தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஏப்ரல் 17, 2023

மனிதன் மாற்றி விட்டான்

காலம் மாறி விட்டது என்று சொல்வது முறையா ? காலம் எப்படி மாறும் ? உலகம் தோன்றியதிலிருந்து சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறைகிறது நிலவு வருகிறது போகிறது, மழை பொழிகிறது நிற்கிறது. இந்த சுழற்சி முறையில் மாற்றம் இல்லையே... பிறகு மனிதன் ஏன் இப்படி பொய் சொல்கின்றான் ?
 
அன்று
மணமக்கள் பெரியோர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது மிகப்பெரிய மரபாக இருந்தது. இதில் மணமக்களுக்கு முட்டி வலி வருவதும் உண்டு ஆயினும் அனைவரிடமும் காலில் விழுந்தாக வேண்டும்.
 
இன்று
மணமக்கள் அலங்கார நாற்காலிகளில் அமர்ந்து இருக்க பெரியவர்கள் நின்று கொண்டு ஆசீர்வாதம் வழங்குவதும், அருகில் நின்று கொண்டு புகைப்படங்கள் எடுப்பதும் முறையாக இருக்கிறதா ?  
 
அன்று
திருமண வேலைகளும், தோரணம் கட்டுவதும், சடங்கு சம்பிரதாயங்கள் செய்யவும், பந்தியில் உறவுகளும், நட்புகளும் முக மலர்ச்சியோடு விருந்து பறிமாறுவார்களே...
 
இன்று
கேட்டரிங் என்ற பெயரில் அவனுக்கு பணத்தை கட்டி எவன், எவனோ கடமைக்கு சோறு போடுகின்றார்களே... அதிலும் அசைவம் போடவில்லை எனில் திருமணத்துக்கே வராதவர்களும் பெருகி விட்டனரே...
 
அன்று
மரணம் நிகழ்ந்து விட்டால் உறவினர்கள் பேருந்திலிருந்து இறங்கி வீடு வரையில் வீதியில் கதறிக் கொண்டே வந்து சடலத்தின் மீதி விழுந்து கதறி அலறுவார்களே...
 
இன்று
மகிழுந்திலிருந்து இறங்குகின்றனர், வந்து இறந்தவருக்கு உரிமைப்பட்டவரின் கையில் சம்பிரதாயத்துக்கு கை கொடுத்து விட்டு, அல்லது வணங்கி விட்டு, உள்ளே சென்று மாலையை போட்டு விட்டு வெளியில் வந்தவுடன் மற்ற உறவுகளைக் கண்டு கை கொடுத்து சிரித்து பேசுகின்றார்களே...
 
அன்று
இறந்தவரின் சடலத்தை தூக்குவதற்கும், குளிப்பாட்டுவதற்கும், சடங்கு முறைகள் செய்வதற்கும் உறவுகளும், நட்புகளும் போட்டி போட்டு உதவுவார்களே...
 
இன்று
யாருமே முன் வருவதில்லை என்பதைவிட எந்த முறைகளும் தெரிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை. ஏதோ கடமைக்காக வந்து விட்டேன் என்பதை தெரியப்படுத்துவதற்கு வருகின்றார்கள் அவ்வளவே...
 
அன்று
பாடையில் கட்டி, சுடுகாடு ஐந்து மைலில் இருந்தாலும் உறவுகளும், நட்புகளும் மாற்றி, மாற்றி தூக்கிச் செல்வார்களே... மேலும் மௌனமாக நடந்து வருவார்களே...
 
இன்று
சுடுகாடு ஒரு மைல் தூரமாக இருந்தாலும் அமரர் ஊர்தியை வாடகைக்கு எடுத்து அதில்தான் ஏற்றிச் செல்கின்றார்கள், மேலும் குத்தாட்டம் ஆடுவதற்கு மகிழ்ச்சியாக மது அருந்திய கூட்டம் கண்டிப்பாக வருகின்றார்களே...
 
அன்று
இரண்டாம் நாளும் உறவுகளும், நட்புகளும் சுடுகாடு சென்று பாலூற்றி காரியம் செய்து வந்தார்களே... ஒரு வாரமும் உறவினர் கூட்டம் இருந்ததே...
 
