் மற்ற யாரும் தண்ணீர் சிந்தக்கூடாது சாதாரணமாக யாராவது பாத்ரூம் போயிருந்து தண்ணீர் சத்தம் கேட்டால்கூட
கொட்டு. கொட்டு
என்று சொல்வாய் இதற்கு விருந்தாளியும் விதிவிலக்கு இல்லை. நான் வீட்டின் கடைசி அறையில் இருக்கும் பொழுது எனது மகளை ரூபலா என்று பலமுறை அழைத்திருப்பேன் கடைசி வராண்டாவில் இருக்கும் எனது மகளுக்கு கேட்டு இருக்காது இடையில் எங்காவது ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும் நீ
‘’பூபலா’’
என்று வீடே அதிறும் அளவுக்கு அலறுவாய் என்னத்தே ? என்று எனது மகள் கேட்டால்
ஒங்கொப்பா
என்று சொல்வாயே இன்னும் எனது செவிகளில் ஒலிக்கிறது நான் பலமுறை சொல்லி இருக்கிறேன் வனிதா மட்டும் இல்லை என்றால் இந்த வீட்டுக்கு சரியா வராது என்று.. அது உண்மையாகி விட்டது இன்று நீ இல்லாமல் வீடு வேறு நிலைக்கு போய் விட்டது.

வனிதா நான் கோவையில் வீடு வாங்கி ஒன்பது வருடங்களாகியது உன்னை அந்த வீட்டுக்கு அழைத்துப் போகும் சந்தர்ப்பம் எனக்கு வரவில்லை ஆகவே நான் நிரந்தரமாக இந்தியா வந்து விட்டதால் கோவைக்கு அழைத்து வந்தேன் ஒரு வாரத்தில் நான்கு நாட்கள் நன்றாகத்தான் இருந்தாய் கடைசி மூன்று நாட்கள் நலமில்லாமல் மருத்துவமனை சென்று உனக்கு கடைசி நாளாகவும் ஆகி விட்டது. அந்த நான்கு நாட்களும்கூட நினைவில் வைக்க கூடிய நிகழ்வுகள். சராசரியைவிட எந்த நேரமும் எனது மடியில் படுத்தாய் இதை நான் வழக்கம் போலவே நினைத்திருந்தேன் அதன் அர்த்தம் இப்பொழுதே புரிகின்றது. உன்னை கோவைக்கு அழைத்து வந்ததால்தான் மரணம் என்று என்னை பலரும் குற்றம் சொன்னாலும் உன்னை கோவை வீட்டுக்கு அழைத்துப்போய் ஒரு வாரம் தங்கி இருந்தது எனக்கு சந்தோஷமே. மரணம் எங்கிருந்தாலும் இறைவன் தீர்மானித்தபடி, தீர்மானித்த நாளில் வந்தே தீரும் நானும்கூட அபுதாபியில் பலமுறை மரணத்தின் பிடியிலிருந்து தப்பி இருக்கிறேன் காரணம் என்ன ? எனது மரணம் நிகழ வேண்டியது நான் விரும்பும் இந்தியாவில் என்று இறைவன் தீர்மானித்து உள்ளான். பலமுறை எனது மடியில் படுத்துக்கொண்டு எனது மகளை அழைத்து
பூபலா இங்க பாரு
அதைக் கண்டவுடன் எனது மகள் ஆஹாங் என்று சொல்ல நீ
ஓஹோங்
என்று சொல்வாய் இந்த வார்த்தைகள் எனக்குள் இன்னும் ஒலிக்கின்றதடா..

தேவகோட்டையில் சொன்னது போலவே கோவை வீட்டிலும் சோபாவில் சாய்ந்து கொண்டு கையில் ரிமோட்டுடன்
இது ய்யேன் வீடு, ய்யேன் டிவி
என்றாய் இதையும் வாங்கி விட்டாயா ? என்றேன் மொட்டை மாடியில் நீயும், நானும் நின்று கொண்டு இருக்கும் பொழுது தலைக்கு மேலே ஒரு பனைமர உயரத்தில் பறந்த விமானத்தின் பிரமாண்டத்தை கண்டு பிரமித்தாய் மேலும்
நீ இப்படித்தான் துபாய் போவியா ?  பயப்படவே மாட்டியா ?
மாட்டேன் நீ வாறியா ?  
ஆத்தாடி பயமாக்கு பூபலா குட்டியை கூட்டிப்போ
என்றாய் எனது மகளை நான் விமானத்தில் அழைத்துச் செல்லவேண்டும் என்று சொன்னதை கேட்டு உனது மனதின் உயர்வைக் கண்டேன். என் மனதில் நெடுங்காலமாகவே ஒரு ஆசை இருந்தது உன்னை அவ்வளவு சுலபமாக கொண்டு செல்லமுடியாது என்றாலும்கூட அனுமதி பெற்று விமானத்தின் வரையாவது உனது கண்ணைக் கட்டி அழைத்துச் சென்று மதுரையிலிருந்து கோவை வரை விமானத்தில் உன்னை ஜன்னலோரத்தில் உட்கார வைத்து பயணிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது உண்மை இது உன் ஆன்மா மீது சத்தியமடா.

