திங்கள், அக்டோபர் 03, 2016

முன்பிறவி உண்டா ?

தனக்கொரு வாரிசு இல்லையே என்று ஏங்கும் பல செல்வந்தர்களும் வாழும் இந்த உலகில் இப்படியும் ஒரு பிறவி இந்தக் குழந்தையும் இறைவன் படைப்புதானே ? சில நேரங்களில் பார்த்து இருப்பீர்கள் குளிரூட்டப்பட்ட சீரூந்தில் நாய்கள் உட்கார்ந்து போகும் இவைகள் இரண்டையும் நான் ஒப்பிட்டு பார்க்கும் பொழுதுதான் முன்பிறவியின் பாவபுண்ணிய பலன்கள் எனறு சொல்வார்களே அவைகள் என் மனதுள் வந்து செல்கின்றன.. இறைவனின் கண்ணோட்டத்தில் இவைகள் நியாயம்தானா ? இதற்கும் நியாயமான காரணங்கள் உண்டா ? இவைகளை நாம் அறிந்து கொள்ள மரணம்வரை காத்திருக்கத்தான் வேண்டுமோ ? சில நாய்களுக்கு கிடைத்த வாழ்க்கை சில மனிதர்களுக்கு கிடைக்கவில்லையே... நாய்க்கு உதவும் மனிதன், மனிதனுக்கு உதவுவதில்லையே... அதற்காக நாயை வளர்க்காமல் இந்த மனிதர்களை தத்தெடுத்து வளருங்கள் என்று நான் சொல்ல வருவதாக அர்த்தமல்ல ! அப்படி நடந்தால் உலகில் பட்டினிச்சாவு நடக்க சாத்தியமே இல்லை சில பணக்காரர்களின் வீட்டில் மெத்தையில் படுத்து உறங்குகின்றது நாய், சில இடங்களின் கொசுக்கடிகளுடன் சாக்கடையின் ஓரங்களில் படுத்து கிடக்கின்றான் மனிதன். இந்தக் குழந்தையைப் பார்த்து விட்டு இதற்கு உதவுபவன் மனிதனா ? அல்லது இக்குழந்தை போன ஜென்மத்தில் செய்த பாவத்துக்கு இப்பிறவியில் அதை அனுபவிக்கின்றது என்று இதனை பரிகாசித்து விட்டு செல்பவன் மனிதனா ? ஒருக்கால் இப்படி சொல்லும் மனிதர் இறைவனை வணங்கும் ஆத்திகவாதியாகத்தானே இருக்க முடியும் அப்படிச் சொன்னால் ? ஈவு இரக்கமின்றி செல்லும் நீ என்னை வணங்க உனக்கு அருகதை இல்லை என்று இறைவன் இவனுக்கும் பாவக் கணக்கைத்தானே எழுத முடியும் அப்படியானால் இந்த ஆத்திகனுக்கு அடுத்த ஜென்மத்தில் இந்தக் குழந்தையைப்போல் ஏதோவொரு இழிவான பிறவிதானே கிடைக்ககூடும். ஒரு பெண் நான்கு காமுகர்களால் கற்பழித்து கொல்லப்படுகின்றாள் அவளது ஓலம் இறைவனுக்கு கேட்காதா ? ஏதாவது வழியில் திரைப்படங்களில் வருவதுபோல யாராவது மூலம் இறைவன் அதை தடுக்ககூடாதா ? இப்படி நான் கேட்கவில்லை நண்பர் திரு. வலிப்போக்கன் அவர்களைப் போன்றவர்கள் கேட்ககூடும், இதுதான் இறைவன் அவளுக்கு விதித்த விதி என்று நான் சொல்லவில்லை சில ஆத்திகவாதிகள் சொல்லக்கூடும், ஒரு பாவமும் அறியாத குழந்தை சர்ப்பம் தீண்டி இறக்கின்றது அதை இறைவன் தடுக்ககூடாதா ? என்று நான் கேட்கவில்லை நண்பர் திரு. பகவான்ஜி அவர்களைப் போன்றவர்கள் கேட்ககூடும், இது ஆறிலும் சாவு, நூறிலும் சாவு என்பதை மனிதன் உணர்ந்து கொள்ள இறைவன் அந்தக் குழந்தையின் வழியாக நமக்கு போதித்த பாடம் என்று நான் சொல்லவில்லை சில ஆத்திகவாதிகள் சொல்லக்கூடும்,  மனிதனாய் பிறந்தவன் மனித உணர்வுகளை மதிக்கத்தெரியாத ஜடமாக வாழ்ந்தான் என்றால் அவனை மனிதன் என்று சொல்வது சரியாகுமா ? புலால் உண்ணுதல் பாவம் என்று அதை ஒதுக்கி வைத்து வாழும் மனிதர்களையும், மனிதனை மரத்தைப்போல வெட்டிச்சாய்க்கும் மனிதனையும் படைத்தது ஒரே இறைவன்தானே... உலகை படைத்து இயக்குவது நிச்சயமாக ஒரே இறைவனாகத்தான் இருக்க முடியும் மனிதனின் எண்ணப்பாடுகளின் மாற்றமே கடந்தகாலம் நமக்கு இறைவனையும் பெறுக்கி தந்து விட்டு சென்றது. மனித வாழ்வில் ஏற்றத்தாழ்வு இல்லையெனில் அடிமட்ட வேலைகளை செய்வது யார் ? எல்லோரும் செல்வந்தர் எனில் கழிவறைகளை சுத்தம் செய்வதற்கு ஆட்கள் கிடைக்க மாட்டர்களே... வேலைகளும் நடக்காதே எல்லோரும் செல்வந்தர் பிறகு கூலி வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை வாழ்க்கையும் ரசிக்கும்படி இருக்காது என்பது நமது அறிவுக்கு புலப்படுவது உண்மையே இருப்பினும் இதற்கான தீர்வு காண மரணம்வரை காத்திருத்தல் அவசியமோ.... ?