இன்று
முதல்நாளே இரண்டாம் நாள் காரியம் என்று புதைத்த அரை மணி நேரத்தில் பாலூற்றி வேலையை முடித்து விடுகின்றார்களே... அப்படி இவர்கள் சாதிக்கப் போவதுதான் என்ன ?
 
நண்பர்களே... இதை செய்தது காலமா ? அல்லது சடங்குகளை மாற்றி விட்டு காலத்தின்மீது பழி போடும் அறிவு மழுங்கிப் போன மனிதனா ?
 
கில்லர்ஜி தேவகோட்டை

Share this post with your FRIENDS…

30 கருத்துகள்:

  1. ஏற்கெனவே தனித்தனியாக யோசித்திருக்கிறேன்.  நீங்கள் மொத்தமாகக் கொட்டி விட்டீர்கள்.  உண்மைதான்.  காலம் மாறவில்லை.  மனிதன்தான் மாற்றி வருகிறான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி உண்மைதான் தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  2. ஆறறிவுடனே பேச்சும் பாட்டும்
    அறிந்தே மனிதன் பிறந்து விட்டான்
    அந்த ஆறாம் அறிவை தேறா அறிவாய்
    அவனே வெளியில் விட்டு விட்டான்...

    பதிலளிநீக்கு
  3. முப்பது ஆண்டுகளில் நிறையவே மாறிவிட்டோம். எத்தனை வீடுகளில் உறவினர் வந்திருக்கிறார் என்று முகமலர்ச்சியோட கதவைத்திறக்கறாங்க, பசங்க ஓடி வர்றாங்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய காலம் என்பது இனி கிடைக்காது தமிழரே...

      நீக்கு
  4. பதிவு என்றால் இதுதான் பதிவு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி... அப்படீனாக்கா... இவ்வளவு காலம் வந்தது சொம்பையா ?

      நீக்கு
  5. கண்ணாடிப் பெட்டி நாகரிகமாக மாற்றி விட்டார்கள்.. ஏழை எளிய மக்களுக்குக் கூட பல ஆயிரங்களில் செலவை இழுத்து விட்டார்கள்..

    ஊர் சுமந்து என்று திரைப் பாடலில் கூட வரும்..

    ஒருவரின் மரணத்தில் ஊருக்கும் பங்கு இருந்தது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி
      //அந்த நாலு பேருக்கு நன்றி//
      என்ற பாடலும் பொய்த்து விட்டது.

      நீக்கு
  6. ஊர்கள் எல்லாம் நகர்ப் புறங்களாகியதும் எல்லாம் தலைகீழாக ஆகி விட்டன...

    கல்யாணம் தொடங்கி கடைசி காரியம் வரைக்கும் கறி சாப்பாடு என்று கலாச்சார சீர்கேடு ஆக்கி விட்டார்கள்..

    இந்த விஷயத்தில் மட்டும் இன்னும் அரேபிய நாகரிகம் வந்து நுழைய வில்லை..

    அதுவும் கூடிய விரைவில் வந்து விடும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனிதனின் இசைஞானம் கூட மாறி விட்டது ஜி

      நீக்கு
  7. மனித உயிர்க்கு அவ்வளவு தான் மதிப்பு போல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஜி பணமே பிரதானம். வருகைக்கு நன்றி

      நீக்கு
  8. அறிவியல் வளர வளர மனித மனமும் மாறி போச்சு நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      ஆம் விஞ்ஞான வளர்ச்சி என்றுமே மனித வாழ்வுக்கு வீழ்ச்சிதான்.

      நீக்கு
  9. கில்லர்ஜி கலக்கல் பதிவு. நானும் இதையே சொல்வேன். என் கதையிலும் சொல்லியிருக்கிறேன் அதாவது காலம் அப்படியேதான் நகர்ந்து கொண்டிருக்கிறது...அது எப்பவும் மாறியதே இல்லை... நாம மனுஷங்கதான் மாறிட்டு காலம் மாறிப் போச்சு போச்சுன்னு சொல்லிட்டுருக்கோம்னு...

