தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, மார்ச் 18, 2022

நூலுக்கு மரியாதை

இதம்பாடல் அழகிய கிராமம் எனது ஐயா ஞானி ஸ்ரீபூவு அவர்கள் வாழ்ந்து மறைந்த கிராமம். ஆம் கிராமிய மணம் கமலும் இங்குதான் கிராமத்தின் வஞ்சனையற்ற மனிதர்களையும், வாஞ்சையோடு பழகும் நல் உள்ளங்களையும், இதமான கிராமிய பாடல்களையும் நஞ்சற்ற சுவாசக்காற்றையும் சுவாசித்து வளர்ந்தேன். இங்குதான் எனது பள்ளி வகுப்பை ஒன்றில் தொடங்கி நான்காவதில் முடித்தேன். இத்தோடு எனது பள்ளி வாழ்க்கையும் அஸ்தமனம் ஆகியது. எஸ்தர் டீச்சர் எனக்கு முதலாம் வகுப்பில் படிக்க, எழுத கற்றுக் கொடுத்த முதல் தெய்வம்.

 
நான்காவதில் குருந்தன் வாத்தியார். மேலும் உறவுக்காரர் மாமா கதிரேசன் வாத்தியார், இவர்களோடு முரட்டு மீசை வைத்த ஹெட் மாஸ்டர் இவர் திருமதி எஸ்தர் அவர்களின் அன்புக் கணவர் இவர்களின் வீட்டில் வான் கோழிகளும், புறாக்களும் வளர்ப்பர். மற்ற டீச்சர்களின் பெயர்கள் மட்டும் நினைவில் இல்லை. யாரையும் அடிக்காமல் தொடையில் கிள்ளி உயிரை மட்டும் எடுக்கும் எப்பொழுதும் வெத்தலை போடும் வாத்தியார். இவர்கள் அனைவருமே இப்பொழுது இருக்க மாட்டார்கள் என்பது எமது கணிப்பு காரணம் இளவயது குருந்தன் வாத்தியாரே மறைந்து விட்டார். இவர்களது ஆன்மா இறைவன் காலடியில் இளைப்பாறட்டும் என்று இந்நொடியில் இறைவனிடம் வேண்டுகிறேன்.
 
இன்று இவர்களை குறித்து எழுதக் காரணம் என்ன ? சமீபத்தில் இதம்பாடல் போயிருந்த போது நான் பயின்ற பள்ளிக்கு சென்றேன் இதோ மேலிருக்கும் இந்தக் கட்டிடம்தான் பள்ளி தற்போது இது பள்ளியின் கிட்டங்கியாக செயல்படுகிறது இதன் பின்புறம் பிரமாண்டமாக புதிய கட்டிடம். பள்ளி ஆசிரியர்களிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டேன் தலைமை ஆசிரியை திருமதி. ம.சுசீலாபாய் எம்.ஏ.பி.எட் அவர்கள் அன்போடு வரவேற்று, பண்போடு பேசினார்கள். நான் எழுதிய தேவகோட்டை, தேவதை தேவகி என்ற நூல்கள் இரண்டை பள்ளி நூலகத்திற்கு வழங்கினேன் புகைப்படம் வெளியிட வேண்டாம் என்ற தலைமையாசிரியையின் வேண்டுகோளுக்கு இணங்க படம் வழங்கிய, பெற்ற கைகள் மட்டும்..
 

நான் சென்றது காலை நேரம் என்பதால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் திடலில் மாணவ, மாணவிகளிடம் என்னை அறிமுகப்படுத்தி என்னையும் இரண்டு வார்த்தைகள் பேசச் சொல்லியது நெகிழ்ச்சியான நிகழ்வு. நான் தமிழ் படித்து கற்ற பள்ளியின் நூலகத்தில், நான் எழுதிய தமிழ் நூல்கள் இரண்டு பங்களிப்பதை நினைத்து மனதில் ஏதோ நானும் சாதித்து விட்ட சிற்றுணர்வு. சட்டென விழிகளுக்கும், இமைகளுக்கும் இடையே கண்ணாடித் திரைகள். எல்லோருக்கும் நன்றி சொல்லி விட்டு வெளியேறும் பொழுது...
 
என்னோடு பயின்ற மாணவர்கள், நினைவுக்கு வந்தார்கள். அவர்களில் நினைவில் உள்ள பெயர்கள் ராஜா முஹம்மது, ராமச்சந்திரன், கருப்பையா, சேகர், ரமேஷ், கூடலிங்கம், அன்சாரி, சலீம், மாணவிகளில் பொன்னம்மா மட்டும் இப்பெயர் நினைவில் நிற்பதற்கு காரணம் அந்தப் பள்ளியில் சிறப்பான பெயர் பெற்றது நாங்கள் இருவர் மட்டுமே... எனக்கு பொன்னம்மா ஒன்றிலிருந்து நான்குவரை எதிரியே... யார் அதிக மதிப்பெண் எடுப்பது ? என்பதில்....
 


