தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், அக்டோபர் 17, 2024

ஊட்டி, ஊதாரி ஊமைத்துரை


ஊமைத்துரை
இவன் பார்ப்பதற்கு ஒன்றும் தெரியாத அப்பாவியைப் போலிருப்பான். ஆனால் எமகாதகன் வீட்டில் கடைக்குட்டி ஊமைத்துரை என்று பெயர் வைத்ததனாலோ என்னவோ வாய் பேசாத ஊமையாகிப் போனான். அய்யா அய்யாத்துரை இரண்டு பெரிய தேயிலை தோட்டங்களை நடத்தி, அப்பா அப்பாத்துரையிடம் விட்டு சென்று விட்டார்.
 
அப்பாவுக்கு உதவியாக அண்ணன் அண்ணாத்துரையும், அவனுக்கு அடுத்தவன் தம்பித்துரையும் நிர்வாகம் பார்த்து வருகிறார்கள் பெண் குழந்தை கிடையாது. அண்ணாதுரைக்கு மட்டுமே திருமணம் முடிந்து இருக்கிறது. பெண் முறையூரில் இருக்கும் தாய்மாமன் மகள் மாதவி முறைப்பெண் என்பதால் ஜாதகம் பார்க்காமல் கட்டி வைத்தார்கள் நலமுடன் ஒரு மகனைப் பெற்று நல்ல வாழ்க்கை போய்க் கொண்டு இருக்கிறது.
 
கூட்டுக் குடும்பம்தான் தம்பித்துரைக்கு சமீபத்தில்தான் துறையூரில் பெண் பார்த்து இருக்கிறார்கள் திருமணத்திற்கு பிறகு தனிக்குடித்தனம் கிடையாது கூட்டுக் குடும்பம்தான் என்றும், இதற்கு பகரமாக வரதட்சணை வேண்டாம் என்று அப்பாத்துரையின் மனைவி அங்கம்மா கறாராக பேசி முடித்து விட்டார் செல்வந்தர்கள் என்பதால் சொல்லுக்கு மதிப்பு இருந்தது. விரைவில் திருமணம் கோலாகலமாக நிகழும்.
 
நமது நாயகன் படிப்பு முடிக்காததாலும் ஊமை என்பதால் எந்த பொறுப்பும் கொடுக்கவில்லை கொடுத்தாலும் சொதப்பி விடுவான். அதாவது வேலையை நமக்கு கொடுக்ககூடாது என்பதற்காகவே சொதப்பும் வித்தையை பள்ளியிலேயே கற்றவன். அப்பாவும், சகோதரர்களும் பரிதாபப்பட்டு விட்டு விடுவார்கள் இதையே காரணமாக வைத்து அம்மா அங்கம்மாவிடம் பணத்தை வாங்கி கொண்டு நண்பர்களுடன் ஊர் சுற்றுவான். அம்மாவும் ஊமை என்பதால் செல்லம் கொடுத்து இப்படியே ஆகிவிட்டான். கோவிக்கவும் முடியவில்லை.
 
இவனுக்கு திருமணம் செய்து ஒருத்தி வந்தால்தான் அவளது பொறுப்பில் இவனை ஒப்படைக்க முடியும். என்று நம்பி இருக்கிறார். தம்பித்துரைக்கு திருமணம் ஊட்டியில் பிரமாண்டமான முறையில் நடந்தது. ஊமைத்துரையும் திருமண வேலைகளை ஓடியாடி செய்தான். அடுத்து நாம்தான் என்ற காரணமோ என்னவோ... தம்பித்துரையின் புது மனைவி புவனா முசிறியில் முனுசாமி சித்தப்பா வீட்டில் தங்கி ஆறாவது வரையில் படித்தவள். அதற்கு பிறகு படிப்பு ஏறவில்லை. சற்றே முசுறு குணம் பிடித்தவள்.
 