    எங்கேனும் கருத்தில் சொல்லியிருக்கிறேனா என்று நினைவில்லை. கொஞ்ச நாள் முன்ன கூட யாரிடமோ பேசுறப்ப சொன்னேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  10. காலம் பற்றி இப்படிப் பேசினப்ப, கதையில் எழுதினப்ப கூடவே ஒரு எண்ணமும் வந்தது...

    அதாவது யுகங்கள்னு சொல்றப்ப திரேதாயுகம் துவாபரயுகம்னு சொல்றோம்..அப்புறக் கலிகாலம்/யுகம் நு பெயர் எதற்கு..என்று...இப்ப தொழில்நுட்ப யுகம்னு..

    எனக்கும் நீங்கள் சொல்லியிருக்கும் மாற்றங்களில் அப்படியேஉண்டு சிந்தித்ததுண்டு.

    ஆனால் ஒரே ஒன்னு vவளர்ச்சி எனும் போது மாற்றங்கள் வந்துதான் தீரும். அந்த மாற்றங்கள் மனித மனதையும் மாற்றிவிடுகிறது! சூழல். எனக்கு எந்தக் காலத்திலும், கல்யாணம் ஆனாலும் கருமாதியாக இருந்தாலும் சரி கடன் வாங்கிச் செலவு செய்வது பிடிக்காத ஒன்று. அப்படிப் பார்க்கும் போது இப்போதைய கருமாதிச் சடங்குகள் ரொம்பவே கூடிவிட்டது. எனவே எல்லோரும் கூடி இருந்து அத்தனை பேருக்கும் சாப்பாடு என்பதெல்லாம் கொஞ்சம் பிரமிப்புதான் கில்லர்ஜி. அதுவும் சாதாரணமக்களுக்கு...அவங்க கடன் வாங்கிச் செய்வது மனதிற்குக் கஷ்டமாக இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் தாங்கள் சொல்வது போல் ஏழைகள்தான் இந்த காரியங்களால் மிகவும் கஷ்டத்தை அடைகிறார்கள்.

      அதேபோல் சடங்குகளின் முறைகள் குளறுபடி ஆகி விட்டதும் உண்மையே...

      நீக்கு
  11. மனிதன் மாறி விட்டான் என்று முன்பு படங்கள், பாடல்கள் வந்து இருக்கிறது.

    கதவில் நாம் போய் இடித்து கொண்டு கதவு இடித்து விட்டது என்று சொல்வோம்.

    நல்லது , கெட்டுகளில் மனிதமனம் தன் வசதிக்கு ஏற்ப பழக்க , வழக்கங்களை மாற்றி வருகிறார்கள்.

    கணவர் இறந்த போது எதிர் வீட்டில் உள்ள சிறு வயது தான் அவருக்கு, அவர்தான் குளிப்பாட்டி எல்லாம் செய்தார் உறவினர்களுடன், அவ்வளவு நெருக்கம் கூட கிடையாது, தினம் கணவர் அவருக்கு வணக்கம் வைப்பார் மலர்ந்த முகத்தோடு. அதை தான் அவர் சொல்லி கொண்டு எல்லாம் செய்தார். உறவினர் வருவதற்கு போன் செய்வதுஎல்லாம் செய்தார்கள் . காலத்தால் செய்த உதவிகள் அவை.

    மாடியிலிருந்து கீழே தூக்கி வர இளம் வயது உறவினர்பசங்க ,மற்றும் வாட்ச்மேன்கள் உதவினார்கள். அதை என்னால் மறக்க முடியாது.
    எல்லோரையும் அப்படி சொல்லி விட முடியாது.


    சடங்குகள் விரைவில் சிலர் செய்து முடிப்பது நீங்கள் சொல்வது போல மாற்றம் ஏற்பட்டு இருப்பது உண்மையே! .

    சில பெரியவர்கள் அதையும் கூடாது என்று சொல்லி பழைய மாதிரி நடத்தி வருகிறார்கள். வரும் காலங்களில் அப்படி சொல்லவும் ஆள் இருக்காது.

    காலை ,மாலை முன்பு அழுவார்கள், ஒப்பாரி தெரிந்தவர்கள் ஒப்பு சொல்லி அழுவார்கள். மனதில் வருத்தம் இருந்தால் அதை எல்லாம் கொட்டி விட வேண்டும் , மனதில் வைத்து இருந்தால் நல்லது இல்லை என்ற காரணம் முன்பு.