38 கருத்துகள்:

 1. பட்டினியால் சாகக் காத்திருக்கும் ஸோமாலியக் குழந்தைக்குப் பின்னால் அதற்காகவே ஒரு ராட்சதக் கழுகு அமர்ந்திருக்கும். அந்தப் புகைப்படம் பார்த்திருப்பீர்கள் கில்லர்ஜி. மஹா கொடுமை + கோரமான காட்சி அது.

  "இறைவன் உலகத்தைப் படைத்தானாம்... ஏழ்மையை அவன்தான் படைத்தானாம்... ஏழையைப் படைத்தவன் அவனென்றால் இறைவன் என்பவன் எதற்காக?" யேசுதாஸ் குரலில் உனக்காக நான் படத்தில் வரும் இந்தப் பாடல் கேட்டிருப்பீர்கள்தானே?

  அதேபோல் "அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி அதன் அருகினில் ஓலைக் குடிசை கட்டி, பொன்னான உலகென்று பெயருமிட்டால்..." பாடலும் கேட்டிருப்பீர்கள்..

  பதிலளிநீக்கு
 2. ஆம் நண்பரே பார்த்து இருக்கிறேன் உலகின் அபூர்வமான 10 புகைப்படங்களில் அதுவும் ஒன்று
  பாடல் வரிகள் மூலம் அற்புதமான கருத்துரையை பகிர்ந்தமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 3. கொடுத்து வைத்த ஜீவன் நன்று

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே இந்த வாழ்க்கை வாழும் பொழுது நாயாக பிறப்பதில் தவறல்ல என்றே தோன்றுகின்றது

   நீக்கு
 4. மரணம் வரை காத்திருக்கத்தான் வேண்டுமா ?தேவையில்லை , தினசரி தூக்கத்தின் போதே நமக்கு என்ன நடக்கிறது ,வெளியே என்ன நடக்கிறது என்று உணர முடியவில்லை .செத்த பிறகு என்ன தெரிந்து விடும் ?தெரியும் என்றே வைத்துக் கொண்டாலும் உங்கள் பிளாக்கில் சொல்ல முடியுமா :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதை தெரிந்திருந்தால் உலகில் குற்றங்கள் மறுநொடியே குறைந்தல்ல உடனே நின்று விடும் ஜி

   நீக்கு
 5. சிறந்த அலசல்
  அருமையான சிந்தனை

  பதிலளிநீக்கு
 6. தங்களின் ஆதங்கம் புரிகிறது நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் கருத்துப் பகிர்வுக்கு நன்றி நண்பரே

   நீக்கு
 7. பசி வர அங்கே மாத்திரைகள்..
  பட்டினியால் இங்கு யாத்திரைகள்..

  இருவேறுலகம் இது என்றால்
  இறைவன் என்பவன் எதற்காக?..

  திரு ஸ்ரீராம் அவர்கள் குறித்துள்ள பாடலின் வரிகள் - இவை..

  கதாசிரியர் திரு A.L.நாராயணன் அவர்களின் பாடல் இது..

  அன்றிலிருந்து இந்தப் பாடலின் வரிகள் நினைவுக்கு வரும் போதெல்லாம் ஆழ்ந்த மௌனத்தில் மூழ்கி விடுகின்றது மனம்..

  என்ன செய்வது!?..

  பதிலளிநீக்கு
 8. உங்கள் இடுகை சரியான கேள்விகளை எழுப்பியது. இருந்தபோதும், கடவுளை நம்புகிறவர்கள், அவன், நம்மை, இந்த மாதிரிச் சூழ்'நிலைகளில் எவ்வாறு நாம் உதவும் மனம் கொண்டு, அவன் கொடுத்துள்ள resource (பணம் முதலியன)ஐப் பயன்படுத்துகிறோம் என்று நம்மைச் சோதிக்கிறான் என்றுதான் எண்ணவேண்டும். கஷ்டப்படுகிறவர்களின் முற்பிறவியைப் பற்றியும் அவர்கள் செய்த வினைகளைப் பற்றியும் நமக்கு என்ன கவலை. நாம் எப்படி உதவமுடியும் என்று சிந்திப்பதுதான் கடவுளை, முற்பிறவியை, நம் வினைகளை நம்புகிறவர்கள் செய்யக்கூடியது.

  இதனை நம்பாதவர்கள், 'கடவுளை நம்பும், எல்லாவற்றிற்கும் அவன் மேல், முற்பிறவி வினைமேல் பழியைப் போடும்' உங்களை விட, நம்பாத நாங்கள் மனித'நேயம் மிகுந்தவர்கள் என்று காண்பிக்க, துன்பப்படுபவர்களுக்கு ஆர்வத்துடன் உதவ வேண்டியதுதான்.

  அன்பு ஒன்றுதான் கடவுள். அந்த எண்ணத்தை நோக்கி நகர்வதுதான் ஆன்மீகம்.

  தவிர... Pet animal (நாய், பூனை போன்றவை) வளர்ப்பவர்கள், அவை எதையும் எதிர்பாராத பூரண அன்பு செலுத்துபவை என்று சொல்வார்கள். மனித உறவைவிட, Pet Animalகளை அவர்கள் மிகவும் நேசிப்பார்கள். தன் குழந்தைக்குக் கொடுக்கும் இடத்தை நாய், பூனைகளுக்குக் கொடுப்பார்கள். அவன், இவன் என்றுதான் சொல்வார்கள். தான் வெளியூர் செல்ல நேர்ந்தால், நம் குழந்தைக்கு என்ன செய்யவேண்டும் (தனியா இருப்பானா, உணவுக்கு என்ன ஏற்பாடு செய்வது) என்று முதலில் சிந்திப்பதுபோல், தன் அன்பான விலங்குக்கும் அதேபோன்று சிந்தித்துச் செயல்படுவார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே விரிவான நிறைவான விடயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே

   நீக்கு
 9. தங்களின் ஆதங்கம் புரிகிறது. ஆனால் இது போன்ற ஏற்றத் தாழ்வுகளுக்கு தீர்வு காண யாரும் மரணம் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
  நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்
  நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்
  அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர்
  ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்
  என தேசியக் கவி பாரதி சொன்னதை பின்பற்றி நம்மாலான உதவிகளை செய்யலாமே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாரதியின் கவி வரிகளை மேற்கோள் காட்டியமைக்கு நன்றி நண்பரே

   நீக்கு
 10. அருமையான பதிவு நண்பரே!
  த ம 3

  பதிலளிநீக்கு
 11. எழுத்துப் படிக்கக் கொஞ்சம் சிரமம்! என்றாலும் பதிவின் விஷயங்கள் ரொம்பவே கனமானவை! :( என்ன இருந்தாலும் அந்தக் குழந்தை தூங்குவதைப் போல் நம்மால் தூங்க முடியுமா? :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ திடீரென்று எழுத்தின் பாண்ட் மாறி விட்டது மன்னிக்கவும் சரி செய்து விட்டேன் வருகைக்கு நன்றி

   நீக்கு
 12. JI you know that in US and in certain other countries all work are being done by individuals irrespective of the status... in the same countries indescriminate shooting upon fellow human beings take place... so we are helpless
  let us work for universal peace prosperity....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் தகவலுக்கும், கருத்துரைக்கும் நன்றி நண்பரே

   நீக்கு
 13. மரணம் வரைக் காத்திருந்து அறிந்து கொண்டதைச் சொல்ல முடியுமா?
  ஒரு சிறுவன் ஒரு தும்பியின் வாலில் கயிறு கட்டி அதைத் துன்புறுத்திக் கொண்டிருந்தானாம் அப்போது அங்கே வந்த பெரியவர் அடுத்த ஜன்மத்தில் நீ தும்பியாகப் பிறந்து இந்தத் தும்பி மனிதனாகப் பிறந்து உன்னைத் துன்புறுத்தும் என்றாராம் அதற்கு அச்சிறுவன் பெரியவரே உங்களுக்குத் தெரியவில்லை போன ஜன்மம் நான் தும்பியாகி இருந்தேன் இந்தத் தும்பி அப்போது என்னைத் துன்புறுத்தி இருக்கிறது. அதற்கு பிரதிபலந்தான் இது என்றானாம்
  பதில் சொல்ல முடியாத கேள்விகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா அருமையான உவமை கதை இரசித்தேன் வருகைக்கு நன்றி

   நீக்கு
 14. அந்தப் புகைப்படத்தை பார்க்கும்போது மனம் கனக்கிறது.சமீப காலமாக உருக்கமான பதிவுகள் அதிகமாக எழுதுவது போல் தோன்றுகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே ஏதோ தெரியவில்லை மனம் போன போக்கில் எழுத்து செல்கின்றது வருகைக்கு நன்றி

   நீக்கு
 15. புகைப்படம் வேதனை... அது போன்று ஒரு சில புகைப்படங்கள் குறிப்பாக சோமாலியா புகைப்படம் ஒன்று உலக அளவில் பேசப்பட்டது. அது போல எலும்பு தெரிய ஒரு சிறு குழந்தை ஓடுவது போன்ற புகைப்படமும்.

  உங்கள் கேள்விகள் நியாயமான கேள்விகள். ஆனால் அதற்கும் இறைவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எதற்காக எல்லாவற்றையும் இறைவன் மேல் போட வேண்டும்? மனிதன் செய்யும்தவறுகள் இவை அனைத்தும். இறைவனுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பொதுவாகவே இறைவன் என்ற கான்செப்ட் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. நாம் நினைக்கின்றோம் நமக்கு வேலை கிடைப்பதற்கும், சந்தோஷத்திற்கும், துக்கத்திற்கும் எல்லாவற்றிற்கும் மூன்றாவதாக உள்ள ஒன்றின் மீது அது இறைவன், கோள்கள், இல்லை என்றால் விதி என்று சொல்லி இறுதியில் எல்லாவற்றிற்கும் இறைவன் மீது போடுகின்றோம் பழியை. மனித மனமே அப்படித்தான். தான் செய்யும் தவறுகளுக்குப் பிறரைச் சுட்டிக் காட்டியே பழகிவிட்டது. அப்படிச் சுட்டும் போது மூன்று விரல்கள் தன்னைச் சுட்டி என்பதை மறந்துவிடுகின்றார். விதி என்றோ, இறைவன் என்றோ நாம் எல்லாவற்றிற்கும் போடும் போது மனிதன் தன் முயற்சியைக் கைவிடுகிறான் இல்லை என்றால் அதல் சற்றுப் பின் வாங்குகிறான்..அப்படிச் சொல்லும் போது மனது தானாகவே முயற்சி செய்வதிலிருந்து பின்வாங்குகிறது. எனவே உங்கள் கேள்விகளுக்கும் இறைவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது எமது தாழ்மையான கருத்து. அப்படி இறைவனை நம்புபவர்கள் உண்மையாகவே நம்பினால் முதலில் அவர்கள் மனித நேயம் அல்லது உயிர் நேயம் அது மனிதனாக இருந்தாலும் சரி வாயில்லா விலங்குகளாக இருந்தாலும் சரி....அதற்கு உதவுவான்.

  நாயையும் குழந்தையையும் நாய் என்றில்லை எந்த ஒரு விலங்கையும் மனிதக் குழந்தையையும் தயவாய் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். மனிதக் குழந்தை பசித்தால் அழும்....ஏதேனும் ஒரு வெளிப்பாடு இருக்கும் ஆனால் வாயில்லா ஜீவன்களுக்கு அதுவும் கிடையாது.

  எந்த உயிரையும் நேசிக்கத் தெரிந்தவர்களுக்கு எல்லாவற்றிற்கும் உதவ விழைவான். நாய் வளர்ப்பவர்கள் மனிதக் குழந்தைகளுக்கு உதவ மாட்டார்கள் என்று நாம் நினைப்பதும் சரியல்ல என்றே தோன்றுகின்றது ஜி...சரி இதற்கும் மேலும் வேண்டாம்....னீண்டு செல்கிறது...

  அன்பே சிவம் என்பதே நல்ல தத்துவம்..இங்கு சிவம் என்பது எல்லோரும் குறிப்பிடும் கடவுளல்ல...

  நல்ல பதிவு....ஆழமான ஒன்று இதைப் பற்றிப் பேச வேண்டும் என்றால்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக மிகப் பிரமாண்டமான கருத்துரை நல்ல விளக்கவுரை உங்கள் கருத்தை ஏற்கிறேன்.

   முடிவில் இதைப்பற்றி பேச வேண்டும் என்றால் ? பதிவு வருமோ ? வரட்டும்.

   நீக்கு
 16. பிறந்த மனிதன் ஒருநாள் செத்துப் போவோம் என்று தெரிந்து இருந்தும் அந்த மனிதர்கள் இல்லாத ஒன்றிடம் தன்னை காக்க வேண்டுவது மற்றும் நின்றபாடில்லை..நண்பரே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் கருத்தை பதிந்தமைக்கு நன்றி நண்பரே

   நீக்கு
 17. நல்ல பதிவு அண்ணா...
  படம் மனசை உலுக்குகிறது.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...