ஊட்டி வந்த பிறகு பங்களாவில் மகிழ்ச்சியாகத்தான் போய்க் கொண்டு இருந்தது. பிறகுதான் எல்லாவற்றையும் நோட்டம் விட்டாள். தொடக்கம் முதலே ஊமை ஊரைச்சுற்றுவது அவளுக்கு பிடிக்கவில்லை தனது கணவன் மட்டும் வேலைக்கு செல்வது இவன் சும்மா இருந்து கொண்டு சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறானே... இவனுக்கும் சமைத்துப் போடுவதற்கு நாமென்ன வேலைக்காரியா ? இவளது வெடி வைப்பு வேலையை மாமியார் அங்கம்மா புரிந்து கொண்டார்.
 
தம்பித்துரை இருதலைக்கொல்லி எறும்பானான் அவனுக்கு தனிக்குடித்தனம் போவதில் விருப்பம் இல்லை இதை புவனா புரிந்து கொள்ளவில்லை. இதற்கு சரியான தீர்வு ஊமைத்துரைக்கு உடனடியாக திருமணம் செய்து வைத்து அவளது கையில் ஒப்படைப்பதுதான் என்று அங்கம்மா நினைத்தார். மீண்டும் அன்னிய சம்பந்தம் வேண்டாம். நமது அண்ணன் மகள் மாதவியைப்போல் நல்ல குணமுள்ளவளைத் தேடவேண்டும். இவன் ஊமை வேறு இதையும் அவள் புரிந்து கொள்ள வேண்டும்.
 
முதல் வேலையாக காரை எடுத்துக் கொண்டு கணவரோடு அவர்களது குலதெய்வமான திருத்துறைப்பூண்டியில் இருக்கும் துரைப்பூதப்பாடி ஐயனாரிடம் பூப்போட்டு பார்த்தார்கள் நல்ல சகுனம் கிடைத்தது. கோயிலில் வைத்து கணவரிடம் தனது நாத்தனார் மகள் நந்திதாவை சின்னவனுக்கு கேட்கலாமா ? என்று கேட்க, அப்பாத்துரைக்கும் தனது தங்கை மகள் வருவதில் மகிழ்ச்சி. தம்பித்துரையின் மனைவி அன்னிய சம்பந்தம் ஆனதால்தான் செயல் சரியில்லை. மற்ற மருமகள்கள் இருவரும் சொந்தமாக இருந்தால்தான் சற்று அடங்கிப் போவாள். நமக்குப் பிறகும் இந்தக் குடும்பம் ஒற்றுமையாக இருக்கும் இதுவே சரியென்று தீர்மானித்தார்.
 
உடனே அங்கிருந்தபடியே தங்கையின் ஊரான ஆடுதுறைக்கு சென்றார்கள். நந்திதா நல்ல அழகாக இருந்தாள். தங்களது வரவை நாத்தனாரிடம் சொன்னதும் அனைவருக்கும் மகிழ்ச்சி. இருந்தாலும் நந்திதாவை தனியாக அழைத்து தனது மகன் ஊமையாக இருப்பதால். குடும்ப நிலவரம் முழுவதையும் அவளிடம் விளக்கமாக எடுத்து சொல்லி மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வாயா ? என்று கேட்டு அவளது சம்மதம் கிடைத்ததில் அங்கம்மாவுக்கு மகிழ்ச்சி.
 
நந்திதா எம்.ஐ.பி. மார்கெட் ஃஆப் இண்டர்நேஷனல் பிஸினஸ் படித்தவள். தங்களது தேயிலை எஸ்டேட்டுக்கு இவளது பங்களிப்பு உதவும் அதுவும் ஊமைத்துரைக்கு இணையான உழைப்பை கொடுப்பாள். சம்பந்திகளிடம் இருவீட்டார் செலவும் எங்களுடையது வரும் ஆவணியில் திருமணம் என்று தீர்மானித்து, நந்திதாவுக்கு ஊமைத்துரையின் புகைப்படத்தை அனுப்பி விட்டு, அவளை பல கோணங்களில் படம் எடுத்துக் கொண்டார் அங்கம்மா.
 
ஊட்டி திரும்பியதும் அன்றைய இரவே மகன்கள், மருமகள்கள் அனைவரையும் அழைத்து சிறிய மீட்டிங் போட்டு, ஊமைக்கு அத்தை மகள் நந்திதாவை பெண் பார்த்து இருப்பதாகவும் அவளுடைய படத்தை காட்டினார். அனைவருக்கும் மகிழ்ச்சி ஊமைக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி காரணம் ஊமையான நம்மை டிகிரி படித்த இவள் ஏற்றுக் கொண்டதே பெரிய விடயமாக பட்டது. திருமண வேலைகள் தடபுலாக முடுக்கி விடப்பட்டது. இதனிடையில் புவனா கர்ப்பமானாள் எல்லோருக்கும் கூடுதல் மகிழ்ச்சி. அவளும் சற்றே அடக்கி வாசித்தாள்.
 
ஊமைத்துரை – நந்திதா திருமணம் ஊட்டியில் கோலாகலமாக நடந்தது. மறு வீட்டு நிகழ்வுகள் எல்லாம் முடிந்த பிறகு புது மனைவியோடு ஊட்டியை சுற்றி வந்தான் ஊமை. இதனிடையில் அவனை உடனடியாக டிரைவிங் படிக்க சொன்னார் அங்கம்மா. புவனாவுக்கும் வளைகாப்பு முடிந்து அடுத்தடுத்த மாதங்களில் அழகிய பெண் குழந்தையை பெற்றாள். அவர்களது வம்சத்தில் பெண் குழந்தை முதலாவதாக வந்ததால் ஏகப்பட்ட மகிழ்ச்சியானார்கள் அப்பாத்துரை- அங்கம்மா தம்பதியினர்.
 
ஒரு நல்லநாளில் பெயர்த்தியை துறையூரிலிருந்து ஊட்டிக்கு அழைத்து வந்தார்கள். அடுத்த மாதம் மூன்று மகன்கள், மூன்று மருமகள்களோடு மீண்டும் மீட்டிங் போட்டார் அங்கம்மா. அதாவது இதுநாள் வரையில் சின்னவன் சும்மா ஊர் சுற்றிக் கொண்டு இருந்தது போதும். இனி திருமணம் முடிந்து மனைவி வந்தாச்சு. நீங்க இரண்டு பேரும் இரண்டு எஸ்டேட்டுக்கும் மேனேஜராக இருக்கீங்க... சின்னவனுக்கு பெரிய அளவில் படிப்பு இல்லை அதனால நந்திதா இனிமேல் எஸ்டேட் இரண்டுக்கும் ஹெட் ஸூப்பர்வைஷராக இருக்கட்டும். இரண்டு எஸ்டேட்டுக்கும் தினம் அழைத்துக் கொண்டு போவது சின்னவன்தான். அதனால பெண்ணை தனியாக அனுப்புறோம் என்ற கவலை கிடையாது.
 
இதற்குத்தான் இவனை முன்னாடியே டிரைவிங் பழகச் சொன்னேன். உடனடியாக ஜீப் ஒன்று வாங்குங்கள். நந்திதா பிஸினஸ் சம்பந்தமாக படிச்சு இருப்பதால் அட்வைஷராகவும் வைத்துக் கொள்ளலாம். எல்லோருமே நம்ம வீட்டு பிள்ளைகள்தானே அதனால எந்த ஈகோவும் பார்க்காமல் எல்லாம் நமக்குத்தான் என்ற மனப்பான்மையோடு ஒற்றுமையா வேலையை பாருங்க... இதுல யாருக்காவது சங்கடம், சந்தேகம் இருக்குதா ? இருந்தால் உடனே கேட்கலாம். ஒரு பிரச்சனையும் இல்லைமா... நீங்க சொன்னால் சரியாத்தான் இருக்கும் மகன்கள் இருவரும் தலையை ஆட்டினார்கள்.
 