    இப்போது வரும் உறவினர்களை பார்த்து "அழவைக்காதீர்கள் அம்மாவை, அப்பாவை" எண்று சில பிள்ளைகள் சொல்வதால் இப்படி விலகல் ஏற்பட்டு இருக்கிறது என்று நினைக்கிறேன்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      //கதவில் நாம் போய் இடித்து கொண்டு கதவு இடித்து விட்டது என்று சொல்வோம்//
      ஆம் இப்படித்தான் சொல்கிறோம் ஹா.. ஹா.. ஹா..

      நான் தற்போது மரண வீட்டுக்கு சென்றால் சாதி, மதம் பார்க்காமல் குளிப்பாட்டுவது, மற்ற காரியங்கள் செய்வது, குழியில் இறங்குவது போன்றவைகளில் முனைப்பு காட்டுவேன்.

      இதை சிலர் உனக்கு ஏன் இந்த வேலை ? என்று கேட்பார்கள்.

      நாம் பிறருக்கு முந்தினால் நாளை நமக்கு பிறர் முந்துவார்கள் என்று சொல்வேன். நேற்று முன்தினம் கூட ஓர் உறவுக்காக குழியில் இறங்கினேன்.

      இப்பொழுது அழுபவர்களை வினோதமாக பார்க்கும் காலமாகி விட்டது.

      நீக்கு
  12. நீங்கள் சொல்வது போல மனிதான் மாற்றி விட்டான் , நல்லது, கெட்டதுகளை
    பழக்க வழக்கங்களை என்று சொல்ல வேண்டும்.
    காலம் எப்போதும் போல இருக்கிறது, மனித மனம் மாறி வெகு காலம் ஆச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  13. உறவை வரவேற்கும் மனம் யாரிடமும் இல்லை. ஒரு தெரிந்தவர் வீட்டில் நடந்தது. தங்கை வெளியூரில் இருந்து அண்ணன் வீட்டுக்குப் போக நினைத்து அண்ணனிடம் தகவல் தெரிவிக்க, நாங்க இருக்கமாட்டோம், நீ வராதே என அண்ணன் சொல்லி விட்டார். இத்தனைக்கும் எங்கேயும் போகலை. கடைசியில் அந்தத் தங்கை அண்ணன் இருக்கும் ஊருக்கு வந்தவள் தன் வேலைகள் முடிந்ததும் ஓட்டலில் உணவு உண்டுவிட்டு அங்கிருந்தே உடனடியாகத் தன் இருப்பிடம் சென்று விட்டாள். இது உண்மையாக நடந்தது. இப்படித்தான் அண்ணன்/தங்கை உறவே இப்போதெல்லாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      தாங்கள் சொல்வது போல் எல்லா வீடுகளிலும் நிகழ்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

      அந்த அண்ணன் திருமணத்திற்கு முன்பு தங்கையின் மேல் பாசமாக இருந்திருப்பார்.

      அந்த அண்ணி வந்த பிறகுதான் இந்நிலை இதுதான் உண்மை.

      அதேநேரம் இந்த தங்கையும், அந்த அண்ணி போல்தான்.

      ஆக பெண்கள் மட்டுமே இந்த நிலைக்கு காரணம்.

      நீக்கு
  14. இந்தக்கால யதார்த்த பதிவு!!

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. அன்றைக்கு இன்றைய பழக்க வழக்கங்கள் மாறித்தான் விட்டன. மனிதருக்கு நிதானமாக செயலாற்றவோ, அமைதியாக பரபரப்பின்றி எல்லோரிடமும் பேசிப் பழகவோ நேரம் இல்லாததால், காலமும், சூழலும் தான் மாறித்தான் விட்டோமோ என நினைத்தபடி மெளனமாக நம்மை கடந்து செல்கின்றன. அதைக்கண்டு நாம் காலம் மாறி விட்டதென காலத்தின் மேல் வீண்பழி சுமத்துகிறோம். என்ன செய்வது? அருமையான சிந்தனைப் பதிவை தந்த உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      ஆம் நாம் விரைவாக எதைத்தேடி ஓடுகிறோம் என்பதுதான் புரியாத விடயமாக இருக்கிறது.

      தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு