தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், மே 30, 2019

சேனா உனது நாளில்...


கலைச்செல்வி கில்லர்ஜி
30.05.2001

நீ இறந்து
நான் இருந்து
பலருக்கு
நல்வாழ்வு

சேனா... இன்று உனது 18-ஆம் ஆண்டு நினைவு தினம் உனது மரணத்தின் கடைசி தருணத்தில் உனக்கு நான் செய்து கொடுத்த சத்தியத்தை முழுமையாக நிறைவேற்றி விட்டேன் என்பதில் எனக்கு ஆத்ம திருப்தி நாளை எனது ஆத்மாவுக்கும் திருப்தி.

நமது செல்வங்களுக்கு அவர்கள் விரும்பிய வகையில் வாழ்க்கை அமைத்து அவர்களுக்கு துணையையும் அமைத்து விட்டேன் இன்று எனக்கு துணையின்றி நிற்கின்றேன் எள்ளளவும் எனக்கு வாழ்வில் பிடிப்பு இல்லை இளமைக் காலத்தையே நீ இல்லாமல் கடந்து விட்டோம் இனி வரும் காலத்தை சுலபமாக கடந்து விடலாம் என்று மனதில் மமதையோடு வாழ்ந்தேன் ஆனால் மனைவி இல்லாமல் இளமையை கடக்கலாம் முதுமையை கடப்பது பெரும் கஷ்டம் கணவன் இல்லாமல் மனைவியால் வாழ்க்கையை கடந்து விடலாம் ஆனால் மனைவி இல்லாமல் கணவன் வாழ்வது நடைபிணத்துக்கு சமமானது முதுமை வாழ்வை கடப்பதில் இவ்வளவு  பிரச்சனைகள் உள்ளதா ?

இன்றைய அனுபவம் எனக்கு நாளும், பொழுதும் பாடத்தை தருகிறது எல்லா உறவுகளும் என்னை வேதனைப்படுத்தி விட்டது இந்த உறவுகள் அனைத்துமே என்னால் பயன் பட்டவர்கள் இவர்களுக்காகவே நான் வாழ்ந்து இருக்கிறேன் எனக்காக நான் எதையுமே எடுத்துக் கொள்ளவில்லை உணவு முதற்கொண்டு ஒதுக்கி வைத்து பணம் சேர்த்தேன் இது எவ்வளவு பெரிய அடிமுட்டாள்த்தனம் என்பதை இப்பொழுது உணர்ந்து, என்னை நானே வெறுக்கிறேன் வெளியுலகில் பலரும் என்னை விபரமானவன் என்றும், புத்திசாலி என்றும், திறமையானவன், உண்மையானவன், நேர்மை தவறாதவன் என்றும் பெயரெடுத்து  இருக்கிறேன் ஆனால் நடைமுறை குடும்ப வாழ்வில் நான் முட்டாளாக, ஏமாளியாக வாழ்ந்து இருக்கிறேன் என்பதே நிதர்சனமான உண்மை.

இப்பிறவியில் நான் அனுபவித்தது என்ன ?

ஆழ்ந்து யோசித்தால் வித விதமான விலை உயர்ந்த உடைகளை திரு. மோடி அவர்களின் தரத்துக்கு இல்லாவிட்டாலும் ஓரளவு நல்ல விலையில் கோட் ஸூட் வாங்கி அணிந்து இருக்கிறேன் இது மட்டுமே இதுவும்கூட பணியின் காரணமாக நான் வாழவேண்டிய சூழல்.

சமீப காலமாக சகோ திருமதி. கோமதி அரசு அவர்கள் பலரது தளங்களில் மட்டுமல்ல, அவரது தளத்தில்கூட என்னை தாயுமானவர் என்று குறிப்பிட்டு வருகிறார். இதற்கு நான் தகுதியானவனா என்பதை நானறியேன். இதை வலியுறுத்தி சகோ திருமதி. கீதா சாம்பசிவம் அவர்களும் எழுதி விட்டார்கள். இதைப்படித்து எனது விழிகளில் நீர்த்திரை இட்டாலும் மறுபுறம் எனது உண்மை நிலையறியாமல் எழுதி விட்டார்களே என்ற பரிதாபமும்கூட அதற்காக இவர்கள்மீது எனக்கு துளியளவும் கோபமில்லை.

சேனா... நமது செல்வங்கள் என்னை தாயுமானவனாக நினைக்க வேண்டுமென்ற பேராசையெல்லாம் எனக்கு கிடையாது, தந்தையானவன் என்று கருதினால் போதுமென்ற ஆசையும் கிடையாது ஒரு சராசரி மனிதனாக கருதினாலே பெரும்பேறு என்று கருதும் நப்பாசை மட்டுமே இருக்கிறது. நமது குழந்தைகளுக்கு நான் யார் தெரியுமா ?  

துபாய்க்காரன்

இந்த வார்த்தையை ஊர்க்காரர்கள் சொன்னால் பெருமைதான் பெற்ற செல்வங்களுமா ? தற்போதைய பல இரவுகள் ஈரத்தலையணைகளுடன் போராடிக் கழிக்கின்றேன் இந்நிலை அறியாமல் என்னைக் குறித்து இவர்கள் புகழ்ந்து எழுதுவது எனக்கு குற்ற உணர்வைத் தருகிறது ஆகவே சகோதரிகளே உங்களுக்கு நான் நன்றி சொல்ல மாட்டேன்.

சமீபத்தில் ஒருவரது தளத்தில் எழுதிய கதையை ஒன்றிப் படித்து இந்தப் பெரியவரின் நிலைப்பாட்டில்தான் நானும் வாழ்கிறேன் என்று கருத்துரை இட்டேன் அதற்கு உடனே வலையுலக நண்பரிகளிடமிருந்து கருத்துரை வழியாகவும், வாட்ஸ்-அப் வழியாகவும், அலைபேசி வழியாகவும் என்ன பிரச்சனை என்று கேட்டு என்னை சலனப்படுத்தி விட்டார்கள் எனக்கும் இவ்வளவு உறவுகள் இருக்கிறதே என்பதை அறிந்து விழிகள் நிறைந்து விட்டன இதற்காகவே நூறு ஆண்டுகள் வாழலாமே என்ற எண்ணம் வந்தது.

2015-ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் தேதி நான் உனக்காக எழுதிய கவிதையை ஆகஸ்டு 30-ல் நான் வெளியிட்ட திரு(மண்)நாள் பதிவை படித்த சென்னை திரு. சுப்பு தாத்தா அவர்கள் அதை பகுதாரி ராகத்தில் பாடலாக பாடி யூட்டியூப்பில் ஏற்றினார். அந்தப்பாடல் வரிகள் இன்றைய சூழலிலும் மிகவும் பொருத்தமாக இருப்பதால் மீண்டும் பதிவேற்றினேன்.

கேளொலி

எனது இறுதி காலத்தின் மாதிரி வடிவம் எனது விழிகளில் தெரிகிறது.

33 கருத்துகள்:

 1. இவ்வகை பதிவுகளுக்கு நான் மறுமொழி தருவதில்லை மன்னிக்கவும் - கில்லர்ஜி

  பதிலளிநீக்கு
 2. மனம் ஆறுதல் அடையுங்கள்...

  பதிலளிநீக்கு
 3. உறுதியாக இருங்கள் கில்லர்ஜி. இந்த நிலை சீக்கிரம் மாறும்.

  பதிலளிநீக்கு
 4. மனவலிவோடு இருங்கள் நண்பரே
  உண்மையிலேயே தாங்கள் தாயுமானவர்தான்

  பதிலளிநீக்கு
 5. நீங்கள் பதில் தர வேண்டாம். காலம் மாறும்.
  அமைதி பெற இறைவன் துணை.
  அன்பு தேவகோட்டை ஜி.

  பதிலளிநீக்கு
 6. மனைவியின் நினைவுகளில் இன்று இருப்பீர்கள்.
  உங்கள் கடமைகளை சிறப்பாக செய்து விட்டது உங்கள் மனைவிக்கு மகிழ்ச்சியை தந்து இருக்கும்.
  குழந்தைகள் உங்களை துயாய்க்காரன் என்று சொல்லக் காரணம் என்ன? ஏன் என்று தெரியவில்லை.

  நீங்கள் அருகில் இல்லாதபோது ஏற்பட்ட கோபமா தெரியவில்லை. இருந்தாலும் ஒரு நாள் அவர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். பேரன் , பேத்தி பிறந்த பின் அவர்கள் உங்களுக்கு ஆறுதல் தருவார்கள்.
  நீங்கள் எல்லோரிடமும் அன்பு செலுத்திக் கொண்டே இருங்கள்.

  சுப்பு சார் பாடல் கேட்டேன் மனதை உருக வைத்தார் உங்கள் கவிதையால்.
  மீண்டும் சொல்கிறேன் மனதை தளர விடாதீர்கள்.

  ஆறுதல் கொள்ளுங்கள்.
  பதிலளிநீக்கு
 7. பேரக் குழந்தைகள் தங்களை மாற்றும் ஜி...

  பதிலளிநீக்கு
 8. //எவ்வளவு பெரிய அடிமுட்டாள்தனம்// - இந்த வார்த்தைகள் என்னை மிகவும் சலனப்படுத்திவிட்டன. ஆனா என் பசங்க எப்போதும் என்னிடம் சொல்வது, உங்களுக்குப் பிடித்தவைகளை நீங்க சாப்பிடுங்க. காசுலாம் பார்க்கவே பார்க்காதீங்க என்பார்கள். அதிகமா செலவழிக்க (எனக்கு) எப்போதுமே எனக்குப் பிடிக்காது. ஆனா கில்லர்ஜி, நாம நினைக்கிறது, நாளைக்கு பசங்களுக்கு ஒரு கஷ்டம்னா தேவையா இருக்குமே என்றுதான் சேர்த்தோம்.

  நான் நிறைய தடவை எழுதியிருப்பதுதான். அன்பு எந்தக் காரணம் கொண்டும் அடுத்த தலைமுறையிலிருந்து வரவே வராது. நாம் பழகும் விதத்தைப் பொறுத்து, பேரன் பேத்திகளிடமிருந்து நிச்சயமா அன்பு திரும்ப நமக்குக் கிடைக்கும். அன்பு என்பது எப்போதும் நீர்வீழ்ச்சிதான்.

  நிறைய எழுதத் தோணுது கில்லர்ஜி...... என்னுடன் வேலை பார்த்துக்கொண்டிருந்த நண்பரின் மனைவி கான்சரால் இறந்தார். அவருக்கு இரண்டு 10-12 வயசு பசங்க. அவரிடம் மறுமணம் செஞ்சுக்குங்க என்று நான் சொன்னதற்கு, அது சரியா இருக்காது... பசங்களுக்காகவே வாழ்ந்துடுவேன் என்றார். இப்படிப்பட்டவர்களுக்கு எப்போதும் வாழ்வு நன்றாகத்தான் செல்லும். பசங்க அன்பைத் திரும்பக் கொடுப்பாங்க, நமக்கு ஏதேனும் செய்வாங்கன்னு நினைச்சா எதையும் செய்யறோம்? நம்ம கடமை என்று நினைத்துச் செய்ததுதான். அதனால் பலனைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

  என் பசங்க என்னோடயே வளர்ந்தாங்க. அதுனால, நான் எப்படி இருந்தேனோ அதைவிட அவங்களுக்கு சிறிது பெட்டராகத்தான் செய்திருக்கேன் என்று அவங்களுக்குத் தெரியும் . அவ்வளவுதான்.

  அரிசியை விளைத்தால் துவரை வருமா இல்லை பஞ்சுதான் வருமா? நிச்சயம் நல்லதுதான் நடக்கும். மனதில் சோர்வுறாதீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பசங்களுக்காகவே வாழ்ந்திடுவேன் என்றார், இப்படிப்பட்டவர்களுக்கு வாழ்க்கை நன்றாகத்தான் இருக்கும்///

   நெல்லைத்தமிழன் நீங்களும் ஆதிகால மைண்ட் செட்டப்பில் தான் இருக்கிறீங்க... ஒரு மாதம் உங்கள் மனைவி அம்மா விட்டுக்குப் போனால் உங்களுக்கு எப்படி இருக்கும் தனியே குழந்தைகளோடு இருப்பது? அதை யோசிப்பதில்லை ஆரும், நாம் நன்றாக இருக்கும்போது அடுத்தவர் கஸ்டம் நமக்கு பெரிதாக தெரிவதில்லை.. சொல்லிவிடுவது சுலபம்.. அவரிடத்தில் இருந்து வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும் அவரின் வலிகளும் வேதனைகளும்.. நான் இப்படி சிலரின் வாழ்க்கையைப் பார்த்தமையாலேயே கூறுகிறேன்..

   பிள்ளைகள் பேரப் பிள்ளைகளின் அன்பு கிடைத்தால் மட்டும் போதுமா ஒரு ஆணுக்கு? மனைவியிடம் உரிமை கொண்டாடுவதுபோல வேறு யாரிடம் உரிமை எடுக்க முடியும்? மனம் விட்டுப் பேச முடியும்?.. சிலர் என்ன பண்ணுவது விதியே என வாழ்ந்து முடிக்கிறார்கள்.. அதை நல்ல உதாரணம் என நான் சொல்ல மாட்டேன்... அவர்களின் வாழ்க்கை முடிந்து விட்டதே...

   நீக்கு
  2. இல்லை அதிரா... நான் ரொம்பவும் அவருக்கு மறுமணம் செய்துகொள்ளுங்கள் என்று சொன்னேன். கணவன் இல்லாமல் மனைவி வாழமுடியும் (ஏன்னா..பெரும்பாலும் அவ, பசங்களோட அலைவரிசைல இருப்பா). ஆனால் மனைவி இல்லாமல் கணவன் வாழ முடியாது. கில்லர்ஜியின் வாழ்க்கை மனதளவில் கஷ்டம்தான். ஆனால் அதை மற்றவர்கள் (உறவினர்கள்) புரிந்துகொள்ளும் நேரம் வரும்.