என்ன புவனா ஏன் ஒரு மாதிரியாக இருக்கே ?
அப்ப நானும் வேலைக்கு போறேன்.
நீ என்ன வேலைக்குமா போவே... ? நீ படிக்கலைனு குறையா சொல்லலை உனது படிப்பு தெரிந்துதான் திருமணம் செய்தோம். அப்படியே போனாலும் நீ நம்ம எஸ்டேட்டிலேயே அடிமட்ட வேலைக்குத்தான் போகணும் இது நமக்குத்தானே அவமானம். எதுக்காக வெளியே போயி கஷ்டப்படணும் ?
அப்ப நான் மட்டும் அடுப்படி வேலை செய்யணுமா ?
உனக்கு அதுதான் பிரச்சனையா ? மாதவி என்ன படிச்சு இருக்கா தெரியுமா ? எம்.ஏ. அவள் வீட்டு வேலை செய்யலையா ? இது நம்ம குடும்பம் என்ற எண்ணத்தை உனக்குள்ளே விதைச்சிட்டா எந்தப் பிரச்சனையும் இல்லை. நீ இங்கு ராஜபோகமாக வாழலாம். எங்களுக்கு முதன் முதலா பெண் குழந்தையை பெற்றுக் கொடுத்தது நீதான் அதனாலயே உன் மாமா எவ்வளவு சந்தோஷமா இருக்கார் தெரியுமா ? சரி அடுப்படிதான் பிரச்சனைனா... நந்திதாவுக்கு பதிலா நான் வேலை செய்யிறேன் போதுமா ? ஏன்னா இது நம்ம குடும்பம். போம்மா மனசுல அழுக்கை கழுவிட்டு சந்தோஷமா போய் தூங்குங்க... பெரியவனே அடுத்த புதன் கிழமை நல்லநாள் அன்னைக்கே நந்திதா வேலையை தொடங்கட்டும் நீங்க அதுக்கான வேலையை பாருங்க...
 
எல்லோரும் அவரவர்கள் அறைக்கு திரும்பிட பெயரன் தர்மதுரையோடு அறைக்குள் வந்தனர் அப்பாத்துரை – அங்கம்மா தம்பதியினர்.
 
அங்கம்மா சிறப்பா பிரச்சனையை தீர்த்து வச்சுட்டியே... ஹூம் இனி எனக்குத்தான் பிரச்சனை.
உங்களுக்கு என்ன பிரச்சனை ?
நீ மறுபடியும் அடுப்படிக்கு போறேனு சொல்றியே...
அங்கம்மா உஷ்னப் பார்வையோடு...
தர்மா இந்தக்கம்பை எடுத்து கிழவனை ஒரு போடு போடுடா...
பெயரனின் அடியை தாங்க முடியாமல் போர்வைக்குள் தலையை விட்டார் பெரியவர் அப்பாத்துரை. - மகிழ்ச்சி
 

கில்லர்ஜி அபுதாபி
 
குறிப்பு – அங்கம்மா அவர்கள் மகனை பெரியவனே என்றும், பெயரனை தர்மா என்றும் சொன்னதின் காரணமென்ன ?
 
சிவாதாமஸ்அலி-
எல்லோருடைய பெயரும் வந்துருச்சு, புதுசா பிறந்த பெண் குழந்தை பெயரைச் சொல்லவில்லையே...
 
Chivas Regal சிவசம்போ-
அப்பத்தாவோட பெயரிலிருந்து ஒரு எழுத்தை மாற்றி மங்கம்மானு கூப்பிட வேண்டியதுதான்.

14 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    கடைசியில் சுபம்… அங்கம்மா தான் வீட்டின் தலை போல! சிறப்பு.

    நல்லதே நடக்கட்டும் - கதையாக இருந்தாலும்.

    பதிலளிநீக்கு


  2. நம்ம குடும்பம் என்பதை மனதில் விதைச்சட்டா எந்த பிரச்சனையும் இருக்காது என்பது உண்மைதான். நல்ல வசதியாக இருக்கும் அங்கம்மா ஏன் சமைக்க வேண்டும் சமையலுக்கு ஆள் போட்டு விட்டு மேற்பார்வை பார்த்து கொள்ள வேண்டியதுதானே!
    மருமகள், பேர குழந்தைகளை நன்றாக பார்த்து கொள்ள நேரம் கிடைக்குமே!

    புதுசா பிறந்த பெண் குழந்தைக்கு நல்ல பெயர் வையுங்க. தர்மதுரையை தர்மா என்று அழைக்கிறார் அதற்கு காரணம் வேண்டுமா?
    அங்கம்மா பெரியமகனுக்கு வீட்டு பெரியவர் பேர் வைத்து இருப்பார்களோ அதனால் அம்மா அந்த பேரை சொல்லி கூப்பிடாமல் இருக்கிறார்கள் போலும்.

    கதை நன்றாக இருக்கிறது. குடும்ப ஒற்றுமையை விரும்புகிற அம்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      சில பணக்கார வீட்டில் சமையலுக்கு வெளியாட்களை வைக்க விரும்புவதில்லை.

      அதிலும் இவர்கள் பாரம்பரியமான குடும்பத்தில் வந்தவர்கள்.

      மனை பெரியவனே என்பதற்கு காரணம் அவனது பெயர் அண்ணாதுரை.

      பெயரனை தர்மா என்று சுருக்கியதற்கு காரணம் அவனது பெயர் தர்மதுரை.

      கணவரது பெயர் அப்பாத்துரை "துரை" என்று சொல்லக்கூடாதே....
      ஆகவே...

      நீக்கு
  3. பெரியவன் பெயர் அண்ணா துரை? அதனால் அப்படி அழைக்கிறாரோ?

    தர்மதுரையின் பெயரும் அது போல மரியாதை நிமித்தம்?

    கதை சுபம். வீட்டில் உள்ளவர்கள் எலலருமே இந்து நம்ம வீடு என்று நினைத்துவிட்டால் நல்லதே. அங்கம்மா குடும்பம் நன்றாக இருக்க வே ண்டும் என்று நல்ல அட்ஜஸ்ட் செய்யும் மாமியாராக இருக்கிறார்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது யூகம் மிகச்சரி தங்களது வருகைக்கு நன்றி.

      //வீட்டில் உள்ளவர்கள் எல்லோருமே இந்து//

      எதற்காக இப்படி இந்து, முஸ்லீம், கிருத்துவர் என்று மதப்பிரச்சனையை கையில் எடுக்கிறீர்கள் ?

      நீக்கு
  4. கதை முடிஞ்சு கத்தரிக்கா காய்ச்சதும்தான் நான் வருகிறேன்!  எனவே எனக்கு முன்னாலேயே விடைகள் வெளியாகி விட்டன.  (இல்லன்னா மட்டும்...)  கதை நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி உங்கள் இந்த விடயங்கள் ஜுஜூபியல்லோ...

      நீக்கு
  5. செல்லப்பா சார் சிறுகதை பரிசு போட்டி நடத்துவது தெரியுமா. 5000 வீதம் பத்து கதைகளுக்கு பரிசு தரப்படும்.
    ​ Jayakumar

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    கதை பதிவு அருமை. கதை மிக சிறப்பாக உள்ளது. இப்படி ஒரு கூட்டுக் குடும்பத்தை கண்டதில் மிக மகிழ்ச்சியடைந்தேன். கதா பாத்திரங்களின் பெயர்களும், அவரவர்கள் வாழும் ஊரின் பெயர்களும் தங்கள் பாணியில் "துரை, துரை" யென கொடி கட்டி பறப்பதை ரசித்து படித்தேன்.

    ஆம். அந்த பெண் குழந்தைக்கும் குடும்ப தலைவர்கள் தங்கள் குடும்ப வழக்கப்படி "துரைச்சாணியம்மா" (அது பெண்குழந்தையாக இருப்பதால்) என்று பெயர் வைக்கலாம். ஹா ஹா ஹா ஆனால், அக்குழந்தையின் அம்மா அந்த மாதிரி பெயர் வைத்த கடுப்பில் குடும்பத்தில் ஒட்டாமல் "புவனா ஒரு கேள்வி குறி" ஆகி விடுவாள் என்ற பயத்தில் அங்கம்மா இன்னமும் பெயர் வைக்காமல் யோசிக்கிறார்கள் போலிருக்கிறது. துரையை நீக்கினால் எப்படி அந்த குழந்தையை அழைப்பது என்பதும் ஒரு சங்கடம். அதற்கு அந்த மங்கம்மாள் பெயரே சிறந்ததுதான்.

    நன்றாக யோசித்து கதையை அருமையாக எழுதியுள்ளீர்கள். மிக மிக ரசித்தேன். வாழ்த்துகளும், பாராட்டுக்களும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை மிகவும் ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மகிழ்ச்சி.

      "துரைச்சாணியம்மா " ஹா.. ஹா.. ஹா.. இந்தப் பெயர் புவனாவுக்கு பிடிக்குமா ?

      நீக்கு