இவர்களைப் பார்த்து நாற்பது வருடங்களுக்கும் மேலாகி விட்டது. இவர்கள் தற்போது எங்கு இருக்கின்றார்களோ ? இவர்கள் அனைவரும் என்னைப்போல் இல்லாமல் நலமுடன் மனைவி, மக்கள், பெயரன், பெயர்த்திகளோடு சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று இறைவனை வேண்டுகிறேன்.
 
இவர்கள் அனைவரையும் ஓர்நாள் சந்திக்க வேண்டும் அவர்கள் அனைவருக்கும் எனது நூலை பரிசளித்து மகிழ வேண்டும் என்பது எனது புதிய அவா. மாலை எங்களது குலதெய்வக் கோயிலின் வாயிலில் அமர்ந்து இருந்தேன் பள்ளி முடிந்து அவ்வழியே சென்ற மாணவர்கள் காலையில் கண்ட என்னை மீண்டும் கண்டதால் ஓடோடி வந்து வணக்கம் சொல்லிச் சென்றனர். இந்த மரியாதை எனது நூலால் எனக்கு கிடைத்தது. இதோ மாணவர்களது புகைப்படமும்...
 


ஒவ்வொரு வருடமும் ஏர்வாடி தர்ஹாவில் நடக்கும் சந்தனக்கூடு விழாவுக்கு நடந்தே சென்று வருவோம், சிக்கல் செந்தில் முருகன் டூரிங் டாக்கீஸில் படம் பார்ப்பதற்கும் நடந்தே சென்று வருவோம், கந்தர் அலங்காரம், இதயக்கனி திரைப்படம் எல்லாம் இப்படி கண்டு மகிழ்ந்த காலங்கள் நாற்பத்து ஐந்து பைசா டிக்கெட் சிஸர் அட்டையில் டாக்கீஸின் பெயர் முத்திரை குத்தியிருக்கும் அது சுற்றி சுற்றி வரும்.
 

இதம்பாடல் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம். இங்கிருந்து கிழக்கே ஏர்வாடி தர்ஹா ஐந்து கி.மீ கீழக்கரை பனிரெண்டு கி.மீ மேற்கே சிக்கல் ஐந்து கி.மீ வடக்கே உத்திரகோசமங்கை எட்டு கி.மீ.
 
யான் க(பெ)ற்ற தமிழுக்கு நன்றி.
கில்லர்ஜி தேவகோட்டை

40 கருத்துகள்:

 1. எனக்கு உங்களை போல படித்த பள்ளிக்கு சென்று வர ஆசைதான் ஹும்ம்ம் அதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே ஆம் இதற்கும் கொடுப்பிணை வேண்டும்.

   நீக்கு
 2. மலரும் நினைவுகள்.. அந்த நாளும் வந்திடாதோ என்று பாட தோன்றும் நினைவுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஸ்ரீராம்ஜி தங்களது வருகைக்கு நன்றி.

   நீக்கு
 3. இதம்பாடல் பற்றி மனதில் இதமாய் பாடி விட்டர்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

   நீக்கு
 4. பதிவினைப் படிக்கும் போதே மனம் கலங்கி விட்டது..

  எல்லாருக்கும் இப்படியான வாய்ப்புகள் அமைவதில்லை..

  இறைவன் கொடுத்த வரம்..
  வாழ்க நலம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி ஆம் இதற்கும் அதிர்ஷ்டம் வேண்டும்.

   நீக்கு
 5. அன்பின் தேவகோட்டைஜி,
  நலமுடன் இருங்கள்.

  இதம் பாடல் என்னும் பெயரே இனிமை.
  ஏர்வாடி என்று இரண்டு ஊர்கள்
  இருக்கிறதா. திருநெல்வேலி மாவட்டத்தில்
  குறுங்குடி பக்கத்தில் ஒரு ஏர்வாடி இருக்கிறது தெரியும்.

  உங்கள் பள்ளி நினைவுகள்
  ,உங்கள் புத்தகங்களைப் பள்ளியில்
  கொடுத்தது எல்லாமே மிக மிக அற்புதம்.

  இன்னும் நிறைய புத்தகங்கள் நீங்கள்
  எழுத வேண்டும்.
  அன்பு நிறை வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா ஆம் வள்ளியூர் அருகில் ஓர் ஏர்வாடி உண்டு அதற்காகத்தான் இதை தர்ஹா என்று குறிப்பிட்டேன்.

   தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி அம்மா.

   நீக்கு
 6. சொந்த கிராமத்துக்கு அமைதியாகச் சென்றுவருவது, படித்த பள்ளியைப் பார்ப்பதோடு, அங்கே போய் ஆசிரியரை சந்தித்து புத்தகம் வழங்குவது, பள்ளிப்பிள்ளைகள் முன் பேச நேர்வது, குலதெய்வக்கோவில் சென்று கும்பிட்டபின் அங்கே கொஞ்சம் உட்கார்ந்து மனசார நினைவுகளை அசைபோடுவது.. எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. வாழ்த்துகள்.

  கூடவே.. ஹோலி முபாரக்! சே.. தமிழரின் தளத்தில் ஹிந்தியா! ஹோலி பண்டிகை வாழ்த்துகள் - வாழ்வு முழுதும் வண்ணங்கள் மிளிரட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி.

   தங்களது விரிவான கருத்துக்கு நன்றி.

   ஆம் இன்றும் இதம்பாடல் பங்குனி உத்திரம் திருவிழா சொந்தக் கோயிலில்...

   நீக்கு
 7. மிக இனிமையான பயணம் போய் வந்து இருக்கிறீர்கள். நல்ல புத்துணர்வு கிடைத்து இருக்கும்.
  படித்த பள்ளி அதில் உங்கள் நூல் கொடுத்த பெருமிதம், குலதெய்வ வழி பாடு பங்குனி உத்திரத்தில்.
  ஊரின் பேர் இதம்.

  கள்ளமில்லா குழந்தைகளுடன் உரையாடி வந்து இருக்கிறீர்கள். அதுவே மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வு தரும்.
  பள்ளியின் புதிய கட்டிடத்தை படம் எடுக்கவில்லையா?
  அம்மாவின் பேர் கல்வெட்டில் பார்த்தேன், மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

   ஆம் மனதுக்கு நிறைவாக சந்தோஷத்தை தந்தது.

   நீக்கு
 8. சொந்த கிராமத்துக்குப் போய்ப் படித்த பள்ளீயைப் பார்த்து அங்கே போய் வேண்டியன செய்வது என்பது எல்லோருக்கும் கிடைக்காது. நானெல்லாம் படித்த ஆரம்பப்பள்ளிக் கூடக் கட்டிடங்கள் மதுரை வடக்காவணி மூலவீதியில் இப்போ இடிந்த நிலையில் செப்பனிடாமல் கிடக்கின்றன. படிச்சவங்களையும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுத்த ஆசிரியர்களையும் நன்றாகவே நினைவில் வைத்திருக்கேன். ராமநாதபுரம் ஜில்லாவிலும் ஒரு "சிக்கலா?" சிங்காரவேலன் இருக்கும் சிக்கல் தான் எனக்குத் தெரிந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ இந்த சூழல் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. இது இறையின் கொடையே...

   ஆம் சிக்கலும், ஏர்வாடி மும் இரண்டு இருக்கிறது.

   இராமநாதபுரம் மூன்று இருக்கிறது.

   காஞ்சிபுரம் நான்கு இருக்கிறது.

   காரைக்குடி இரண்டு இருக்கிறது.

   தி கிரேட் தேவகோட்டை ஒன்றே ஒன்றுதான்...

   நீக்கு
  2. சிக்கல் இன்னொன்று இருப்பது இன்றே தெரியும். ராமநாதபுரம் 2,3 இருக்குனு தெரியும். காஞ்சிபுரமும் நான்கா? காரைக்குடி நான்கு? ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

   நீக்கு
  3. காரைக்குடி இரண்டுதான், திருப்பத்தூர் இரண்டு.

   நீக்கு
 9. இதம் பாடல் ஊர்ப் பெயரே அழகு.

  பதிலளிநீக்கு
 10. ஊர் பெயரே தமிழில் மணக்கிறது
  பயின்ற பள்ளி நூலகத்தில் தங்கள் புத்தகம்
  நிச்சயம் பெருமைப் படலாம்
  வாழ்த்துகள் நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களுக்கும் இந்த பாக்கியம் உண்டுதானே... வருகைக்கு நன்றி.

   நீக்கு
 11. நினைவுகளின் கண்ணீர் கடலில் மூழ்க வைத்துவிட்டீர்கள் தோழர். நல்வாய்ப்பு தங்களுக்கு கிடைத்துள்ளது. விரைவில் தங்களின் நண்பர்களையும் கண்டு மகிழ வாழ்த்துகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நலமா ? தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 12. இதம்பாடல் என்ன அழகான பெயர்! ஊரும் அழகுதான்.

