தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, அக்டோபர் 01, 2022

மன்னர் செம்படையார்

 
ட்பூக்களே... பலரும் அறிந்த பழமொழியும், அதையே நான் கற்பனையில் கதையாக புனைந்து நீட்டி பிறகு சமூக கதையாக்கி தங்களது பார்வைக்கு...
 
தேவநாடு மன்னர் வடுகமுத்து செம்படையார் தர்பார் மண்டபத்தில் அமைச்சர் பெருமக்கள் கூடி இருக்க உள்ளே நுழைகிறார்...
 
மன்னர் செம்படையார்
வாழ்க...
 
மாமன்னர் செம்படையார்
வாழ்க... வாழ்க...
 
கோஷம் மண்டபத்தை அதிர வைத்தது அரியணையில் அமர்ந்த மன்னர் கையை அசைக்கவும் அனைவரும் இருக்கையில் அமர்கின்றனர்.
 
இன்று அவையில் வந்து இருக்கும் பிராது என்னவோ ?
மன்னா இதோ நிற்கின்றானே இந்தக் கயவன் நேற்றிரவு அரண்மனையின் அந்தப்புரத்து மாடத்தில் நுழைந்து வாயிற் கதவோரத்தில் எதையோ தேடிக்கொண்டு இருக்கும் பொழுது காவலர்களால் பிடிபட்டு இருக்கின்றான். எவ்வளவு கேட்டாலும் பதில் சொல்ல மறுக்கின்றான் அரசே...
மன்னர் செம்படையார் அவனை தீர்க்கமாக பார்த்தார்...
 
உமது பெயர் என்ன ?
கழுங்குன்றன் மன்னா.
 
எதற்காக அரண்மனையில் திருட வந்தாய் ? எதை தேடிக்கொண்டு இருந்தாய் ?
மன்னா நான் ஒருவொரு வைகாசி ஆறாம் திகதியும் இந்த அரண்மனையில் எதையாவது திருடிக்கொண்டு போவது எனது வழக்கம். அதன்படி நேற்று இரவு வந்து பொருட்களை திருடி விட்டு செல்லும் பொழுது வாயிற் கதவில் எனது கால் அடிபட்டு நகம் பெயர்ந்து விட்டது. இப்படி சிதைந்த நகத்தை செல்வச் செழிப்போடு இருக்கும் தங்களது அரண்மனையில் விட்டுச் செல்வது பாவச்செயல் அது தங்களுக்கு கேடு விளைவிக்கும் பிறகு நானும் இங்கு வந்து செல்ல முடியாது. ஆகவே அந்த சிதறிய நகத்தை எடுத்துக் கொண்டு செல்வதற்காக தேடினேன் மன்னா.
 
இப்படி எவ்வளவு காலமாக திருடிக் கொண்டு போனாய் ?
கடந்த பதிமூன்று ஆண்டுகளாக மன்னா.
 
யாரங்கே... அரண்மனை கணக்கரிடம் கேட்டு கடந்த பதிமூன்று ஆண்டுகளாக வைகாசி ஆறாம் திகதியன்று பணியில் இருந்த அரண்மனைக் காவலர்களை உடனே அழைத்து வாருங்கள்.
உத்தரவு மன்னா...
 
நிதி அமைச்சரே...
மன்னா...
 
பொன்னும், பொருளும் கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
உத்தரவு மன்னா...
சற்று நேரத்தில் ஒரு பெரிய தாம்பாளத்தில் பொன்னும், மணியும், தங்கமும், வைரமும் வைத்து கொண்டு வரப்பட்டது.
 
கழுங்குன்றா...
மன்னா
 
உமது நேர்மையையும், உயர்ந்த எண்ணங்களையும், பொய் உரைக்காத செயலையும் நாம் உயர்வாகவே சிந்தித்தோம். இதனை பெற்றுக் கொண்டு ஏதாவது வணிகம் செய்து பிழைத்துக்கொள் மீண்டும் இவ்வாறான செயல்கள் செய்வது அறிந்தால் உமது கைகள் வெட்டப்பட்டு நாடு கடத்தப்படுவாய் செல்.
நல்லது மன்னா அப்படியே செய்கிறேன் கள்வனையும் கவர்ந்த கனிமுத்து மன்னரே வாழ்க உமது குலம், ஒங்குக உமது புகழ்.
 