கூண்டுகள் சுழலும்...

15 கருத்துகள்:

  1. ஒவ்வொரு தடவையும் நினைவுக் கூண்டு படிக்கும்போது மனம் கனத்து விடுகிறது. நாம் எவ்வளவுதான் செய்தாலும்... இன்னும் செய்திருக்கலாமோ எனத்தான் மனம் சொல்லும்:(.

    பதிலளிநீக்கு
  2. நினைவுகள்.... நீங்காத நினைவுகள்!

    பதிலளிநீக்கு
  3. கில்லர்ஜி மனம் நெகிழ்ந்தது. உங்கள் தங்கையின் வார்த்தைகளை ரசித்தேன்...இப்படித்தான் நமக்கு நெருக்கமானவர் போய்விட்டால் ஹையோ இதைச் செய்திருக்கலாமோ அதைச் செய்திருக்கலாமோ என்று தோன்றும்..நிறையவே...

    கீதா

    பதிலளிநீக்கு
  4. நீங்காத நினைவுகள்; தூங்காத உணர்வுகள்.

    பதிலளிநீக்கு
  5. ஆறுதல்படுத்திக் கொள்ள முயன்றாலும்
    மனம் ஆறுவதேயில்லை..

    பதிலளிநீக்கு
  6. தொடர்ந்து எழுதுங்கள், பாரம் குறையும்வரை. உங்களின் மனச்சுமை கண்டிப்பாகக் குறையும்.

    பதிலளிநீக்கு
  7. வருத்தங்களை எழுத எழுதத்தான் குறையும்.

    வாழ்த்துக்கள் கில்லர்ஜி, சம்பாதித்த பணத்தில் சிறிது முதலீடு செய்திருப்பதற்கு. பலர் அதனைச் செய்யத் தவறிவிடுகின்றனர், அவர்களது சொந்தங்களும், எத்தனை கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறார் என்பதை மறந்து ஆடம்பரச் செலவுகளும் அனாவசியச் செலவுகளும் செய்து, வெளிநாட்டில் வேலை பார்த்தவன் திரும்பி வரும்போது, சம்பாதித்த பணம் இல்லாதவாறு ஆகிவிடுகிறது.

    பதிலளிநீக்கு
  8. எழுதுங்கள் நண்பரே
    தொடர்ந்து
    நினைவுகளை எழுதுங்கள்
    எழுத எழுத
    மனச் சுமை குறையும்
    பகிர்ந்து கொள்ளக் காத்திருக்கிறோம்
    தம +1

    பதிலளிநீக்கு
  9. நண்பரே உங்கள் தங்கை மீது நீங்கள் வைத்து இருந்த, இப்போதும் வைத்து இருக்கும் பாசத்தை வார்த்தைகளால் கொட்டி விட்டீர்கள். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு துயரக்கதை இருக்கத்தான் செய்கிறது. வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள். புதுக்கோட்டையில் நடக்க இருக்கும், அடுத்த வலைப்பதிவர் மாநாடு ஆலோசனை கூட்டத்திற்கு அவசியம் வாருங்கள். மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்.

    பதிலளிநீக்கு
  10. நினைக்க நினைக்க நெஞ்சம் உருகுதே நீ இல்லாத இடம் நோக்கி என்று சொல்வது தெரிகிறது

    பதிலளிநீக்கு
  11. மறக்க முடியா நினைவுகள்.

    பதிலளிநீக்கு
  12. ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதமான நிணைவுகள் இருக்கிறது தங்களின் நினைவுக்கூண்டு பிரதிபலிக்கிறது நண்பரே......

    பதிலளிநீக்கு
  13. உறங்கிவிட பைங்கிளியின் உறங்கா நினைவுகள் உறக்கத்திலும் உயிர்ப்புடன் இருக்கிறது உங்களுடன் நினைக்கிறேன் வாழட்டும் என்றும் நீடுழி

    பதிலளிநீக்கு
  14. என்றும் மங்கா நினைவுகள்...

    இருக்கட்டும் நம்மோடு எப்பொழுதும்...

    பதிலளிநீக்கு
  15. மனதை கலங்க வைத்தன ஒவ்வொரு நிகழ்வும் அந்த அன்பு தெய்வத்தால் அந்த குழந்தையின் செய்கைகளால் உங்களுக்கு பசுமரத்தாணி போல மனதில் பதிஞ்சிடுச்சி .படிக்கிற எங்களுக்கே எத்த்னை அறிவும் அன்பும் உள்ள குழந்தை என்று பிரமிப்பா இருக்கு ..நினைவுகளை பகிருங்கள் .ஆனால் நரம்பிலா நாவுகள் சொல்வதை பொருட்படுத்த வேண்டாம் (கோவை சென்றதால் தான் :( )
    உங்களுடன் அவள் இருந்த சந்தோஷமான நாட்கள் அதை நினைத்து பாருங்கள் .

    பதிலளிநீக்கு