  நாம் படித்த பள்ளியைப் போய்ப் பார்ப்பது என்பது நல்ல விஷயம். அதிலும் உங்கள் புத்தகமும் அங்கு இடம் பெற்றதற்கு வாழ்த்துகள்! கில்லர்ஜி!

  சமீபத்தில் ஊருக்குச் சென்ற போது கூட பள்ளி, கல்லூரிக்குச் சென்று பார்க்க ஆசைப்பட்டு பின்பு தவிர்த்தேன். மனதுள் தயக்கம்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிகள் பல!

   நீக்கு
 13. உங்கள் மலரும் நினைவுகள் நெகிழ்ச்சி, சமீபத்தில் நான் 8ம் வகுப்பு படித்த பள்ளிக்குச் சென்று பல புகைப்படங்கள் எடுத்தேன். கொரோனா காலமென்பதால் யாருமில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

   நீக்கு
 14. வணக்கம் சகோதரரே

  பழைய மலரும் நினைவுகளுடன் பதிவு அருமை. தாங்கள் சிறுவயதில் படித்த பள்ளியின் தற்போதைய மாணக்கர்களுடன் கூடிய படங்கள் அனைத்தும் அழகாக உள்ளன. சிறுவயது நினைவுகளை போற்றும்படியான உங்களின் இன்றைய செயலும் பாராட்டத்தக்கது. நீங்கள் சொல்வது போல் இது யாவருக்கும் எளிதில் அமைவதில்லை. தங்களின் பள்ளி ஆசிரியர் குருந்தன் வாத்தியார் குறித்து தாங்கள் வலைச்சர ஆசிரியராக இருந்த போது கூறியதும் நினைவுக்கு வந்தது. அருமையான குலதெய்வ வழிபாடு கிடைத்தமைக்கும் வாழ்த்துகள்.

  நம் எ.பியில் வியாழனன்று என் கருத்துரை கண்டதும் தாங்கள் மகிழ்வு தெரிவித்து வாழ்த்துகள் கூறியிருப்பது கண்டு நானும் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். விரைவில் பழையபடி நம் சகோதர, சகோதரிகளின் பதிவுகளுக்கு நானும் கருத்துகள் தர வர வேண்டுமாய் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி சகோதரரே.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்கள் நலம் பெற்று வருகை தந்தமை கண்டு மகிழ்ச்சி.

   பதிவை ரசித்தமைக்கும் நன்றி.

   நீக்கு
 15. அபார நினைவுகள்... அருமை நண்பரே!

  என்னை எருமை மாடு மேய்க்க சொன்ன வாத்தியார் மட்டும்தான் என் நினைவு வருவார். மற்றவர்கள் கனவில்கூட வரமாட்டார்கள்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அவரது நினைவு இருக்கிறதே இதுவே பெருமைதான்.

   நீக்கு
 16. எல்லோருக்கும் மனதுள் இப்படிப்பட்ட இதமான மலரும் நினைவுகள் இருக்கின்றன என்றாலும் அதை புதுப்பித்துக்கொள்ளும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை மிகவும் மகிழ்ழ்சிகரமாகவும் என்றைக்குமே மறக்க முடியாததாகவும் ஆக்கிக்கொண்டு விட்டீர்கள்!! உங்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்!
  "இதம் பாடல்"!! மிகவும் அழகான பெயர்! இதற்கு ஏதாவது அர்த்தம் உள்ளதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

   இதம்பாடலுக்கான காரணம் இதமான கிராமிய பாடல்கள் இங்கு உருவாகி இருக்கலாம்.

   நீக்கு
 17. இனிமையான நினைவுகள். நான் ஒன்றாம் வகுப்பு முதல் படித்த எனது பள்ளிக்குச் சென்ற போது அந்தப் பள்ளி மூடப்பட்டு கட்டிடம் இடிபாடுகளுடன் இருந்தது - பார்க்கவே வேதனை. ஒன்பது முதல் பன்னிரெண்டு வரை படித்த பள்ளிக்குச் சென்றபோது எல்லோரும் ஏதோ அதிகாரி வருகைக்கான ஏற்பாடுகளில் இருந்தார்கள் என்பதால் சரியாகப் பேச முடியவில்லை.

  படங்களும் பதிவும் சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கும், பதிவை பாராட்டியமைக்கும் நன்றி.

   நீக்கு
 18. உத்தரகோசமங்கையில் எனது பள்ளிப் பருவம். எனவே இதம்பாடல் பள்ளிக்கூடம் பார்க்க எனக்கும் இதமாக இருக்கிறது. நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே அப்படியா ?

   இன்று இருக்கிறதே திருப்புல்லாணி சாலையில் அதேதானே...?

   நீக்கு