கள்வன் விடை பெறவும்.
பணியில் தவறிழைத்த அரண்மனை காவலர்கள் வரும்வரை அவை ஒத்தி வைக்கப்படுகிறது.
என்ற மன்னர் வடுகமுத்து செம்படையார் சயன அறையில் நுழைந்தார்..
 
0* * * * * * * * * * * * * * * * * * * *0
 
இதுவே இன்றைய சூழலில் நிகழ்ந்தால் என்ன ஆகும் இதோ...
 
சென்னை செம்பரப்பாக்கம் அமைச்சர் அசுரபாண்டியனின் பங்களா. அமைச்சர் சோபாவில் உட்கார்ந்து இருந்தார். இருபது அடி வருடிகளும், பத்து அடியாட்களும், எட்டு வேலையாட்களும் கூடி நின்றனர்.
 
என்னையா பிரச்சனை... யாருயா இவன் ?
சார் நேத்து ராத்திரி நம்ம வூட்டுக்குளே புகுந்துட்டான் கதவோரமா எதையோ தேடிக்கிட்டு இருந்தான் கேட்டதுக்கு நெகத்தை காணோம்னு பீலா விடுறான்.
 
இங்கே வாடா உம் பேரென்னடா ?
மொக்கைராசு சார்.
 
மொக்கையா... இப்ப உன்னை சக்கையா புழிவாய்ங்கே... என்னத்தே தேடுனே ?
கால்ல அடிபட்டு நெகம் பேந்து வுழுந்துடுச்சு அதைத்தான் தேடுனேன் சார்.
 
நெகம் எதுக்கு ?
நெகத்தை ராத்திரில விட்டுட்டு வந்தா அந்த வூடு வெளங்காது அப்புறம் மறுவடியும் வரமுடியாது அதான் சார் தேடுனேன்.
 
வெளங்காதுனு யாருடா சொன்னா ?
எங்க ஆத்தா சின்ன வயசுல சொல்லிக் கொடுத்துச்சு சார்.
 
இப்ப அந்த நெகம் என்ன ஆகுதுனு பாரு.... டேய் கட்டிங் பிளேடு எடுத்து வந்து இவன் நெகம் மொத்தத்தையும் புடுங்குங்கடா...
சார் விட்ருங்க சார் இனிமேல் வரமாட்டேன்.
 
நீ போனாத்தானேடி... வர்றதுக்கு... ஏண்டா அமைச்சர் வீட்டுக்குள்ளேயே திருட வருவியா ?
அமைச்சர் வீடுனு தெரியாது எம்மெல்ஏ வீடுனு நெனைச்சுட்டேன் சார்.
 
எம்மெல்ஏ வீடுனா உனக்கு எளக்காரமாப் போச்சா ? போடுங்கடா இவனை...
சுற்றி நின்றவர்கள் ரவுண்டு கட்டி அடித்தார்கள்.
 
அய்யோ விட்ருங்க சார்...
அமைச்சர் வீடு எப்படிடா தெரியாமல் போகும் ?
 
தெருவெல்லாம் கட்டி வச்சா எப்படி சார் தெரியும் ?
வாயிலேயே போடுங்கடா இவனை.
 
மொக்கையை சக்கையாக பிழிந்தவுடன் அமைச்சர் சொன்னார் பி.ஏ.விடம்.
 
யோவ் நம்ம ஏரியா இன்ஸ்பெக்டருக்கு போன் செஞ்சு உடனே வரச்சொல்லி இவனை லாடம் கட்டச்சொல்லு.
சொல்லி விட்டு தயாராக நின்ற பென்ஸில் ஏறி கோட்டைக்கு பறந்தார். மொக்கை தனது சுயநிலையை மறந்து சயனநிலைக்கு போய்க் கொண்டு இருந்தான்.
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
Chivas Regal சிவசம்போ-
வந்தவன் அரண்மனை காவலர்களுக்கு ஆப்பு வச்சுட்டானே... ராத்திரியில் நகம் வெட்டக்கூடாதுனு சொன்னதுக்கு இவ்வளவு பெரிய ஜவ்வுக்கதையா ?
 