   நான் வெளிநாட்டில் இருந்தபோது, மனைவி குழந்தைகளை ஒரு வாரம் முன்பே வெகேஷனுக்கு அனுப்பிடுவேன். ரெண்டு நாள் வீடு அமைதியா ரொம்ப ரொம்ப ஜாலியா சந்தோஷமா இருக்கும். அப்புறம் ரொம்ப கஷ்டம். ஆனால் அந்த ஒரு வாரத்தில் வீட்டை துப்புறவு செய்து ரொம்ப அழகாக வைத்துடுவேன்.

   நானும் இந்த மாதிரி வாழ்க்கையை அப்போ அப்போ வாழ்பவந்தான். அதில் உள்ள கஷ்டம் சிக்கல் எனக்குத் தெரியும். எழுதுவதற்காக எழுதலை, ஒரு மனைவியின் பங்கு, குடும்பத்தில் 75% என்று சொல்வது மிகையில்லை.

   நீக்கு
  3. அதேதான் நெலைத்தமிழன், இப்படியான ஒரு சூழலில் பெண்ணுக்கும் ஆணுக்கும் கவலை ஒன்றுதான் ஆனா பெண் சமாளிப்பா ஈசியாக, ஆனா ஆண்களால் அது முடியாது.. அதுவும் கில்லர்ஜி சொன்னதுபோல இளமைக்காலத்தைக்கூட கழித்திடலாம், முதுமையில் மிகவும் கஸ்டம்.

   அவர் இத்தனை காலம் இப்படி இருந்தது பெரிய விசயமே எனெனில் என் கணக்கின்படி திருமணம் முடிக்க வேண்டிய 30 வயதிலேயே மனைவியை இழந்திட்டார்.. உடனேயே இன்னொரு திருமணம் எனில், அப்போ வரும் மனைவிக்காகவும் குழந்தை பெற வேண்டி இருந்திருக்கும், அப்போ இக்குழந்தைகளையும் சேர்த்து மனக்குறை இல்லாமல் வளர்ப்பது கஸ்டமாக இருந்திருக்கும்.. ஆனா இப்போ அப்படி நிலை இல்லை, இப்போ வரும் துணை எனில்.. எனக்கு நீ உனக்கு நான் என மகிழ்ச்சியாக வாழ முடியும்...

   எங்கே அஞ்சு போயிட்டா கர்ர்ர்ர்:)) என்னோடு உள்ளுக்குள் பேசுவா.. இங்கு வரவில்லையே இன்னும்:). அல்லது கில்லர்ஜி இன்னும் அவவின் கொமெண்ட்ஸ் ஐப் போடவில்லையோ..

   நீக்கு
  4. தேவகோட்டை ஜி சொன்னது போல் கணவன் இல்லாமல், மனைவி வாழ்ந்து விடலாம் என்று சொன்னது போல் என் அம்மா சிறு வயதில் என் அப்பா இறந்த பின் குழந்தைகளை தனி மனிஷியாக இருந்து எல்லாம் செய்தார்கள்.

   ஜியும் தன் கடமைகளை சிறப்பாக முடித்து விட்டார் தன் மனைவிக்கு சத்தியம் செய்து கொடுத்தபடி.
   இனி அவர் தனக்கு ஏற்ற(தன் வயதுக்கு ஏற்ற) துணையை தேடி கொள்ளலாம்.
   மன அமைதியுடன் சந்தோஷமாக இருக்கலாம்.

   எங்கள் குடும்ப நண்பருக்கு இரண்டும் பெண் குழந்தைகள், தன் மனைவி இறந்த பின் இரண்டு குழந்தைகளுக்கு சிறப்பாக திருமணம் முடிந்து கொடுத்து விட்டார். இரண்டும் அயல் நாட்டில்.
   மனைவியும் இல்லாமல், குழந்தைகளும் இல்லாமல் தனிமை அவரை கஷ்டபடுத்தியது. ஒரு சமயம் விபத்து ஏற்பட்டு கை ஒடிந்து இருந்த நிலையில் பார்த்துக் கொள்ள துணை இல்லாமல் தவித்தார்.
   பின் நண்பரின் உதவியால் வாழ்ந்தார்.

   பின் யோசித்து தன் சொத்தை மூன்று பங்காய் பிரித்து இரண்டு பெண்களுக்கும் கொடுத்து விட்டு தனக்கு ஒரு பங்கு வைத்துக் கொண்டு தன் வயதுக்கு ஏற்ற துணையை மணந்து மகிழ்வாய் இருக்கிறார்.
   அந்த அம்மாவும் இரண்டாவது பெண்ணுக்கு பேறுகாலம் எல்லாம் பார்த்தார்கள். இரண்டு பெண்களும் அம்மா என்று பாசத்துடன் அழைக்கிறார்கள். விடுமுறைக்கு வந்து போகிறார்கள்.

   நீக்கு
  5. தேவகோட்டை ஜி உங்கள் கஷ்டங்கள் புரிகிறது. சுக துக்கங்க்களை பகிர்ந்து கொள்ள துணை அவசியம். குமார் பதிவில் கோபம் நிறைய வருகிறது, வேலையை விட்டதால்தானோ என்று சொன்னீர்கள். வேலைப் பார்த்துக் கொண்டு இருந்த போது தனிமை தெரியவில்லை உங்களுக்கு இப்போது எல்லா கடமைகளும் முடிந்த பின் உறவுகள் இருந்தும் தனிமை, வெறுமை , வேதனை தருகிறது.
   நன்கு யோசித்து உங்களுக்கு சரி என பட்டதை செய்யுங்கள்.

   அதிரா சொன்னது போல் வாழ்க்கை இன்றுடன் முடிய போவதில்லை தொடரும் வாழ்க்கையை நல்லபடியாக வாழ ஆலோசனை செய்யுங்கள்.

   நான் சொன்னால் அதிகபிரசங்கியாக இருக்குமோ என்று சொல்லவில்லை.
   ஞானி அதிரா துணை வந்ததால் துணிவாக கருத்து சொல்கிறேன்.
   அவர் சொல்வதுதான் சரி.

   நீக்கு
  6. @அதிரா - இந்த இடுகைல கமெண்ட் வேணாம்னு நினைத்தேன்.

   எனக்குத் தெரிந்த ஒரு ஃபேமிலில (அவர் வெளிநாடு) அவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. பிறகு மனைவி இறந்துவிட்டார். மனைவி இறந்தபோது அவருக்கு 38-40 வயசு இருக்கும். அவருக்கு இன்னொரு பெண்ணை, கருத்தடை செய்தபிறகு-அவளுக்கு, மனைவியாக்கிக்கொண்டார். ஏனென்றால் பிறந்த குழந்தைகளை நன்றாக வளர்க்கணும் இல்லையா? புதுக் குழந்தை பிறந்து மூத்ததார குழந்தைகள் அம்போ என்று போயிடக்கூடாது என்று. ஆனாலும் என்ன..வெளிநாடு இல்லையா? குழந்தைகள் 20 வயசில் பிரிந்துவிட்டனர். இவங்க தனி. மாதம் ஒரு முறையோ இல்லை இரு மாதங்களுக்கு ஒரு முறையோ, அவங்கள்ட சொல்லிட்டு அவங்க இடத்துக்குப் போய் பார்த்துட்டு வருவினம் இந்தப் பெற்றோர்.

   எத்தனையோ விதவிதமான குடும்ப கஷ்டங்கள். நான் பெர்சனலா நினைப்பது, இதுபோன்ற பிரச்சனைகள் நம்ம ஓரளவு தெம்பாக இருக்கும்போதே வந்தால், பிற்கால வாழ்க்கைக்கு என்ன செய்வது என்று முடிவெடுக்கலாம். அதாவது தான் சம்பாதித்ததை தன்னிடமே வைத்துக்கொண்டு, தன் முதிய காலத்துக்கு ஏற்றபடி நாம் ஓரளவு சுகமா இருந்துகொள்ளலாம். 70+ வயசுல வந்தால், அப்போ முடிவெடுக்கவே தெம்பு இருக்காது.

   நல்லவர்களாக இருப்பவர்களை ஒருபோதும் இறைவன் கைவிட்டுவிட மாட்டான். அதனால் கில்லர்ஜிக்கும் நல்லதே நடக்கும்.

   நீக்கு
  7. @அதிரா வந்து பின்னூட்டமிட்டுவிட்டேன்

   நீக்கு
  8. நன்றி கோமதி அக்கா..நம்மால் என்ன பண்ண முடியும். ஒரு ஆதரவு சப்போர்ட் மட்டுமே...

   இந்த இடுகையில் இதுபற்றிப் பேசுவது நல்லதென எனக்குப் பட்டதாலேயே எழுதினேன் நெல்லைத்தமிழன், ஏனெனில் கில்லர்ஜி மனம் உடைந்திருக்கிறார், அவருக்கு நம் எண்ணம் பயன் கொடுக்கும் சிந்திக்க என நினைக்கிறேன். சில விசயங்கள் பப்ளிக்கில் சொன்னால்தான், சொந்த பந்தம் பார்த்தாலும் புரிய வாய்ப்பிருக்கு:))

   உண்மைதான், வெளிநாட்டில் வயதாக ஆகத்தான் துணை இன்னும் அதிகமாக தேடுகிறார்கள்.. காரணம் தனிமை..

   நம் நாடுகளிலும் இப்போ அப்படித்தானே மாறி வருது, கூட்டுக்குடும்பமாக இருந்தால்கூட பறவாயில்லை காலம் ஓடிவிடும்.

   இன்னொன்று இந்த விசயத்தில் மட்டும் கோடு போட்டெல்லாம் வாழக் கூடாது.. சந்தர்ப்பம் சூழ்நிலை சரியாக அமைந்தால் நல்ல முடிவாக எடுப்பதே நல்லது.. ஊர் உலகுக்குப் பயந்து ஒண்ணும் ஆகப்போவதில்லை.. இன்று தூற்றுவோர் நாளை ... ஆஆஆஆஅ இவ்ளோ நன்றாக சந்தோசமாக இருக்கின்றனரே என வாழ்த்தவும் கூடும்... அதனால இதுக்கெல்லாம் பயந்து பலன் இல்லை.

   நீக்கு
 9. வார்த்தைகள் இல்லா நேரம் என்னில் ...

  உண்மை அன்பும், இறைவனும் துணை இருக்கட்டும் ...

  பதிலளிநீக்கு
 10. வேதனைப்படாதீர்கள் கில்லர்ஜி. உண்மையாக உங்கள் நிலை கொஞ்சம் அரசல்புரசலாகத் தெரிந்திருந்தாலும் குழந்தைகள் "துபாய்க்காரன்" என அழைக்கும் அளவுக்கெல்லாம் இருக்கும் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. அவர்களுக்கும் குழந்தை பிறக்கப் போகிறது அல்லவா! அப்போப் புரிஞ்சுப்பாங்க! நீங்க செய்த நல்லது மட்டுமே நினத்துக் கொண்டு வாளாவிருங்கள். அவர்களிடமிருந்து ஒதுங்க முடிந்தால் (மனசு என்னமோ கேட்காது தான்) ஒதுங்கி வாழுங்கள். அவர்களாக வந்தால் வரட்டும்! ஆனாலும் சீக்கிரமாய் நல்லது நடக்கும் என உள் மனம் சொல்கிறது. குறைந்த பட்சமாக உங்கள் மகளாவது புரிந்து கொள்வாள். அவங்களுக்கு அவங்களோட வளரும் வயசிலே நீங்க கூட இல்லைனு கோபமோ! அப்படி என்றால் புரிய வைத்தால் சரியாகி விடும். உங்கள் மனைவி கட்டாயம் இந்த விஷயத்தில் உங்களுக்குக் கை கொடுப்பார்.

  பதிலளிநீக்கு
 11. போஸ்ட் பார்த்ததும் மனம் கனத்தது, மனதுக்குக் கஸ்டமாக இருந்தமையால் உடனே வரவில்லை. நான் உங்களுக்கு ஒன்றே ஒன்றுதான் சொல்லுவேன்... போனவர் மீண்டும் வரப்போவதில்லை, இருப்போர், குறை சொல்வோர் என்றும் சொல்லிக்கொண்டுதான் இருப்பினும் அவர்களால் உங்களுக்கு துளியளவும் நன்மை இல்லை.. நீங்கள் தனியாக இருக்கிறீங்களே என அடுத்தவர் தம் சந்தோசத்தைக் குறைக்கப் போவதில்லை, ஆனா நீங்கள் ஒரு சிறு தவறு செய்தால் உடனே தாம் ஏதோ பதிவிரதர்கள்போல பேசுவதற்குப் பலர் வருவார்கள்.. எதையும் பொருட்படுத்த வேண்டாம்... உங்கள் மனதிற்கு எது சரி எனப் படுகிறதோ. எது சந்தோசத்தைக் கொடுக்கும் என நினைக்கிறீங்களோ. அந்த முடிவை எடுங்கள்... வழ்க்கை இன்றுடன் முடிந்துவிடப் போவதில்லை... வாழ்கையை தனியாக வாழ்ந்து முடிப்பதென்பதும் சுலபமானதல்ல.. ஒரு ஆணுக்கு.. யார் விலகினலும்.. வலையுலக நண்பர்கள் உங்களை விட்டு விலகமாட்டோம்ம்.. சப்போர்ட் பண்ணுவோம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் என்னிடம் இல்லை, ஏனையோரிடமும் இருக்காதென்றே நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 12. இந்த “தாயுமானவர்” என்பதை கீசாக்கா பக்கம் பார்த்தேன், கீசாக்கா நல்ல எண்ணத்தில்தான் சொல்லியிருக்கிறா அதில் மாறுக் கருத்து இல்லை, ஆனா நான் அந்தப் பட்டம் தருவதை விரும்பவில்ல, அதனால அதற்கு நான் அங்கு கருத்தும் சொல்லவிரும்பவில்லை. .

  அதனால உங்களுக்கு என்ன லாபம் எனத்தான் யோசித்தேன், உங்களிடத்தில் இருந்து யோசிக்கும்போது உங்கள் வாழ்க்கையை இழந்துதான் இப்படிச் செய்ய வேண்டுமா, நீங்களும் மகிழ்ச்சியாக இருந்து பிள்ளைகளை வாழ வைக்கலாமே எனத்தான் எண்ணுவேன்.. என்னைபொறுத்து இப்படிப் பட்டம் தருவதை விட, உங்களை வேறு பாதையில் செல்ல ஊக்கப்படுத்தி சப்போர்ட் பண்ணுவது நல்லதென நினைக்கிறேன், ஆனா ஊர் நிலவரம் வேறு வெளிநாட்டு நிலைமை வேறு எனவும் சொல்வார்கள்.. அப்படி இல்லை, எல்லோரும் மனிதர்கள் தானே .. உங்களிடத்தில் இருந்து யோசிக்கும்போதுதான் உங்கள் வலி தெரியுது..

  வாழ்ந்தாலும் பேசும்.. தாழ்ந்தாலும் பேசும்.. இந்த உலகம் அதனால, உலகை யோசிக்கக்கூடா, நமக்கு எது சரி எனப் படுகிறதோ அந்தப் பாதையில் செல்ல வேண்டும், எப்பவும் ஒரு முடிவு எடுத்த பின் கலங்கக்கூடாது, முடிவை எடுக்க முன் தான் 1000 தடவை யோசிக்க வேண்டும். பின்பு தைரியமாகவும் ஹப்பியாகவும் இருக்க வேண்டும் எந்தப் பிரச்சனை வந்தாலும். இந்தப் பிறவி இத்தோடு முடிந்துவிடும்... அதை மகிழ்ச்சியாக்குவது நம் கையில்தான் உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "தாயுமானவர்" என கில்லர்ஜியைச் சொன்ன பெருமை எனக்கு உரியது அல்ல. கோமதி அரசு தான் சொல்லிக் கொண்டிருப்பார். நானும் அதை ஆமோதித்தேன்/ஆமோதிக்கிறேன். ஆனால் இப்போதைய சூழ்நிலையில் கில்லர்ஜிக்கு அவரை முழுதுமாகப் புரிந்து கொண்ட ஓர் துணை வேண்டும் என்பது புரிந்தாலும் எனக்குச் சொல்லத் தயக்கம். இங்கே எல்லோரும் சொல்லி இருப்பதால் நானும் சொல்கிறேன். நல்லதொரு துணையைக் கில்லர்ஜி தேடிக் கொள்ளட்டும். நம் அனைவரின் வாழ்த்துக்களும் அவர்களை வாழ விடும்.

   நீக்கு
 13. இன்னொன்று, உங்கள் மனதில் வலி, வேதனை இருப்பதனால்தான் “துபாய்க்காரர்” எனக் கேட்க்கும்போது கஸ்டமாக இருக்கு, இப்போ நீங்கள் மனிவியோடு மகிழ்ச்சியாக இருக்கும்போது உங்களை உங்கள் பேரப்பிள்ளை அப்படிக் கூப்பிட்டாலும் மிகவும் மகிழ்வீங்கள்.. பெருமை கொள்ளுவீங்கள்.. நான் துபாய்காரர் என ஹா ஹா ஹா அதனால அதை பெரிசு படுத்த வேண்டாம்ம். பெருமைப்படுங்கள்:).

  பதிலளிநீக்கு
 14. உணர்சிகரமான பதிவு. எதார்த்தமான உண்மைகள். முதுமையில் மனைவியுடன் வாழ்வது ஒரு பெரிய கொடுப்பினை. முதுமையில் மனைவியின் நினைவுகளுடன் வாழ்வது...

  பதிலளிநீக்கு
 15. தாய் பாசம்தான் எனக்கு தெரியும்...கில்லரஜி மூலம் தந்தை பாசத்தை தெரிந்து கொண்டேன்..

  பதிலளிநீக்கு
 16. தேறுதல் கொள்ளுங்கள் கில்லர்

  பதிலளிநீக்கு
 17. உங்கள் மனதுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ எது மகிழ்வை தருமென்று தோன்றுகிறதோ அதை தயங்காமல் செய்யுங்க சகோ. பிள்ளைகளை தவர்றா நினைக்க இயலாது நீங்க வேறு ஒரு நாட்டில் அவங்க தொலைதூரத்தில் இந்த இடைவெளியும் கூட ஒரு காரணமா இருக்கலாம் துபாய்காரர் என்று அடைமொழி வைத்தழைத்ததிற்கு .
  நீங்க சமீப காலமா ரொம்ப அலைச்சலில் ஓடியாடி இருந்திருப்பிங்க மனதும் டயர்ட் ஆகி இருக்கும் அதனால் ஒரு சிறு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மனசை ரிலாக்ஸ் செஞ்சிட்டு வாங்க .புத்துணர்ச்சியுடன் இருக்கும் மனது தெளிவான தீர்மானங்களை எடுக்க உதவும் .

  பதிலளிநீக்கு
 18. இன்னொன்றும் மனதில் பட்டதை சொல்லிடறேன் .பிறருக்காக யோசிக்காமல் சிலசமயம் நமக்கெனவும் நமது மன சந்தோஷத்துக்காகவும் வாழணும் .யாரையும் இவர் அப்படி இவர் இப்படி என்று ஜட்ஜ் செய்யக்கூடாதது அதைவிட அவரை புரிந்துகொள்ளவது நல்லது அனைவரும் உங்களை புரிந்துகொள்வார்கள் .நல்லதே நடக்கும் சகோ .உண்மையை சொல்லனும்னா நேற்றிரவு உங்க பதிவை படிச்சதும் மெயில் அனுப்ப நினைத்தேன் ஆனால் பொதுவில் சொல்வதே நல்லதுன்னு இங்கே வெளிப்படையா சொல்லிட்டேன்

  பதிலளிநீக்கு
 19. உங்கள் எழுத்துக்கள் மூலமாகவும், வாசிப்பின் மூலமாகவும் மன நிலையை மாற்ற முயற்சியுங்கள். அன்பு காட்டும் உறவுகள், நட்புகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். நாங்களும்கூட.

  பதிலளிநீக்கு
 20. வணக்கம் சகோதரரே

  தங்கள் பதிவை படித்ததும் மனது வருத்தமாக இருக்கிறது. தங்கள் வருத்தங்கள் நன்றாக புரிகிறது. நம் குழந்தைகளே நம்மை பற்றி புரியாமல் பேசுவதும், நடந்து கொள்வதும் கொடுமைதான். தங்கள் மனதை தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள். வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை. நடப்பவை நடந்து,நம்மை கடந்து சென்று கொண்டேதான் உள்ளது. தங்கள் மனம் ஆறுதலடைய நானும் உளமாற பிரார்த்திக்கிறேன்.

  நட்புடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 21. இளமையில் துணை இன்றி இருந்து விடலாம் ஆனால் முதுமையில் தனிமை கொடுமை எதிர்பார்ப்புகள் கூடும்போது ஏமாற்றங்களும் கூடும் உங்கள் செயலில் உங்களுக்குத் திருப்தி ஏற்பட்டால் போதுமே

  பதிலளிநீக்கு
 22. படிக்கும் எங்களுக்கும் கண்ணீரை வரவழைக்க தான் செய்கிறது தங்கள் எழுத்து.மன உறுதியுடன் இருங்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
 23. உங்களுக்குள் இவ்வளவு வேதனைகளா?... படிக்கும் போதே கண்கள் கலங்கின... ஆனாலும் உங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.... நல்ல விஷயங்களை படிப்பதும்... பிறர் படிக்கும்படி எழுதுவதும் இறைவன் உங்களுக்கு கொடுத்த வரம். இந்த திறமை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை... நான் ஒரு எழுத்தாளன் என்ற செருக்கோடு துன்பம் மறந்து வாழுங்கள்... நம் அய்யன் மகாகவி பாரதியும் இதே மனநிலையில்தான் துன்பம் மிகுந்த வாழ்க்கையையும் ''இன்று நாம் புதிதாய் பிறந்தோம்'' என்று நேற்றைய துன்பங்களை உதறி தள்ளிவிட்டு கவிஞன் என்ற செருக்கோடு பிறர் பெருமை கொள்ளும் விதமாக இன்பமாகவே வாழ்ந்து முடித்தான் என்பதனை நினைவில் கொள்க...

  பதிலளிநீக்கு
 24. இழக்கக்கூடாத இழப்புத்தான். என் செய்ய. நல்லவர்களை இறைவன் தன்னிடம் அழைத்துக்கொள்வான் என்பதை எண்ணி ஆறுதல் அடையவேண்டியதுதான். நீங்கள் உங்கள் கடைமைகளை நிறைவேற்றுவதை மேலிருந்துபார்த்து உங்கள் மனைவி நிச்சயம் மகிழ்ச்சி அடைவார். கவலை வேண்டாம்..

  பதிலளிநீக்கு