சிவாதாமஸ்அலி-
மன்னர் காலத்துல கள்வன்கூட கவித்துவமாக பேசுறானே ஊரோட மகிமை
 
சாம்பசிவம்-
சயன அறைக்கு போறதுக்கும், சயன நிலைக்கு போறதுக்கும் வித்தியாசம் இருக்கே... முதலாவது திரும்பலாம், இரண்டாவது.....?

36 கருத்துகள்:

 1. அந்தக் காலத்தில் மன்னர்கள் நியாயமாக இருந்தனரா, இளிச்சவாயர்களாக இருந்தனரா?!!  அமைச்சர் வீட்டில் அடித்தது போதாதென்று அல்லக்கைகளையும் அடிக்கச் சொல்லி இருக்கிறார் அமைச்சரப்பெருமான்.  அவர் திருடுவதற்கு யார் அடிப்பார்?!!

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. அமைச்சரை ஏன் அடிக்க வேண்டும் ? மூன்றாவது முறையாக திருடியதும் தெரிந்து(ம்) ஓட்டுப் போட்ட மக்களைத்தான் (வயிற்றில்) அடிக்க வேண்டும்

   நீக்கு
 3. அடடே கழுங்குன்றனுக்கு என்னவொரு நல்லெண்ணம்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி இருக்கலாம் சமையலுக்கு நல்லெண்ணைதான் உபயோகிப்பார் போல...

   நீக்கு
 4. // மன்னர் காலத்துல கள்வன்கூட கவித்துவமாக பேசுறானே ஊரோட மகிமை..//

  தமிழோட மகிமை..

  அடே.. இதுலயும் சமக்கிருதமா?..

  இல்லீங்கோ..
  குளோரி ஆப் டமிள்!..

  டமில் ஜேன்.. குவைஸ்!..

  ஷோனார் டம்ளம்
  ஷோனார் டமிள்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி
   மகிமை சமஸ்கிருதம் என்பது தங்களால் அறிந்தேன்.

   நீக்கு
 5. நல்லா எழுதியிருக்கீங்க. நேற்று ஒரு காணொளி பார்த்தேன். தற்போதைய டிஜிபி, முன்பு டிஎஸ்பியாக இருந்தபோது, கள்ளச்சாராயம் வியாபாரம் செய்தவனை ஸ்டேஷனில் நொங்கெடுக்கிறார். கால மாறுதலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த கள்ளச்சாராய வியாபாரி, அமைச்சராகவும் ஆகி, கல்வித் தந்தையும் ஆகி, தன் கல்லூரியிலேயே மாணவர்களுக்கு பட்டம் வழங்க அந்த டிஜிபியை அழைக்கிறான் (சைலேந்திரபாபு). நாடு இப்படி ஆனதற்குக் காரணம் மக்கள்தானே. இதுதான் இன்றைய தமிழர்களின் பெருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

   நான் என்றுமே சொல்வது இந்த இழிநிலைக்கு காரணம் மக்களே...

   நீக்கு
  2. மனசாட்சி என்ற ஒன்று இல்லாமல் போனது..

   நீக்கு
  3. வாங்க ஜி ஆம் இதுதான் உண்மை.

   நீக்கு
 6. கதைகள் நன்றாக இருக்கிறது. அன்றும், இன்றும் சொன்னது சரியே!

  பதிலளிநீக்கு
 7. சயன நிலைக்கு போகும் வரை அடித்தும் , இன்னும் லாடம் கட்ட சொல்கிறார் என்ன மனது!

  பதிலளிநீக்கு
 8. ஆகா! ஸ்க்ரிப்ட் பிறந்துவிட்டது."நெகம்"ங்கர திரைக்கதைக்கு.கில்லர்ஜி அவர்களே படம் வருவது இருக்கட்டும்.டீசரை முதலில் வெளியிட்டு விடலாம்.திரையெல்லாம் ரத்தம்.வானமெல்லாம் ரெத்தம்.பறக்கின்ற பறவை சிறகடிக்கும்போதும் தெறிக்கும் ரத்தம் உருண்டை உருண்டையாய் கோலி உருண்டையாய் சிவப்பாய்...அப்புறம் கசா முசா வென்று பச்சையும் சிவப்புமாய்..வண்ணக்குழம்பு.அதோடு டீசர் ஸ்டாப்.
  இதில் புதிதாய் மெட்டு போட்ட பாடலின் ஆங்கிலவரிகள் வளைந்து நெளிந்து...டீசர் பூராவும் வரும்.
  பூஜை போட்டு விடலாமா? யோசியுங்கள்.........ருத்ரா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தாங்கள் தயாரிப்பாளர் ஆனால் நான் தயார்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 9. பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் 'நகப்படுவான்' :)

  பதிலளிநீக்கு
 10. //நகப்படுவான்//
  ஹா.. ஹா.. சூப்பர் பழமொழி சகோ.

  பதிலளிநீக்கு
 11. கதை என்றாலும் கற்பனை என்றாலும் ரசிக்க வைக்கிறது. உங்கள் வழி எப்போதுமே தனி வழி.

  Jayakumar

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. இரு காலத்து கதைகளும் நன்றாக உள்ளது. இரவில் நகம் எடுத்தால், அதுவும் அது தரையில் விழுந்தால் வீட்டுக்கு கெடுதல் வருமென நம் முன்னோர்கள் சொன்னார்கள். அதற்கு காரணங்கள் பல இருக்கலாம். ஆனால் அதை வைத்து வித்தியாசமாக யோசித்து நீங்கள் இரு கதைகளை தந்தது மனதில் பதிகிறது.

  முன் காலத்து மன்னர் கதையில், நகத்தை தொலைத்தவனுக்கு கை நிறைய பரிசு. இப்போதைய காலத்தில் அதன் விளைவால் அவன் நீங்காத சயனத்திற்கே செல்கிறான். (எவ்வளவு வித்தியாசம்? அந்த சயன சொல்லாடல் அருமை. ரசித்தேன்.) இப்படி வித்தியாசமாக சிந்தித்து எழுதும் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   கதையை உள்வாங்கி படித்து அருமையான கருத்தை பதிவு செய்து பாராட்டியமைக்கு நன்றிகள் பல...

   நீக்கு
 13. காலம் மாறிப் போச்சு. கற்பனை அருமை .

  பதிலளிநீக்கு
 14. அன்றும், இன்றும் கற்பனை அபாரம் நண்பரே

  பதிலளிநீக்கு
 15. பகிர்வு ரசனை..
  அமைச்சர்கள் படுத்தும்பாடு கள்ளப் பணமும் கள்ள வோட்டும் அடியாட்களும் அவர்கள் கைகளில் விடிவு ஏது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 16. ஹாஹாஹா கில்லர்ஜி நல்ல ஒப்பீடு..அது சரி அந்தக் காலத்தில் மன்னர்கள் இப்படியா இருந்தார்கள்? சிறிய தண்டனை கூடக் கொடுத்ததில்லையோ....சரி அதை விடுங்க...இப்போதைய நிகழ்வு....திருடன்கள் எல்லாம் வெளியில் உலாவுகிறார்கள்...மன்னிக்கவும் திருடன்கள் இல்லை கொள்ளைக்கூட்டம்....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கூட ஒரு வரி....உள்நாட்டுக்குள்ள வெளில உலாவுறாங்க வெளிநாட்டில் கூட உலாவுறாங்க....இந்தச் சாதாரண திருடனுக்கு அந்த தெக்கினிக்கி தெரியலை பாருங்க...

   கீதா

   நீக்கு
  2. வருக தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 17. ஹாஹாஹாஹா, நாட்டு நடப்பைப் பிட்டுப் பிட்டு வைச்சுட்டீங்க! :))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

   நீக்கு